ஆன்மீக வலம்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, ஆண்டவரின் நற்செய்தி பணியில் ஆர்வமுள்ள பொதுநிலையினரே, உங்கள் ஆன்மீக சிந்தனைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholic.de என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். எமது ஆன்மீக இயக்குனரின் அனுமதி பெற்று, இங்கே பிரசுரிக்கப்படும்.

நற்செய்தியாளர் மத்தேயு வழி தவக்காலம்தவக்காலம் நம்மில் இருக்கும் குறைகள், பாவங்கள் மற்றும் தீமைகள் இவற்றை இறைவன் அருளோடு நம் எண்ணத்திற்கு கொண்டு வந்து இறைவனின் அளவுகடந்த இரக்கத்தையும், அன்பையும் பெற்றுக் கொள்ள திருச்சபை மூலம் கொடுக்கப்பட்ட அடையாளத்தின் மாட்சிமை காலம்தான் தவக்காலம். இந்த தவக்காலத்தில் நற்செய்தியாளர் மத்தேயு கூறும் கருத்துக்களோடு நமது தவக்காலத்தை பயன்படுத்துவோம். தவக்காலம் என்பது கடவுளுக்கு ஏற்புடையவை அனைத்தையும் நாம் நிறைவேற்றுவதுதான் (மத் 3:14) தவக்காலம் எனலாம்.

கடவுளுக்கு ஏற்புடையவை

1.அன்பு
‘உன்மீது நீ அன்பு கூர்வதுபோல உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்பு கூர்வாயாக’ மத் 22: 39 என்னையே முதலில் அன்பு செய்யவும், அந்த அன்பை மற்றவரில் காணவும் தவக்காலம் அழைக்கிறது.

2. செபம்
“என் தந்தையே, நான் குடித்தாலன்றி இத்துன்பக்கிண்ணம் அகல முடியாதென்றால், உமது திருவுளப்படியே ஆகட்டும்” மத் 26: 42 எனக்கென்று வாழ்வில் வரும் துன்பங்களை சுமந்துக்கொள்ள பலத்தை இறைவனிடம் கேட்டல் மற்றும் எப்போதும் இறைவனை நாடிச்செல்ல தவக்காலம் அழைக்கிறது.

3. பகிர்தல் “கொடையாகப் பெற்றீர்கள்; கொடையாகவே வழங்குங்கள்.” மத் 10: 8 குடும்பம், உறவு, நண்பர்கள், நேரம், வசதி வாய்ப்புக்கள், ............ அனைத்தையும் ஏதாவது ஒரு சூழலில் நம் சுயநினைவோடு அன்பு செய்து, பகிர்ந்திட தவக்காலம் அழைக்கிறது.

4.மன்னிப்பு
“ஏழுமுறை மட்டுமல்ல; எழுபது தடவை ஏழுமுறை என நான் உனக்குச் சொல்கிறேன். “மத் 18: 22 மன்னித்தலின் வழி மனிதநேயம் மீண்டுமாக இவ்வுலகில் உதிக்கிறது. நெறிதவறி சென்றுவிடாமல் இருக்க உதவும் ஒப்புரவு என்னும் மருந்தை பயன்படுத்திட தவக்காலம் அழைக்கிறது.

5.இரக்கம்
“தாவீதின் மகனே, எங்களுக்கு இரங்கும்” மத் 9: 27 மண்டியிட்டு இரக்கம் வேண்டுவோரை கண்களால் கண்டிடவும், இரக்கத்தினால் உதவிடவும் தவக்காலம் அழைக்கிறது.

6.நீதி
„நீதிநிலைநாட்டும் வேட்கை கொண்டோர் பேறுபெற்றோர்; ஏனெனில்அவர்கள் நிறைவுபெறுவர்.” மத் 5: 6 நீதிக்காக குரல்கொடுக்க ஞானத்தையும், விவேகத்தையும் திறன்பட பயன்படுத்திட தவக்காலம் அழைக்கிறது.

7.கடின உழைப்பு
‘நன்று, நம்பிக்கைக்குரிய நல்ல பணியாளரே, சிறிய பொறுப்புகளில் நம்பிக்கைக்கு உரியவராய் இருந்தீர். எனவே பெரிய பொறுப்புகளில் உம்மை அமர்த்துவேன். உம் தலைவனாகிய என் மகிழ்ச்சியில் நீரும் வந்து பங்கு கொள்ளும்’ மத் 25: 21 நமது தேவைகள் மற்றவர்களின் மூலம் பூர்த்திசெய்துவிடலாம் என சோம்பேரியாக அமர்ந்துவிடாமல், உழைப்பின் வழி இறைவனை அறிந்திட தவக்காலம் அழைக்கிறது.

8.புரிந்துக்கொள்ளுதல்
‘மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்’ மத் 25: 40 சிறிய செயல்களை செய்யும் போதெல்லாம் என்னை சுற்றியுள்ளவர்கள் பயன்யடையவும் அதன்வழி இறைவன் விரும்பும் மகிழ்ச்சி என்னிலிருந்து மற்றவருக்கு சென்றிட இந்த தவக்காலம் அழைக்கிறது.

