ஆன்மீக வலம்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, ஆண்டவரின் நற்செய்தி பணியில் ஆர்வமுள்ள பொதுநிலையினரே, உங்கள் ஆன்மீக சிந்தனைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholic.de என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். எமது ஆன்மீக இயக்குனரின் அனுமதி பெற்று, இங்கே பிரசுரிக்கப்படும்.

அன்பு அவனியில் அவதாரமான அன்பின் பெருவிழா '' கிறிஸ்மஸ்''என் அன்பிற்கினிய உறவுகளே! மீண்டும் ஒருமுறை தமிழ் கத்தோலிக்க இணையம் ஊடாக சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. மார்கழி மாதம் என்றவுடன் எல்லோர்க்கும் நினைவில் வருவது நத்தார் பண்டிகைதான். ஒவ்வொரு கடைகளிலும், வர்த்தக மையங்களிலும் கண்கவர்ந்த அழகிய நத்தார் வாழ்த்து மடல்கள், நத்தார் தாத்தா பொம்மைகள், நத்தார் அலங்காரப்பொருட்கள், வாண வெடிகள், மின் அலங்கார விளக்குகள் என பல்வேறு கடைகளிலும் நத்தாருக்காக விளம்பரம் செய்யத்தொடங்கி விடுவார்கள். ஏன் ஒவ்வொரு பாடசாலைகளிலும் ஒளிவிழாக்கள் களை கட்ட ஆரம்பிக்கும். வானொலிகள் ஒவ்வொரு நாளும் நத்தார் கீதங்களை ஒளிபரப்ப ஆரம்பிக்கும். பங்குகளில் பல்வேறு ஆயத்தங்கள், செயற்பாடுகள் என எங்குமே நத்தார் மயமாகிவிடும் .

காலநிலை, வானிலை மாற்றங்களும் நத்தாருக்காக தம்மை ஆயத்தப்படுத்தும். சில்லென்ற குளிர் காற்று இதமாக வீச ஆரம்பிக்கும். முன் பனி, பின் பனி என பனித்தூறல் புற்தரைகளை நனைத்து நிற்கும். மரஞ்செடி கொடிகள் யாவும் பசுமையாக துளிர் விட்டு பச்சைப்பசேல் என காட்சியளிக்கும். மரஞ்செடி கொடிகளுக்கு எப்படியடா தெரியும், கிறிஸ்து பிறப்பு காலம் வரப்போகுது என்று என சிலவேளைகளில் நான் சிந்திப்பதுண்டு. ஆம், அவைகளும் இறைவனின் படைப்புக்கள் தானே, இவைகள் இறைவனின் எல்லையற்ற அன்பின் பரிணாமங்கள். இந்த சிறிய அறிமுகத்துடன் இந்த திருவருகை காலத்திலே உங்கள் சிந்தனையைத் தூண்ட ஒரு சிறிய கதை ஒன்றுடன் எனது சிந்தனைகளை நகர்த்தி செல்லலாம் என்று நினைக்கின்றேன்.

