ஆன்மீக வலம்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, ஆண்டவரின் நற்செய்தி பணியில் ஆர்வமுள்ள பொதுநிலையினரே, உங்கள் ஆன்மீக சிந்தனைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholic.de என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். எமது ஆன்மீக இயக்குனரின் அனுமதி பெற்று, இங்கே பிரசுரிக்கப்படும்.

இறையிரக்க ஆண்டுக்கான செபம் - 08/12/2015 - 20/11/2016எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே! இறைத் தந்தையைப் போல இரக்கமுள்ளவர்களாக இருக்க எங்களுக்கு நீர் கற்பிக்கிறீர். உம்மைக் காண்பவர் அவரை காண்பதாகவும். நீர் கூறுகிறீர். உமது அன்பு பார்வை பணத்தின் அடிமைத்தனத்திலிருந்து. சக்கேயுவையும் மத்தேயுவையும் விடுவித்தது. படைக்கப்பட்ட பொருள்களில் மகிழ்ச்சியை தேடுவதிலிருந்து பாவியான பெண்ணையும் மகதலேனாவையும் காப்பாற்றியது, புனித பேதுருவை தனது பாவத்திற்காக அழச் செய்தது. மன்மாறிய கள்வனுக்கு விண்ணரசை வாக்களித்தது. உமது திருமுகத்தை எங்களுக்கும் காண்பியும். நாங்களும் மீட்படைவோம்.

கடவுளுடைய கொடை எது என்பதை நீர் அறிந்திருந்தால் என்று சமாறியப் பெண்ணுக்கு நீர் கூறிய வார்த்தைகளை எங்கள் ஒவ்வொருவருக்கும் கூறியதாக செவிமடுத்து கேட்போமாக! காணக் கிடைக்காத இறைத்தந்தையின் காணக்கூடிய திருமுகம் நீர். அந்த இறைவன், மன்னிப்பு மற்றும் இரக்கத்தின் வழியாக தனது ஆற்றலை வெளிப்படுத்துகின்றார்.

ஆண்டவரே! உமது திருஅவை உயிர்த்து மாட்சியடைந்த ஆண்டவரின் திருமுகமாய் உலகில் திகழ்வதாக! அறியாமையிலும் தவற்றிலும் இருப்போர் மீது பரிவிரக்கம் கொள்வதாக! உமது திருப்பணியாளர்கள் வலுவின்மையால் போர்த்தப்படும்படி நீர் திருவுளமானீர். உமது திருப்பணியாளர்களை தேடிவரும் ஒவ்வொருவரையும் இறைவன் தேடி அன்பு செய்து மன்னிக்கிறார் என்பதை உணர்வார்களாக!

எங்கள் ஒவ்வொருவரிலும் உமது ஆவியை அனுப்பி புனிதப்படுத்தியருளும். இவ்வாறு இறையிரக்க யூபிலி ஆண்டு அருளின் ஆண்டாய் அமைவதாக! உமது திரு அவையும் புதுபிக்கப்பட்ட உற்சாகத்தோடு ஏழையருக்கு நற்செய்தியை கொணர்வதாக. சிறைப்பட்டோருக்கும் ஒடுக்கப்பட்டோருக்கும் விடுதலையை முழுக்கமிடுவதாக! பார்வையற்றவர்க்கு பார்வையை பெற்று தருவதாக!

இந்த மன்றாட்டுக்களை இரக்கத்தின் தாயான மரியாவின் பரிந்துரையின் வழியாக இறைத் தந்தையோடும் தூய ஆவியோடும் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்யும் ஆண்டவரே உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்


வேதாகமத்திலிருந்து சில இரக்கத்தின் வரிகள்

1. எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்தோரை நாங்கள் மன்னித்துள்ளதுபோல எங்கள் குற்றங்களை மன்னியும். மத்தேயு:6:12

2. மனிதர் செய்யும் குற்றங்களை நீங்கள் மன்னிப்பீர்களானால் உங்;கள் விண்ணகத் தந்தையும் உங்களை மன்னிப்பார். மத்தேயு:6:14

3. உன் குற்றங்களைக் கார்மேகம் போலும், உன் பாவங்களைப் பனிப்படலம் போலம் அகற்றிவிட்டேன் என்னிடம் திரும்பிவா, நான் உனக்கு மீட்பளித்துவிட்டேன். எசாயா:44:22

4. அவரோ நம் குற்றங்களுக்காகக் காயமடைந்தார், நம் தீச் செயல்களுக்காகக் நொறுக்கப்பட்டார். நமக்கு நிறைவாழ்வை அளிக்க அவர் தண்டிக்கப்பட்டார். அவர்தம் காயங்களால் நாம் குணமடைகின்றோம். எசாயா:53:5

