ஆன்மீக வலம்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, ஆண்டவரின் நற்செய்தி பணியில் ஆர்வமுள்ள பொதுநிலையினரே, உங்கள் ஆன்மீக சிந்தனைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholic.de என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். எமது ஆன்மீக இயக்குனரின் அனுமதி பெற்று, இங்கே பிரசுரிக்கப்படும்.









இயேசு நம்மோடு பயணிக்கும் ஒரு பயணி…..



வாழ்க்கை என்னும் பயணத்தில் ஒவ்வொரு மனிதர்களும் பயணியாக செல்கிறோம். இவ்வாறு பயணத்தை மேற்கொள்ளும் போது பல உடன் பயணிகளுடன் பயணம் செல்கிறோம். இதில் தெரிந்தவர் தெரியாதவர்கள் என பலர் நம்மோடு பயணிக்கின்றனர். இறைவன் நம்மோடு எல்லா நேரத்திலும் பயணிக்கின்றார். ஆம் இறுதி வரை நம்மோடு பயணிப்பவர் இறைவன் மட்டுமே. எவ்வாறெனில், வாழ்வுத்தரும் இறைவார்த்தை வழியாகவும், கிறிஸ்தவ விசுவாசத்தின் நற்கருணை மூலமாகவும் தொடர்ந்து இருக்கிறார்.

 இறைவார்த்தை இறைவன் இயேசு எப்படிப்பட்டசூழ்நிலைகளில் நம்மோடு பயணம் மேற்கொள்கிறார் என்று புதிய ஏற்பாட்டில் புனித நற்செய்தியாளர் கூறுவதை காணலாம்.

1. கடவுளுக்கு ஏற்புடையவை அனைத்தையும் நாம் நிறைவேற்றுவதுதான் முறை. மத்3:15 கடமை நிறைவேற்ற அழைக்கும் பயணி
2. மகிழ்ந்து பேருவகை கொள்ளுங்கள். மத்5:12 மகிழ்ந்திட அழைக்கும் பயணி<
3. நான் உங்களுக்குச் சொல்கிறேன்; உங்கள் பகைவரிடமும் அன்பு கூருங்கள்; உங்களைத் துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள். மத்5:44 வேண்டுவதற்கு கற்றுத்தரும் பயணி
4. நீங்கள் அளிக்கும் தீர்ப்பையே நீங்களும் பெறுவீர்கள். நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ, அதே அளவையாலே உங்களுக்கும் அளக்கப்படும். மத்7:2 எச்சரிக்கை ஒலியை நினைவுப்படுத்தும் பயணி
5. நான் விரும்புகிறேன், உமது நோய் நீங்குக! மத்8:3 மருத்துவ பயணி
6. நீர் போகலாம், நீர் நம்பியவண்ணமே உமக்கு நிகழும். மத்8:13 உறுதியளிக்கும் பயணி
7. மகனே, துணிவோடிரு, உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன. மத்9:2 மன்னிக்கும் பயணி
8. மகளே, துணிவோடிரு; உனது நம்பிக்கை உன்னைக் குணமாக்கிற்று மத்9:22 துணிவு கொடுக்கும் பயணி
9. நீங்கள் நம்பியபடியே உங்களுக்கு நிகழட்டும். மத்9:29 நம்பிக்கையுட்டும் பயணி
10. என்ன பேசுவது, எப்படிப் பேசுவது ' என நீங்கள் கவலைப்பட வேண்டாம். நீங்கள் என்ன பேச வேண்டும் என்பது அந்நேரத்தில் உங்களுக்கு அருளப்படும். மத்10:19 மனதை தேற்றும் பயணி
11. சிட்டுக் குருவிகள் பலவற்றைவிட நீங்கள் மேலானவர்கள். எனவே அஞ்சாதிருங்கள். மத்10:31 திடமளிக்கும் பயணி
12. பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். மத்11:28 இளைப்பாறுதல் தரும் பயணி
13. விண்ணரசின் மறைபொருளை அறிய உங்களுக்குக் கொடுத்து வைத்திருக்கிறது; அவர்களுக்கோ கொடுத்து வைக்கவில்லை. மத்13:11 வாய்ப்புக்கள் கொடுக்கும் பயணி
14. அம்மா, உமது நம்பிக்கை பெரிது. நீர் விரும்பியவாறே உமக்கு நிகழட்டும். மத்15:28 விருப்பத்தை நிறைவேற்றும் பயணி
15. இரண்டு அல்லது மூன்று பேர் என் பெயரின் பொருட்டு எங்கே ஒன்றாகக் கூடியிருக்கின்றார்களோ அங்கே அவர்களிடையே நான் இருக்கிறேன் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். மத்18:20 உடனிருக்கும் பயணி
16. ஏழுமுறை மட்டுமல்ல; எழுபது தடவை ஏழுமுறை என நான் உனக்குச் சொல்கிறேன். மத்18:22 அறிவுரைக்கொடுக்கும் பயணி
17. சிறு பிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள்; அவர்களைத் தடுக்காதீர்கள்; ஏனெனில் விண்ணரசு இத்தகையோருக்கே உரியது. மத்19:14 ஆசீர் கொடுக்கும் பயணி
18. மானிட மகனும் தொண்டு ஏற்பதற்கு அல்ல, தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார். மத்20:28 தியாக வாழ்க்கைக்கு அழைக்கும் பயணி
19. விண்ணும் மண்ணும் ஒழிந்துபோகும். ஆனால் என் வார்த்தைகள் ஒழியவே மாட்டா. மத்24:35 உடன்படிக்கை வழங்கும் பயணி
20. விழிப்பாயிருங்கள்; ஏனெனில் உங்கள் ஆண்டவர் எந்த நாளில் வருவார் என உங்களுக்குத் தெரியாது. மத்24:42 கடவுளை சந்திக்க அழைக்கும் பயணி
21. என் தந்தையிடமிருந்து ஆசி பெற்றவர்களே, வாருங்கள்; உலகம் தோன்றியது முதல் உங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் ஆட்சியை உரிமைப்பேறாகப் பெற்றுக் கொள்ளுங்கள். மத்25:34 உரிமை வழங்கும் பயணி
22. மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன். மத்25:40 தானத்தருமம் செய்ய அழைக்கும் பயணி
23. என் தந்தையே, முடிந்தால் இத்துன்பக் கிண்ணம் என்னை விட்டு அகலட்டும். ஆனாலும் என் விருப்பப்படி அல்ல, உம் விருப்பப் படியே நிகழட்டும். மத்26:39 இறைத்திட்டம் பணிய அழைக்கும் பயணி
24. இன்னும் உறங்கி ஓய்வெடுக்கிறீர்களா? பாருங்கள், நேரம் நெருங்கி வந்து விட்டது. மத்26:44 சுறுசுறுப்புடன் செயல்பட அழைக்கும் பயணி
25. நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன். மத்28:20 உடனிருப்பின் பயணி

