ஆன்மீக வலம்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, ஆண்டவரின் நற்செய்தி பணியில் ஆர்வமுள்ள பொதுநிலையினரே, உங்கள் ஆன்மீக சிந்தனைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholic.de என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். எமது ஆன்மீக இயக்குனரின் அனுமதி பெற்று, இங்கே பிரசுரிக்கப்படும்.

பழைய ஏற்பாட்டில் பெண்கள்தொடக்கமாக...
கடவுள்மீது பற்றுறுதி கொண்டு செயல்பட்டால் எத்துணை வலிமை படைத்த உலக ஆற்றல்களையும் வென்றுவிடலாம் என்பதை தங்களின் வாழ்வின் வழியாக இப்பெண்கள் எடுத்துரைக்கின்றார்கள். பெண்கள் தங்கள் வாழ்வில் எப்படிப்பட்ட சொல்லிலடங்கா துயரமான தருணங்களையெல்லாம் தாண்டி வெற்றி பெற்றுள்ளார்கள் என்பதை பழைய ஏற்பாட்டில் நாம் பார்க்கிறோம். இங்கே சில வழி தவறிய பெண்களின் வரலாற்றையும் படிக்கிறோம். இதற்கு என்ன பொருள்? கடவுள் நேர்மையான பெண்களை மட்டுமல்ல, தீய வழியில் செல்லும் பெண்கள் வழியாகவும் தம் மீட்புத் திட்டத்தை நிறைவேற்றியுள்ளார் என்பதையே இது காட்டுகிறது. நெஞ்சைப் பிடித்துக்கொள்ளுங்கள் நண்பர்களே! இனி வரலாற்றில் பயணிப்போம்.

ஏவாள்

கடவுளின் படைப்பில் உருவான முதல் மனிதன் ஆதாமின் விலா எலும்பில் இருந்து படைக்கப்பட்டவள். இவள் தன் கணவன் ஆதாமுடன் ஏதேன் தோட்டத்தில் குடியிருந்தவள். அப்போது அத்தோட்டத்திலிருந்த ஒரு மரத்தின் கனியை மட்டும் உண்ணக்கூடாது என்று ஆண்டவராகிய கடவுள் கட்டளை இட்டிருந்தார். ஆனால் சூழ்ச்சிமிக்க பாம்பினால் ஏவாள் தூண்டப்பட்டு, அம்மரத்தின் கனியை உண்டு, பின்னர் அப்பழத்தை ஆதாமிற்கும் கொடுத்தாள். அவனும் அதை உண்டான், அப்பொழுது கடவுள், ஏன் அப்பழத்தை உண்டாய் என்று கேட்டதற்கு, பாம்பு என்னை ஏமாற்றியது, நானும் உண்டேன் என்றாள். பின்னர் கடவுளிடமிருந்து இவ்வாறு தீர்ப்பைப் பெற்றாள். "உன் மகப்பேற்றின் வேதனையை மிகுதியாக்குவேன், வேதனையில் நீ குழந்தைகள் பெறுவாய். உன் கணவன் மேல் நீ கொள்வாய், அவனோ உன்னை ஆள்வான்". இவள் தன் கணவனிடமிருந்து " ஏவாள்" என்ற பெயரைப் பெற்றாள் ( தொநூ 2 : 22 - 3:20). ஏவாள் தன் கணவன் ஆதாமுடன் கூடி வாழ்ந்து காயின், ஆபேல், சேத்து என்னும் மூன்று பிள்ளைகளைப் பெற்றெடுத்தாள் ( தொநூ 4:1-2, 5:3)

ஆதா

இவர் காயினின் வழிமரபைச் சார்ந்தவர். இலாமேக் என்பவரின் முதல் மனைவி. இவளின் பிள்ளைகள் யாபால் மற்றும் யூபால் ( தொநூ 4: 17-20)

சில்லா

இவர் காயினின் வழிமரபினர். இலாமேக்கின் இரண்டாவது மனைவி. இவருக்கு தூபால்காயின் என்ற மகனும், நாகம்மா என்ற மகனும் பிறந்தார்கள்.(தொநூ 4: 17-22) .

சாரா

இவள் ஆபிரகாமின் மனைவி. குழந்தைப்பேறு இல்லாமல் இருந்தவள். தெராகுவின் மருமகள். ஆபிரகாம் கல்தேயர் நாட்டைவிட்டு கானான் நாட்டிற்குச் சென்றபோது, உடன் சென்றவர்களில் சாராவும் ஒருத்தி ( தொநூ 11: 31 - 12:5). சாரா அழகானவள். ஆபிரகாம் எகிப்திற்குச் சென்ற போது சாரா கண்ணுக்கு மீது அழகானவளாய் இருந்ததால், எகிப்தியர் ஆபிரகாமை கொன்று, சாராவை எடுத்துக்கொள்வர் என்று பயந்தார். இதனால் எகிப்து மன்னன் பார்வோனிடம் சாரா தன் சகோதரி என்று ஆபிரகாம் பொய் கூறினார். ஆபிரகாம் கூறியவாறே எகிப்தில் சாரா ஆபிரகாமின் சகோதரி போல நடித்தாள். பார்வோன் மன்னன் சாராவை தன் அரண்மனைக்கு வரவழைத்து அவளுடன் உறவு கொண்டான். இதனால் ஆண்டவர் பார்வோனின் குடும்பத்தையும், அவனையும் கொடிய கொள்ளை நோயால் துன்பப்படுத்தினார். அதன்பிறகு சாரா ஆபிரகாமின் மனைவி என்ற உண்மையை அறிந்து, பார்வோன் சாராவை ஆபிராமுடன் நாட்டை விட்டு வெளியேற்றி அனுப்பிவிட்டார் ( தொநூ 12: 10-20) சாரா தனக்கு மகப்பேறு இல்லாததால் தன் பணிப்பெண் ஆகார் மூலம் இஸ்மயேல் என்ற குழந்தையைப் பெற்றாள். ( தொநூ 16:1-6) கடவுள் ஆபிரகாமிடம் கூறியபடி " சாராய்" என்ற தன் பெயரை, "சாரா" என்று மாற்றிக்கொண்டாள் ( தொநூ 17:15-16) . ஆண்டவர் ஆபிரகாமை நோக்கி, உன் மனைவி சாரா, இளவேனிற் காலத்தில் ஆண்மகன் ஒருவனை பெற்றெடுப்பாள் என்று கூறியதை கேட்டு தமக்குள் சிரித்தவள்". அப்போது சாரா தான் சிரிக்கவில்லை என்று ஆண்டவரிடம் பொய் கூறினாள் ( தொநூ 18: 9-15). பின்பு ஆபிரகாம் தான் இருந்த இடத்திலிருந்து புறப்பட்டு நெகேபுக்குச் சென்று, காதேசுக்கும் சூருக்கும் இடைப்பட்ட பகுதியில் வாழும்போது சாராவும் உடனிருந்தார். அங்கும் ஆபிரகாம் தன் மனைவி சாராவை, தன் சகோதரி என்று கூறினார். இதனால் கெரார் மன்னனாகிய அபிமெலக்கு, தன் ஆட்களை அனுப்பி சாராவை வரவழைத்து, அவளுடன் வாழ்ந்தான். அப்போது கடவுளின் தூதரால், சாரா ஆபிரகாமிற்குச் சொந்தமானவள் என்றும் அவளை மீண்டும் ஆபிரகாமிடம் ஒப்படைத்துவிடும் என்றும் எச்சரிக்கப்பட்டான். இதனால் அபிமெலக்கு காலை விழித்தவுடன் தன் ஆட்களை வரவழைத்து, உண்மையை விசாரித்து சாராவை ஆபிரகாமிடம் ஒப்படைத்தான். அது வரை அபிமெலக்கு சாராவை தொடாமலே இருந்தான். மீண்டும் சாரா ஆபிரகாமை சென்றடைந்தபின், ஆண்டவர் அபிமெலக்கையும் அவன் மனைவியையும், அடிமைப்பெண்களையும் குணமாக்கி அவர்களுக்குப் பிள்ளைப்பேறு அளித்தார் ( தொநூ 20: 1-18) பின்னர் ஆண்டவர் தாம் அளித்த வாக்குறுதிக்கேற்ப குறிப்பிட்ட காலம் வந்ததும், சாரா கருத்தாங்கி ஆண்மகனைப் பெற்றார். அவனே ஈசாக்கு என்பவன். ஈசாக்கு பிறந்தபோது, அவளின் வயது 100. ( தொநூ 21:1-5) . சாரா 127 ஆண்டுகள் வாழ்ந்தாள். இவள் கானான் நாட்டிலுள்ள எபிரோன் என்ற கிரியத்து அர்பா நகரில் இறந்தாள் ( தொநூ 23: 1-2). இவளின் உடலை, ஆபிரகாம், மம்ரே அருகில் மக்பேலா நிலத்தின் கல்லறையில் அடக்கம் செய்தார் (தொநூ 23: 19)

ஆகார்

இவள் எகிப்தியப்பெண். ஆபிராமின் மனைவி சாராயின் பணிப்பெண். ஆபிரகாமின் மனைவி சாராயிக்கு மகப்பேறு இல்லை. அதனால் சாராய் தன் பணிப்பெண் ஆகார் வழியாக குழந்தை பெற்றுக்கொள்ள முடிவெடுத்தார். ஆகார் கருவுற்றபின் தன் தலைவி சாராயை ஏளனமுடன் நோக்கினாள். அதனால் கோபம் கொண்ட சாராய் ஆகாரை கொடுமைப்படுத்தத் தொடங்கினாள். கருவுற்றிருந்த ஆகார் சாராயிடமிருந்து பாலைநிலத்திற்கு தப்பி ஓடினார். ஆனால் ஆண்டவரின் தூதரால் ஆகார் காப்பாற்றப்பட்டு, இஸ்மயேல் என்ற குழந்தையைப் பெற்றெடுத்தாள் (தொநூ 16:1-16). மலடி என்று அறியப்பட்ட சாராய் ஆண்டவரின் கருணையால் ஈசாக்கைப் பெற்றெடுத்தாள். ஆகாரின் மகன் இஸ்மயேல், தன் மகன் ஈசாக்கிற்கு பங்காளியாகிவிடுவானோ என்று கருதி ஆகாரையும், அவள் மகனையும் அங்கிருந்து துரத்திவிட எண்ணினாள் சாராய். ஆகார் ஆபிரகாமிடமிருந்து அப்பமும், தோற்பை நிறைய தண்ணீரையும் பெற்றுக்கொண்டு, "பெயேர்செபா" என்னும் பாலைநிலத்திற்கு சென்று, அங்கு அலைந்து திரிந்தாள். தன்னிடமிருந்த தண்ணீர் தீர்ந்ததும், புதர் ஒன்றின் அடியில் குழந்தையைக் கிடத்தி, அக்குழந்தை பசியால் சாவதை காணமுடியாமல் கூக்குரலிட்டு அழுதாள். ஆண்டவர் இருவரின் கூக்குரலையும் கேட்டார். அவர்கள் வழியாக பெரிய இனம் ஒன்றை தோன்ற செய்வேன் என்று வாக்களித்தார். அதன்பிறகு இருவரும் நீருள்ள கிணற்றை கண்டனர். பருகினர். பாரான் என்னும் பாலை நிலத்தில் குடியேறினர். ( தொநூ 21:9-21)

கெற்றூரா

சாரா இறந்த பிறகு ஆபிரகாம் இவளை மணந்தார். இவர்களுக்கு சிம்ரான், யோக்சான், மெதான், மிதியான், இசூபாக்கு, சூவாகு ஆகியோர் பிறந்தனர். இவள், ஆபிரகாம் தம் மகன் ஈசாக்கிற்கு அவரின் செல்வங்கள் அனைத்தையும் கொடுத்ததை கண்டு பொறாமைக் கொண்டாள். இதனால் ஆபிரகாமை ஈசாக்கிடமிருந்து பிரித்து கீழ்த்திசை நாட்டிற்கு அனுப்பிவைத்தாள் ( தொநூ 25: 1-6)

நாகம்மா

இவள் தூபால் காயின் என்பவனின் சகோதரி ( தொநூ 4:22)

லோத்தின் மகள்கள்

இவர்கள் இருவரும் தன் தந்தையுடன் ஒரு குகையில் வாழ்ந்தார்கள். தங்களின் தந்தையை நன்றாக குடிக்க வைத்து அவருக்குத் தெரியாமலேயே அவருடன் உறவு கொண்டார்கள். மூத்தவள் கருத்தரித்து மோவாபு (தந்தையின் மூலமாக) என்ற மகனையும், இளையவள் பென் அம்மீ ( என் இனத்தின் மகன்) என்ற மகனையும் பெற்றெடுத்தனர். (தொநூ 19: 30-38)