5. மலைகள் நிலை சாயினும் குன்றுகள் இடம் பெயரினும் உன்மீது நான் கொண்ட பேரன்போ நிலை சாயாது, என் சாமாதான உடன்படிக்கையோ அசைவுறாது என்கிறார் உனக்கு இரக்கம் காட்டும் ஆண்டவர். எசாயா:54:10

6.கடவுளுக்கேற்ற பலி நொறுங்கிய நெஞ்சமே! கடவுளே நொறுங்கிய குற்றமுணர்ந்த உளத்தை நீர் அவமதிப்பதில்லை. திருப்பாடல்:51;:17

7. உடைந்த உள்ளத்தார்க்கு அருகில் ஆண்டவர் இருக்கின்றார், நைந்த நெஞ்சத்தாரை அவர் காப்பாற்றுகின்றார். திருப்பாடல்:34:18

8. சிலர் தேர்ப்படையிலும், சிலர் குதிரைப் படையிலும் பெருமை கொள்கின்றனர். நாமோ நம் கடவுளாகிய ஆண்டவரின் பெயரில் பெருமை கொள்கின்றோம். திருப்பாடல்:20:7

9. இறைவா! நீர் என் உள்ளத்தை ஆய்ந்து அறியும், என் எண்ணங்களை அறியுமாறு என்னைச் சோதித்துப் பாரும். திருப்பாடல்: 139:23

10. அப்போது ஆண்டவர் அவர் முன்னிலையில் கடந்து செல்கையில், ஆண்டவர்! ஆண்டவர்! இரக்கமும் பரிவும் உள்ள இறைவன் சினம் கொள்ளத் தயங்குபவர் பேரன்பு மிக்கவர் நம்பிக்கைக்குரியவர். விடுதலைப்பயணம்:34:6

11. உங்கள் கடவுளாகிய ஆண்டவரை நீங்கள் நாடினால், உங்கள் முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் தேடினால், அவரைக் கண்டடைவீர்கள். இணைச்சட்டம்:4:29

12.யோசுவா மக்களிடம், உங்களைத் தூய்மையாக்கிக் கொள்ளுங்கள். நாளை ஆண்டவர் உங்களிடையே வியத்தகு செயல்கள் புரிவார். யோசுவா:3:5

13. ஒளி உங்களோடு இருக்கும்போதே ஒளியை ஏற்றுக்கொள்ளுங்கள். அப்போது ஒளியைச் சார்ந்தவர்கள் ஆவிர்கள். யோவான்:12:36

14. நல்ல ஆயன் நானே, நல்ல ஆயர் ஆடுகளுக்காக தம் உயிரைக் கொடுப்பார். யோவான்:10:11

15. உண்மைக்கேற்ப வாழ்பவர்கள் ஒளியிடம் வருகிறார்கள். இதனால் அவர்கள் செய்யும் அனைத்தையும் கடவுளோடு இணைந்தே செய்கிறார்கள் என்பது வெளியாகும். யோவான்:3:21

16.மண்ணுலகில் பாவங்களை மன்னிக்க மானிடமகனுக்கு அதிகாரம் உண்டு என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். லூக்கா:5:24

17. மனம்மாறத் தேவையில்லாத் தொண்ணூற்றொன்பது நேர்மையாளர்களைக் குறித்து உண்டாகும் மகிழ்ச்சியைவிட, மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்து விண்ணுலகில் மிகுதியான மகிழ்ச்சி உண்டாகும் என நான் உங்களுக்குச் சொல்கிறேன். லூக்கா:15:7

18. மகனே, துணிவோடிரு, உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன"என்றார். மத்தேயு:9:2

19. அப்பொழுது, சேவல் கூவுமுன் நீ என்னை மும்முறை மறுதலிப்பாய்" என்று இயேசு கூறியதைப் பேதுரு நினைவுகூர்ந்து வெளியே சென்று மனம் நொந்து அழுதார். மத்தேயு:26:75

20. இயேசு, 'தந்தையே, இவர்களை மன்னியும். ஏனெனில் தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை என்று சொன்னார். லூக்கா:23:34

21. பால்குடிக்கும் தன்மகவைத் தாய் மறப்பாளோ? கருத்தாங்கினவள் தன் பிள்ளைமீது இரக்கம் காட்டாதிருப்பாளோ? இவர்கள் மறந்திடினும், நான் உன்னை மறக்கவே மாட்டேன். எசாயா: 49:15

22. குற்றம் செய்ததற்காக நீங்கள் அடிக்கப்படும்போது பொறுமையோடு இருப்பதில் என்ன சிறப்பு? மாறாக, நன்மை செய்தும். அதற்காகப் பொறுமையோடு துன்புற்றால் அது கடவுளுக்கு உகந்ததாகும். 1பேதுரு: 2:20

