ஆன்மீக வலம்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, ஆண்டவரின் நற்செய்தி பணியில் ஆர்வமுள்ள பொதுநிலையினரே, உங்கள் ஆன்மீக சிந்தனைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholic.de என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். எமது ஆன்மீக இயக்குனரின் அனுமதி பெற்று, இங்கே பிரசுரிக்கப்படும்.

பாவசங்கீர்த்தனம் தேவைதானாஅன்பிற்கினிய என் நண்பர்களே! ஒப்புரவு அருட்சாதனம் பற்றி உங்களுடன் கலந்துரையாடலாம் என்று நினைக்கின்றேன். பாவசங்கீர்த்தனம் என்றவுடன் பயந்து ஓடி ஒளிந்து கொள்பவர்களும், ஐயோ நான் செய்த பாவத்தை ஒரு குருவிடம் முறையிடுவதா? என்று ஏங்குபவர்களும், அந்த குருவானவரின் நடத்தை சரியில்லை, அவரைப்பற்றி எங்களுக்கு தெரியாதாக்கும் என விமர்சித்து பாவசங்கீர்தன அருட்ச்சாதனத்தை தட்டி கழிப்பவர்களும் இல்லாமல் இல்லை. இத்தகைய சூழ்நிலையில், பாவசங்கீர்த்தன அருட்ச்சாதனத்தின் புனிதத்துவத்தையும், அதன் ஆரம்பத்தையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என விழைகின்றேன்.

இறைமகன் இயேசு இவ்வுலகிற்கு வந்ததன் நோக்கம் எமது மனுக்குலத்தை பாவ அடிமைத்தனத்திலிருந்து மீட்பதற்காகவும் எமக்கு மன்னிப்பு அளித்து மறுவாழ்வு அளிப்பதற்காகவுமே இங்கு வந்தார். இதற்கு காரணம் இறைவன் தன் சாயலாகவும், பாவனையாகவும் படைத்த மனிதர்கள் மேல் அளவுகடந்த அன்பு கொண்டிருந்தார். இதனையே புனித யோவான் நற்செய்தி அதிகாரம் 3: 16 இல் காண்கிறோம். தம் மகனில் விசுவாசங்கொள்ளும் எவரும் அழியாமல், முடிவில்லா வாழ்வைப் பெறும்பொருட்டு அந்த ஒரேபேறான மகனையே அளிக்கும் அளவுக்கு கடவுள் உலகின்மேல் அன்புகூர்ந்தார்.இறைமகன் இயேசு தனது பகிரங்கப்பணியின் போது மன்னிப்பு பற்றி பல்வேறு உவமைகள் வாயிலாக போதித்தார். ஊதாரிப்பிள்ளை உவமை, காணாமல் போன ஆடு உவமை, போன்றவற்றை குறிப்பிடலாம். நம் இயேசு ஆண்டவர் காணாமல் போன ஆடு உவமையில் இவ்வாறு குறிப்பிடுகின்றார். '' மனந்திரும்பத் தேவையில்லாத தொண்ணுற்றொன்பது நீதிமான்களைக் குறித்து வானத்தில் உண்டாகும் மகிழ்ச்சியைவிட, மனந்திரும்பும் ஒரு பாவியைக் குறித்து மிகுந்த மகிழ்ச்சி உண்டாகும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்." அதுமட்டுமல்ல தனது பகிரங்கப்பணி வாழ்வின் போது இயேசுக்கிறிஸ்து பலருக்கு மன்னிப்பு அளித்து மறுவாழ்வு அளித்திருக்கின்றார். இயேசு விபசாரத்தில் பிடிபட்ட பெண்ணை மன்னித்தார், திமிர்வாதக்காரனுக்கு மன்னிப்பு வழங்கி குணமாக்கினார். தனது பாவங்களுக்காக மனம் வருந்தி அழுது கண்ணீரால் இயேசுவின் பாதங்களை நனைத்து கூந்தலால் துடைத்த பெண்ணை இயேசு மன்னித்தார். அதுமட்டுமல்ல இயேசு நமக்கு கற்றுதந்த செபத்தினூடாக மற்றவர்களை மன்னிக்க எமக்கு அழைப்பு விடுக்கின்றார். ‘’ எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்தவர்களை நாங்கள் மன்னித்துள்ளதுபோல, எங்கள் குற்றங்களை மன்னித்தருளும்.’’ இவை எல்லாவற்றையும் விட, இறைமகன் இயேசுவின் அதி உயர்ந்த மன்னிப்பின் தருணமாக அவருடைய பாடுகள், மரணம், உயிர்ப்பு என்பன விளங்குகின்றன. இதனை மிகவும் அழகாக புனித பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்தில் அழகாக குறிப்பிடுகின்றார். ''இயேசு கிறிஸ்துவின் வழியாகவே, நம்மைத் தம் பிள்ளைகளாக்கிக் கொள்ள அன்பினால் நம்மை முன்குறித்து வைத்தார்.அந்த அன்பு மகனாலே, அவருடைய இரத்தத்தின் வழியாய், இறைவனின் அருள் வளத்திற்கேற்ப நாம் மீட்பு அடைகிறோம், குற்றங்களுக்கு மன்னிப்புப் பெறுகிறோம்.'' எபேசியர்.1: 6-7.