ரெபேக்கா

இவள் ஆபிரகாமின் சகோதரர் நாகோருக்கும், அவர் மனைவி மில்க்காவுக்கும் பிறந்த பெத்துவேலின் மகள். எழில்மிக்க தோற்றம் கொண்டவள். ஆபிரகாம் தன் மகன் ஈசாக்கிற்கு திருமணம் செய்ய விரும்பி, தான் பிறந்த ஊரிலேயே பெண்கொள்ள விரும்பினார். அதற்காக தன் வேலைக்காரரை அனுப்பிவைத்தார். ஆபிரகாமின் வேலைக்காரர் அந்த ஊருக்கு வந்தபோது, ரெபேக்காவின் இரக்க குணத்தைக் கண்டார். ஆண்டவரின் ஆசியுடன் ரெபேக்கா ஈசாக்கை திருமணம் செய்து கொண்டார். ரெபேக்காவிற்கு லாபான் என்ற சகோதரன் இருந்தான் ( தொநூ 24: 1-67). ரெபேக்கா பல ஆண்டுகள் மகப்பேறு இல்லாமல் இருந்தார். பிறகு ஆண்டவரிடம் மன்றாடி ஏசா மற்றும் யாக்கோபு என்ற இரட்டைப் பிள்ளைகளைப் பெற்றெடுத்தாள். (தொநூ 25: 19-26). ஆனால் ரெபேக்கா யாக்கோபின் மீது அதிக பாசம் வைத்திருந்தாள். மூத்தவன் ஏசாவிற்கு கிடைக்கவேண்டி, தன் கணவர் ஈசாக்கின் வழிமரபினர் ஆசியை இளையமகன் யாக்கோபை பெற வைத்தாள். இதனால் ஏசா யாக்கோபின் மீது கோபம் கொண்டு அவனைக்கொன்று விடுவானோ என்று பயந்து ரெபேக்கா, தன் மகன் யாக்கோபை தன் சகோதரன் லாபானின் வீட்டிற்கு அனுப்பிவைத்தாள். பின்னர் தன் சகோதரன் லாபானின் மகளை மணந்து கொள்ள அறிவுரையும் கூறினாள் (தொநூ 27: 1-46)

தெபோரா (ரெபேக்காவின் பணிப்பெண்)

இவள் ரெபேக்காவின் பணிப்பெண். இவள் பெத்தேலில் இறந்தாள். பெத்தேலின் அடிவாரத்திலிருந்த ஒரு கருவாலி மரத்தடியில் அடக்கம் செய்யப்பட்டாள். அவ்விடத்திற்கு அல்லோன்-பாகூத்து (அழுகையின் கருவாலி மரம்) என்னும் பெயர் வழங்கப்பட்டது (தொநூ 35: 8)

தெபோரா (இறைவாக்கினர்)

இவள் இஸ்ரயேல் மக்களின் இறைவாக்கினர். இலப்பிதோத்தின் மனைவி. நீத்தலைவி. எப்ராயிம் மலைநாட்டில் இராமாவுக்கும், பெத்தேலுக்கும் இடையில் : தெபோராப் பேரீச்சை" என்ற மரத்தடியில் அமர்ந்திருந்தாள். தீர்ப்புப் பெறுவதற்காக இஸ்ரயேலர் அவளிடம் செல்வர். தெபோரா, நப்தலியில் இருந்த கெதேசில் வாழ்ந்த அபினொவாமின் மகன் பாராக்கை தன்னிடம் வருமாறு ஆளனுப்பி கூப்பிட்டு யாபினின் படைத்தலைவன் சீசராவையும் அவன் படைகளையும் வீழ்த்தி இஸ்ரயேலருக்கு விடுதலை வழங்க செய்ய ஆண்டவரின் இறைவாக்குரைத்தாள். பின்பு பாராக்கு, தெபோராவை தன்னுடன் வராவிடில் செல்ல மாட்டேன் என்று கூறியதால் பாராக்குடன் தெபோரா தபோர் மலைக்குச் சென்றாள். அங்கு சீசரா தன் படையுடன் வருவதை பாராக்கிடம் அறிவித்து, அவனை தோற்கடிக்க செய்தாள். அதன்பின் தெபோராவும், பாராக்கும் வெற்றிப்பாடல் ஒன்றைப் பாடினர் ( நீதி 4:4 -5:1-31)

ராகேல், லேயா

இவர்கள் நாகோரின் பேரன் லாபானின் மகள்கள். யாக்கோபின் மனைவியர். லாபானின் முத்த மகள் லேயா, இளைய மகள் ராகேல். ராகேல் தன் தந்தையின் ஆடுகளை மேய்த்தவள். இவள் வடிவழகும் எழில் தோற்றமும் கொண்டவள். லேயா மங்கிய பார்வை உடையவள். யாக்கோபின் தாய்மாமன் லாபான். யாக்கோபு ராகேலின் மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தார். அவளை தனக்கு திருமணம் செய்து கொடுக்கும்படி மன்றாடி, யாக்கோபு லாபானின் வீட்டில் சம்பளம் இல்லாமல் 7 ஆண்டுகள் வேலை செய்தார். 7 ஆம் ஆண்டின் இறுதியில் மீண்டும் ராகேலை தனக்கு மணமுடித்துத் தருமாறு கேட்டான். அதன்பின் லாபான் அவ்வூர் மக்கள் அனைவரையும் ஒன்றுதிரட்டி திருமண விருந்தளித்தான். ஆனால் மாலை நேரமானதும் லாபான் ராகேலுக்கு பதிலாக, லேயாவை அழைத்துக்கொண்டு போய் யாக்கோபிடம் விட, யாக்கோபும் அவளுடன் உறவு கொண்டான். அதிகாலையில் தான் யாக்கோபு, அப்பெண் ராகேல் அல்ல, மாறாக லேயா என்பதையறிந்தான். யாக்கோபு லாபானை நோக்கி ஏன் இப்படி செய்தாய் என்று கேட்க, லாபான் பெரிய மகள் திருமணமாகாமல், இளைய மகளை திருமணம் செய்வது ஊர் வழக்கமல்ல என்று கூறி லேயாவுடன் 7 நாட்களைக் கழிக்க கூறினான். அத்துடன் இன்னும் 7 ஆண்டுகள் தன்னிடம் வேலை செய்தால், ராகேலை மணமுடித்து தருவேன் என்றான். இதனால் யாக்கோபு மீண்டும் 7 ஆண்டுகள் யாக்கோபிடம் வேலை செய்து ராகேலை மனைவியாக பெற்று, அவளோடு கூடி வாழ்ந்தான். யாக்கோபு லேயாவைவிட ராகேலை அதிகம் நேசித்தார். இதனால் லேயா வெறுப்புக்குள்ளானாள். இதைக்கண்ட ஆண்டவர் லேயாவுக்கு தாய்மைபேற்றை அருளினார். ராகேல் குழந்தைப்பேறு இல்லாமல் இருந்தாள். லேயா கருத்தாங்கி ரூபன் ( எபிரேயத்தில் இதோ ஒரு மகன் என்பதும், என் தாழ்நிலையைக் கண்ணோக்கினார் என்பது பொருள்), சிமியோன் (கேட்டல்), இசக்கார் (ஈடு), செபுலோன் ( பெருமை), தீனா, லேவி (இணைதல்), யூதா (மாட்சிமை) என்ற பிள்ளைகளைப் பெற்றெடுத்தாள். இதனால் ராகேல் தன் சகோதரி லேயாவின் மேல் பொறாமை கொண்டாள். தன் கணவன் யாக்கோபை நோக்கி, நீர் எனக்குப் பிள்ளைகளைத் தாரும். இல்லையேல் செத்து போவேன் என்றாள். இதனால் யாக்கோபு ராகேலின் மேல் கோபங்கொண்டு, நான் என்ன கடவுளா? அவரல்லவா உனக்கு தாய்மைப் பேறு தராதிருக்கிறார் என்றான். பின்னர் ராகேல் கடவுளின் அருளால் தாய்மைப்பேற்றை பெற்று யோசேப்பு ( சேர்த்துத் தருகிறார்), பென்யமீன் என்ற பிள்ளைகளைப் பெற்றெடுத்தாள். பின்பு யாக்கோபு, லாபான் முன்புபோல் இல்லை என்பதையும் தன்னைப் பற்றி தவறாக பேசுவதையும் கண்டான். ஆண்டவர் யாக்கோபை நோக்கி "உன் மூதாதையரின் நாட்டிற்கும், உன் இனத்தாரிடத்திற்கும் திரும்பி போ, நான் உன்னோடு இருப்பேன்" என்றார். இதனால் யாக்கோபு தன் மனைவியர் பிள்ளைகளுடன் தன் மூதாதையரின் நாட்டிற்குத் திரும்பிச் செல்லும்போது, ராகேல் தன் தந்தையின் குலதெய்வச் சிலைகளைத் திருடி, அதை ஒட்டகச் சேனத்தினுள் ஒளித்து வைத்து, அதன்மேல் உட்கார்ந்து கொண்டார். யாக்கோபு அதை திருடிச் சென்றான் என்று லாபான் நினைத்தான். அதனால் லாபான் தன் உறவினர்களுடன் சென்று, யாக்கோபை வழிமரித்து அவனைச் சார்ந்த் அனைத்தையும் தேடிப்பார்த்தான். ஆனால் லாபான் எதையும் கண்டுபிடிக்கவில்லை. அப்போது ராகேல், தான் மாதவிலக்காய் இருப்பதால் தலைவராகிய உம் முன்னிலையில் தன்னால் நிற்க முடியவில்லை. சினம் கொள்ள வேண்டாம் என்று லாபானை நோக்கி கூறினாள். ( தொநூ 24, 29: 9-30, 31:17-35). யாக்கோபு பெத்தேலைவிட்டு எப்ராதிற்கு போகும்போது ராகேலுக்கு பேறுகாலம் நெருங்கியது, அப்போதுதான் அவள் பேறுகால வலியால் துடித்து பென்யமீன் ( என் வேதனையின் மகன்) என்ற ஆண்மகனைப் பெற்றெடுத்த பின் இறந்து போனாள். அவள் பெத்லகேம் என்ற எப்ராத்துக்குச் செல்லும் வழியிலேயே அடக்கம் செய்யப்பட்டாள். யாக்கோபு அவளின் கல்லறைமேல் நினைவுத்தூண் ஒன்றை நட்டார். இன்று வரை அத்தூண் ராகேலின் கல்லறைக்கு நினைவுத் தூணாக உள்ளது ( தொநூ 35: 16-20)

சில்பா

இவள் லாபானின் மகள் லேயாவின் பணிப்பெண் ( தொநூ 29:24). லேயா நான்கு பிள்ளைகளைப் பெற்றாள் ( தொநூ 29:31-35). பின்னர் அவளுக்கு பிள்ளைப்பேறு நின்றுவிட்டதென்று கண்டாள். இதனால் தன் பணிப்பெண் சில்பாவை யாக்கோபிற்கு மனைவியாகக் கொடுத்தாள். சில்பா, யாக்கோபிற்கு காத்து ( எபிரேயத்தில் நற்பேறு என்பது பொருள்), ஆசேர் ( எபிரேயத்தில் மகிழ்ச்சி என்பது பொருள்) என்ற குழந்தைகளைப் பெற்றெடுத்தாள். ( தொநூ 30: 9-13)

பில்கா

இவள் யாக்கோபின் மனைவி ராகேலின் பணிப்பெண். ராகேல் தனக்கு குழந்தைப்பேறு இல்லாததால் தன் கணவன் யாக்கோபிற்கு தன் பணிப்பெண்ணாகிய பில்காவை மனைவியாக கொடுத்தாள். பில்கா யாக்கோபுடன் சேர்ந்து வாழ்ந்து தாண் ( நீதி வழங்கினார்) நப்தலி ( போராடினேன்) என்ற இரு குழந்தைகளைப் பெற்றெடுத்தாள் ( தொநூ 30: 3-8)

தீனா

இவள் யாக்கோபிற்கும், லேயாவிற்கும் பிறந்தவள். யாக்கோபு தம் மனைவி மக்களோடு செக்கேமில் தங்கியிருந்தபோது தீனா அந்நாட்டு மகளிரைப் பார்க்க வெளியே புறப்பட்டு போனாள். அப்போது இவ்வியனான ஆமோரின் மகன் செக்கேம் தீனாவை தூக்கிச் சென்று அவளை சிறுமைபடுத்தினான். தீனாவின் மேல் அவன் காதல் கொண்டு, அவளை திருமணம் செய்ய விரும்பினான். இதனால் செக்கேம் தன் தந்தை ஆமோரை தன்னுடன் அழைத்துச் சென்று யாக்கோபிடம் பெண் கேட்டனர். செக்கேம் வேறு இனத்தை சார்ந்ததால், அவனுக்கு தன் மகளை கலப்பு திருமணம் செய்து தருவதற்கு முன், செக்கேமின் இனத்தை சார்ந்த அனைத்து ஆண்களும் விருத்தசேதனம் செய்ய வேண்டுமென்று கூறினார். அவ்வாறே செக்கேமும், அவன் குடும்பத்தாரும் தன் நகர் மக்களும் அனைவரும் தீனாவிற்காக விருத்தசேதனம் செய்தனர். இவர்கள் அனைவரும் விருத்தசேதனம் செய்த 3 ஆம் நாளில் வலியால் துடித்தனர். அப்போது தீனாவின் சகோதரர்களான சிமியோன், லேவி என்னும் இருவரும் அந்நகரில் புகுந்து யாரும் அறியா வண்ணம் தன் வாளை எடுத்து அனைத்து ஆண்களையும் வெட்டி வீழ்த்தினர். பின்பு தங்களின் சகோதரி தீனாவை செக்கேமின் வீட்டிலிருந்து அழைத்துச் சென்றனர். அத்துடன் தன் சகோதரியை தீட்டுபடுத்திய அந்நகரையும் கொள்ளையிட்டனர் ( தொநூ 34: 1-27)