23. எல்லாவற்றுக்கும் மேலாக ஒருவருக்கொருவர் ஆழ்ந்த அன்பு காட்டுங்கள். ஏனெனில், அன்பு திரளான பாவங்களையும் போக்கும். 1பேதுரு:4:8

24. அறிவித் தெளிவொடு விழிப்பாயிருங்கள். உங்கள் எதிராகிய அலகை யாரை விழுங்கலாமெனக் கர்ச்சிக்கும் சிங்கம்பொலத் தேடித்திரிகிறது. 1பேதுரு:5:8

26. நம்பிக்கையினாலன்றி எவரும் கடவுளுக்கு உகந்தவராயிருக்க இயலாது. ஏனெனில், கடவுளை அணுகிச் செல்வோர் அவர் இருக்கிறார் என்பதையும் அவரைத் தேடிச் செல்வோருக்குத் தக்க கைமாறு அளிக்கிறார் என்பதையும் நம்ப வேண்டும். எபிரேயர்:11:6

27. பாவிகளை மீட்க கிறிஸ்து இயேசு இவ்வுலகிற்கு வந்தார்'. இக்கூற்று உண்மையானது. எல்லாராலும் ஏற்றக் கொள்ளத் தக்கது. அந்தப் பாவிகளுள் முதன்மையான பாவி நான். ஆயினும் கடவுள் எனக்கு இரங்கினார். 1திமோத்தேயு:15-16

28. ஒருவரை ஒருவர் பொறுத்துக் கொள்ளுங்கள். ஒருவரைப்பற்றி ஒரவருக்கு எதாவது முறையீடு இருந்தால் மன்னியுங்கள். ஆண்டவர் உங்களை மன்னித்தது போல நீங்களும் மன்னிக்க வேண்டும். கொலோசையர்:3;13

29. அமைதி அருளும் கடவுள்தாமே உங்களை முற்றிலும் தூய்மையாக்குவாராக. அவரே நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வரும்போது உங்களுடைய உள்ளம், ஆன்மா, உடல் அனைத்தையம் குற்றமின்றி முழுமையாகக் காப்பாராக! 1தெசலோனிக்கா: 5:23

30. கடவுளிடமிருந்து பிறந்தோர் பாவம் செய்வதில்லை என்பது நமக்குத் தெரியும். ஏனெனில் கடவுளிடமிருந்து பிறந்தவர்களை அவர் பாதுகாக்கிறார். தீயோன் அவர்களைத் தீண்டுவதில்லை. 1யோவான்:5:18

31. இரக்கமுடையோர் பேறுபெற்றோர், ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவர். மத்தேயு:5:7

செபம்:
இரக்கமே உமது குணம், இரக்கமே உமது கருணை, இரக்கமே உமது தோழமை, இரக்கமே உமது தியாகம், இரக்கமே உமது அன்பு, இரக்கமே உமது பகிர்தல், இரக்கமே உமது பண்பு. இரக்கமே உமது வாழ்வு, இரக்கமே உமது பார்வை, இரக்கமே உமது கனிவு, இரக்கமே உமது சிலுவை மரணம், இரக்கமே உமது உயிர்ப்பு, இரக்கமே உமது கொடை, இரக்கமே உமது உயிர்மூச்சு, இரக்கமே உமது வாழ்வின் உடனிருப்பு, இரக்கமே உமது பயணம், பாவிகளைத் தேடி வந்த இரக்கமும் நேசமும் நிறைந்த இறைவா! உமது இரக்கத்தின் அற்புதமானக் குணங்களையும் கொடைகளையும் எங்களுக்குத்தாரும். நாங்களும் உம்மைப்போல் சொல்லிலும் செயலிலும் வாழ்விலும் இரக்கமுள்ளவார்களாய், புதுப்படைப்பாக மாற்றம் பெற்று, புதிய வாழ்வு வாழ்ந்து, பிறருக்கு உற்றத் துணையாகவும், தாழ்மையுடனும் எளிமையுடனும் பிறரைச் சுமந்து செல்லும் அன்பின் இரக்கத்தின் கருவியாக இருக்க துணைச் செய்தருளும் எங்களுடைய நல்ல தகப்பனே! ஆவியானவரின் அருள்கொடைகளைத் என்றும் தாங்கிச் சென்று, பயனுள்ள மகனான மகளாக வாழ்ந்து, உலகிற்கு உப்பாகவும் ஒளியாகவும் திகழ்ந்து உமது என்றும் சொந்தமான அன்பின் பிள்ளைகளாக வளர, நீர் எங்களுக்கு தந்துள்ள இந்த அருளின் ஆண்டில் ஆன்மிகத்தில் வளமுடன் வாழ எங்களை ஆசீர்வதியும் இறைவா. ஆமென்.
[2016-01-21 22:15:13]


எழுத்துருவாக்கம்:

Sr.Jophy Amalraj
Klooster Sancta Maria
6161 CV Geleen
Netherland