இதன் மூலம் இயேசு பாவம் செய்யலாம் என்றோ, பாவம் செய்வதில் தவறில்லை என்றோ அவர் கூறவில்லை, பாவம் என்பது நீதிக்கு எதிராக செய்யப்படும் அநீதி அனைத்துமே பாவம் தான், அன்பு செய்ய மறுத்தல் ,சட்டத்தை மீறுவது, நன்மை செய்ய முடிந்தும் நன்மைசெய்யாது இருத்தல், தீமையான நோக்கம், பாரபட்சம் காட்டுதல் மிகுதியாகப் பேசும்போது சொற்களின் மிகுதியில் பாவம் தெரியும், இவை அனைத்துமே வெவ்வேறு பரினாமங்களில் சொல்லப்பட்டாலும் மிக எளிமையாகச் சொல்வதென்றால் மனச்சாட்சிக்கு விரோதமான செயல்கள் அனைத்துமே பாவம் என்று கொள்ளலாம். பாவம் கடவுளுக்கு எதிராகவும், அயலவருக்கு எதிராகவும், தமக்கு எதிராகவும் செய்யப்படுகின்றது. ஆனபோதிலும், இறைமகன் இயேசு, ஒருவர் தன் பாவங்களை நினைத்து மனம்வருந்தி அதற்காக இறைவனிடம் மன்னிப்பு கேட்கின்ற பொழுது இறைவன் அவர் பாவங்களை மன்னிப்பார் என்று வலியுறுத்தி நிற்கின்றார். இறைவனின் இரக்கம் என்பது பாவத்தை குணமாக்கும் அருமருந்தாகின்றது. அதுமட்டுமா! எமக்காக பாடுபட்டு சிலுவையில் அறையுண்டு இறந்தபோது கூட, "தந்தையே, இவர்களை மன்னியும்; ஏனெனில் தாங்கள் செய்கிறது இன்னதென்று இவர்களுக்குத் தெரியவில்லை" என்று இறைத்தந்தையிடம் கூறி தன்னை வதைத்தவர்களுக்கே மன்னிப்பு வழங்கினார். இறைமகன் இயேசு.