தாமார் (யூதாவின் மருமகள்)

இவள், யூதாவின் மகன் ஏர் என்பவனின் மனைவி. ஏர் ஆண்டவரின் முன்னிலையில் கொடியவனாய் இருந்ததால் ஆண்டவர் அவனை சாகடித்தார். அப்போது யூதா தனது இன்னொரு மகன் ஓனானை தாமாரோடு கூடி வாழ்ந்து, " உன் சகோதரனுக்கு வழிமரபு தோன்றச் செய்" என்றார். அந்த வழிமரபு தனக்குரியதாய் இராதென்று அறிந்து தாமாருடன் உடலுறவு கொள்ளும்போது, தன் விந்தை தரையில் சிந்தி வந்தான். அவன் செய்தது ஆண்டவர் பார்வையில் தீயதாய் இருந்ததால் ஆண்டவர் அவனையும் சாகடித்தார். அதனால் யூதா தம் மருமகள் தாமாரை நோக்கி தன் இளைய மகன் சேலா பெரியனாகும் வரை உன் தந்தை வீட்டில் விதவையாய் தங்கியிரு என்றார். ஏனெனில் அவனும் தன் சகோதரரைப் போல சாவானோ என்று அஞ்சினார். தாமாரும் யூதா கூறியவாறே தம் தந்தை வீட்டிற்குச் சென்று தங்கியிருந்தாள். பல நாட்களுக்குப்பின் யூதா, தம் மந்தைக்கு உரோமம் கத்தரிப்பவர்கள் இருந்த திம்னாவுக்கு சென்றார். இதை தாமார் அறிந்தார். சேலா பெரியவனாகியும், தன்னை அவனுக்கு மனைவியாக கொடுக்கவில்லை என்று கண்டு, தமது கைம்மைக் கோலத்தைக் களைந்துவிட்டு, முக்காடிட்டுத் தம்மை மறைத்துக் கொண்டு திம்னாவுக்கு சென்றாள். செல்லும் பாதையில் ஏனயிம் நகர் வாயிலில் அமர்ந்து கொண்டாள். யூதா அவளை கண்டபோது, முகம் மூடியிருந்ததால், விலைமாது என்று நினைத்தார். அவள் தன் மருமகளென்று அறியாமல், தன்னுடன் உடலுறவு கொள்ளுமாறு அழைத்தார். தன்னுடன் உறவு கொள்வதற்கு என்ன தருவீர் என்று தாமார் யூதாவிடம் கேட்டாள். அவரும் ஓர் வெள்ளாட்டுக்கிடாய் அனுப்புமட்டும் ஓர் அடைமானம் தருவீரா? என்று கேட்டு, யூதாவின் முத்திரை மோதிரையும் இடைவாரையும், கைக்கோலையும், பெற்றுக்கொண்டு, அவருடன் உடலுறவு கொண்டாள். அதன்பின் தாமார் எழுந்து தன் முக்காட்டை எடுத்துவிட்டு விதவைக்குரிய ஆடைகளை அணிந்துகொண்டாள். பின்னர் தாமார் அவ்விடத்தைவிட்டு போய்விட்டாள். 3 மாதம் சென்றபின்னர் தாமார் வேசித்தனம் பண்ணி, கருவுற்றிருக்கிறாள் என்ற செய்தி யூதாவுக்கு அறிவிக்கப்பட்டது. இதையறிந்த யூதா அவளை இழுத்துக்கொண்டு வாருங்கள், அவள் எரிக்கப்பட வேண்டும் என்றார். அவ்வாறே அவளை இழுத்துக்கொண்டு வருகையில், தாமார் தன் கையில் வைத்திருந்த பொருட்களை காட்டி, இப்பொருட்கள் எவனுடையவையோ அவனாலேயே நான் கருவுற்றுருக்கிறேன் என்றாள். இதைக்கண்ட யூதா, என்னைக்காட்டிலும் தாமார் நேர்மையானவள். அவளை நான் மகன் சேலாவுக்கு மணமுடிக்காமல் போனேனே என்றார். அதற்கு பின் யூதா அவளோடு உடலுறவு கொள்ளவில்லை. தாமார், பெரேட்சு ( எபிரேயத்தில் "கிழித்தல்" என்பது பொருள்), செராகு (எபிரேயத்தில் "கருஞ்சிவப்பு" என்பது பொருள்), என்ற இரு இரட்டைப்பிள்ளைகளைப் பெற்றாள்.( தொநூ 38: 1-30). இவள் மத்தேயு நற்செய்தி இயேசுவின் மூதாதையர் பட்டியலிலும் இடம்பெற்றுள்ளாள் ( மத் 1:3)

தாமார் (தாவீதின் மகள்)

இவள் தாவீதின் மகள். அப்சலோமின் சகோதரி. இவள் பேரழகி. இவளின் மற்றொரு சகோதரன் அம்னோன், இவள்மீது மோகம் கொண்டு, தாமாருக்காக மிகவும் ஏங்கி நோயுற்றான். தாமார் கன்னியாக இருந்ததால் அவனால் ஒன்றும் செய்ய இயலாமல் போனது. அம்னோனுக்கு யோனதாபு என்ற நண்பன் இருந்தான். அவன் சூழ்ச்சிமிக்கவன். அவன் அம்னோனை நோயுற்றவன் போல் நடிக்கக் கூறினான். அம்னோனும் அவ்வாறே நடித்தான். அப்போது அம்னோன் தாமாரை வஞ்சகமாக தன்னிடம் வரவழைத்தான். அவன் அவளிடம் உறவுகொள்ள விரும்பினான். ஆனால் தாமார் அதை அனுமதிக்கவில்லை. இருப்பினும் அம்னோன், தாமாரைவிட வலிமைமிக்கவனாய் இருந்ததால் அவளைக் கற்பழித்தான். அதன்பிறகு அம்னோன், எந்த அளவிற்கு அவள் மீது மோகம் கொண்டிருந்தானோ அந்தளவிற்கு மிகுதியாக அவளை வெறுத்து ஒதுக்கினான். அம்னோனால், தாமார் ஏமாற்றப்பட்டாள். தாமார் அம்னோனின் பணியாளன் ஒருவனால் வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டாள். அதன்பின் தாமார் தான் அணிந்திருந்த பல்வண்ண நீண்ட ஆடையைக் கிழித்துகொண்டு, தன் தலைமீது சாம்பல் பூசி, தலையில் கைவைத்து அழுதாள். இதைக்கண்ட அவளின் சகோதரன் அப்சலோமால் அமைதிப்படுத்தப்பட்டாள். அப்போதிலிருந்து தாமார் தன் சகோதரன் அப்சலோமின் வீட்டிலேயே ஆறுதலின்றி வாழ்ந்து வந்தார். ( 2 சாமு 13: 1-20). பிறகு அப்சலோம் தன் சகோதரி தாமாருக்காக அம்னோனை கொன்று பழிதீர்த்தான் ( 2 சாமு 13: 23-29)

ஏலா, நாரா

இவர்கள் யூதாவின் வழிமரபினர். தெக்கோவாவின் மூதாதையான அஸ்கூரின் மனைவியர். நாராவிற்கு, அகுசாம், ஏப்போர், தேமனி, அகஸ்தாரி என்ற பிள்ளைகள் பிறந்தனர். ஏலாவின் பிள்ளைகள் செரேத்து, இட்சகார், எத்னான் என்பவர்கள் ( 1 குறிப்பேடு 4: 5-7)

எப்சிபா

யூதா நாட்டு அரசன் மனாசே என்பவனின் தாய் ( 2 அரசர் 21:1)

எக்லா

இவள் யூதா குலத்தைச் சேர்ந்தவள். தாவீது ஏழரை ஆண்டுகள் எபிரோனில் ஆட்சி செய்தார் ( 2 சாமு 2: 11). அப்போது எக்லா தாவீதின் மனைவியானாள். எபிரோனி ஊரைச் சார்ந்த இவள் தாவீதிற்கு இத்ரயாம் என்ற மகனை பெற்றெடுத்தாள் ( 2 சாமு 3:5)

அட்சலெல்போனி

இவள் யூதாவின் வழிமரபைச் சார்ந்தவள். இஸ்ரியேல், இஸ்மா, இத்பாசு ஆகியோரின் சகோதரி ( 1 குறிப்பேடு 4: 3)

அமூற்றால்

இவள் யூதா அரசன் யோவகாசின் தாய். லிப்னாவைச் சார்ந்த எரேமியாவின் மகள் (2 அரசர் 23: 31)

சிப்ரா, பூவா

இவர்கள் எபிரேயரின் மருத்துவப் பெண்கள். யாக்கோபின் மகன் யோசேப்பு எகிப்தில் ஆளுநராக ஆட்சி செய்தார் ( தொநூ 45:26). அப்போது யாக்கோபின் குடும்பம் முழுவதும் எகிப்திற்குச் சென்று பலுகிப் பெருகினர். அச்சமயத்தில் எகிப்தில் யோசேப்பை முன்பின் அறியாத புதிய மன்னன் தோன்றினான். அவன் இஸ்ராயேல் மக்கள் பெருகுவதைக் கண்டு அவர்களை அழிக்க எண்ணி, இஸ்ராயேலரைக் கொடுமைப்படுத்தி வேலை வாங்கினான். அப்போது அம்மன்னன் சிப்ரா, பூவாவிடம் எபிரேயப் பெண்களின் பிள்ளைப்பேற்றின் போது ஆண் பிள்ளைகளை கொன்றுவிட்டு, பெண் பிள்ளைகளை மட்டும் வாழவிடுங்கள் என்று கூறியிருந்தான். ஆனால் சிப்ராவும், பூவாவும் கடவுளுக்கு அஞ்சியிருந்ததால், எகிப்திய மன்னன் கூறியபடி செய்யாமல் ஆண் குழந்தைகளையும் வாழவிட்டனர். அப்போது மன்னன் அவ்விருவரையும் அழைத்து, ஏன் அவ்வாறு செய்தீர்கள்? என்று கேட்டான். அதற்கு அவ்விருவரும் "எகிப்தியப் பெண்களைப் போன்றவரல்லர் எபிரேயப் பெண்கள். அவர்கள் வலிமை கொண்டவர்கள் மருத்துவப் பெண் வருமுன்னரே அவர்களுக்குப் பிள்ளைப்பேறு ஆகிவிடுகிறது என்று காரணம் கூறினர். இதன் பொருட்டு கடவுள், அம்மருத்துவப் பெண்களான சிப்ராவிற்கும், பூவாவிற்கும் நன்மை செய்தார். இஸ்ரயேல் மக்களும் எண்ணிக்கையில் பெருகினர். தாங்கள் செய்த நற்செயல்களின் மூலம் இவ்விரு பெண்களின் குடும்பங்களையும் கடவுள் தழைக்கச் செய்தார் (விடுதலைப்பயணம் 1 : 8-22)

ஆசினத்

யாக்கோபின் புதல்வரான யோசேப்பின் மனைவியாவார். ஒன் நகர் அர்ச்சகர் போற்றி விளக்கி கூறியதால், அவரின் மதி நுட்பத்தைப் பாராட்டி யோசேப்பை எகிப்து நாட்டிற்கு ஆளுநராக்கினார். பின்பு ஆசினத்தையும் அவருக்கு மணமுடிந்து வைத்தான் ( தொநூ 41: 44-45)

பார்வோனின் மகள் (மோசேயை வளர்த்தவள்)

பார்வோனின் மகள் நைல் நைதியில் நீராட இறங்கிச் சென்றாள். இவளின் தோழியர் நைல்நதிக்கரையில் உலாவிக் கொண்டிருந்ததனர். பார்வோனின் மகள் நாணலிடையே பேழை ஒன்றைக் கண்டார். தன் தோழி ஒருத்தியை அனுப்பி அதை எடுத்தாள். அதை திறந்து பார்த்தபோது, ஓர் ஆண் குழந்தையைக் கண்டாள். அது அழுதுகொண்டிருந்தது. அவள் அக்குழந்தையின் மேல் இரக்கம் கொண்டாள். இது எபிரேயக் குழந்தைகளுள் ஒன்று என்றாள். உடனே குழந்தையின் சகோதரி பார்வோனின் மகளை நோக்கி, உமக்கு பதிலாக இக்குழந்தையை பாலூட்டி வளர்க்க எபிரேயச் செவிலி ஒருத்தியை நான் சென்று அழைத்து வரட்டுமா என்று கேட்டாள். பார்வோனின் மகள் சரி என்றதும், அந்தப் பெண், குழந்தையின் உண்மையான தாயையே அழைத்து வந்தாள். பார்வோனின் மகள் அக்குழந்தையை அத்தாயிடம் கொடுத்தாள். அவளும் அதனைப் பாலூட்டி வளர்த்தாள். குழந்தை வளர்ந்தபின் அவள், அவனை பார்வோனின் மகளிடம் கொண்டுபோய் விட்டாள். அவள் அவனைத் தன் மகன் எனக் கொண்டாள். நீரிலிருந்து நான் இவனை எடுத்தேன் என்று கூறி அவள் அவனுக்கு "மோசே" என்று பெயரிட்டாள் (விடுதலைபயணம் 2:5-10)

