ஆன்மீக வலம்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, ஆண்டவரின் நற்செய்தி பணியில் ஆர்வமுள்ள பொதுநிலையினரே, உங்கள் ஆன்மீக சிந்தனைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholic.de என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். எமது ஆன்மீக இயக்குனரின் அனுமதி பெற்று, இங்கே பிரசுரிக்கப்படும்.

இறைவனின் உறவில் நாற்பது நாட்கள் பயணம்"நீங்கள் உங்கள் உடைகளைக் கிழித்துக்கொள்ள வேண்டாம், இதயத்தைக் கிழித்துக்கொண்டு உங்கள் கடவுளாகிய ஆண்டவரிடம் திரும்பி வாருங்கள்." அவர் அருள் நிறைந்தவர், இரக்கம் மிக்கவர், நிடிய பொறுமையுள்ளவர், பேரன்பு மிக்கவர். செய்யக் கருதிய தீங்கைக் குறித்து மனம் மாறுகின்றவர். யோவேல்: 2:13 இரக்கத்தின் ஆண்டு இறைவனின் அருளிய அருளின் கொடையாகும். தந்தையைப்போல் இரக்க முள்ளவர்களாய் வாழ்வதற்கு இறைவன் அழைக்கும் காலமாகும். இறைவாக்கினர் மோசேயிடம் இறைவன் 'இருக்கின்றவராக இருக்கின்றவர் நானே" என்று மிக அழகாக தன்னை அவருக்கு வெளிப்படுத்தினார். நாற்பது ஆண்டுகள் இஸ்ரயேல் மக்களுடனும் அவர்களுடைய தலைவராகிய மோசேயுடனும் இரவும் பகலும் அவர்களுடன் உடனிருந்து வழிநடத்தியவர்தான்;, இரக்கமும் அன்பும் நிறைந்த நமது தந்தையாம் இறைவன். தவக்காலம் என்பது அருளின் காலம், இரக்கத்தின் காலம், பகிர்வின் காலம். மன்னிப்பின் காலம். நமது உள்ளத்தைப் பண்படுத்தும் காலம். இறைவனுடன் நமது அருளின் உறவை மீண்டும் ஒருமுறை புதுப்பிக்கும் காலம். இறைமகன் இயேசு தனது முதல் மறைஉரையில் கூறுவது 'தூய்மையான உள்ளத்தோர் பேறுபெற்றோர். ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பர்" என்று. இறைவனின் அருளையும் செயல்பாடுகளையும் அனுபவிக்க நமக்கு தூய்மையான இதயம் தேவைப்படுகின்றது. இரக்கத்தின் அருளின் ஆண்டில் தவக்காலம் என்று அழைக்கப்படும் தூய்மை நிறைந்த நாற்பது நாட்களை இறைவன் நம்முன் வைக்கின்றார். இறைவன் நமக்கு வழங்கிய அருளின் தவக்காலத்தை அவருடைய துணையுடன் ஆரம்பிப்போம்.

விபூதி சாம்பல் நமக்கு ஓர் ஆழமான உண்மையை வெளிப்படுத்துகின்றது. வெறுமையின், ஒன்றுமில்லாமையின் அடையாளமாக விளங்குகின்றது. மனிதனுடைய நிலையற்ற தன்மையினையும், அவனுடைய வாழ்க்கையானது தூசியும் சம்பலும் என்பதை ஆழமாக உணர்த்துகின்றது. எத்தனையோ வழிகளில் இறைவனின் அன்பிற்கு எதிராக வாழ்க்கை வாழ்ந்துள்ளோம். இறைவன் மீண்டும் ஒருமுறை மனமாற்றத்திற்கான வாய்ப்பை நமக்கு அளித்துள்ளார். இறைவாக்கினர் எசாயா தனது நூலில் கூறுவது இவ்வாறு 'மீட்க இயலாதவாறு ஆண்டவரின் கை குறுகிவிடவில்லை கேட்க முடியாதவாறு ஆண்டவரின் காது மந்தமாகி விடவில்லை. உங்கள் தீச்செயல்களே உங்களுக்கும், உங்கள் கடவுளுக்கும் இடையே பிளவை உண்டாக்கியுள்ளன. உங்கள் பாவங்களே அவர் செவி சாய்க்காதவாறு அவரது முகத்தை உங்களுக்கு மறைத்துள்ளன" என்று. (எசாயா:59:1-2 ). இன்று உண்மைக்கும் நேர்மைக்கும் எதிர்மாறான உலகத்திலும் சமூகத்திலும் வாழ்ந்து வருகின்றோம்.

