ஆன்மீக வலம்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, ஆண்டவரின் நற்செய்தி பணியில் ஆர்வமுள்ள பொதுநிலையினரே, உங்கள் ஆன்மீக சிந்தனைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholic.de என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். எமது ஆன்மீக இயக்குனரின் அனுமதி பெற்று, இங்கே பிரசுரிக்கப்படும்.

நீர் காட்டும் பாதையில் நாம் சென்று நீர் சொல்லும் வார்த்தையை மறைபணியாக்கிட இதோ நாம் வருகிறோம் - உலக மறைபரப்பு ஞாயிறு தினச் செய்தி18-10-2015 அன்று உலகமறைபரப்பு ஞாயிறு என்பது நாம் அனைவரும் அறிந்ததே. எனவே நமது கத்தோலிக்க திருச்சபை இந்தநாளை மறைபரப்பு ஞாயிறாக எமது பங்குளிலும் கொண்டாட நம்மை அழைக்கிறது. இவ்வருட உலக மறைபரப்பு தின கருப்பொருள் 'துன்ப துயரத்தில் நாம் நற்செய்தியின் சாட்சிகளாவோம்."என்பதாகும். முன்பு இந்த ஞாயிறு, விசுவாசப் பரப்புதல் அல்லது வேதபோதக ஞாயிறென்றும் அழைக்கப்பட்டது. இவ்விசுவாச மறைபரப்புச்சபை 1822 ஆண்டு பிரான்ஸ் நாட்டில் லியோன் என்னும் நகரில் செல்வி மாரி பொலின் ஜெரிக்கோ என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது. இச்சபையின் நோக்கம்: 'மறைபரப்பு சேவையில் ஈடுபட்டுள்ள மறைபரப்பாளர்களுக்கு செபத்தினாலும் ஒறுத்தலினாலும் ஒத்துழைப்பு வழங்கி மறைபரப்பு சேவையை எல்லாநாடுகளிலும் வளர்க்கவேண்டும் என்பதே." மறைபரப்பு ஞாயிறை ஆங்கிலத்தில் Mission Sunday என்று அழைக்கப்படுகிறது. Mission Sunday என்ற ஆங்கிலச் சொற்றொடரை அப்படியே மொழி பெயர்த்தால், 'அனுப்பப்படும் ஞாயிறு" என்று சொல்லலாம்.

'உலகில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் இறைவனிடமிருந்து வரும் பரிசு. இந்தப் பரிசுப் பொருள் ஒவ்வொன்றும் ஒரு செய்தியுடன் இவ்வுலகை அடைகிறது. இறைவன் இந்த உலகைக் குறித்து இன்னும் களைப்படையவில்லை " என இந்திய மகாக் கவி இரவீந்திரநாத் தாகூர் கூறியிருந்தார். நாம் ஒவ்வொருவரும் இவ்வுலகிற்கு ஒரு பரிசாக அனுப்பப்பட்டுள்ளோம். மனித வரலாற்றில் நம் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட ஓர் இடம் உண்டு. நாம் பிறந்ததற்குத் தனிப்பட்ட ஒரு காரணம் உண்டு. நமக்கேனக் நிர்ணயிக்கப்பட்டுள்ள அந்தக் குறிக்கோளை வேறு ஒருவராலும் நிறைவேற்ற முடியாது. ஆகவே கிறிஸ்தவர்களாகிய எமது நோக்கம் நற்செய்தியை அறிவிப்பதே என்பதாகும். உன்பெயர் செல்லி அழைத்ததும் நாமே. உன்னை உள்ளம் கையில் பொறித்ததும் நாமே. தாயின் கருவில் உன்னை அறிந்தோம். நீ உருவாகும் முன்பே தெரிந்தோமே. நீ வரவில்லை என்றால் யாரை நாம் அனுப்புவோம் எம் மந்தையை வழிநடத்துவதற்கு. விவிலியத்தில் ஏரேமியா புத்தகத்தில் காணப்படும் இந்த இறைவார்த்தைகள் மறைபரப்புவது எமது ஒவ்வொருவரின் கடமை என சுட்டிக்காட்டுகின்றன.