இறைவார்த்தையைக் கேட்பதும், அதன்படி வாழவுமே நாம் அழைக்கப்பட்டுள்ளோம்.

 நற்கருணை
வாழ்வில் ஒவ்வொரு மனிதருக்கும் தேவையானது உணவு. ஆம் இறைமகன் இயேசு கொடுக்கும் உணவு. சாதாரண உணவு அல்ல, மாறாக உறவின் உணவு, தியாகத்தின் உணவு, மருத்துவ உணவு, மீட்பின் உணவு, விலைமதிக்க முடியாத அறுசுவை உணவு, அனைவருக்குமான பொதுவான உணவு, உயர்ந்தவர், தாழ்ந்தவர், படித்தவர், படிக்காதவர், ஏழை, பணக்காரர் என்று எந்த விதமான வேறுபாடுமின்றி உணவருந்த தன்னையே இத்தரணிக்கு கொடுக்கிறார். இயேசு கொடுக்கும் உணவில் நாம் நமது தொலைத்திருந்த விசுவாசத்தை, இறைநம்பிக்கையை மீட்டும் பெற்றிடவும், ஊட்டம் பெற்று மகிழ்ச்சி நிறைந்தவர்களாக வாழ்வின் அர்த்தத்தை கொடுக்க உன்னத உணவாகிய இறைவன் அழைக்கிறார்.

1. ஐயாயிரம் பேருக்கு உணவு அளித்தல் மத்14:13-21
2. நாலாயிரம் பேருக்கு உணவு அளித்தல் மத்15:32
3. கானாவில் திருமணம் யோ 2:1
4. சமாரியப் பெண் ஒருவரும் இயேசுவும் யோ 4:13
5. வாழ்வு தரும் உணவு யோ 6:35
நற்கருணை வழியாக இறைவன் நம்மில் வாழ்கிறார். நம் உள்ளத்தில் வந்து, நாம் உருவாக்கிய குடும்பத்தில் தங்கி, சமுதாயத்திற்கும், நாட்டிற்கும் நன்மையை செய்யும் இறைவனை என்றும் பற்றிக்கொண்டு நமது வாழ்க்கை பயணத்தை இனிதாய், மகிழ்வாய் தொடர்வோம்.
[2015-07-27 12:20:14]


எழுத்துருவாக்கம்:

அருட்.சகோ. சி. குழந்தை திரேசா FSAG
பிரின் ஆம் கிம்சே
யேர்மனி