தனிவாழ்விலும் குடும்பவாழ்விலும் மாற்றங்கள். அன்பு இல்லை, மன்னிப்பு இல்லை, 'கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல்" என்ற நிலை. இந்நிலையை எவ்வாறு மாற்றப்போகின்றோம். அதற்கு மனம்மாற்றம் தேவை. இன்று இறைவன் நமக்கு கூறும் நற்செய்தி என்னெவென்றால் 'மனம்மாறுங்கள் இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது" என்று. வாருங்கள்! ஆண்டவருடைய வருகைக்காக நமது வழியை ஆயத்தமாக்குவோம். அவருக்காகப் நமது பாதையைச் செம்மைப்படுத்துவோம். இறைமகனின் இயேசு நமக்கு மேலும் கூறுவது 'மனம் மாறத் தேவையில்லாத் தொண்ணூற்றொன்பது நேர்மையாளர்களைக் குறித்து உண்டாகும் மகிழ்ச்சியைவிட, மனம்மாறிய ஒரு பாவியைக் குறித்து மிகுதியான மகிழ்ச்சி உண்டாகும்" என்று. தவக்காலத்தில் சிறப்பாக நாற்பது நாட்களில் பயணம் செய்யப் போகிறோம் எனவே இறைவன் தந்துள்ள அருளின் நாட்களில் ஏன் நான் ஒரு மனம்மாறிய பாவியாக மாறக் கூடாது? இந்த தவக்காலத்தில் நாம் அனைவரும் இறைவனுடன் ஒப்புரவாக வேண்டும். இறைவனுக்கும் நமக்கும் இடையே உள்ள பிளவுகளை மீண்டும் புதுப்பிக்க வேண்டும். இறைவனுடன் ஒப்புரவாகும்போது நமது உள்ளத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் ஏற்படும் போது நாம் மற்றவர்களிடம் ஒப்புரவாகமுடியும். இரக்கத்தின் அருளின் ஆண்டில் மனம் மாற்றம் பெறுவோம். அர்த்தமுள்ள தவக்காலமாக வாழ முயற்சி எடுப்போம். பாவிகளை அன்பு செய்யும் இறைமகன் இயேசுவின் துணையும் அருளும் வேண்டி இறைபக்தியுடன் பயணிப்போம். இறைவார்த்தையை அடிப்படையாக கொண்ட இந்த சிந்தனை அன்றாட வாழ்க்கையில் செயலாக்கி பயன்பெறுவோம்.