இயேசு தாம் போகயிருந்த ஊர்களுக்கு 72 சீடர்களை நற்செய்திப் பணிக்காகவும் குணமாக்கும் பணிக்காகவும் அனுப்புகின்றார். கிறிஸ்தவ நற்செய்தி அறிவிப்புப் பணியில் வேலைவாய்பே இல்லாத சந்தர்ப்பமே இல்லை. ஒவ்வொருவருக்கும் தேவையான வேலைகளையும் பணிகளையும் கடவுள் வைத்திருக்கிறார். மற்றவர்கள் பணிசெய்வதை பின்நின்று பார்க்காமல் நாமும் நல்ல பணியாளர்களாக மாறுவோம். நல்ல கனிகொடுக்கும் மனிதர்களாக வாழ்வோம்.

என்னை பின்பற்றி வாரும் என்ற இயேசுவின் அழைப்புக்கு, 'முதலில் நான் போய் எனது தந்தையை அடக்கம் செய்துவிட்டுவர அனுமதியும்." 'ஐயா உம்மை பின்பற்றுவேன் ஆயினும் நான் போய் என்வீட்டில் உள்ளவர்களிடம் விடைபெற்று வர அனுமதியும்." (லுக்கா 10:59,61) இவ்வாறன சாக்குப்போக்கு காட்டி எம் அழைப்பை நாம் நிராகரித்துவிடுகின்றோம். இப்பணிவாழ்வில் வரும் சவால்களை, துன்ப துயரங்களை ஏற்று சாட்சியவாழ்வு வாழ்வோம். மறைபணிக்காகவும் மறைபணியாளர்களுக்காகவும் மன்றாடுவதும் உதவிசெய்வதும் எமது கடமையுமாகும். இயேசுவின் சீடர்கள் அவரின் வல்லமைமீது கொண்டிருந்த தெளிவான நம்பிக்கையும் நற்செய்தி மக்களை அடைய வேண்டும் என்ற ஆர்வமும் அவர்களை இப்பணிக்கு தயர்ப்படுத்தின. அதே நம்பிக்கையும் ஆர்வமும் திருமுழுக்கு பெற்ற எம் அனைவரிலும் மிகுதியாக இருக்க எம்மை தயார் செய்வோம்.

'ஒரு தனிப்பட்ட பணிக்கென இறைவன் என்னைப் படைத்துள்ளார். வேறு எவருக்கும் அவர் கொடுக்காமல், எனக்கு மட்டுமே அப்பணியைக் கொடுத்துள்ளார்." என்று கர்தினால் நியூமன் கூறியுள்ளார். 'என்னால் இவ்வுலகில் எல்லாவற்றையும் செய்ய முடியாது. ஆனாலும், என்னால் ஒரு சிலவற்றைச் செய்யமுடியும். எல்லாவற்றையும் செய்ய முடியவில்லை என்பதற்காக, நான் செய்யக் கூடிய சிலவற்றைச் செய்ய மறுக்க மாட்டேன்." என கேட்க, பேச, பார்க்க இயலாமல் இருந்தாலும், தன் வாழ்வின் மூலம் சாதனைகளைப் புரிந்து வரலாற்றில் தனி இடம் பெற்றுள்ள அமெரிக்க எழுத்தாளராகிய கெலன் கெலர் கூறியுள்ளார்.