இவையெல்லாம் சரி நாங்கள் இதனை ஏற்கின்றோம். ஆனாலும் ஏன் குருவிடம் சென்று பாவஅறிக்கை செய்ய வேண்டும். நாங்கள் கடவுளிடம் நேரடியாக முறையிட முடியாதா? என்று நீங்கள் முணுமுணுப்பது எனக்கு விளங்குகின்றது. இதனை விவிலிய ஆதாரங்களுடன் உங்களுக்கு விளக்கினால் நன்றாக இருக்கும் என நம்புகின்றேன். மன்னித்து அருள்வாழ்வு அளிக்கின்ற இந்த இறை இரக்கப்பணி தொடர வேண்டும் என இயேசு விரும்பினார். எனவேதான், அவர் உயிர்த்த பின் வாரத்தின் முதல் நாள், தனது அப்போஸ்தலர்களுக்கு தோன்றி மனிதருக்கு மன்னிப்பு வழங்கும் மகத்தான பணியை அவர் தம் சீடர்களுக்கு வழங்கினார். இதனை யோவான்20: 21-23 இல் காணலாம்.இயேசு மீண்டும் அவர்களை நோக்கி, "உங்களுக்குச் சமாதானம். "என் தந்தை என்னை அனுப்பினதுபோல நானும் உங்களை அனுப்புகிறேன்" என்றார். பின்பு அவர்கள்மேல் ஊதி, "பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள். எவர்களுடைய பாவங்களை மன்னிப்பீர்களோ, அவர்களுக்கு அவை மன்னிக்கப்பெறும்; எவர்களுடைய பாவங்களை மன்னியாது விடுவீர்களோ, அவை மன்னிப்பின்றி விடப்படும்" என்றார். இந்த நிகழ்வின் மூலம் இயேசு பாவசங்கீர்த்தன அருட்சாதனத்தை உருவாக்கியதோடு, தனது அப்போஸ்தலர்களுக்கு பாவத்தை மன்னிக்கின்ற அதிகாரத்தை வழங்கினார். பின்னர் அப்போஸ்தலர்கள் வழி தொடர்ந்த ஆயர்கள், குருக்களுக்கு மன்னிக்கிற அதிகாரத்தை வழங்கினார்கள், இந்த அப்போஸ்தலிக்க பாரம்பரியம் இன்றும் எமது கத்தோலிக்க திருச்சபையில் தொடர்கின்றது. இந்த அதிகாரம் மற்றவர்களை அடக்கி ஆளும் அதிகாரம் அல்ல, மாறாக மற்றவர்கள் ஆறுதல்படுத்தும், இறைவனின் மன்னிப்பை மனிதருக்கு வழங்கும் அன்பின் அதிகாரம் ஆகும்.

இயேசு விண்ணகம் செல்வதற்கு முன், அவருடைய சீடர்கள் ஆற்றவேண்டிய பணி பற்றி விளக்கி இயேசுவின் சாட்சிகளாய்அவர்கள் இருக்க வேண்டும் என்று கூறி இறையரசுப்பணியின் பொறுப்பினை அவர்களுக்கு விட்டுச்செல்கின்றார். இதனை லூக்கா நற்செய்தி24:44-49 வசனங்களில் காணலாம்.இயேசுக்கிறிஸ்து இவ்வுலகிற்கு வந்ததன் நோக்கமே, நம் அனைவரையும், பாவ அடிமைத்தனத்திலிருந்து மீட்டு கடவுளின் அன்புப்பிள்ளைகளாக வாழக்கூடிய இறைமனித உறவினை கட்டியெழுப்புவதற்காகவே ஆகும். ஆகவே இந்த மன்னிக்கின்ற பணியானது தொடர்ந்தும் இவ்வுலகத்தில் தொடரவேண்டும் என இயேசு விரும்பினார். எனவே திருச்சபையை நிறுவி ஒப்புரவு அருட்சாதனத்தை கடவுளின் மக்களுக்கு வழங்குகின்ற கருவிகளாக அருட்பணியாளர்கள் திகழ்ந்து, இயேசு விட்டுச்சென்ற இந்த இரக்கத்தின் பணியை செய்ய வேண்டுமென்று அவர் விரும்பினார். ஆகவே இந்த ஒப்புரவு அருட்சாதனம் என்பது திருச்சபையின் கண்டுபிடிப்பு அல்ல மாறாக,தம் மக்களின் மீது கொண்ட அளவற்ற அன்பினால் இயேசுக்கிறிஸ்துவினால் ஸ்தாபிக்கப்பட்ட அருட்சாதனம் ஆகும். இந்த ஒப்புரவு அருட்சாதனம் வழங்கும் பணியானது, கிறிஸ்துவின் விண்ணேற்றத்தின் பின்னர் ஆரம்பகால திருச்சபையில் ஆற்றப்பட்டு வந்தது. இதனை திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்தில் அழகாக குறிப்பிடுகின்றார். ''இவை எல்லாம் கடவுள் செயல்தான். அவரே கிறிஸ்துவின் வழியாய் நம்மைத் தம்மோடு ஒப்புரவாக்கி, ஒப்புரவு செய்யும் திருப்பணியை எங்களுக்குக் கொடுத்தார்.'' (2 கொரி5:18). அடுத்து கி.பி 80 களில் திதாகே என கிரேக்க மொழியில் அழைக்கப்படும் அப்போஸ்தலர்களின்போதனைகள் ஏட்டில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரே சமூகமாக ஆண்டவரின் திருக்கூட்டத்தில் மத்தியில் நீங்கள் உங்கள் பாவங்களுக்காக மனம் வருந்தி மன்னிப்பு கேட்கலாம். இதன் மூலம் நாம் நிறைவேற்றும் தியாகப்பலி தூய்மை பெறுகின்றது என குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தகாலப்பகுதியில் ஒப்புரவு அருட்சாதனம் ஒரு தனி நபருக்குரிய அருட்சாதனமாக இருக்கவில்லை.இறைமக்கள் ஒரே குடும்பமாக ஒன்றுகூடி எல்லோர் முன்னிலையில் தங்கள் பாவங்களை அறிக்கையிடுவார்கள்.