யோக்கபேது

இவள் அம்ராம் என்பவனின் மனைவி. ஆரோன், மோசே என்பவர்களின் தாய் ( விப 6:20)

மிரியாம்

இவள் ஓர் இறைவாக்கினர். இவள் ஆரோனின் தங்கை. ஆண்டவர் இஸ்ரயேல் மக்களை பார்வோனிடமிருந்து செங்கடலைக் கடக்கச் செய்து காப்பாற்றினார். இதனால் மிரியாம் கஞ்சிரா ஒன்றைக் கையில் எடுத்துகொண்டாள். பெண்கள் அனைவரும் கஞ்சிரா கொட்டி கொண்டும் நடனமாடிக்கொண்டும் அவள்பின் சென்றனர். அப்போது மிரியாம் ஆண்டவர்க்கு புகழ்பாடல் ஒன்றை பாடினாள் ( விடுதலைப்பயணம் 15:20-21). மோசே எத்தியோப்பியப் பெண்ணை மணந்திருந்தார். அவர் மணந்திருந்த எத்தியோப்பியப் பெண்ணை முன்னிட்டு மிரியாமும், ஆரோனும் மோசேக்கு எதிராகப் பேசினர். ஆண்டவர் உண்மையில் மோசே வழியாக மட்டுமா பேசியுள்ளார்? எங்கள் வழியாகவும் பேசவில்லையா? என்றனர். பின்னர் ஆண்டவர் மோசே, ஆரோன், மிரியாம் மூவரையும் சந்திப்புக் கூடாரத்தருகே வரவழைத்தார். மேகத்தூண் ஒன்றில் ஆண்டவர் இறங்கி வந்து, கூடார வாயிலருகே நின்று ஆரோனையும் மிரியாமையும் அழைத்தார். பின்னர் ஆண்டவர் அவர்களிடம் ஏன் என் அடியான் மோசேக்கு எதிராக பேச நீங்கள் அஞ்சவில்லை? என்றார். மேலும் ஆண்டவரின் சினம் அவர்கள்மேல் மூண்டது, அப்போது ஆண்டவர் அகன்று சென்றார். கூடாரத்தின் மேலிருந்து மேகம் அகன்றதும் மிரியாமை பனிபோன்ற வெண்மையான தொழுநோய் பீடித்தது. ஆரோன் மிரியாம் பக்கம் திரும்பவே அவள் தொழுநோயாளியாயிருக்கக் கண்டார். பின்னர் ஆரோன் மோசேயிடம் மன்றாட மோசே மிரியாமிற்காக ஆண்டவரிடம் மன்றாடினார். பின்பு மிரியாம் 7 நாள்கள் பாளையத்துக்குப் புறம்பே விலக்கப்பட்டாள் ( எண்ணிக்கை 12: 1-15). பின்பு இஸ்ராயேல் மக்கள் கூட்டமைப்பு முழுவதும் சீன் பாலைநிலத்துக்கு வந்தது. மக்கள் அங்கே தங்கினர். அப்போது மிரியாம் அங்கே இறந்து அங்கேயே அடக்கம் செய்யப்பட்டாள் (எண்ணிக்கை 20: 1-2)

மக்லா, நோகா, ஒக்லா, மில்கா, திர்சா

இவர்கள் யோசேப்புப் புதல்வரான மனாசே குடும்பங்களைச் சார்ந்தவர்கள். இவர்கள் ஏபேரின் மகன் செலொபுகாதிற்குப் பிறந்தவர்கள். மோசே, குரு எலயாசர், தலைவர்கள், மக்கள் கூட்டத்தினர் அனைவரின் முன்னிலையிலும் இப்பெண்கள் தங்களின் உரிமைகளைக் கேட்டார்கள். தங்களின் தந்தை பாலைநிலத்தில் இறந்துபோனார் என்பதை அறிவித்தார்கள். கோராகைச் சேர்ந்தவர்கள் ஆண்டவருக்கு எதிராக கூடிய கூட்டத்தினுள் தங்களின் தந்தை இல்லை என்பதை எடுத்துரைத்தவர்கள். அவர் தான் செய்த பாவத்தினால் தான் இறந்தார் என்றும், அவருக்கு மகன்கள் இல்லை என்பதையும் தெரிவித்தார்கள். புதல்வர்கள் இல்லையென்பதால் ஏன், தங்களின் தந்தை பெயர் குடும்பத்திலிருந்து நீக்கப்பட வேண்டுமென்ற கேள்வியையும் எழுப்பினார்கள், தங்களின் தந்தையின் சகோதரர்களிடையே, தங்களுக்கும் பங்கு தர வேண்டுமென்று கேட்டார்கள். மோசே இவர்களின் வழக்கை விசாரித்து, ஆண்டவரிடம் கொண்டு சென்று, உரிமைச் சொத்தில் பங்கு கொடுக்கும்படி செய்தார். இவர்களின் வழியாகத்தான் பெண்களுக்கும், சொத்தில் முழு உரிமை உண்டு என்ற சட்டம் நிறைவேற்றப்பட்டது. இத்துடன் ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டபடி இது இஸ்ரயேல் மக்களுக்கு நியமமாகவும், விதிமுறையாகவும் விளங்கியது (எண்ணிக்கை 27: 1-11)

கோசுபி

இவள் மிதியான் நாட்டைச் சேர்ந்தவள். இஸ்ரயேல் மக்கள் சித்திமில் தங்கியிருந்தபோது மோவாபு நாட்டு பெண்களோடு முறைகேடாக நடந்தனர். வேறு தெய்வங்களை வணங்கினர். இதனால் அம்மக்களை தண்டிக்க ஆண்டவர் கொள்ளை நோயை வரவழைத்தார். அப்பொழுது இஸ்ராயேல் மக்கள் சந்திப்பு கூடார வாயிலில் நின்று அழுது கொண்டிருக்கும்பொழுது, மிதியான் நாட்டுப் பெண்ணொருத்தியை பிடித்து கொண்டுவந்து பினகாசு என்பவன் ஈட்டியால் குத்தி கொன்றான். அப்பெண்ணே இந்தக் கோசுபி என்பவள். இவள் மிதியானில் மூதாதையர் வீட்டொன்றுக்குத் தலைவரான சூரின் என்பவனின் மகள். மிதியான் நாட்டினரும் தங்களின் சூழ்ச்சியினால் இஸ்ரயேல் மக்களை ஏமாற்றினார்கள் என்பதினால் கோசுபி கொல்லப்பட்டாள். இவள் கொள்ளை நோய் ஏற்பட்ட காலத்தில் கொல்லப்பட்டாள் (எண்ணிக்கை 25: 1-18)

எலிசபா

மோசேயின் சகோதரன் ஆரோனின் மனைவி. இவள் மோசே, ஆரோனின் மூதாதையர் பட்டியலில் இடம் பெற்றவள். இவள் அம்மினதாபு என்பவரின் மகள். நகசோனின் சகோதரி. நாதாபு, அபிகூ, எலயாசர், இத்தாமர் என்பவர்களின் தாய் (விப 6: 14-23)

சிப்போரா

இவள் மிதியான் நாட்டைச் சார்ந்தவள். இரகுவேலின் மகள். மோசேயின் மனைவி. கேர்சோம் என்பவனின் தாய் (விப 2: 16-22)

அன்னா

இவள் எல்கானாவின் மனைவி. குழந்தைப்பேறு இல்லாதவள். இவளின் கணவருக்கு பெனின்னா என்ற மற்றொரு மனைவியும் இருந்தாள். அன்னா குழந்தைப்பேறு இல்லாமல் இருந்ததால் பெனின்னாவால் துன்புறுத்தப்பட்டாள். ( 1 சாமு 1: 1-6). இதனால் அன்னா உண்ணாமல் அழுது, மனம் கசந்து புலம்பி ஆண்டவரிடம் மன்றாடினாள். கோவிலுக்குச் சென்று ஆண்டவரிடம் செபித்தாள். இவள் செபிக்கும்போது உதடுகள் மட்டுமே அசைந்தது. வார்த்தைகள் வெளிவரவில்லை. இதைக்கண்ட குரு ஏலி, அன்னாவை குடிகாரி என்று கருதினார். பிறகு அன்னா, குரு ஏலியிடம் தன் துன்பத்தை பகிர்ந்து கொண்டாள். அதற்கு கடவுள் உனக்கு குழந்தை வரம் அளிப்பார் என்று உறுதி கூறினார். அவர் கூறியபடியே அன்னா கருவுற்று சாமுவேல் என்ற மகனைப் பெற்றெடுத்தாள். ( 1 சாமு 1: 19-20). அன்னா தன் ஒரே மகன் சாமுவேலை ஆண்டவருக்காக அர்ப்பணித்தாள். ( 1 சாமு 1:20). பின்பு அன்னா ஆண்டவரைப்போற்றி புகழ்ந்து தொடர்ந்து வேண்டுதல் செய்தாள்.( 1 சாமு 2:1-10). அன்னாவின் தொடர் வேண்டலில், மீண்டும் ஆண்டவர் 3 ஆண் குழந்தைகளையும் 2 பெண் குழந்தைகளையும் கொடுத்தார். இவள் தன் பிள்ளைகளை ஆண்டவரின் பார்வையில் வளர்த்தாள். தன் மூத்த மகன் சாமுவேல் ஓர் இறைவாக்கினர் என்பதை உணர்ந்தாள். இதனால் முழுமையாக அவரை ஆண்டவரிடம் அர்ப்பணித்தாள். அதன்பின் தன்னையும் முழுமையாக ஆண்டவரிடம் அர்ப்பணித்து, ஆண்டவருக்காகவே வாழ்ந்து இறந்தாள் ( 1சாமு1:19 – 2:10 )

அகினோவாம்

இஸ்ராயேல் மக்களின் முதல் அரசர் சவுலின் மனைவி, இவர் அகிமாசின் மகள். இவருக்கு யோனத்தான், இஸ்வி, மல்கிசுவா என்ற 3 மகன்களும் மேராபு, மீக்கால் என்ற இரு மகள்களும் இருந்தனர் (1 சாமு 14: 49-50)

மீக்கால்

சவுலின் 2 வது மகள். இவள் தாவீதின் மேல் காதல் கொண்டவள். தாவீதின் மனைவியருள் இவளும் ஒருத்தி (1சாமு 18: 20-28). சவுல் தாவீதை கொன்றுவிடும்படி தன் காவலர்களை அனுப்பியபோது, தாவீதை தப்பிக்க வைத்து, அவரின் உயிரைக் காத்தவள். மீண்டும் தாவீதை கொல்ல சவுல் வழிதேடி அவரின் வீட்டிற்கு போன போது, "என்னைப் போகவிடு, இல்லையெனில் உன்னைக் கொன்றுவிடுவேன்" என்று அவர் என்னை மிரட்டினார் என்று தன் தந்தை சவுலிடம் பொய் கூறியவள் (1சாமு 19:11-18). தாவீது தப்பியோடிய பின் வேறு பெண்களை மணந்துகொண்டதால் சவுல் மீக்காலை கல்லீம் ஊரானாகிய இலாயிசின் மகன் பல்திக்கு மணமுடித்துக் கொடுத்தார். ( 1 சாமு 25: 44). இதைக்கேள்விப்பட்ட தாவீது மீண்டும் பல்தியிடமிருந்து மீக்காலை அழைத்து வந்து, தன் மனைவியாக்கிக்கொண்டார். ( 2 சாமு 3: 7-16). அதன்பிறகு அரசர் தாவீது ஆண்டவரின் பேழைமுன் குதித்து ஆடிக்கொண்டிருப்பதை பலகணி வழியாகப் பார்த்த மீக்கால் அவரை தன் உள்ளத்தில் வெறுத்தாள் ( 2 சாமு 6:16)

அபிகாயில்

இவர் தாவீது அரசனின் சகோதரி (1 குறிப்பேடு 2:16). இஸ்மயேலராகிய எத்தேருக்கு பிறந்த அமாசா மற்றும் தானியேலின் தாய். (1 குறிப்பேடு 3:1) மற்றும் கார்மேலைச் சார்ந்த கிலயாபிற்கும் தாய் ( 2 சாமு 3:3). இவள் மிகுந்த அறிவும், அழகும் கொண்டவள் (1 சாமு 25:3). ஆனால் இவரின் கணவர் நாபால் ஓர் முரடன், இழிந்தவன். நாபால் தாவீதை மரியாதையின்றி அவமதித்தான். இதனால் தாவீதால் தண்டிக்கபட்டான். அபிகாயில் தன் கணவருக்கும், பிள்ளைகளுக்கும், பணியாளர்களுக்கும் மன்னிப்பு வழங்கும்படி தன் சகோதரன் தாவீதிடம் பரிந்து பேசினாள். அபிகாயிலின் மன்றாட்டை ஏற்ற தாவீது அவளின் குடும்பத்தை மன்னித்தார். ( 1 சாமு 1:4-35) அபிகாயில் ஆண்டவரின் ஆசீரை தாவீதிடம் பெற்றுக் கொண்டு தன் இல்லத்திற்கு வந்தாள். அப்போது நாபால் ஆடம்பர விருந்தை அனுபவித்துக் கொண்டிருந்தான். அவன் உள்ளம் களிப்புற்றிருந்தது. அவன் மிகுந்த குடிபோதையில் இருந்ததால் அபிகாயில் விடியும்வரை நாபாலிடம் பேசாமல் இருந்தாள். காலை விடிந்தவுடன் நாபால் மது போதையிலிருந்து தெளிந்தபின் நடந்தவை அனைத்தையும் எடுத்துக்கூறினாள். அப்பொழுது நாபால் அதிர்ச்சிக்குள்ளாகி கல்லைப்போல் செயலற்றவனானான். ஆண்டவர் நாபாலை வதைத்ததால் சுமார் 10 நாள்களுக்குப்பின் இறந்தான். நாபால் இறந்ததைக் கேள்வியுற்ற தாவீது அபிகாயிலை மணந்துக்கொள்ள தன் தூதர்களை அனுப்பி விருப்பத்தை அறிந்து வர கூறினார்.