பிறேசில் நாட்டில் உள்ள ஓர் அழகிய குக்கிராமத்தில் ஒரு சிறுவன் வாழ்ந்து வந்தான். அவனது பெயர் இம்மானுவேல். சிறு வயதிலிருந்தே மறையறிவிலே நிறைந்த ஆர்வம் உள்ளவனாய் இருந்தான். கிறிஸ்துவை தன வாழ்நாளில் அனுபவமாக உணர வேண்டும் என்ற தணியாத ஆசையுடன் இருந்தான். இவ்வாறாக கிறிஸ்தவ விசுவாசத்தில் வளர்ந்து வருகின்ற இம்மானுவேலுக்கு, இவ்வுலகில் மனித அவதாரமெடுத்து எம் மத்தியில் வாழ்ந்த இறைமகன் இயேசு பேசிய மொழி என்ன? என்ற ஒரு கேள்வி எழுந்தது. கிறிஸ்தவ மறையைப் பற்றி நன்கு அறிந்த மறை வல்லுனர்களும் இறையியலாளர்களும் கூறிய விடை இது. ''தம்பி நாங்கள் படித்த இறையியலின் படி இயேசு பேசிய மொழி அரமேய மொழி''. ஆனால் இம்மானுவேலுக்கு இந்த பதில் சரியாகத் தெரியவில்லை. இவ்வுலக சனத்தொகையில் பெரும்பாலானோர் கிறிஸ்தவர்கள். இவர்கள் யாவரும் ஒரு மொழியை பேசுபவர்கள் அல்ல. பல்வேறு பட்ட மொழி பேசுபவர்கள், இவர்கள் அனைவரையும் கிறிஸ்து இயேசு தன்னிடம் ஈர்த்திருக்கின்றார் என்றால், நிச்சயமாக இயேசு பேசிய மொழி யாவருக்கும் விளங்கக்கூடிய ஒரு பொது மொழியாக இருந்திருக்க வேண்டும். இதுதான் இம்மானுவேலின் வாதம்.

தனது கேள்விகளுக்கு விடை காணுவதற்காக, இம்மானுவேல் நாடு காண் பயணம் ஒன்றினை மேற்கொண்டான். இம்மானுவேல் பிறேசில் நாட்டிலிருந்து பெரு நாட்டிற்கு சென்றான். பெரு நாட்டு மக்களிடம் இவ்வினாவை கேட்டபோது அவர்கள், இயேசு ஸ்பானிய மொழியில் பேசியிருக்க வேண்டும் ஏனென்றால் எமது அண்டைய நாடுகளும் ஸ்பானிய மொழியையே பேசுகின்றன என்றார்கள். அந்நாட்டை கடந்து கனடாவிற்கு சென்றான் இம்மானுவேல். இயேசு பேசிய மொழி என்னவென்று கேட்ட போது, இயேசு நிச்சயமாக பிரான்சிய மொழியில் பேசியிருக்க வேண்டும் என்றார்கள். இயேசு ஆங்கில மொழியில் பேசியிருக்க வேண்டும் ஏனென்றால் அது ஒரு சர்வதேச மொழி என்றார்கள் ஒரு சிலர். இல்லை, இயேசு இலத்தீன் மொழியில் பேசியிருக்க வேண்டும், இது திருச்சபையின் தாய் மொழி என்றார்கள். சில ஆபிரிக்க நாட்டினர் இவ்வாறு கூறினார்கள்.இயேசு ஏழை மக்களை தேடி வந்தார். அதிக ஏழை மக்கள் எமது நாடுகளில் வாழ்கின்றார்கள். ஆகவே இயேசு அராபிய மொழியில் அல்லது சுவாஹிலி மொழியில் பேசியிருக்க வேண்டும் என்றார்கள். இம்மானுவேல் தனது பயணத்தை ஆசிய நாடுகளுக்கும் மேற்கொண்டான். இயேசு ரஷ்ய மொழியில் பேசியிருக்க வேண்டும் என்றார்கள் ரஷ்யர்கள். இல்லை, இயேசு மெண்டரின் மொழியில் (சீனமொழி) பேசியிருக்க வேண்டும் என்றார்கள். இயேசு இந்திய மொழியில் பேசியிருக்க வேண்டும் என்றார்கள் இந்தியர்கள். இல்லை இயேசு தமிழில் பேசியிருக்க வேண்டும் என்றார்கள் தமிழர்கள். இப்பொழுது இம்மானுவேலுக்கு ஒன்று மட்டும் புரிந்தது. ஒவ்வொருவரும் தத்தமது மொழியின் பெருமையினையும் சிறப்பினையும் கூற முனைகிறார்களே தவிர வேறொன்றுமில்லை என்று எண்ணியவனாக, தனது பயணத்தை, இயேசுக்கிறிஸ்து பிறந்த இடமான பெத்லகேம் நகரை நோக்கி தொடர்ந்தான். விமானம் மூலம் தனது பயணத்தை மேற்கொண்ட அவன் பல சிரமங்களுக்கு மத்தியில் மார்கழி 24 ம் திகதி இரவு சரியாக 11:30 மணிக்கு பெத்லகேம் நகரை அடைந்தான்.