1. தூசியும் சாம்பலுமான நான் - இறைவன் முன் நான் யார்? என் நிலை என்ன?
2. உன் பாதங்களிலிருந்து மிதியடிகளை அகற்றிவிடு - என் வாழ்க்கையில் எப்படிபட்ட மிதியடிகளை அகற்ற இறைவன் விரும்புகபின்றார்?
3. ஆண்டவரே கடவுள், அவரைத் தவிர வேறு எவரும் இலர் - என்மேல் என்றும் இரக்கம் கொண்டுள்ள இறைவனை முழுமனத்துடன் அன்பு செய்கின்றேனா?
4. ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள் - இறைவன் தந்த இனிமையான வாழ்க்கையில், ஆண்டவர் இனிமையானவர் என்று சுவைத்துப் பார்த்ததுண்டோ?
5. வாழ்க்கையில் இன்பம் காண விரும்பமா - தீச்சொல்லினின்று உன் நாவைக் காத்திடு, நன்மை செய்ய மறவாதே?
6.கடவுளையே நம்பியிருக்கின்றேன் எதற்கும் அஞ்சேன், அற்ப மனிதர் எனக்கென்ன செய்ய முடியும் - பிறருக்கு ஆசீயாய் விளங்க என்றும் தயங்காதே?
7. உங்களைப்பற்றி இல்லாதவை பொல்லாதவையெல்லாம் சொல்லும் போது - கலங்காதே! மனம் குமுறாதே! உன்னை அறிந்த இறைவன் உன்னோடு இருக்கின்றார் என்பதை மறவாதே?
8. உங்கள் ஒளி மனிதர்முன் ஒளிர்க - தினமும் ஒரு நற்செயல் செய்து இறைவனுக்கு நன்றி சொல்ல மறவாதே?
9. தேடுங்கள். நீங்கள் கண்டடைவீர்கள் - இறைவனை உன் முழுஉள்ளத்தோடு தேடு, அவர் உன் அருகில் இருப்பதை உணர்ந்திடுவாய்!
10. கடவுளே! நொறுங்கிய குற்றமுணர்ந்த உளத்தை நீர் அவமதிப்பதில்லை - அன்றாட வாழ்வில் ஒடிக்கொண்டிருக்கும் நாம் சிறிது நேரம் இறைவனின் முன்நின்று உள்ள ஆய்வு செய்து மனம் வருந்தி மன்னிப்பு வேண்டுவோம்.
11. கிறிஸ்துவே உண்மை - இயேசு கிறிஸ்துவை ஆழமாக அன்பு செய்து விசுவாசத்திலும் நம்பிக்கையிலும் வளர அருள் வேண்டுவோம்.
12. கடவுளிடமிருந்து பிறந்தோர் பாவம் செய்வதில்லை - பாவம் செய்வதை தவிர்த்து மனம் மாற்றம் பெற்று இறைவனிடம் வருவோம்.
13. இறைவார்த்தை உயிருள்ளது ஆற்றல் வாய்ந்தது - இறைவார்த்தையை அனுதினமும் வாசித்து இறைவனிடம் உறவாடுவோம்.
15. இதோ! நான் கதவு அருகில் நின்று தட்டிக் கொண்டிருக்கின்றேன் - என் உள்ளத்தில் வாசம் செய்யும் ஆவியானவரின் குரலுக்கு செவிகொடுத்து அதன்படி வாழ முயற்சி எடு?
16. உண்மைக்கேற்ப வாழ்பவர் ஒளியிடம் வருகிறார்கள் - எனது சொல்லிலும் செயலிலும் உண்மை இருக்கின்றதா? உண்மையில் வாழ்ந்து ஒளியான இறைவனிடம் வருவோம்.
16. குழந்தையும் வளர்ந்து வலிமை பெற்று ஞானத்தால் நிறைந்து கடவுளுக்கு உகந்ததாய் இருந்தது - பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளை இறைபக்தியிலும் ஞானத்திலும் வளர்க்க முயற்சி எடுப்பது.
17.ஆண்டுதோறும் இயேசுவின் பெற்றோர் பாஸ்கா விழாவைக் கொண்டாட எருசலேமுக்குப் போவார்கள் - கடன் திருநாட்கிளலும், ஞாயிறுக்கிழமைகளிலும் திருப்பலியில் குடும்பமாக பங்கேற்று இறைஆசீரைப் பெறுவோம்.
18. நான் தாகமாய் இருந்தேன், என் தாகத்தைத் தணித்தீர்கள் - தனிமையிலும் கவலையிலும் துவண்டு வாழ்பவர்களுக்கு ஆறுதல் மொழி கூறுவோம்.
19. எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்தோரை - தவக்காலத்தில் மன்னிக்க முயற்சி எடுப்பது.
20. தொடர்ந்து இறைவனிடம் வேண்டுங்கள் - தினமும் குடும்பமாக இணைந்து குடும்ப செபம் செபிப்பது.
21. நம்பிக்கை கொண்ட மக்கள் அனைவரும் ஒரே உள்ளமும் ஒரே உயிருமாய் இருந்தனர் - பங்குத் தளங்களில் ஒற்றுமையைக் காப்பதற்காக துணை செய்வது.
22. எல்லாச் சூழ்நிலையிலும் நன்றி கூறுங்கள் - இறைவன் அன்றாட வாழ்வில் செய்துவரும் அனைத்து நன்மைகளுக்கும் நன்றி செலுத்துவது.
23. இயேசு, தந்;தையே, இவர்களை மன்னியும் - பயங்கரவாதம், வன்முறைகள், போர்கள் நீங்கி சமாதானம் நிலவவேண்டுமென்று செபிப்போம்.
24. அறிவித் தெளிவோடு விழிப்பாயிருங்கள் - அலகையின் செயல்களை எதிர்த்துப் போராட அசையாத இறைநம்பிக்கையுடன் வாழ்வது.
25. கவலைகளையெல்லாம் அவரிடம் விட்டு விடுங்கள் - இறைவன் நம்மேல் கவலை கொண்டுள்ளளார் என்பதை நம்புவது.
26. தகுதியற்ற நிலையில் ஆண்டவரின் உடலையும் இரத்தத்தையும் பருகும்போது - பாவங்களுக்காக மனம் வருந்தி உள்ளத் தூய்மையுடன் பங்கேற்று நற்கருணையை பெறுவது.
27. சினமுற்றாலும் பாவம் செய்யாதிருங்கள் - இரக்கத்தின் ஆண்டில் நம்முடன் பயணம் செய்யும் உறவுகளுடன் சினமுறுவதை தவிர்ப்போம்.
28. பொழுது சாய்வதற்குள் உங்கள் சினம் தணியட்டும். அலகைக்கு இடம் கொடாதீர்கள் - தனது தவற்றை உணர்ந்து இறைவனிடமும், உடனிருப்பவர்களுடனும் மன்னிப்பு கேட்போம்.
29.அன்பு அனைத்தையும் பொறுத்துக் கொள்ளும் - நம்முடைய அன்றாட வாழ்வில் சந்திக்கும் சவால்களை பொறுமையுடன் ஏற்றுக் கொள்வோம்.
30. நீ நம்பினால் கடவுளின் மாட்சியைக் காண்பாய் - இறைஇரக்கத்தின் ஆண்டில் இறைவனுடைய மாட்சியையும் ஆற்றலையும் அனுபவித்து அவர் எத்துணை இனியவர் என்று சுவைத்து அறிவோம்.
இரக்கத்தின் அன்னையே! உமது அன்பு மகனின் பாதையில் பயணம் செய்ய எங்களுக்குத் துணை செய்யும். உம்மைவிட்டு நாங்கள் ஒருபோதும் பிரியாதிருக்க எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
[2016-02-16 20:30:50]


எழுத்துருவாக்கம்:

Sr.Jophy Amalraj
Klooster Sancta Maria
6161 CV Geleen
Netherland