உரோமைப்பேரரசரான கொன்ஸ்டன்டைன் ஆட்சிக்கு வந்தபோது கிறிஸ்தவம் மதத்தினை அரசமதமாக அங்கீகாரம் செய்தார். அதன் பின்னர் திருச்சபையின் தந்தையர்கள் ஒப்புரவு அருட்சாதனத்தின் முக்கியத்துவத்தை போற்றி விசுவாசிகளுக்கு வலியுறுத்திவந்தனர். புனித அம்புறோஸ் ஒப்புரவு அருட்சாதனம் பற்றி குறிப்பிடும் போது, பாவத்திற்காக மனம் வருந்துவதனால் பாவம் மன்னிக்கப்படுவதில்லை. இயேசுகிறிஸ்து பாவங்களை மன்னிக்கும் அதிகாரத்தை தனது சீடர்களுக்கு வழங்கினார். இந்த அதிகாரத்தை திருச்சபையின் பாரம்பரியத்தின்படி அப்போஸ்தலர்களின் வழிவந்த ஆயர்கள் குருக்கள் பெற்றுக்கொண்டார்கள். ஆகவே இறை மக்களுக்கு மன்னிப்பினை வழங்குகின்ற அதிகாரத்தை ஒப்புரவு அருளடையாள பணியாளர்களான ஆயர்கள், குருக்கள் இவர்களால் மட்டுமே முடியும் என குறிப்பிடுகின்றார். பாவசங்கீர்த்தன அருட்சாதனத்தில் குருவானவர் ஒரு கருவியாக இருக்கின்றார். அதாவது கடவுளுக்கும் மனிதருக்கும் மத்தியில் இருந்து செயற்படும் நபராக குருவானவர் விளங்குகின்றார். கடவுளின் மன்னிப்பையும் இரக்கத்தையும் அருளையும் விசுவாசிகளுக்கு வழங்குகின்ற ஒரு ஊடகமாக, கருவியாக (Instrument of God and Ambassador of Christ ) கிறிஸ்துவின் பிரதிநிதியாக இருக்கின்றார்.

அடுத்து அநேகமான விசுவாசிகளுக்கு தெரிந்திருக்காத விடயமாக இது இருக்கலாம். அதுதான் அருளடையாள முத்திரை (Seal of Secrecy ) . திருச்சபையின் கோட்பாடுகளின் படி திருச்சட்ட எண்கள் 983, 984 இவ்வாறு சொல்கின்றன

தி.ச. 983. அருளடையாள முத்திரை உடைக்கமுடியாதது, எனவே பாவமன்னிப்பாளர் சொல்லாலோ வேறு எவ்விதத்திலோ மனம் வருந்துவோரை எக்காரணத்தை முன்னிட்டும் காட்டிக் கொடுப்பது முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது

1) மொழிபெயர்ப்பாளர் இருந்தால் அவரும், பாவஅறிக்கையிலிருந்து எவ்விதத்திலாவது பாவங்களைப் பற்றித் தெரியவந்த அனைவரும் இரகசியம் காக்கக் கடமைப்பட்டுள்ளனர்.

தி.ச. 984. பாவமன்னிப்பாளர் மனம்வருந்துவோருக்குத் தீமை பயக்கும் விதத்தில் பாவஅறிக்கையிலிருந்து பெற்ற தகவல்களைப் பயன்படுத்த, இரகசியம் வெளியிடும் எவ்வித ஆபத்தும் தவிர்க்கப்பட்டாலும்கூட, தடைசெய்யப்பட்டுள்ளார்.

2) அதிகாரத்திலுள்ள ஒருவர், பாவங்களைப்பற்றி ஒப்புரவு அறிக்கையில் எந்த ஒரு காலத்திலும் தாம் பெற்ற தகவலை, வெளியரங்க ஆளுகைக்காக எவ்விதத்திலும் பயன்படுத்தக்கூடாது.