கண்ணை மறைக்கும் காரிருள், அடர்ந்த பசுமையான மரங்கள், பஞ்சினை பயிரிட்டாற்போல எங்கணுமே வெண்பனி. இவைகளுடன் சேர்த்து மார்கழி மாத சிலென்ற குளிர் காற்று மெல்லென மெதுவாக வீசிக்கொண்டிருந்தது. '' இதுதான் எனது இறுதிப்பயணம், இன்று எப்படியாவது சரியான விடையைக் கண்டு பிடித்திட வேண்டும் இல்லையேல் இந்த பயணத்தை இத்துடன் நிறுத்தி விடவேண்டும் என்று மனதில் நினைத்தவனாக நடக்க ஆரம்பித்தான், அது ஒரு சிறிய கிராமம். அக்கிராமத்தின் ஓரத்திலே ஒரு சிறிய குடிசை. அங்கே ஓர் மங்கலான வெளிச்சம், அதையே உற்றுநோக்கிக்கொண்டு நடந்தான் இம்மானுவேல். அந்தநேரத்தில், ''தம்பி இம்மானுவேல் '' என்று யாரோ அழைப்பது அவனுக்கு கேட்டது. அவனுக்கோ அதிர்ச்சியும் ஆச்சரியமும். எனது பெயர் இம்மானுவேல் என்று இப்பெண்மணிக்கு எப்படி தெரியும். அப்பொழுது அப்பெண் இம்மானுவேல் அருகில் வந்து, ''பயப்படாதே! மகனே, நீ சரியான இடத்திற்குத்தான் வந்திருக்கிறாய். நீ ஆழமாக சிந்தித்து கொண்டிருக்கும் வினாவுக்கு பதில் அன்பு. ஆம் மகனே, இயேசு இவ்வுலகில் பிறந்து எம் அனைவரையும் பாவ அடிமைத்தனத்திலிருந்து மீட்டு நமக்கு மறுவாழ்வு அளிப்பதற்காக அவர் நம்மிடையே பேசிய மொழி அன்புமொழி. அன்பு அவனியில் அவதாரமாகிய அன்பின் திருவிழா கிறிஸ்து பிறப்பு விழா என்றாள் அப்பெண்மணி. அதனால் தான் இயேசு தன சீடர்களுக்கு இவ்வாறு சொன்னார். ''நான் உங்களை அன்பு செய்தது போல நீங்களும் ஒருவரை ஒருவரை அன்பு செய்யுங்கள்'' என்றார்.

