ஆன்மீக வலம்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, ஆண்டவரின் நற்செய்தி பணியில் ஆர்வமுள்ள பொதுநிலையினரே, உங்கள் ஆன்மீக சிந்தனைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholic.de என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். எமது ஆன்மீக இயக்குனரின் அனுமதி பெற்று, இங்கே பிரசுரிக்கப்படும்.









உயிர்த்தெழுவோம்



இறையேசுவில் அன்புக்குரியவர்களே, இன்று நாம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்புப் பெருவிழாவை கொண்டாடும் வேளையில், இந்த உன்னதமான உயிர்ப்பு நாளைப் பற்றி நாம் சற்று சிந்திப்போம்.

உயிர்ப்பு என்பது இன்னொருமுறை உயிர்பெற்று எழுவது என்பது நமக்கு தெரிந்த ஒன்றாக இருக்கலாம். ஆயினும் ஆண்டவர் இயேசுவின் உயிர்ப்பு ஒரு சாமானிய உயிர்ப்பு அல்ல, அவர் மட்டும் உயிர்த்தெழ வேண்டும் என்பது நம் இறைவனின் நோக்கமுமல்ல, அவர் உடலால் உயிர்த்தெழுந்தது: மூடத்தனத்தில், காட்டுமிராண்டித்தனத்தில், மன்னிக்கமுடியாத பகையுணர்வில், சுயநலத்தில், அடுத்தவரை அழிக்க துடிக்கும் வன்மத்தனத்தில், மாயையான இன்பத்தில், பேராசையில் மூழ்கி இறந்து கிடக்கும் நம் உள்ளங்கள் உயிர்ப்பெற வேண்டும் என்பதற்காகத்தான்.

சிலுவையில் அறையப்பட்டிருக்க வேண்டியவர் அவர் அல்ல; ஆணிகளாலும், முட்களாலும், சாட்டைகளாலும் அறையப்பட்டு சித்ரவதை செய்யப்பட்ட அவரது உடல் உயிர்பெற்றது அவருக்காக அல்ல, மாறாக, எண்ணற்ற பாவச்செயல்களால் அறையப்பட்டு இறந்து கொண்டிருக்கும், நம் உள்ளங்கள் உயிர்த்தெழ வேண்டும் என்பதற்காகத்தான். நாம் செய்த, செய்துகொண்டிருக்கின்ற பாவங்களுக்காக நாம் அறையப்பட்டிருக்க வேண்டும்; அவருடைய பாடுகள் நம் உள்ளங்களை அறைந்து உயிர்ப்பெற செய்திருக்க வேண்டும்!

இதை என் நினைவாகச் செய்யுங்கள் என்று அவர் கூறியது, அவர் செய்த செயல்களைச் சடங்காக நாம் திரும்பச் செய்வதற்காக மட்டுமல்ல, அந்தச் செயல்கள் மூலம் அவர் நமக்குக் கூறிய வார்த்தைகளை பின்பற்றுவதற்காகத்தான். வெறும் வார்த்தைகளால் கூறியிருந்தால் நாம் என்றோ அவற்றை மறந்துபோயிருக்கலாம்; கிறிஸ்தவம் என்ற வார்த்தையே இல்லாது போயிருக்கலாம். ஆனால் அவர் நாம் என்ன செய்ய வேண்டும் என்று தன்னையே எடுத்துக்காட்டாக வாழ்ந்து, வேதனைகளை அனுபவித்து, செய்யாத தவறுக்காய் மிகக் கொடுமையான தண்டனைகளை சுமந்து உயிர்விட்டார். உயிர்விடும் நேரத்திலும் கள்வனின் மனதையும், ஈட்டியால் குத்திய போர்வீரனின் கண்களைத் திறந்தும் உயிர்ப்பெறச் செய்துவிட்டுத்தான் சென்றார். அடக்கம் செய்யப்பட்ட கல்லறையிலேயே அவர் உறங்கிப்போயிருந்தால், இன்று கிறிஸ்தவம் என்ற நம் திருச்சபை தோன்றியிருக்காது. நம் ஆண்டவர் அத்தனை வேதனைகளையும், துன்பங்களையும், காயங்களையும் மீறி உயிர்த்தெழுந்ததால்தான், இன்றுவரை நாம் அவரை இறைமகனாகவும், என்றும் வாழும் மெசியாவாகவும் ஏற்றுக்கொண்டு வழிபட்டு வருகின்றோம். ஆகவே நமக்கு கிறிஸ்தவன் என்ற ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்து, வாழ்வை ஓர் அர்த்தமுள்ளதாக மாற்றிய இந்த உயிர்ப்பு நாளில், நாம் வழக்கமாக புத்தாடைகள் அணிந்து ஆலயத்திற்குச் சென்று வருவதோடு மட்டுமல்லாமல், நம் இதயங்களுக்கு புத்தாடை அணிவித்து உயிர்த்தெழுவோம். அன்று நம் இயேசு கிறிஸ்து இலாசரை, நூற்றுவத்தலைவனின் மகளை, கைம்பெண்ணின் மகனை உயிர்த்தெழச் செய்தது போல, பாவங்களில் புதைந்து கிடக்கும் நம் உள்ளங்களுக்கு புத்துயிர் அளித்திட, உயிர்த்த ஆண்டவரிடம் இந்தப் புனிதமான நாளில் மன்றாடுவோம்.
[2016-03-27 00:27:35]


எழுத்துருவாக்கம்:

Josephine Tamilmani J
Heidelberg
Germany