அபிகாயில் தாவீதின் விருப்பத்திற்கு சம்மதம் தெரிவித்து, அவரின் மனைவியானாள். (1 சாமு 25: 35-42). பின்பு தாவீதிற்கும், அமலேக்கியருக்கும் நடந்த சண்டையில் அபிகாயில் அமலேக்கியர்களால் சிறைப்பிடிக்கப்பட்டார். ( 1 சாமு 30: 1-5). பின்பு ஆண்டவரின் வலிமையால் அபிகாயில் மீட்கப்பட்டார் ( 1 சாமு 30:18)

அகீத்து

இவள் தாவீதின் மனைவியருள் ஒருவர். இவர்களுக்கு பிறந்த குழந்தை அதோனி (2 சாமு 3:4)

அபித்தால்

இவள் தாவீதின் மனைவியருள் ஒருவர். செபத்தியாவின் தாய் ( 1 குறிப்பேடு 3:3)

பத்சேபா

இவள் இத்திரியர் உரியாவின் மனைவி. எலியாவின் மகள். தாவீது ஒருநாள் மாலை வேளையில், படுக்கையிலிருந்து எழுந்து வீட்டு மாடியில் உலாவிக் கொண்டிருந்தார். அப்போது அழகிய பெண்ணொருத்தி குளித்துக் கொண்டிருப்பதைக் கண்டார். அவள் யார் என்பதை தனது தூதர்களின் வழியாக அறிந்து கொண்டு, தன் தூதர்களை அனுப்பி பத்சேபாவை தன் இல்லத்திற்கு வரவழைத்தார். அப்பொழுதுதான் பத்சேபா மாதவிலக்கு முடிந்து தன்னை தூய்மைபடுத்தியிருந்தாள். தாவீது அவளுடன் உறவுகொண்டார். பின்னர் பத்சேபா தன் இல்லத்திற்கு திரும்பி, சில நாட்கள் கழித்து தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை தாவீதிற்கு தெரிவித்தார். தாவீது பத்சேபாவை முழுமையாக தன் மனைவியாக்கிக் கொள்ள எண்ணி, பத்சேபாவின் கணவன் போர் படைவீரராகிய உரியாவை போர்புரியும் நேரத்தில் கொன்றுவிடும்படி யோவாபிடம் கூறினார். யோவாபு தாவீது கூறியபடியே உரியாவை போர்புரியும்போது கொன்றான். உரியாவின் இறப்பை அறிந்த பத்சேபா, உள்ளங்கலங்கி அழுது, வேதனை அடைந்தார். துக்க காலம் முடிந்ததும் தாவீது தன் ஆட்களை அனுப்பி பத்சேபாவை தன் வீட்டிற்கு கொண்டு வந்து தன் மனைவியாக்கிக் கொண்டார். பத்சேபா, தாவீதிற்கு ஆண் குழத்தை ஒன்றை பெற்றெடுத்தாள். ஆனால் தாவீது உரியாவிற்குச் செய்த தீச்செயலை ஆண்டவர் விரும்பவில்லை. எனவே ஆண்டவர், இறைவாக்கினர் நாத்தான் வழியாக தாவீதிற்கு இறைவாக்குரைத்து, அக்குழத்தை பிறந்த உடனே, சாகும் என்பதை எடுத்துரைத்தார். அப்போது, தாவீது தான் செய்த மிகப்பெரிய தவற்றை உணர்ந்து கண்ணீர் விட்டழுது, உண்ணா நோன்பு இருந்து, குழத்தையை உயிருடன் தருமாறு மன்றாடினார். ஆனால் அம்மன்றாட்டு நிறைவேறவில்லை. பின்னர் தாவீது தன் மனைவி பத்சேபாவுக்கு ஆறுதல் கூறினார். பிறகு மீண்டும் அவளுடன் உறவுகொண்டு சாலமோன் என்றழைக்கப்பட்ட ஆண் குழத்தை ஒன்றைப் பெற்றெடுத்தார். ஆண்டவர் அக்குழந்தையின் மேல் அன்பு கொண்டார். அதனால் நாத்தான் வழியாக, ஆண்டவர் அக்குழந்தையை எதிதியா ( எபிரேயத்தில் ஆண்டவரின் அன்பன் என்பது பொருள் ) என்றழைத்தார் (2 சாமு 11: 1-12:25)

எதிதா

தாவீதின் வழிமரபினர். எருசலேமில் 31 ஆண்டுகள் ஆட்சி செய்த யூதா அரசர் யோசியாவின் தாய். இவள் பொட்சத்தைச் சார்ந்த அதாயாவின் மகள் ( 2 அரச 22: 1-2)

நகோமி

நகோமி என்பதற்கு இன்பம் என்பது பொருள். இவர் யூதா நாட்டிலுள்ள பெத்லகேம் ஊரைச் சார்ந்தவர். இவரின் கணவர் எலிமலெக்கு என்பவர். இவருக்கு மக்லோன், கிலியோன் என்ற இரு மகன்கள் இருந்தனர். இவர்களின் ஊரில் கொடிய பஞ்சம் உண்டானதால் இவர்கள் பிழைப்பதற்காக மோவாபு நாட்டிற்குச் சென்றார்கள். அங்கு நகோமியின் கணவர் இறந்ததால், நகோமி தன் இரு பிள்ளைகளை தவிர வேறு யாருமின்றி வாழ்ந்தார். பின்பு தன் மகன்கள் மோவாபு நாட்டு பெண்களை மணந்தனர். பின்னர் அவர்களும் இறந்து போகவே, நகோமி தனிமையானார். அப்போது நகோமி தன் சொந்த நாட்டில் பஞ்சம் நீங்கியதை கேள்விப்பட்டு, தன் மருமகள்களுடன் தன் நாடான யூதாவிற்கு சென்றார். அப்போது நகோமி தன் மருமகள்களான ஓர்பா மற்றும் ரூத்தை தங்களின் சொந்த நாட்டிற்குத் திரும்பிச் செல்லும்படி, கெஞ்சிக் கேட்டார். தன் மன்றாட்டின் பேரில் மருமகள் ஓர்பா மட்டுமே நகோமியை விட்டு பிரிந்து சென்றார். பிறகு நகோமி தன்னைவிட்டு பிரியாமல் இருந்த ரூத்துடன் தன் ஊரை அடைந்தார். அங்கு அவ்வூர் பெண்களால் பரபரப்புடன் பேசப்பட்டாள். அவர்கள் நீர் நகோமிதானே என்று வினவியதற்கு தன்னை "மாரா" என்று அழையுங்கள் என்று கூறியவர். "மாரா என்பதற்கு கசப்பு என்பது பொருள்". தன் மருமகள் ரூத்து வயல்வெளிக்கு சென்று வேலை செய்ய அனுமதி வழங்கியவள். ரூத்து போவாசு நிலத்திலேயே தொடர்ந்து வேலை செய்ய அனுமதி அளித்து, கடவுளின் ஆசீரைத் தந்தவள். போவாசை மணந்து கொள்ள ரூத்துக்கு அறிவுறுத்தியவள். ரூத்திற்கும், போவாசிற்கும் பிறந்த ஆண் குழந்தைக்கு ஓபேது என்று பெயரிட்டு, அக்குழந்தையை பேணி வளர்க்கும் தாய் பொறுப்பை ஏற்றவள். நகோமி மருமகளுக்கு தாயைப்போல இருந்ததால் பெத்லகேம் ஊரைச் சார்ந்தப் பெண்களால் போற்றப்பட்டவள்.

ரூத்து

இவள் மோவாபு நாட்டைச் சார்ந்தவள். நகோமியின் மருமகள். இவள் தன் கணவர் மக்லோனின் (ரூத்து 4:10). இறப்பிற்குபின், தன் மாமியார் நகோமியுடன் யூதா நாட்டிற்குச் சென்றவள். மாமியாரால் தன் சொந்த நாட்டிற்குத் திரும்பிச் செல்லும்படி வற்புறுத்தப்பட்டவள். நகோமி எவ்வளவு வற்புறுத்தியும் அவரை விட்டு போகாமல், அவருடனேயே வாழ்ந்தாள். "நீ செல்லும் இடத்திற்கே நானும் வருவேன், உமது இல்லமே எனது இல்லம், உம்முடைய தெய்வமே எனக்கும் தெய்வம், நீர் இறக்கும் இடத்திலேயே நானும் இறப்பேன். அங்கே தான் என் கல்லறையும் இருக்கும் சாவிலும் உம்மைவிட்டு பிரியமாட்டேன்" என்று நகோமியிடம் கூறியவள். இவள் தன் மாமியாருடன் பெத்லகேம் சென்றடைந்ததும், தன் மாமியாரின் அனுமதிப் பெற்று யோவாசின் நிலத்திற்குச் சென்று அறுவடையாட்கள் பின்னால் சென்று, சிந்திய கதிர்களை பொறுக்கியவள். பின்பு போவாசின் தயையைப் பெற்று தொடர்ந்து அவனுடைய வயலிலேயே கதிர்களைப் பொறுக்கிக் கொண்டும், தேவையான உணவை உட்கொண்டும் பாதுகாப்புடனும் வாழ்ந்து வந்தாள். பின்னர் நகோமி அளித்த அறிவுரையின்படி போவாசிடம் சென்று தனக்கு வாழ்வை வழங்குமாறு கேட்டு, போவாசின் மனைவியானாள். போவாசிற்கு ஓர் ஆண்மகனை பெற்றெடுத்தாள். ஓபேது என்பவனே அவன் ( ரூத்து 1-4)

ஓர்பா

இவள் மோவாபு நாட்டைச் சார்ந்தவள். இவள் நகோமியின் மருமகள். நகோமியின் மகன் கிலியோன் என்பவனை திருமணம் செய்து கொண்டவள். தன் கணவர் இறந்தபின் தன் மாமியார் மற்றும் ஓரகத்தி ரூத்துடன் சேர்ந்து வாழ்ந்தவள். தன் கணவன் இறந்தபிறகு தன் மாமியார் நகோமியின் அறிவுரைப்படி, தன் சொந்த நாடான மோவாபிற்கு திரும்பினாள் ( ரூத்து 1: 4-14)

எஸ்தர்

இவள் ஓர் யூதப் பெண். எழில்மிகு தோற்றமும் வடிவழகும் கொண்டவள். "அதசா" என்பது இவரின் மற்றொருப் பெயர். இவள் தாய் தந்தையை இழந்தவள். இவள் மொர்தக்காய் என்பவரால் வளர்க்கப்பட்டவள் ( எஸ்தர் 2 : 7). இவர் அபிகாயிலின் புதல்வி ( எஸ்தர் 2:15). எஸ்தர், சூசான் அரண்மனைக்குள் சேர்க்கப்பட்ட பெண்களுள் ஒருவர். மன்னர் ஏகாயின் உதவியைப் பெற்றவள் ( எஸ்தர் 2 : 8-9). மன்னர் அகஸ்வேரின் ஆட்சியில் 7 ஆம் ஆண்டில், 10 ஆம் மாதமாகிய தேபேத்து மாதத்தில், "வஸ்தி" என்ற அரசிக்குப் பதிலாக, அரசியாக தேர்ந்தெடுக்கப்பட்டவள் ( எஸ்தர் 2: 16-17). பிகதான், தெரேசு என்ற இருவர் சினமுற்று மன்னர் அகஸ்வேரைத் தாக்க வகை தேடியபோது, தன் வளர்ப்புத் தந்தை மொர்த்தக்காய் வழங்கிய செய்தியின்படி, மன்னர் அகஸ்வேரின் உயிரை காப்பாற்றினாள். இவள் அகஸ்வேர் மன்னருக்கும் யூதர்களுக்கு எதிராக செயல்பட்ட ஆமான் என்பவருக்கும், விருந்து அளித்து, தன் யூத மதம் ஆமானின் அழிவிலிருந்து காப்பாற்றப்பட வேண்டுமென்று பரிந்துரைத்தவள் ( எஸ்தர் 7:1-4). அரசரின் உதவியுடன் ஆமானைக்கொன்றவள். பின்னர் யூதரின் பகைவனான ஆமானின் இல்லத்தை மன்னர் அகஸ்வேரிடமிருந்து பரிசாக பெற்றவள். (எஸ்தர் 8:1) எஸ்தர் யூத மக்களின் விடுதலைக்காக போராடியவள்.

