ஆன்மீக வலம்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, ஆண்டவரின் நற்செய்தி பணியில் ஆர்வமுள்ள பொதுநிலையினரே, உங்கள் ஆன்மீக சிந்தனைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholic.de என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். எமது ஆன்மீக இயக்குனரின் அனுமதி பெற்று, இங்கே பிரசுரிக்கப்படும்.

உயிர்த்த இயேசுவின் சாட்சிகளாவோம்இயேசுவின் உயிர்த்தெழுதல் ஆனது இறைவனின் மீட்புத்திட்டத்தின் உச்ச வெற்றியாக கருத முடியும், அதாவது இறைவன் தம் மக்களைப் பாவ அடிமைத்தனத்திலிருந்து மீட்க சித்தம் கொண்டிருந்தார். இதற்கமைய தனது ஒரே மகன் இயேசுவை அனைத்து மக்களினதும் பாவத்திற்கும் பரிகாரப்பலியாக ஒப்புக் கொடுத்தார். இதனை 1யோவான் 4:9-10 இல் தெளிவாக காண முடியும்.

“நாம் வாழ்வு பெறும் பொருட்டுக் கடவுள் தம் ஒரே மகனை உலகிற்கு அனுப்பினார். இதனால் கடவுள் நம்மீது வைத்த அன்பு வெளிப்பட்டது.நாம் கடவுள்மீது அன்பு கொண்டுள்ளோம் என்பதில் அல்ல, மாறாக அவர் நம்மீது அன்பு கொண்டு தம் மகனை நம் பாவங்களுக்குக் கழுவாயாக அனுப்பினார்”. ஆகவே இயேசுவின் பிறப்பில் ஆரம்பித்த இறைவனின் மீட்புத்திட்டம் கிறிஸ்து இயேசுவின் உயிர்ப்பில் முழுமை பெறுகிறது. யூத சாம்ராஜ்யத்தின் சமய சம்பிரதாயங்களையும் சட்ட திட்டங்கள் அனைத்தையும் அப்படியே அச்சொட்டாகக் கடைப்பிடித்த யூதப்பெருந்தலைவர்கள் தமது கருத்துக்களுக்கு எதிராக வாதம் செய்த கலகக்காரனான இயேசுவைக் கொன்று விட்டோம் என்று பெருமிதம்கொண்டார்கள். இயேசு என்ற முடிவில்லாத ஒளியை இந்த உலக இருளின் சக்திகள் விழுங்கிட முயற்சித்தன. உலகின் ஒளி நானே என்றவரை கொலை செய்தது இந்த உலகம். ஆனால் அவர் சாவை வென்றவராய், சாத்தானை முறியடித்தவராய், பாவத்தை ஒழித்தவராய் இயேசு உயிர்த்து விட்டார்.

கிறிஸ்துவின் உயிர்ப்பானது திருச்சபையை உருவாக்குகின்ற மாபெரும் சக்தியாகவும் திருச்சபை எனும் மாவிருட்சம் தளிர் விட, விசுவாசவித்தாகவும் அமைந்தது. கிறிஸ்துவின் உயிர்ப்பு எம் கிறீஸ்தவ விசுவாசத்தின் மறைபொருளாகவும் இறைவனின் மீட்பின் வரலாற்றில் ஒரு புதியதொரு அத்தியாயம் ஆகவும் திகழ்கிறது. கிறிஸ்து இயேசுவின் உயிர்ப்பு ஆனது மிகப் பெரிய புதுமை என்று கூறலாம். சிலவேளை நீங்கள் கூறலாம். இயேசுவுக்கு முன் இலாசர் உயிர்த்தெழுந்தாரே என்று. இலாசர் மீண்டும் உயிர் பெற்றது என்பது ஓர் புதுமைதான் ஆனால் இதனை இயேசுவின் உயிர்த்தெழுதலோடு ஒப்பிட முடியாது ஏனென்றால் இயேசுவினால் உயிர்ப்பிக்கப்பட்ட அனைவரும் உயிர் அளிக்கப்பட்டவர்களே. அதாவது இறந்து போன இவர்களது வெற்று உடல்களுக்கு மறுபடியும் இயேசுவினால் உயிர் கொடுக்கப்பட்டது. ஆனாலும் அவர்கள் பின்னர் இறந்து போனார்கள். இதையே ஆங்கிலத்தில் RESUSCITATION என்று அழைக்கின்றோம்.