உங்களுக்கு மிகவும் இலகுவாக விளங்கும்படி சொல்ல வேண்டுமென்றால், ஒரு கிறிஸ்தவன் அல்லது கிறிஸ்தவள் குருவிடம் பாவ அறிக்கை செய்யும் போது பாவஅறிக்கையினை கேட்கும் குருவானவர் இரகசியம் காக்க கடமைப்பட்டுள்ளார். அதாவது குருவிற்கே இதனால் ஆபத்து வர இருந்தாலும் கூட அவர் இரகசியத்தை வெளிப்படுத்த முடியாது.இந்த அருட்சாதனத்தை நிறைவேற்றும் அருள்பணியாளர் திருச்சபையின் சட்ட திட்டங்களுக்கு எதிராக நடப்பாரேயானால் அவரிடமிருந்து பாவ அறிக்கை கேட்கும் செயலுரிமையை அவர் இழந்துவிடுவார் என திருச்சட்டம் கூறி நிற்கின்றது. அது மட்டுமல்லாமல் இன்னும் பல வழிமுறைகளை திரு சட்டம் (Code of the Canon Law) எடுத்து இயம்புகின்றது. பாவ அறிக்கை கேட்கும் குருவானவர்,கேள்விகளைக் கேட்பதில் மனம் வருந்துவோரின் நிலை மற்றும் வயதைக் கருத்திற்கொண்டு, விவேகத்துடனும் நுண்மதியுடனும் செயல்படவேண்டும்: பாவ உடந்தையாளரின் பெயரைக் கேட்பதைத் தவிர்க்கவேண்டும். பாவமன்னிப்புக் கேட்கும் மனம் வருந்துவோரின் ஏற்புடைய நிலையைப் பற்றிப் பாவமன்னிப்பாளருக்கு எவ்வித ஐயமும் இல்லையென்றால், பாவமன்னிப்பை மறுக்கவோ தாமதப்படுத்தவோ கூடாது.குரு பாவஅறிக்கைகளைக் கேட்பதில், ஒரே நேரத்தில் தாம் நடுவராகவும் குணமளிப்பவராகவும் செயல்படுகிறார் என்பதையும், இறைவனுடைய நீதி மற்றும் இரக்கத்தின் பணியாளராக இறைவனால் ஏற்படுத்தப்பட்டுள்ளார் என்பதையும் நினைவில் நிறுத்தவேண்டும். இவ்வாறு அவர் இறைவனுடைய மகிமைக்கும் ஆன்ம மீட்புக்கும் உதவமுடியும். திருச்சபையின் பணியாளர் என்ற முறையில், பாவமன்னிப்பாளர் (குருவானவர்), அருளடையாளத்தை நிறைவேற்றுவதில் திருஆசிரியத்தின் கோட்பாடுகளையும் தகுதிவாய்ந்த அதிகாரியால் இயற்றப்பட்ட விதிமுறைகளையும் உண்மையுடன் கடைப்பிடிக்கவேண்டும். ஆகவே ஒப்புரவு அல்லது பாவசங்கீர்த்தன அருட்சாதனம் ஆனது பாவத்தால் கறைபடுத்தப்பட்ட விசுவாசிகளுக்கு மன்னிப்பு வழங்கி அருள் அளிக்கும் அருட்சாதனமாக விளங்குகின்றது.