மறைபரப்பு ஞாயிறு என்றதும் அது வழக்கமாக குருக்கள், துறவியருக்கென ஒதுக்கப்பட்ட பணி என்று நம்மில் பலர் ஒதுங்கி விடுகிறோம். ஆனால், திருச்சபையின் ஆரம்ப காலத்தில் இறை வார்த்தையை, கிறிஸ்துவின் புதிய வழியை, வார்த்தைகளால் பறைசாற்றியதுடன் வாழ்வின் வழியாகவும் பறை சாற்றியவர்கள் ஆதிக் கிறிஸ்தவர்கள். இந்த ஆரம்ப கால கிறிஸ்தவர்களில் பெரும்பாலானோர் அப்போஸ்தலர்களோ, சீடர்களோ, குருக்களோ இல்லை. சாதாரண, எளிய மக்கள். இவர்களது வாழ்வைப் பார்த்து வியந்தவர்கள் அதிகம். அந்த வழியைப் பின்பற்றியவர்கள் அதிகம். இந்த மறைபரப்பு ஞாயிறுநாளை ' அனுப்பப்படும் ஞாயிறு " என்று எண்ணிப் பார்த்தால், வேறுபட்ட எண்ணங்கள் மனதில் தோன்றும். பிரசங்கம், மறையுரை என்று பீடத்திலிருந்து, அல்லது ஒலிபெருக்கிகள் மூலம் முழங்கினால்தான் இறைவார்த்தையை, நற்செய்தியை, மறையைப் பரப்பமுடியும் என்பது மறைபரப்பின் ஒரு கண்ணோட்டம். Mission- அனுப்பப்படுதல் என்பதன் முழுமை இதைவிட மேலான பணியாகும். இங்கு புனித பவுல் 2திமோ 4 : 2 கூறிய இறைவார்த்தையை நோக்கும் போது: 'இறைவார்த்தையை அறிவி. வாய்ப்புக் கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் இதைச் செய்வதில் கருத்தாயிரு." எனவே நமது பணிச் சூழல்களில் பகிரப்படும் இறை வார்த்தைகள் ஆழமான தாக்கங்களை உருவாக்குவதை நாம் கண்கூடாகக் காணலாம். Basic Christian Communities -இலத்தீன் அமெரிக்காவில், பிலிப்பின்ஸில் உருவான அடிப்படை கிறிஸ்தவக் குழுக்கள் வழியே இறைவனைத் தெரிந்து கொண்டவர்கள், இறைவனிடம் மீண்டும் வந்தவர்கள் பல ஆயிரம் பேர் என்பது இதற்கு சான்றாகும் ஓர் உண்மை. மேடையிட்டோ, குழுக்களிலோ இறைவார்த்தையைப் பகிர்ந்து கொள்ள வாய்ப்பு இல்லாத போதும் இறைவார்த்தையை அறிவிக்கச் சொல்கிறார் பவுல் அடியார். வாய் வார்த்தைகளைக் காட்டிலும் வாழ்வினால் நாம் அறிவிக்கும் இறைவார்த்தைகள் மக்கள் மனதில் ஆழமாகப் பதியும். 'உன் அயலவர் மீது அன்பு காட்டு" (யோவான் 13:34) என்பதை வார்த்தைகளில் சொல்வது ஒருவகை தாக்கத்தை உண்டாக்கும். அதே வார்த்தைகளை வாழ்ந்து காட்டும்போது, அதன் தாக்கம் இன்னும் ஆழமாக இருக்கும். 'ஏழு முறையல்ல... எழுபது முறை ஏழு முறை மன்னித்து விடு" (மத்தேயு 18:22) என்று இயேசு விடுத்த சவாலைச் சத்தமாகச் சொல்லிப் புரிய வைக்கலாம். அல்லது தவறிழைக்கும் ஒருவரை ஏழுமுறை எழுபது முறை, அதாவது எந்நேரமும் மன்னிப்பதன் வழியாகவும் கிறிஸ்துவின் நற்செய்தியைப் பறை சாற்றலாம். இதுவே உயர்ந்த மறைபரப்பாகும்.