இயேசுவின் உயிர்ப்பினை ஆங்கிலத்தில் RESURRECTION என்று அழைக்கின்றோம். அதாவது இயேசு உயிர்த்து முடிவில்லாத நிலைவாழ்வை உரிமை ஆக்கிக்கொண்டார். அத்தோடு மகிமைக்குரிய உடலை தன்னகத்தே கொண்டிருந்தார். அதனால் தான் பூட்டப்பட்டிருந்த அறைக்குள் கூட அவரால் பிரவேசிக்க முடிந்தது. இதனை யோவான் நற்செய்தி அதிகாரம் 20: 19_ 20 இறை வசனங்களில் காணலாம். ஆகவே இயேசுவின் உயிர்ப்பானது எம் அனைவருக்கும் உயிர்த்தெழுதல் என்ற மறுவாழ்வு உண்டு என்பதை வெளிப்படுத்தும் ஓர் உன்னத நிகழ்வாக அமைகின்றது. இயேசு உயிர்த்தெழாமல் இருந்திருந்தால் அவருடைய போதனைகள், கொள்கைகள் அத்தனையும் பொய்யாகிப் போயிருந்திருக்கும். அத்துடன் கிறீஸ்தவத்திற்கும், கிறீஸ்துவுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கும். ஆனால் அப்படி நடைபெறவில்லை, மாறாக இறைமகன் இயேசுவின் உயிர்ப்பானது திருச்சபை வரலாற்றிலே நீதிக்கும் உண்மைக்கும் சாட்சியாக மாறி கிறீஸ்துவை நம்பிய அனைவருக்கும் பலத்தையும் திடத்தையும் அளித்தது. இதையே புனித பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறார். இறந்த கிறீஸ்து உயிருடன் எழுப்பப்பட்டார், இது அனைவரும் உயிருடன் எழுப்பப்படுவர் என்பதை உறுதிப்படுத்துகின்றது. மேலும் இறைமகன் இயேசுவின் உயிர்ப்பு அவருடைய மண்ணுலக வாழ்விற்கு முற்றுப்புள்ளியாகவும், உயிர்த்த இயேசுவை ஆன்ம மீட்பராக கொண்டு வாழும் ஒவ்வொருவரினதும் விசுவாசத்தின் மையமாகவும் விளங்குகின்றது. இதே உயிர்ப்பு தான், பயந்து போயிருந்த இயேசுவின் சீடர்களுக்கு துணிவைக் கொடுத்தது. இதே உயிர்ப்பு தான், எமக்கும் துணிவினை அளித்து இறை இயேசுவின் சாட்சிகளாக வாழ அழைப்பு விடுக்கின்றது.

கிறீஸ்தவர்கள் என்ற ஒரே காரணத்தால் பலர் கொல்லப்பட்டார்கள். மற்றும் பலர் சித்திரவதை செய்யப்பட்டார்கள். ஏன் இன்றும் கொல்லப்படுகிறார்கள், அண்மையில் யேமன் நாட்டில் 4 அருட்சகோதரிகள் கிறிஸ்துவுக்காக தங்களைத் தியாகம் செய்தார்கள். அது மட்டுமா, இன்றும் சிரியா, ஈராக் போன்ற பல்வேறு நாடுகளில் வாழும் கிறீஸ்தவர்கள் பல்வேறு துன்பங்களை அனுபவித்து கொண்டு தான் இருக்கின்றார்கள் ஆனாலும் அவர்கள் கிறீஸ்துவை மறுதலிக்கவில்லை காரணம் அவர்கள் இறைமகன் இயேசுவில் கொண்ட அளவற்ற அன்பும் தளராத விசுவாசமும் ஆகும். சிரிய நாட்டு கிறீஸ்தவ இளைஞன் ஒருவன் தான் கொல்லப்படுவதற்கு முன் கூறியது: நீங்கள் எத்தனை கிறீஸ்தவர்களை வேண்டுமானாலும் சாகடிக்கலாம் ஆனால் எமது கிறீஸ்தவ மதத்தை அழிக்க முடியாது ஏனென்றால் சாவை வென்ற கிறீஸ்துவைத் தலைவராகக் கொண்டிருக்கின்றோம் என்று கூறினான் மகிழ்ச்சியோடு. ஆகவே சாவைவென்றுசரித்திரம் படைத்த சர்வ வல்லவராகிய கிறீஸ்துவிலே விசுவாசம் கொண்டவர்களாக கிறீஸ்து காட்டிய வழியில் நடந்து கிறீஸ்துவின் சாட்சிகளாக வாழ முற்படுவோம்.
[2016-03-27 00:28:32]


எழுத்துருவாக்கம்:

சகோ. அ. அன்ரன் ஞானராஜ் றெவல் SDB
புனித. தோமஸ் இறையியல் கல்லூரி
மெஸினா, சிசிலியா
இத்தாலி