ஆன்மீக வலம்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, ஆண்டவரின் நற்செய்தி பணியில் ஆர்வமுள்ள பொதுநிலையினரே, உங்கள் ஆன்மீக சிந்தனைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholic.de என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். எமது ஆன்மீக இயக்குனரின் அனுமதி பெற்று, இங்கே பிரசுரிக்கப்படும்.

ஆண்டவரே மீட்புப் பெறுவோர் சிலர் மட்டும்தானா? (லூக்கா 13: 23)
பாகம் இரண்டு

மீட்பு பெற என்ன செய்ய வேண்டும்? அல்லது நமது மீட்பை நோக்கிய பயணம் எப்படி அமையவேண்டும்? இதற்கு யேசு தரும் பதில்: „இடுக்கமான வாயில் வழியாக நுழைய வருந்தி முயலுங்கள்.“ (லூக்கா 13:24) இந்த „இடுக்கமான வாயிலை“ பலரும் பலவிதங்களில் விளக்குகின்றனர்.

சிலர்: உடல் ஆசைகளை அடக்கி, செபம், தவம் மற்றும் தியானம் செய்து கடவுளோடு தங்களுக்குள்ள உறவை நெருக்கமாக்க முயற்சிகளை செய்வது என்றும்.

இன்னும் சிலர்: ஏழை எளியவருக்கு, துன்பத்தில் உள்ளவர்களுக்கு எந்த வித எதிர்பார்பும் இல்லாமல் உதவிகள செய்வதன் வழியாக கடவுளுக்கு நெருக்கமானவர்களாக மாறிடலாம் என்றும் கூறுகின்றனர். „பின்பு அரியணையில் வீற்றிருக்கும் அரசர் தம் வலப்பக்கத்தில் உள்ளோரைப் பார்த்து ' என் தந்தையிடமிருந்து ஆசி பெற்றவர்களே வாருங்கள்; உலகம் தோன்றியது முதல் உங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் ஆட்சியை உரிமைப்பேறாகப் பெற்றுக் கொள்ளுங்கள். ஏனெனில் நான் பசியாய் இருந்தேன் நீங்கள் உணவு கொடுத்தீர்கள்; தாகமாய் இருந்தேன் என் தாகத்தைத் தணித்தீர்கள்; அன்னியனாக இருந்தேன் என்னை ஏற்றுக் கொண்டீர்கள்; நான் ஆடையின்றி இருந்தேன் நீங்கள் எனக்கு ஆடை அணிவித்தீர்கள்; நோயுற்றிருந்தேன் என்னைக் கவனித்துக் கொண்டீர்கள்; சிறையில் இருந்தேன் என்னைத் தேடி வந்தீர்கள் ' என்பார்.“(மத்தேயு 25:34-37).

இன்னும் சிலர் இறைவன் தந்த இந்த வாழ்வில் தங்களது அன்றாட கடமைகளை சரியாக செய்வதன் வழியாக கடவுளுக்கு உகந்தவராக வாழ முடியும் என்று கூறுகின்றார். மேற்கூறிய எல்லா வழிகளுமே நமது மீட்பு பயணத்தை நிறைவுக்கு இட்டுச் செல்லும் வழிமுறைகள் தான். வரலாற்றில் வாழ்ந்த பல்வேறு புனிதர்களும் இவைகளுக்கு சிறந்த எடுத்துகாட்டாக வாழ்ந்து காட்டியுள்ளனர். மேற் சொன்ன வழிமுறைகளை சற்று கூர்ந்து கவனித்தால் இரண்டு முக்கியமான பண்புகள் அடித்தளமாக அமைந்துள்ளதை நாம் காண முடியும்.

1. யேசுவின் மீது முழுமையான நம்பிக்கை. „யேசு கிறிஸ்துவின்மீது கொள்ளும் நம்பிக்கையின் வழியாகக் கடவுள் மனிதரைத் தமக்கு ஏற்புடையவராக்குகிறார்; நம்பிக்கை கொள்வோர் அனைவரையுமே அவர் ஏற்புடையவராக்குகிறார். அவர் வேறுபாடு காட்டுவது இல்லை.“
(ரோமையர் 3:22)