9.நம்பிக்கை
“உங்கள் நம்பிக்கைக் குறைவுதான் காரணம். உங்களுக்குக் கடுகளவு நம்பிக்கை இருந்தால் நீங்கள் இம்மலையைப் பார்த்து ‘இங்கிருந்து பெயர்ந்து அங்குப் போ’ எனக் கூறினால் அது பெயர்ந்து போகும். உங்களால் முடியாதது ஒன்றும் இராது என நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்” மத் 17: 20 நமது நம்பிக்கை பிறரின் தேவைகளையும், கருத்துக்களையும் அறிந்து அவற்றை கடவுளிடமிருந்து பெற்றுக்கொடுக்கும் என்ற உறுதியான நம்பிக்கையை கொடுக்க இந்த தவக்காலம் அழைக்கிறது.

10.ஒறுத்தல்
“தம் உயிரைக் காத்துக் கொள்ள விரும்பும் எவரும் அதை இழந்துவிடுவர். மாறாக என்பொருட்டுத் தம்மையே அழித்துக் கொள்கிற எவரும் வாழ்வடைவார்.” மத் 16: 25 கடவுளுக்காக என செய்யும் நமது செயல்பாடுகள் அனைத்திற்கும் பலன் கிடைக்கும் என உறுதி வழங்கும் தவக்காலம்.

கடவுளுக்கு ஏற்புடையவை நம்மில் இருக்கின்றது, அதை பயன்படுத்த நிதானத்தோடு இறைவசனத்தோடு பயணிப்போம். ஆமென்.

தவக்காலம் முதிர்ச்சி பெறவும், முரண்பாடுகளை இறைவசனத்தோடு எதிர்நிச்சல் போடவும் நம்மால் முடியும் என நற்செய்தியாளர் மத்தேயு நமக்கும் இறைவனுக்கும் உள்ள உறவை ஆழப்படுத்தும் தூதுவராக திகழ்கிறார்.

அன்றாட வாழ்வில் ஆழப்படுத்த அழைக்கும் தவக்காலம்
பகைமை
1. கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் - மத் 5:38
2. உங்களை வலக் கன்னத்தில் அறைபவருக்கு மறுகன்னத்தையும் திருப்பிக் காட்டுங்கள் மத் 5:39

கவலை
1. கவலைப் படுவதால் உங்களில் எவர் தமது உயரத்தோடு ஒரு முழம் கூட்ட முடியும்? மத் 6:27
2. ஆன்மாவைக் கொல்ல இயலாமல். உடலை மட்டும் கொல்பவர்களுக்கு அஞ்சவேண்டாம். ஆன்மாவையும் உடலையும் நரகத்தில் அழிக்க வல்லவருக்கே அஞ்சுங்கள். மத் 11:28

சோதனை
1. உன் கடவுளாகிய ஆண்டவரைச் சோதிக்கவேண்டாம் மத் 4:7
2. உன் கடவுளாகிய ஆண்டவரை வணங்கி, அவர் ஒருவருக்கே பணி செய் மத் 4:10

சினம்
1. தம் சகோதரர் சகோதரிகளிடம் சினங்கொள்கிறவர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவார்; தம் சகோதரரையோ சகோதரியையோ ‘முட்டாளே’ என்பவர் தலைமைச் சங்கத் தீர்ப்புக்கு ஆளாவார்; ‘அறிவிலியே’ என்பவர் எரிநரகத்துக்கு ஆளாவார். மத் 5:22
2. பலிபீடத்தின்முன் உங்கள் காணிக்கையை வைத்து விட்டுப் போய் முதலில் அவரிடம் நல்லுறவு ஏற்படுத்திக் கொள்ளுங்கள். பின்பு வந்து உங்கள் காணிக்கையைச் செலுத்துங்கள். மத் 5:24

துன்பம்
1. நீங்கள் என்ன கேட்கிறீர்கள் என உங்களுக்குத் தெரியவில்லை. நான் குடிக்கப்போகும் துன்பக் கிண்ணத்தில் உங்களால் குடிக்க இயலுமா? மத் 20:22
2. என் தந்தையே, நான் குடித்தாலன்றி இத்துன்பக்கிண்ணம் அகல முடியாதென்றால், உமது திருவுளப்படியே ஆகட்டும். மத் 26:42

தீர்ப்பு
1. பிறர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு அளிக்காதீர்கள்; அப்போதுதான் நீங்களும் தீர்ப்புக்கு உள்ளாக மாட்டீர்கள் மத்.7:1
2. என்ன பேசுவது, எப்படிப் பேசுவது’ என நீங்கள் கவலைப்பட வேண்டாம். நீங்கள் என்ன பேச வேண்டும் என்பது அந்நேரத்தில் உங்களுக்கு அருளப்படும். மத் 10:19
[2017-02-28 23:50:51]


எழுத்துருவாக்கம்:

அருட்.சகோ. சி. குழந்தை திரேசா FSAG
பிரின் ஆம் கிம்சே, யேர்மனி