ஒப்புரவு அருட்சாதனம் பற்றி இவ்வளவு விளக்கம் தந்த பிறகும் நீங்கள் கேட்கும் கேள்வி எனக்கு புரிகின்றது. ''எனக்கு பாவ சங்கீர்த்தனம் செய்ய விருப்பம் ஆனாலும், எனக்கு தெரிந்த சில குருக்கள், தூய்மையானவர்கல் அல்ல.அவர்களை பற்றி எனக்கு நன்றாக தெரியும். ஆகவே நான் எவ்வாறு அவர்களிடம் போய் நான் பாவசங்கீர்த்தனம் செய்வது? என்று சொல்லி இந்த மகத்தான அருட்சாதனத்தை பலர் தட்டி கழிக்கின்றார்கள். இறையேசுவுக்குள் பிரியமானவர்களே! குருக்கள் தவறு செய்திருக்கலாம், அல்லது உங்களுக்கு தெரிந்த குருவானவர் தகுதியற்ற வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கலாம் அவர்களும் உங்களைப்போல மனிதர்கள் தானே, குருக்கள் என்றவுடன் அவர்கள் வானத்திலிருந்து வீழ்ந்தவர்கள் அல்ல. உங்களைப்போல் குடும்பங்களில் இருந்து வந்தவர்களே. உங்களைப்போல அவர்களும் பலவீனமானவர்களே, கடவுள் ஒருவரே எப்போதும் தூய்மையானவர். அதற்காக நான் குருக்களுக்காக வக்காளத்து வாங்கவோ அல்லது குருக்கள் தீய வாழ்க்கை வாழ்வது தவறில்லை என்றோ சொல்ல வரவில்லை. இயன்றவரையில் குருக்கள் தூய வாழ்க்கை வாழ அழைக்கப்பட்டுள்ளார்கள். இருந்தபோதிலும் கடவுள் அவர்களை விசுவாசிகளுக்கு பாவத்திலிருந்து விடுதலை அளித்து மன்னிப்பினை வழங்குகின்ற கருவிகளாக நியமித்திருக்கின்றார்.(Instrument of God ). இங்கு பாவங்களை மன்னிப்பவர் இயேசு கிறிஸ்து மாத்திரமே. கிறிஸ்துவுக்கும் மனிதருக்கும் இடையில் நின்று பரிந்து பேசும் அல்லது செயற்படும் ஒரு நடுவராக கு செயற்படுகிறார். ஆகவே குருவானவரின் பாவம் நீங்கள் செய்யும் பாவசங்கீர்த்தனத்திற்கு தடையாக இருக்க முடியாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். குருக்களின் பாவமோ அல்லது வாழ்க்கை முறையோ நமக்கு கடவுளிடமிருந்து வரும் மன்னிப்பை தடுக்க முடியாது.பாவ அறிக்கை செய்கின்ற போது பாவசங்கீர்த்தன தொட்டியில் குருவினை காண்கின்ற போதும் கூட நமக்கு மன்னிப்பை வழங்கி ஆசீர் அளிப்பவர் இயேசு மாத்திரமே, இதையே திருச்சபையின் மறைக்கல்வி நூலும் கூறி நிற்கின்றது. (Catchism of the catholic church - 1441 )ஆகவே தான் பாவ சங்கீர்த்தன அருட்சாதனம் நிறைவேற்றும் போது குருவானவர், பிதா, சுதன், பரிசுத்த ஆவியின் பெயரால் உன்னை மன்னிக்கின்றேன். என்று என்று கூறி மன்னிப்பு வழங்குகின்றார். ஆகவே இறை யேசுவில் நம்பிக்கை கொண்ட இறைமக்களாக இந்த இறை இரக்கஆண்டிலே மனம் திறந்து நமது பாவங்களுக்காக மனம் வருந்தி நல்ல பாவசங்கீர்த்தனம் செய்ய இறைவன் உங்களையும் என்னையும் அழைத்து நிற்கின்றார்.

நாங்கள் அவரிடமிருந்து கேட்டறிந்து உங்களுக்குத் தெரிவிக்கும் செய்தி இதுவே: கடவுள் ஒளியாய் இருக்கிறார். அவருள் இருள் என்பதே இல்லை.இருளிலே வாழ்ந்துகொண்டு அவரோடு நமக்கு நட்புறவு உண்டு என்போமானால் நாம் பொய்யர்கள், உண்மைக்கு ஏற்ப நடப்பவர்கள் அல்ல. மாறாக, அவர் ஒளியில் இருப்பதுபோல நாமும் ஒளியில் நடப்போமானால், ஒருவரோடு ஒருவர் நட்புறவு கொண்டவர்களாவோம். அப்போது அவர் மகனாகிய இயேசுவின் இரத்தம் எல்லாப் பாவத்தினின்றும் நம்மைத் தூய்மைப்படுத்துகிறது. நம்மிடம் பாவமில்லை என்போமானால் நம்மையே நாம் ஏமாற்றிக்கொள்கிறோம்; உண்மை என்பது நம்மிடம் இல்லை. (1 யோவான்1:5-10)
[2016-09-28 23:06:33]


எழுத்துருவாக்கம்:

சகோ. அ. அன்ரன் ஞானராஜ் றெவல் SDB
புனித. தோமஸ் இறையியல் கல்லூரி
மெஸினா, சிசிலியா
இத்தாலி