2. நாம் கொண்ட நம்பிக்கையை செயலில் காட்டுதல். „அறிவிலிகளே, செயலற்ற நம்பிக்கை பயனற்றது என நான் எடுத்துக்காட்ட வேண்டுமா? நம் மூதாதையாகிய ஆபிரகாமைப் பாருங்கள். தம் மகன் ஈசாக்கைப் பீடத்தின்மேல் பலிகொடுத்தபோது அவர் செய்த செயல்களினால் அல்லவோ கடவுளுக்கு ஏற்புடையவரானார்? அவரது நம்பிக்கையும் செயல்களும் இணைந்து செயல்பட்டன என்றும், செயல்கள் நம்பிக்கையை நிறைவுபெறச் செய்தன என்றும் இதிலிருந்து புலப்படுகிறது அல்லவா? ”ஆபிரகாம் ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டார். அதை ஆண்டவர் அவருக்கு நீதியாகக் கருதினார்” என்னும் மறைநூல் வாக்கு இவ்வாறு நிறைவேறியது. மேலும் அவர் கடவுளின் நண்பர் என்றும் பெயர் பெற்றார். எனவே மனிதர் நம்பிக்கையினால் மட்டுமல்ல, செயல்களினாலும் கடவுளுக்கு ஏற்புடையவராகின்றனர் எனத் தெரிகிறது.“(யாக்கோபு 2:20-24)

நமது ஒவ்வெரு செயலுக்கும் இந்த இரண்டு பண்புகள ஊற்றாக, அடித்தளமாக அல்லது காரணமாக அமைய வேண்டும் என்பதில் சந்தேகம் நமக்கு தேவையில்லை. ஆனால் இந்த இரண்டு பண்புகளை சுட்டிகாட்டி பல்வேறு கிறிஸ்தவ குழுக்கள் கத்தோலிக்க கிறிஸ்தவர்களை திசைதிருப்பி விடுகின்றனர். கத்தோலிக்க கிறிஸ்தவர்களுக்கு யேசுவைப் பற்றி அதிகம் தெரியாது, யேசுவின் மீது முழுமையான நம்பிக்கை கிடையாது, செப அனுபவம் கிடையாது கத்தோலிக்க திருச்சபையில் பல்வேறு பொறுப்புகளில் உள்ளவர்கள் யேசுவை தங்கள் வாழ்வில் பிரதிபலிப்பதில்லை, கடைபிடிப்பதில்லை, நீங்கள் ஏன் அவர்களுக்கு பின்னால் செல்கின்றீர்கள்? என்று கேள்விக்கனைகளை தொடுக்கும் போது நாம் பதில் கூற முடியாமல் தடுமாறுகின்றோம் அல்லது சில நேரங்களில் இது உண்மைதான் என்ற முடிவுக்கு வந்துவிடுகின்றோம. இச்சூழலில் நமது பதில் என்னவாக இருக்கலாம்? பதில் தர ஒரு சிறு முயற்சி. நமது இறைநம்பிக்கையை ஒரு தாய்க்கு ஒப்பிட விரும்புகிறேன்.

ஓவ்வொரு மகனுக்கும் தனது தாய்(இறைநம்பிக்கை) சிறந்தவள் தான். ஒரு வேளை அவர்களது தாய்(இறைநம்பிக்கை) நல்ல கறிகாய் வகைளோடு மூன்று வேளையும் உணவு மற்றும் வசதியான வாழ்வை தந்திருக்கலாம். நமது தாய்(இறைநம்பிக்கை) ஒரு வேளை உணவோடு வசதிகுறைவான ஏழ்மையான வாழ்வை நமக்கு தந்திருக்கலாம். அதற்காக அவள், தாய்(இறைநம்பிக்கை) என்று எண்ணப்பட தகுதியற்றவள் என்று கூறும் அவர்களது கருத்து யாராலும் ஏற்க முடியாது. தாயன்பை(இறைநம்பிக்கை) உயர்வாக எடுத்து கூறுவது மிகவும் நல்லது. அதற்கு மாறாக தாயன்பை(இறைநம்பிக்கையை) வரையறைகளுக்கு அடக்கி வைத்து மற்றவர்களின் தாயன்பை(இறைநம்பிக்கையை) குறைத்து மதிப்பிட முயற்சிக்கும் பண்பு நம்மை மிருகமாகத் தான் மாற்றும், மனிதனாக அல்ல. சாட்சிய வாழ்வுக்கான முதற்படி மனிதனாக வாழ்வது தான். நம் வாழ்வில் மனிதனாக வாழ்ந்திட முயன்றால் நமது சாட்சிய வாழ்வுக்கான பயணத்தில் சரியான பாதையில் நாம் பயணித்து கொண்டிருக்கின்றோம் என்று நம்மை நாமே உற்சாகப்படுத்திக் கொள்வதில் தவறு இல்லை.
[2013-09-25 21:34:31]


எழுத்துருவாக்கம்:

Pater.John Sowri Charles ocd
Karmeliten Kloster
Würzburg
Germany.