வஸ்தி

அர்த்தக்சஸ்தா மன்னரின் அரண்மனையில் அரசியாக இருந்தவள். இவர் பேரழகி. மன்னர் அகஸ்வேர் வஸ்தியை அரசியாக்க முடிவு செய்து தன் காவலர்களை அனுப்பி தன்னிடம் வரவழைத்தார். ஆனால் அரசி வஸ்தி அண்ணகரின் வழியாக வந்த மன்னரின் சொல்லுக்கு இணங்க மறுத்துவிட்டாள். இதனால் மன்னர் கடும் சினமுற்றார். உடனே இச்செய்தியை பற்றி நுண்ணறிவுடைய ஞானிகளிடம் கலந்துரையாடினார். அதன்பிறகு அரசி வஸ்திக்கு செய்யவேண்டியவற்றை செய்யாமல் அவளிடமிருந்து அரசுரிமையை பறித்தாள். (எஸ்தர் 1:9-19)

செரேஸ்

இவள் மன்னர் அகஸ்வேரின் காலத்தில் வாழ்ந்தவள். மன்னன் அகஸ்வேரின் அரண்மனையில் பணியாற்றிய யூத இனத்தைச் சார்ந்த மொர்தக்காய் என்பவனை கொல்ல திட்டமிட்ட ஆமான் என்பவனின் மனைவி. மொர்தக்காயை கொல்ல தன் கணவன் ஆமானுக்கும் ஆலோசனை கூறியவள் (எஸ்தர் 5:10-14)

யாவேல்

இவள் கேனியரான எபேரின் மனைவி (நீதித்தலைவர்கள் 4:17). சீசரா இஸ்ரயேலரை 20 ஆண்டுகள் கடுமையாக ஒடுக்கினான். ( நீதித்தலைவர்கள் 4:3). ஆண்டவர் சீசராவையும் அவனுடைய தேர்கள் அனைத்தையும் படை முழுவதையும் வாள் முனையில் பாராக்கின் முன்னால் சிதறடித்தார். சீசரா தப்பி ஓடி யாவேலின் வீட்டிற்குள் நுழைந்தான். அப்போது யாவேல் அவனுக்கு புகலிடம் கொடுத்தாள். அவன் களைப்பால் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தபோது, கூடார முளையை அவன் நெற்றிப்பொட்டில் வைத்து சுத்தியால் அடித்து, அவனைக் கொன்றாள் ( நீதித்தலைவர்கள் 4 : 3-21). இதனால் தெபோராவும் பாராக்கும் அவளுக்கு வெற்றிப்பாடல் பாடினர்.

கோமேர்

இவள் திப்லயிமின் மகள். இறைவாக்கினர் ஓசேயாவின் மனைவி. இவர்களுடைய குழந்தைகள் இஸ்ரயேல் லோ ருகாமா, லோ அம்மீ ஆவர். கோமேர் ஓர் விலைமகள். வேசியாக இருந்தவள். இவள் தன் கணவர் ஓசேயாவிற்கு நம்பிக்கை துரோகம் செய்து, அவரைவிட்டு விலகிச் சென்றாள் ( ஓசேயா 1: 2-9). அத்தகையவளோடு அவர் கொண்டிருந்த மண உறவைப் பின்னணியாகக் கொண்டு ஓசேயா இறைமக்களின் உண்மையற்ற தன்மையை கீழ்ப்படியாமையை நம்பிக்கைத் துரோகத்தை எடுத்தியம்பினார்.

குல்தா

இவள் ஓர் பெண் இறைவாக்கினர், ஆடையக மேற்பார்வையாளனுமான சல்லும் என்பவனின் மனைவி. இவள் எருசலேமில் இரண்டாம் தொகுதியைச் சார்ந்தவள். யூதா நாட்டு அரசர் யோசியாவிற்கு கடவுளின் வார்த்தைகளை அறிவித்தவள். ( 2 அரசர்கள் 22 :1-20). குரு இல்கியா, அகிக்கா, அக்போரும், சாப்பான், அசாயா, ஆகியோர் கொடுத்த நூலை படித்துப்பார்த்து ஆண்டவரின் செய்தியை விளக்கி கூறியவள் ( 2 குறிப்பேடு 34: 22-33)

தெலீலா

இவள் சோரேக்குப் பள்ளத்தாக்கில் உள்ள ஒரு பெண் ( நீதித்தலைவர்கள் 16:4) சிம்சோனைக் காதலித்தவள் ( நீதி 13:1). பெலிஸ்தியச் சிற்றரசர், தெலீலாவிடம் சிம்சோனை மயக்கி எதில் அவனுடைய பெரும் வலிமை உள்ளது, எப்படி அவனை வென்று கட்டி வதைத்து அடக்கமுடியும் என்று கண்டுபிடித்து கொடுத்தால், நாங்கள் ஒவ்வொருவரும் ஆயிரத்து நூறு வெள்ளிக்காசு தருவோம் என்று கூறினர். ஏனெனில் சிம்சோன் எவராலும் வெல்ல முடியாத அளவிற்கு வலிமை கொண்டவனாய் இருந்தான். தெலீலா சிம்சோனை மயக்கி, "சவரக் கத்தி என் தலைமீது பட்டு, என் தலை மழிக்கப்பட்டால், ஆற்றலை இழந்து வலிமையிழந்து மற்ற மனிதரைப்போல் ஆகிவிடுவேன்" என்ற உண்மையை அவன் வாயிலிருந்து வரவழைத்தாள். பின்னர் அவன் தன்னிடம் எல்லா உண்மைகளையும் கூறிவிட்டான் என்பதை உணர்ந்தாள். உடனே பெலிஸ்தியச் சிற்றரசரை வரவழைத்தாள். அவள் சிம்சோனை தன் மடியில் தூங்கவைத்தாள். பின்னர் ஓர் ஆளைக் கூப்பிட அவன் சிம்சோனின் தலையின் 7 மயிர்க்கற்றைகளையும் மழித்தான். சிம்சோன் தனது ஆற்றலை இழந்தான். தெலீலா அவனை சிறுமைப்படுத்தத் தொடங்கினாள். சிம்சோன் உம்மீது பெலிஸ்தியர் பாய்கின்றனர் என்று கத்தினாள். பெலிஸ்தியர் சிம்சோனை பிடித்து, கண்களை தோண்டி எடுத்து வெண்கலச் சங்கிலிகளால் கட்டி, சிறையில் அரைக்கும் வேலைக்கு அவனை உட்படுத்தினர் ( நீதி 16: 4-21)

அத்தலியா

இவள் ஓம்ரியின் மகள். ஆகாபு வீட்டாரின் வழிமுறைகளைப் பின்பற்றியவள். எருசலேமில் ஒரு ஆண்டு மட்டுமே ஆட்சி செய்த அரசன் அகசியா என்பவன் இவளின் மகன். அகசியா தீய வழியில் நடப்பதற்கு அத்தலியா காரணமாக இருந்தாள். அகசியா ஆகாபின் மகனும் இஸ்ரயேலின் அரசனுமான யோராமுடன் சேர்ந்து சிரியா மன்னன் அசாவேலுக்கு எதிராக இராமோத்தில் போர் தொடுத்தான். அப்போரில் யோராமிற்கு காயங்கள் ஏற்பட்டது. இக்காயத்தை குணப்படுத்த இஸ்ராயேலுக்கு திரும்பிய அவனைப்பார்க்க, அகசியா சென்றான். அச்சமயத்தில் அகசியா ஏசு என்பவனால் கொல்லப்பட்டான். தன் மகனின் இறப்பை அறிந்த அத்தலியா கொதித்தெழுந்து, யூதா வீட்டு அரச வழிமரபினர் அனைவரையும் கொன்றழித்தாள். ஆனால் அகசியாவின் சகோதரியும், குரு யோயாதாவின் மனைவியுமான யோசபியாத்து, அரசனின் மகன் யோவாசை, அத்தலியாவிடமிருந்து ஒளித்து வைத்து வளர்ந்தார். நாட்டை அத்தலியா ஆறு ஆண்டுகள் ஆட்சி செய்தாள். 7 ஆம் ஆண்டில் குரு யோயாதா என்பவரால், ஆண்டவரின் இல்லத்தில், யோவாசு அரசனாக முடிசூட்டப்பட்டான். அப்போது அத்தலியா ஆண்டவரின் இல்லத்தில் கூடியிருந்த மக்களிடம் சென்றாள். அவர் வாயில் தூண் அருகில் அரசன் யோவாசு நிற்பதையும் தலைவர்களும் எக்காளம் ஊதுபவர்களும் அரசின் அருகில் நிற்பதையும் நாட்டு மக்கள் அனைவரும் மகிழ்ந்து, இசைக்கருவிகளுடன் பாடுவதையும் கண்டு, தன் ஆடைகளைக் கிழித்து கொண்டு, சதி சதி என்று கத்தினாள். இதனால் குரு யோயாதா, படைகளின் பொறுப்பாளரான நூற்றுவத் தலைவர்களை அழைத்து அத்தலியாவை பிடித்து, சுற்று மதிலுக்கு புறம்பே கொண்டு போகச் சொன்னார். எவனாவது அவளோடு சேர்ந்தால் வெட்டி வீழ்த்தும்படி கட்டளையிட்டார். ஆனால் ஆண்டவரின் இல்லத்தில் அவளைக் கொல்லக் கூடாது என்றுரைத்தார். அதனால் அத்தலியாவை அரண்மனையின் குதிரை வாயிலுக்கு கொண்டு சென்று, அங்கே கொன்று போட்டனர். அத்தலியாவின் இறப்பிற்குப்பின் நகர் முழுவதும் அமைதியாயிற்று. நாட்டு மக்கள் அனைவரும் மகிழ்ந்திருந்தனர் (2 குறிப்பேடு 22:1 - 23:21)