ஆம், என் அன்பிற்கினிய என் உறவுகளே! இந்தக்கதை ஒரு கற்பனை கதையாக இருந்தாலும், இறைமகன் இயேசு இவ்வுலகிற்கு வந்தது எம் மனித குலத்தை அன்பு செய்வதற்கே என்ற யதார்த்தத்தை எடுத்தியம்புகின்றது. அன்புதான் அனைத்திற்கும் அடிப்படையாக அமைகின்றது. ஆண்டவரின் அளவற்ற அன்பின் வெளிப்பாடு தான் இவ்வழகிய உலகம். இவ்வழகிய உலகத்தை படைத்த இறைவன் இதனை ஆண்டு விருத்தி செய்ய மனிதனை தனது சாயலாகவும், பாவனையாகவும் படைத்தார். ஆனாலும் மனிதனின் கீழ்ப்படியாமையினால் , மனிதன் பாவத்திற்குள் தள்ளப்பட்டான். தான் படைத்த மனிதகுலம் அழிவுண்டு போகக்கூடாது என்ற ஒரே காரணத்தினாலும், மனிதன் மீது கொண்ட எல்லையற்ற அன்பினாலும், கடவுள் ஒரு மீட்பரை அனுப்பி மனுக்குலத்தை மீட்க விரும்பினார். இதையே புனித யோவான் தனது நற்செய்தியில் அழகாக கூறி நிற்கின்றார். ''தம் மகனில் விசுவாசங்கொள்ளும் எவரும் அழியாமல், முடிவில்லா வாழ்வைப் பெறும்பொருட்டு அந்த ஒரேபேறான மகனையே அளிக்கும் அளவுக்கு கடவுள் உலகின்மேல் அன்புகூர்ந்தார்''. இங்குதான் ஆண்டவரின் அளவற்ற அன்பு வெளிப்படுகின்றது. அதாவது தனது ஒரே மகனையே அன்புப்பரிசாக மனிதர்களுக்கு அளிக்க இறைவன் துணிந்தார். ஆண்டவர் அன்று மட்டுமல்ல, இன்றும் எம்முடன் அன்பு மொழி பேசிக்கொண்டு தான் இருக்கிறார். எமது பெற்றோர்கள் மூலமாக, நண்பர்கள் மூலமாக, உறவினர்கள் மூலமாக, அயலவர்கள் மூலமாக, அருட்பணியாளர்கள் மூலமாக என பல்வேறு வழிகளில் இறைவன் நம்முடன் அன்பு மொழி பேச விழைகின்றார். ஆனாலும் அதி நவீன தொழிநுட்ப வளர்ச்சியினாலும், உலகமயமாக்கப்பட்ட பொருளாதார வளர்ச்சியினாலும் ஆண்டவன் நம்முடன் பேசும் அன்பு மொழியை கேட்க மறந்து விடுவதோடு அடுத்தவரோடு ஆண்டவன் இயேசுவின் அன்பு மொழியில் பேசவும் மறந்து விடுகின்றோம்.

இறை இயேசுவின் அன்பிற்கினியவர்களே! இவ்வருட நத்தார் தினமானது, எமது வாழ்விற்கு ஒளியூட்டும் அன்பின் நத்தார் விழாவாக அமைய இறைவரம் வேண்டுவோம். இயேசு பேசிய அதே அன்பின் மொழியை மற்றவர்களுடன் பேச முயற்சி எடுப்போம். இவ்வருட கிறிஸ்து பிறப்பு விழாவினிலே, அம்மா , அப்பாவுடன் அன்பு மொழி பேசுவோம், அண்ணன், அக்காவுடன் அன்பு மொழி பேசுவோம், தம்பி தங்கையுடன் அன்பு மொழி பேசுவோம், அயலவருடன் அன்பு மொழி பேசுவோம், அகதிகளுடன் அன்பு மொழி பேசுவோம், அனாதைகளுடன் அன்பு மொழி பேசுவோம், அல்லல்படுவோருடன் அன்பு மொழி பேசுவோம், அமைதி இழந்து தவிப்போருடன் அன்பு மொழி பேசுவோம், ஆறுதலுக்காய் ஏங்குவோருடன் அன்பு மொழி பேசுவோம், அந்நியருடன் அன்பு மொழி பேசுவோம், அன்பிற்காய் ஏங்கும் அனைவருடனும் அன்பின் மொழியில் பேசுவோம்.

'' மனித இதயங்கள் மாறிட வேண்டும்
மண்ணில் மனிதம் உயர்ந்திட வேண்டும்
இறைவா நீ பிறந்திட வேண்டும் எம் மனங்களிலே''
இனிய கிறிஸ்து பிறப்பு நாள் வாழ்த்துக்கள் அனைவருக்கும் உரித்தாகட்டும்.
[2016-09-28 23:06:33]


எழுத்துருவாக்கம்:

சகோ. அ. அன்ரன் ஞானராஜ் றெவல் SDB
புனித. தோமஸ் இறையியல் கல்லூரி
மெஸினா, சிசிலியா
இத்தாலி