திருச்சபையின் ஆரம்ப காலத்தில் திருத்தூதர் பணிகள்4:32-35 குறிப்பிட்ப்படுவதுபோல் அம்மக்கள் இறைவார்த்தைகளை அறிவித்ததோடு நின்றுவிடாமால் தம் வாழ்வாக மாற்றினார்கள். 'நம்பிக்கை கொண்ட மக்கள் அனைவரும் ஒரே உள்ளமும் ஒரே உயிருமாய் இருந்தனர்… தக்கவாறு பகிர்ந்து கொடுக்கப்படும்." திருத்தூதர் பணிகள் 5: 12-14 'மக்களிடையே பல அரும் அடையாளங்களும் அருஞ்செயல்களும் திருத்தூதர் வழியாய்ச் செய்யப்பட்டன... மக்கள் இவர்களைப் பற்றிப் பெருமையாகப் பேசினர். ஆண்டவரிடம் நம்பிக்கை கொண்ட திரளான ஆண்களும் பெண்களும் இவர்களோடு சேர்க்கப்பட்டார்கள். " வாழ்வால் போதித்து வந்த முதல் கிறிஸ்தவர்களின் பாரம்பரியத்தைத் தொடர்ந்தவர்கள் பலர். புனித பிரான்சிஸ் அசிசி ஆற்றிய மௌனமான மறையுரையைப் பற்றி கேள்விப் பட்டிருக்கிறோம். தன் சீடர்களுடன் ஊரைச் சுற்றி அவர் மௌனமாக நடந்ததே அவ்வூர் மக்களுக்கு அரியதொரு மறையுரையானது. அதேபோல், Dr.Albert Schweitzer என்ற புகழ்மிக்க மருத்துவர் ஆப்ரிக்காவில் ஏழைகள் நடுவில் அற்புதமான பணிகள் செய்தவர். அவரை 'நடமாடும் ஒரு மறையுரை என்று சொல்வார்கள். வேதபோதக நாடுகளின் பாதுகவலர்களாகிய புனித பிரான்சிஸ் சவேரியார் தன் போதனைகளால் பல்லாயிரம் உள்ளங்களை இறைவனிடம் அழைத்து வந்தார். புனித தெரேசா தன் செபங்களால் பல்லாயிரம் மனங்களை இறைவனிடம் கொணர்ந்தார்.;. கடுகளவு நம்பிக்கை இருந்தால், அந்த நம்பிக்கையுடன் செபங்கள் எழுப்பப்பட்டால், மலைகள் பெயர்ந்துவிடும், மரங்கள் வேருடன் எடுக்கப்பட்டு, கடலில் நடப்படும். எரிக்கோவின் மதில்கள் இடிந்துவிழும் என்ற நம்பிக்கை தரும் இறைவார்த்தைகளின் அடிப்படையில் மறைபரப்புப் பணியில், இறைவனைப் பறைசாற்றுவோர்களுக்காக செபிப்போம.

கிறிஸ்துவின் உடனிருப்பைத் தொடர்ந்து அனுபவிக்க நம்முடைய வழிபாடுகள், மறைக் கல்வி, அன்புப் பணி, பண்பாட்டு நிகழ்வுகளைச் சிறப்புடன் செய்து, கடவுளின் பிள்ளைகளாக இயேசுவோடும் நம் பிறரோடும் இணைந்து நம்பிக்கையுள்ள சாட்சிகளாக வாழ்ந்து மறையை பாரப்புவோம். இறை சமூகத்தில் புது வாழ்வு அளிக்கும் கருவிகளாக நாம் மாறுவோம். தனிமை, நோய்கள், துன்பங்கள், அக்கறையற்ற நிலை இவற்றில் வாழும் சமூகத்தில், கிறிஸ்தவர்கள் நாம் நம்பிக்கை கொடுத்து, தேவையற்ற ஆடம்பரங்களை களைந்து, சிறந்த இலட்சியங்களைத் உருவாக்கி அனைவரும் நலமுடன் வாழக் கூடிய புதியதோர் சமூகம் படைக்க உதவுவோம்.