யூதித்து

இவள் மெராரியின் மகள். மனாசே என்பவரின் மனைவி. இவர்கள் இருவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். வாற்கோதுமை அறுவடைக் காலத்தில் மனாசே இறந்துபோனார். இதனால் யூதித்து கைம்பெண் ஆனாள். மூன்று ஆண்டு 4 மாதமாய் தம் இல்லத்திலேயே தங்கி இருந்தாள். இடுப்பில் சாக்கு உடை உடுத்தி, கைம்பெண்ணுக்குரிய ஆடைகளை அணிந்திருந்தாள். தம் கைம்மைக் காலத்தில் ஓய்வுநாளுக்கு முந்தினநாளும், ஓய்வுநாள் அன்றும், அமாவாசைக்கு முந்தின நாளும், அமாவாசை அன்றும், இஸ்ரயேல் இனத்தாருக்குரிய திருநாட்கள், மகிழ்ச்சியின் நாட்கள் தவிர மற்ற நாட்களில் நோன்பிலிருந்து வந்தாள். இவள் அழகானவள். தோற்றத்தில் எழில் மிக்கவள். தன் கணவர் விட்டுச் சென்ற அனைத்தும் இவளின் உடைமையாயின. யூதித்து கடவுளுக்கு மிகவும் அஞ்சி நடந்தாள். அவளைப்பற்றி யாரும் தவறாகப் பேசியதில்லை ( யூதித்து 8:1-8). தண்ணீர் பஞ்சத்தால் மக்கள் மிகவும் சோர்வுற்று, ஆளுநருக்கு எதிராகக் கூறியிருந்த கடுஞ் சொற்களையும், 5 நாளுக்குப்பின் நகரை அசீரியரிடம் கையளிக்கப்போவதாக உசியா ஆணையிட்டுக் கூறியிருந்த அனைத்தையும் யூதித்து கேள்வியுற்றாள். உடனே தம் நகரின் மூப்பர்களான ஊசியா, காபிரி, கார்மி என்பவர்களை அழைத்து வருமாறு தம் உடைமைகளையெல்லாம் கண்காணித்து வந்த தம் பணிப்பெண்ணை அனுப்பிவைத்தாள். அவர்கள் அவளிடம் வந்ததும், நாம் கடவுளுக்கு எதிராக செயல்படாமல், அவர் நமக்கு பதிலளிக்கும் வரை பொறுமையாக இருக்க அறிவுரை கூறினாள். பின்பு ஊசியா யூதித்திடம் மறுமொழியாக, " நீ சொன்னதெல்லாம் உண்மையே. உன் சொற்களை மறுத்துப் பேசுவோர் யாருமில்லை, உனது ஞானம் முதன்முறையாக இன்று வெளிப்படவில்லை. உன் இளமை முதலே, உன் அறிவுக்கூர்மையை மக்கள் யாவரும் அறிவர். நீ நல்ல உள்ளம் கொண்டவள். நீ இறைப்பற்றுள்ள பெண். ஆகையால், இப்போது நமக்காக இறைவனிடம் மன்றாடினால் ஆண்டவர் மழைபொழிய செய்து, நம் நீர்த் தொட்டிகளை நிரப்புவார். நாம் இனியும் தாகத்தால் சோர்வு அடைய மாட்டோம்" என்றார் ( யூதித்து 8: 9-31)
பின்பு யூதித்து, குப்புற விழுந்தாள். தலையில் சாம்பலைத் தூவிக்கொண்டாள். தாம் அணிந்திருந்த சாக்கு உடையைக் களைந்தாள். எருசலேமில் கடவுளின் இல்லத்தில் அன்றைய மாலைத் தூப வழிபாடு நடந்துகொண்டிருந்த நேரத்தில் ஆண்டவரை நோக்கி உரத்த குரலில் மன்றாடினாள். (யூதித்து 9:1). பின்னர் தன் மன்றாட்டை முடித்துக்கொண்டு, தாம் விழுந்துகிடந்த இடத்திலிருந்து எழுந்தார். தம் பணிப்பெண்ணோடு ஓய்வுநாள்களிலும், திருநாள்களிலும் தங்கி வந்த வீட்டுக்கு சென்றாள். தான் அணிந்திருந்த சாக்கு உடையையும் கைம்பெண்ணுக்குரிய ஆடைகளையும் களைந்தாள். நீராடி, விலையுயர்ந்த நறுமண எண்ணெய் பூசி, தலைமீது மணிமுடியை வைத்துக்கொண்டாள். ஆண்கள் தன்னை கவரும் விதமாக உடை உடுத்தி தன்னை அழகு செய்தாள். பின்னர் தனக்கு தேவையான உணவுகளை தயார் செய்து அவற்றைத் தன் பணிப்பெண்ணிடம் கொடுத்து, இருவரும் பெத்தூலியா நகர வாயிலை நோக்கி சென்றார்கள் ( யூதித்து 10:1-6)
அப்போது நகர வாயிலிருந்து வெளியே சென்று, மலையிலிருந்து கீழே இறங்கிப் பள்ளத்தாக்கில் சென்று கொண்டிருந்தார்கள். அப்பொழுது அசீரியர்களின் சுற்றுக்காவல் படை யூதித்தை எதிர்கொண்டது. அவர்கள் அவளை பிடித்து விசாரித்தனர். அவள் தன்னைப்பற்றி எடுத்தியம்பிய பின் உங்கள் படைத்தலைவர் ஒலோபெரினைப் பார்க்க வேண்டுமென்று கூறினாள். அவர்களும் இவளின் அழகைக்கண்டு ஒலோபெரினிடம் அனுப்பி வைத்தனர். அவன் யூதித்தைப் பற்றி அறிந்ததும் அவளை தன்னிடம் வரவழைத்தான். அவள் அவன்முன் குப்புற விழுந்து வணங்கினாள் ( யூதித்து 10: 9-23)
பின்பு யூதித்து ஒலோபெரினிடம் பேசிமுடித்தபின் இரவு அவனுடைய இடத்திலேயே தங்கினாள். நள்ளிரவுவரை உறங்கினாள். வைகறை வேளையில் துயிலெழுந்தபின் ஒலோபெரின் அனுமதிபெற்று பாளையத்திற்குச் சென்று 3 நாள் தங்கி இறைவேண்டல் செய்தாள். 4 ஆம் நாள் ஒலோபெரி தனக்கு நெருக்கமான பணியாளர்களுக்கு மட்டும் விருந்து அளித்தான். தன் உடைமைகள் அனைத்திற்கும் பொறுப்பாளனாக இருந்த பகோவா என்ற உயர் அலுவலரை அனுப்பி, யூதித்தை தன்னிடம் வரவழைத்தான். அவளும் தன்னை சிறப்பான ஆடையாலும், பெண்களுக்குரிய எல்லா அணிகலன்களாலும் தன்னை அழகு செய்து கொண்டாள். யூதித்து நாள்தோறும் உணவு அருந்துகையில் அமர்வதற்காக பகோவா கொடுத்திருந்த கம்பளத்தை ஒலோபெரினுக்கு முன்னிலையில் பணிப்பெண் தரையில் விரித்தாள். யூதித்தும் உள்ளே சென்று அதன்மேல் அமர்ந்தாள். அப்போது யூதித்தை கண்ட ஒலோபெரி அவள் மீது ஏக்கம் கொண்டான். அவளைக் கண்ட நாள்முதல், அவளுடன் உறவுகொள்ள வாய்ப்பு தேடிக்கொண்டிருந்தான். இதனால் அவளை தன்னுடன் மது அருந்துமாறு கூறினான். அவளும் அவனுடன் சேர்ந்து மது அருந்தினாள். ஒலோபெரி யூதித்திடம் மனதைப் பறிக்கொடுத்து மட்டு மீறி குடித்தான். பின்னர் அவன் தன் படுக்கைக்கு சென்றபின், யூதித்தும் அவனோடு உடனிருந்தாள். பின்னர் யூதித்து இறைவனிடம் வேண்டிக்கொண்டு, வாலை கையில் எடுத்து அவனது கழுத்தை அறுத்தாள். பின்னர் சிறிது காலம்தாழ்த்தி வெளியே சென்று அவனின் தலையை தன் பணிப்பெண்ணிடம் கொடுத்தாள். அவள் அவனின் தலையை தன் உணவுப்பைக்குள் வைத்தாள். பின்னர் இருவரும் எப்போதும் போல, பாளையத்திற்கு சென்று மலைமீது ஏறி பெத்தூலியாவுக்குச் சென்றார்கள். அங்கு நகரவாயிலை திறக்கும்படி தூரத்திலிருந்தே கூறினாள். அவர்களும் நகரவாயிலை திறக்க சிறியோர் முதல் பெரியோர் வரை அனைவரும் ஒன்று கூடினர். யூதித்து அவர்களிடம் கடவுள் நம் வேண்டுதலை கேட்டு நமக்கு விடுதலை அளித்துள்ளார் என்று கூறி பையிலிருந்த ஒலோபெரின் தலையை எடுத்துக் காட்டினாள். பின்னர் ஊசியா யூதித்திடம், "மகளே, உலகில் உள்ள எல்லாப் பெண்களையும் விட நீ உன்னத கடவுளின் ஆசி பெற்றவள். விண்ணையும் மண்ணையும் படைத்த கடவுளாகிய ஆண்டவர் போற்றி! அவரே நம் பகைவர்களின் தலைவனது தலையை வெட்டி வீழ்த்த உன்னை வழிநடத்தியிருக்கிறார். கடவுள் உன்னை நலன்களால் நிரப்புவாராக" என்று கூறி வாழ்த்தினார் ( யூதித்து 12:5 - 13:20). பின்னர் இஸ்ரயேல் பெண்கள் அனைவரும் கூடிவந்து யூதித்தை வாழ்த்தினர் ( யூதித்து 15:12). அதன்பின் கடவுள் இஸ்ரயேல் மக்களுக்கு தன் வழியாக விடுதலை அளித்ததற்காக யூதித்து புகழ்ப்பா ஒன்றையும் பாடினார். மக்கள் எருசலேமில் திருவிடத்துக்கு முன் 3 மாதமாக விழா கொண்டாடினார்கள். யூதித்தும் அவர்களுடன் தங்கியிருந்தாள். பிறகு அனைவரும் தம் இல்லங்களுக்கு திரும்பிய பின் யூதித்தும் பெத்தூலியாவுக்குச் சென்று தம் உடைமைகளை வைத்து வாழ்க்கை நடத்தினாள். அவளின் புகழ் நாடெங்கும் பரவியது. பலர் அவரை மணக்க விரும்பினர். ஆனால் யூதித்து யாரையும் மணக்காமல் தன் இறந்த கணவர் மனாசேயின் இல்லத்தில் 105 வயது வரை வாழ்ந்தாள். தன் பணிப்பெண்ணுக்கு உரிமை கொடுத்து அனுப்பிவைத்தாள். யூதித்து பெத்தூலியாவில் இறந்தாள். அவளின் கணவர் மனாசேயின் குகையில் அவளை அடக்கம் செய்தனர். அவள் தான் இறப்பதற்கு முன்பே தன் உடைமைகள் அனைத்தையும் தன் உறவினர்கள் அனைவருக்கும் பகிர்ந்து கொடுத்தாள். அவள் வாழ்ந்தபோதும் இறந்து நெடுங்காலத்திற்கு பின்னரும் எவரும் இஸ்ராயேல் மக்களை மீண்டும் அச்சுறுத்தவில்லை ( யூதித்து 16: 1-25)

சூசன்னா

இவள் கில்கியாவின் மகள். பேரழகி. ஆண்டவருக்கு அஞ்சி நடந்தவள். யோவாக்கிம் என்பவரின் மனைவி. யூத ஒழுக்கத்தின்படி வாழ்ந்து வந்த சூசன்னாவின் பேரழகில் மயங்கிய முதியோர் இருவர் காமுற்று அவளை அடைய முயன்றனர். அது நிறைவேறாததால் அவள் மீது பொய்க்குற்றம் சுமத்தி, அவளுக்கு மரண தண்டனை விதித்தனர். ஆண்டவரோ தானியேல் வழியாக அவளுக்கு முறையான தீர்ப்பு வழங்கி அவளைச் சாவின் பிடியிலிருந்து விடுவித்தார் (தானியேல்(இ) 2: 1-64)

செலோமித்து

இவள் இஸ்ரயேல் இனத்துப் பெண் "தாண்" என்னும் குலத்தைச் சார்ந்தவள். தாண் குலத்தைச் சார்ந்த திப்ரியின் மகள். இவள் எகிப்திய ஆண்மகனை மணந்தவள் (லேவி 24: 10-11)

ஏப்பா

எட்சரோனின் மகன் காலேபின் மனைவி. இவள் ஆரான், மோசா, காசே என்பவர்களின் தாய் (1குறிப்பேடு 2 : 46)

ஒகோலி

இவள் ஈசாக்கின் மூத்த மகன் ஏசாவின் மனைவி. இவ்வியன் சிபெயோனின் மகளான அனாவின் மகள். பாமா எயூசு, யாலாம், கோராகு என்பவர்களின் தாய் (தொநூ 36: 1-5)

திம்னா

ஏசாவின் மகன் எலிப்பாசின் மறுமனைவி. அமலேக், கோராகு, காத்தாம் என்பவர்களின் தாய். இவளின் பிள்ளைகள் ஏதோம் நாட்டின் தலைவர்கள் (தொநூ 36: 12-16)

பித்தியா

இவள் பார்வோனின் மகள். மெரேது என்பவனின் மனைவி. எஸ்ராவின் மருமகள். மிரியாம், சம்மாய், எஸ்தமோவா என்பவர்களீன் தாய் ( 1 குறிப்பேடு 4: 17)

அத்தாரா

இவள் ரெகுமவேலின் வழிமரபைச் சேர்ந்தவள். ரெகுமவேலின் மனைவி. எட்சரோனின் மருமகள். ஒனாமின் என்பவரின் தாய். சம்மாய், யாதா என்பவர்களின் பாட்டி ( 1குறிப்பேடு 2: 25-28)

பாஸ்மத்

இஸ்ரயேல் அரசர் சாலமோனின் மகள். அகிமாசு என்பவனின் மனைவி. (1 அரசர் 4: 15)

எரூசா

இவள் உசியாவின் மனைவி. எருசலேமை ஆட்சி செய்த யூதாவின் அரசன் யோத்தாம் என்பவனின் தாய் (2 குறிப்பேடு 27: 1)

அபிகயில்

மெராரி குடும்பங்களின் மூதாதையர் வீட்டுத் தலைவன் சூரியேலின் தாய் (எண்ணிக்கை 3: 35)

அபிகாயில்

இவள் அபிசூர் என்பவரின் மனைவி. ரெகுமவேலின் வழிமரபைச் சார்ந்தவள். இவள் அக்பான், மோலி என்ற இரு குழந்தைகளின் தாய். (1குறிப்பேடு 2:29)

அபிகால்

இவள் இத்ரா என்பவனின் மனைவி. யோவாபின் தாய். செருயாவின் சகோதரி. நாகசின் மகள். (2சாமு 17:25-26)

அபியா

எட்சரோன் மனைவி. இவர் இறந்தபின் அபியா காலேபுக்கு தெக்கோவாவின் மூதாதையான அஸ்கூரை பெற்றெடுத்தாள் (1 குறிப்படு 2: 24)

மகலாத்

ஈசாவின் மனைவியருள் ஒருவர். ஆபிரகாமின் மகன் இஸ்மயேலின் மகள். நெபயோத்தின் சகோதரி. ஆகாரின் மருமகள். ( தொநூ 28:9). ஏசா ஏற்கெனவே தான் மணந்து கொண்ட கனானியப் பெண்களான யூதித்தையும் பாசமத்தையும் தன் தந்தை ஈசாக்கிற்கு பிடிக்கவில்லை என்று நினைத்து மகலாத்தை திருமணம் செய்தான். (தொநூ 28:7 மற்றும் தொநூ 26:34)

மெகேற்றபேல்

இவள் அதாரின் மனைவி. மேசகாபின் மகளான மத்ரேத்தின் மகள். ஏதோமின் வழிமரபினர் (தொநூ 36: 39)

அம்மோலக்கேத்து

இவள் மனாசேயின் வழிமரபினர். மனாசே மகன் மாக்கிர்க்குப் பிறந்தவள். கிலயாது என்பவனின் சகோதரி. இஸ்கோது, அபியேசர், மக்லா என்பவர்களின் தாய் (1 குறிப்பேடு 7: 15-17)