இன்றைய நவீனத்துவ உலகு உலகமயமாக்கல் கொள்கைகளுக்குள், Mission- என்ற சொல்லுக்கு வர்த்தக உலகம் பணத்தை அதிகமாக சம்பாதிப்பதற்கு தங்கள் சுயநலக கொள்கைகளை உலகறியப் பறைசாற்ற Mission Statement, Vision Statemen போன்ற உயர்ந்த வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார்கள் எனவே நாம் ஏன் தயங்க வேண்டும்? Mission Sunday- மறைபரப்பு ஞாயிறு,-அனுப்பப்படுதல் ஞாயிறு என்பதன் ஆழமான எண்ணங்களை உணர முயல்வோம். உலகில் பிறக்கும் நாம் ஒவ்வொருவரும் குறிப்பிட்டதொரு பணிக்கென அழைக்கப்பட்டுள்ளோம். அனுப்பப்பட்டுள்ளோம். நமது தனித்துவத்தை உணர்ந்து நம்மையும் பிறரையும் மதிக்கக்கற்றுக் கொள்வோம். வாய்ப்பு கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் நமக்கென குறிக்கப்பட்ட பணியை நிறைவேற்றுவோம். வாய்ப்பு கிடைக்கும்போது, வார்த்தைகளால் வலிமையோடு அறிவிப்போம். வாய்ப்பு கிடைக்கவில்லையெனில் வாழ்வால் இன்னும் அதிக வலிமையுடன் அறிவிப்போம். உலக மறைபரப்பு ஞாயிறான இன்று, நம் உள்ளங்களில் நற்செய்திப் பணியில் ஆர்வத்தை உருவாக்கி, இப்பணியில் முழுமையாக ஈடுபட அழைக்கிறது. இப்பணிக்காகத் தங்களை ஈடுபடுத்திக் கொண்ட திருச்சபையின் மறைபரப்பு ஆணையத்தில் உழைக்கும் அனைவருக்கும், மறைபரப்பு நாடுகளில் உருவாக்கப் பணியில் ஈடுபட்டிருக்கும் அனைவருக்காகவும் செபிப்போம்.

வெளியில் நின்று வேடிக்கை பார்த்து வெற்றுவார்தைகளில் வெளியுலகை நாம் ஏமாற்றுகின்றோம். திடமற்று பயந்த அன்னை மரியா இறுதியில் திடம் கொண்டு இறைபணிக்கு 'ஆம் " என்று பதிலிறுத்ததுபோன்று நாம் அனைவரும் கடவுளின் அழைப்பை ஏற்று, நம்முடைய பணிவாழ்வின் மூலம் புதிய சமுதாயத்தை இன் நானிலமெங்கும் உருவாக்குவோம். காலம் நிறைவேறியபோது, கடவுள் தம் மகனை பெண்ணிடமிருந்து பிறக்கச் செய்து, தம்முடைய மறையுண்மைகளை வெளிப்படுத்தி, சீடர்களுக்கு நம்பிக்கை, மன உறுதியைத் தந்தார். எனவே சிறுபிள்ளை பேசிடும் ஆற்றல் எனக்கு இல்லை. யாரிடம் இவா நான் செல்வேன். எதைத்தான் இறைவா நான் சொல்வேன் என பயந்து அஞ்சி கலங்காது, அச்சம் போக்கி திடம் கொள்ள பயம் வெல்ல இறைவன் எம்முடன் இருக்கிறார். சறுக்கான பாதையிலே வழக்காமல் செல்ல பகலில் மேகதூணாகிட இரவில் நெருப்பு கொழுந்தாகிட துயரில் துணையாகிட தூயாவர் எம்முடன் வருகிறார். எனவே இறைவா நீர் காட்டும் பாதையில் நாம் சென்று நீர் சொல்லும் வார்த்தையை மறைபணியாக்கிட இதோ நாம் வருகிறோம் என புறப்படுவோமா?
[2015-10-07 23:28:22]


எழுத்துருவாக்கம்:

அருள்பணியாளார் ம. பத்திநாதர்.
யாழ் மறைமாவட்ட இயக்குனர்
பாப்பிறை மறைபரப்புச் சபைகள்.
ஆயர் இல்லம், யாழ்ப்பணம்.