செயேரா

இவர் எப்ராயிமின் வழிமரபினர். எப்ராயிமின் மகள். இவள் கீழ்-மேல் பெத்கோரானையும், உசேன் செயாரைவையும் கட்டியெழுப்பியவள் (1குறிப்பேடு 7:24)

செராகு

இவள் ஆசேரின் வழிமரபினர். ஆசேர் என்பவனின் மகள். இம்னா, இஸ்வா, இஸ்வீ, பெரியா என்பவர்களின் சகோதரி (1 குறிப்பேடு 7: 30)

மில்கா

இவள் கெராசின் வழிமரபினர். இவள் நாகோரின் மனைவி. ஆரானின் மகள் ( தொநூ 11: 29)

எக்கொலியா

இவள் எருசலேமைச் சார்ந்தவள், யூதா அரசன் அமட்சியாவின் மனைவி. எருசலேமில் 52 ஆண்டுகள் ஆட்சி செய்த அரசன் அசரியாவின் தாய் (2 அரசர் 15: 2). அசரியாவின் மறுபெயர் உசியா (2 குறிப்பேடு 26: 1)

யோவதீன்

இவள் யூதா அரசன் யோவாசின் மருமகள். 25 வயதில் யூதா நாட்டை 29 ஆண்டுகள் ஆட்சிசெய்த அரசன் அமட்சியாவின் தாய். எருசலேமைச் சார்ந்தவள் (2 அரசர் 14: 1-2)

யோசேபா

இவள் யூதா நாட்டு அரசன் அகசியாவின் சகோதரி. அரசன் யோராமின் மகள், யூதா நாட்டு அரசி அத்தலியா தன் மகன் இறந்துவிட்ட செய்தியை அறிந்தபோது, அரச குடும்பத்தில் உள்ள அனைவரையும் கொன்றாள். அப்போது அரசனின் மகன் யோவாசையும் அவன் செவிலித்தாயையும், யோசேபா அத்தலியாவிடமிருந்து காப்பாற்றினாள் (2 அரசர் 11: 1-2)

எமிமா, கெட்டிசியா, கெரேன், அப்பூக்கு

இவர்கள் மூவரும் யோபுவின் மகள்கள், இவர்களின் நாட்டிலேயே இவர்கள் மிக அழகு வாய்ந்தவர்கள், தங்களின் தந்தையிடமிருந்து உரிமை சொத்தின் பங்கை பரிசாகப் பெற்றவர்கள் (யோபு 42: 13-15)

அக்சா

காலேபின் மகள். கிரியத்து சேபேர் என்ற பகுதியை தாக்கி கைப்பற்றுவோர்க்கு " என் மகள் அக்சாவை மனைவியாக கொடுப்பேனென்று" காலேபு அறிவித்தான். காலேபின் சகோதரர் கெனாசின் மகன் ஒத்தனியேல் அதை கைப்பற்றினான். அதன் பரிசாக் அக்சா ஒத்தனியேலின் மனைவியானாள் (யோசுவா 15: 13-17)

அசூபா

எட்சரோன் வழிமரபினர். எரியோது என்ற ஊரைச் சார்ந்தவர். இவர் கணவர் பெயர் காலேபு. இவரின் பிள்ளைகளின் பெயர் ஏசேர், சோபாபு, அர்தோன் ( 1 குறிப்பேடு 2:18-20)

ஏப்ராத்

எட்சரோன் வழிமரபினர். காலேபின் 2 வது மனைவி. இவளின் மகன் கூர் ( 1 குறிப்பேடு 2: 18-20)

அசுபா

யூதா நாட்டின் அரசரான யோசபாத் என்பவரின் தாய் ( 2 குறிப்பேடு 20: 31)

லோ ருகாமா

இவளின் பெயருக்கு "கருணை பெறாதவள்" என்பது பொருள். இவள் இறைவாக்கினர் ஓசேயாவிற்கும் கோமேருக்கும் பிறந்தவள் (ஓசேயா 1: 2-6)

லோ அம்மீ

இவளின் பெயருக்கு "என் மக்கள் அல்ல" என்பது பொருள். இறைவாக்கினர் ஓசேயாவிற்கும், கோமேருக்கும் பிறந்த மகள் (ஓசேயா 1: 2-9)

கூசீம் மற்றும் பாரா

இவர்கள் பென்யமீனின் வழிமரபினர். சகரயிம் என்பவனின் மனைவியர். தன் கணவனால் தள்ளி வைக்கப்பட்டவர்கள் (1 குறிப்பேடு 8:8)

ஓதேசு

இவள் சகரயிம் மனைவியருள் ஒருவர். மோவாபு நாட்டைச் சார்ந்தவள், யோபாப், சிபியா, மேசா, மல்காம் என்பவர்களின் தாய் (1 குறிப்பேடு 8:9)

மாக்கா

இவள் பென்யமீன் குலத்தைச் சார்ந்தவள். கிபயோனில் வாழ்ந்த கிபயோனியரின் மூதாதை எயியேல் என்பவரின் மனைவி. இவள் அப்தோன், சூர், கீசு, பாகால், நாதாபு, கெதோர், அகியோ, செகோர், மிக்லோத்து, ஆகியோரின் தாய். இவள் தன் வழிமரபினரோடு எருசலேமில் வாழ்ந்தாள் (1 குறிப்பேடு 8: 29-32)

மகலாத்து

இவள் ரெக்பெயாமின் குடும்பத்தைச் சார்ந்தவள், இவளின் பெற்றோர் எரிமோத்து, அபிகாயில். இவளின் கணவன் ரெகபெயாம். எயூசு, செமரியா, சாகாம் என்பவர்களின் தாய் (2 குறிப்பேடு 11: 18-19)

மாக்கா

மனாசேயின் வழிமரபினர். கிலயாதின் மூதாதையான மாக்கீர் என்பவரின் மனைவி. பெரேட்சு என்பவனின் தாய் (1 குறிப்பேடு 7: 14-16)

இரயுமா

இவள் நாகோரின் மனைவியருள் ஒருவர். தெபாகு, ககாம், தகாசு, மாக்கா என்பவர்களின் தாய். நாகோரின் வழிமரபைச் சார்ந்தவள் ( தொநூ 22: 24)

இரிஸ்பா

இவள் அய்யா என்பவரின் மகள். அப்னேர் என்பவனுடன் உறவு கொண்டவள், சவுலிற்கு வைப்பாட்டியாக இருந்தவள் (2 சாமு 3:7)

அக்லாய்

இவள் சேசானின் மகள். ரெகுமவேலின் வழிமரபைச் சேர்ந்தவள் (1 குறிப்பேடு 2:31,34). சாபாது என்பவனின் தாய் ( 1 குறிப்பேடு 11: 41)

ஈசபேல் (ஆகாபின் மனைவி)

இவள் சீதோனிய மன்னன் எத்பாகாலின் மகள். இஸ்ரயேல் நாட்டை ஆட்சி செய்த ஆகாபு என்பவனின் மனைவி ( 1 அரசர் 16:29-31). இறைவாக்கினர் எலியாவின் செயல்களையும், பொய்வாக்கினர் அனைவரையும் எலியா வாளினால் கொன்றதையும், ஆகாபு ஈசபேலுக்குத் தெரிவித்தான். ஈசபெல் எலியாவிடம் தூது அனுப்பி, "நீ அவர்களது உயிரைப் பறித்ததுப்போல், நானும் நாளை இந்நேரத்திற்குள் உன் உயிரைப் பறிக்காவிடில், தெய்வங்கள் எனக்குத் தண்டனை கொடுக்கட்டும் என்று சொல்லச் சொன்னவள் ( 1 அரசர் 19:1-2)

ஈசபேல் (மாயவித்தைக்காரி)

இவள் இஸ்ரயேலின் அரசன். யோராவின் தாய். நிம்சியின் மகன் ஏகூ. இவளை வேசித்தனமும், மாயவித்தைகளும் நிறைந்தவள் என்று கூறினான் (2 அரசர் 9 : 21-22). ஏகூ இஸ்ரயேலுக்கு வந்தபோது, ஈசபேல் தன் கண்களுக்கு மையிட்டு, தன் தலைமுடியை அழகுபடுத்திக்கொண்டு, பலகணி வழியாக எட்டிப்பார்த்தாள். ஏகூ நகர வாயிலில் நுழைந்தபோது, ஈசபேல், "உன் தலைவனைக் கொலை செய்து சிம்ரிக்கு நிகர் ஆனவனே! சமாதான நோக்கோடுதான் வருகிறாயா? என்று கேட்டாள். அவன் முகத்தை உயர்த்தி பலகணியைப் பார்த்து " என் சார்பாக இருப்பது யார்? என்று கேட்க, உடனே 2 அண்ணகர் குனிந்து அவனைப் பார்த்தனர். ஏகூ அவர்களிடம் ஈசபேலை கீழே தள்ளிவிடுங்கள் என்றான். அவர்களும் அவளை தள்ளிவிட்டனர். அவளின் இரத்தம் மதிற்சுவரிலும் குதிரைகள் மீதும் சிதறியது, மேலும் அக்குதிரைகள் அவளைக் காலால் மிதித்துக் கொன்றன. பின்னர் உண்டு குடித்தப்பின் அவளை தகுந்த மரியாதையுடன் அடக்கம் செய்யுங்கள் என்றான். அவர்களும் அவ்வாறே செய்து, அவளை அடக்கம் செய்ய சென்றபோது, அவளுடைய மண்டை ஓடு கால்கள், உள்ளங்கைகள் தவிர வேறொன்றையும் அவர்கள் காணவில்லை. எலியாவின் வழியாக ஆண்டவர் உரைத்த இறைவாக்கு இதுவே: “இஸ்ரியேல் நிலப் பகுதியில் ஈசபேலின் உடலை நாய்கள் தின்னும் ஈசபேலின் பிணம் இஸ்ரியேல் நிலப்பகுதியில் சாணத்தைப் போன்று கிடப்பதைப் பார்த்த எவருமே, இதுதான் ஈசபேல் என்று கூற முடியாது" என்றான் ( 2அரசர் 9:30-37)

மேராபு

சவுலின் மூத்த மகள். மெகொலாயனாகிய அதிரியேலின் மனைவி (1 சாமு 18:19)

சேபா நாட்டு அரசி

ஆண்டவரின் பெயரை முன்னிட்டு சாலமோன் அடைந்திருந்த புகழைப் பற்றி இவள் கேள்விப்பட்டாள். இதனால் கடினமான கேள்விகளுடன் சாலமோனை சோதிக்க எருசலேம் சென்றவள். அங்கு சாலமோனிடம் பல கேள்விகளை எழுப்பி சரியான விடைகளைப் பெற்றவள். சாலமோனின் வாழ்வை பற்றி நேரில் அறிந்து பேச்சற்று போனவள். பின்னர் அவரையும் அவரைச் சார்ந்த அனைவரையும் வாழ்த்தியவள். ஏறத்தாழ 4100 கிலோ பொன், நறுமணப் பொருட்கள், விலையுயர்ந்த கற்கள் ஆகியவற்றை சாலமோன் அரசருக்கு பரிசாக அளித்தவள். பின்னர் சாலமோன் அரசரிடமிருந்து ஏராளமான பரிசுகளையும் அவள் விரும்பியவற்றையும் பெற்றுக் கொண்டவள் (1 அரசர் 10: 1-13)

நாமா

எருசலேமை ஆட்சி செய்த ரெகபெயாமின் தாய் (2 குறிப்பேடு 12: 13)

நொவாதியா

இவள் ஓர் இறைவாக்கினர் (நெகேமியா 6: 14)

எசாயாவின் மனைவி

இவள் ஓர் இறைவாக்கினர். இவள் எசாயாவிற்கு மகேர் சாலால் கஸ்பாசு என்ற ஓர் குழந்தையை பெற்றெடுத்தாள் (எசாயா 8:3)

போலி இறைவாக்குரைத்தப் பெண்கள்

இவர்கள் தங்களின் விருப்பப்படி இறைவாக்குரைத்தவர்கள். ஆண்டவருக்கு எதிராக பேசியவர்கள். குறி சொன்னவர்கள். தீயவர்கள் தம் தீய வழியினின்று விலகி தம் உயிரைக் காத்துக் கொள்ளாதவாறு வலுப்படுத்தியவர்கள் (எசேக் 13:17-23)

முடிவாக…
விவிலியம் ஓர் கால கண்ணாடி. ஆணாதிக்க சமூகத்தில் எப்படி பெண்கள் பாதிக்கப்பட்டார்கள் என்பதையும், அதே ஆணாதிக்க சமூக அழுத்தத்தையும் மீறி பெண்கள் எப்படி வெற்றி கண்டார்கள் என்பதையும் விவிலியம் அப்படியே பட்டவர்த்தனமாக இங்கே சுட்டிக் காட்டுகிறது. "இதுதான் விதி: என்று எண்ணாமல், குரல்வளை நெரிக்கப்பட்டாலும் திமிறி வெல்வதே பெண்ணியம். இதுவே விவிலியம் காட்டும் வழி.

[2015-03-22 23:11:20]


எழுத்துருவாக்கம்:

அருள்சகோதரி சர்மிளா ரோசரி பிரியா FSAG,
டில்லன்பூர்க்,
யேர்மனி