ஆன்மீக வலம்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, ஆண்டவரின் நற்செய்தி பணியில் ஆர்வமுள்ள பொதுநிலையினரே, உங்கள் ஆன்மீக சிந்தனைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholic.de என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். எமது ஆன்மீக இயக்குனரின் அனுமதி பெற்று, இங்கே பிரசுரிக்கப்படும்.

திரும்பிப்பார் திருத்திக்கொள்கடவுளது இரக்கத்தையும், பேரன்பையும், மன்னிப்பையும் அதிகமாக பெற்றுக்கொள்ளும் காலம் தான் தவக்காலம். இத்தகைய தவக்காலம் இவ்வாறு நம்மை வரவேற்கின்றது “மனந்திரும்பி நற்செய்தியை நம்புங்கள்.” மனந்திரும்புதல் என்பது பழைய பாவ வாழ்க்கை நிலையில் இருந்து புதிய வாழ்க்கை நிலைக்கு நம்மை அழைத்துச் செல்லுதல். மனந்திரும்பத் தேவையானது செபம்:-

ஆண்டவரே! யோவான் தம் சீடருக்கு இறைவனிடம் வேண்டக் கற்றுக் கொடுத்ததுபோல் எங்களுக்கும் கற்றுக்கொடும் (லூக் 11:1) இறைமகன் யேசுவிடம் செபத்தைக் கற்றுத்தர மன்றாடுவோம்.

கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், நீங்கள் கண்டடைவீர்கள்; தட்டுங்கள், உங்களுக்குத் திறக்கப்படும். ஏனெனில், கேட்போர் எல்லாரும் பெற்றுக் கொள்கின்றனர்; தேடுவோர் கண்டடைகின்றனர்; தட்டுவோருக்குத் திறக்கப்படும். (மத் 7: 7-8) செபத்தின் வல்லமையை பெற்றுக்கொள்வோம்.

என் இல்லம் மக்களினங்கள் அனைத்திற்கும் உரிய இறைவேண்டலின் வீடு என அழைக்கப்படும். (மாற் 11:17) கோவிலுக்கு சென்று நற்கருணை நாதர் தரும் அன்பை பெறுவோம்.

செபம் என்பது உரையாடுதல். இந்த உரையாடல் வழியாக நாம் உறவைப் புதுப்பிக்கும் ஒரு நிகழ்ச்சிக்கு நம்மை உட்படுத்துகிறோம். இந்த உறவுக் கொண்டாட்டமானது முடிவில்லா வாழ்வுக்கு நம்மைத் தகுதியுள்ளவர்களாக மாற்றிக் கொள்ள வழிவகுக்கும் சாதனம். இந்த தவக்காலத்தில் சாதனத்தை பயன்படுத்த முனைவோம்.

நோன்பு:- கொடுமைத் தளைகளை அவிழ்ப்பதும், நுகத்தின் பிணையல்களை அறுப்பதும் ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்புவதும், எவ்வகை நுகத்தையும் உடைப்பதும் அன்றோ நான் தேர்ந்துகொள்ளும் நோன்பு! பசித்தோர்க்கு உங்கள் உணவைப் பகிர்ந்து கொடுப்பதும் தங்க இடமில்லா வறியோரை உங்கள் இல்லத்திற்கு அழைத்து வருவதும், உடையற்றோரைக் காணும்போது அவர்களுக்கு உடுக்கக் கொடுப்பதும் உங்கள் இனத்தாருக்கு உங்களை மறைத்துக் கொள்ளாதிருப்பதும் அன்றோ நான் விரும்பும் நோன்பு. (எசா 58:6-7)

எங்கள் கடவுள்முன் எங்களையே நாங்கள் தாழ்த்திக் கொண்டு, எங்களுக்கும் எங்கள் பிள்ளைகளுக்கும், எங்கள் எல்லா உடைமைகளுக்கும் பயணம் நலமாக அமையவேண்டுமென்று மன்றாடுமாறு, அகவா ஆற்றருகே நோன்பு ஒன்று அறிவித்தேன் (எஸ்ரா 8:21)

நாங்கள் நோன்பிருந்து, இதற்காக எங்கள் கடவுளிடம், வேண்டிக் கொண்டோம். அவரும் எங்கள் மன்றாட்டைக் கேட்டருளினார். (எஸ்ரா 8:23) நோன்பு மூலம் தன்னோடு உள்ள உறவை சரிசெய்து, பிறருக்கு ஒளியின் விடியலாக நமக்குள் கட்டுப்பாடுகள் கொண்டவர்களாக, தேவையானவற்றை நாடிச்செல்லக் கூடியவர்களாக வாழ அழைக்கும் தவக்காலத்திற்கு செவிமடுப்போம்.

நற்செயல்கள்:-

நீங்கள் தர்மம் செய்யும்போது, உங்கள் வலக்கை செய்வது இடக்கைக்குத் தெரியாதிருக்கட்டும். (மத் 6:3) மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன். (மத்25:40) விண்ணுலகில் உங்கள் செல்வத்தைச் சேமித்து வையுங்கள்; அங்கே பூச்சியோ துருவோ அழிப்பதில்லை; திருடரும் கன்னமிட்டுத் திருடுவதில்லை. (மத்6:20)

நற்செயல்கள் என்பது பகிர்தலின் வழி வெளிக்கொணரப்படுகிறது. ஆம்! நம்முடைய அன்பு, பாசம், இரக்கம், நேரம், உழைப்பு, செவிமடுத்தல், கரிசனை என்று நம்மை முழுமையாக தெரிந்தவர்கள், தெரியாதவர்கள், தேவையில் இருப்போர் என நமது உறவை வலுப்படுத்தும் போது அடிப்படையிலே ஆனந்த உறவு மலர்கிறது. இதில் ஆழப்பட தவக்காலம் அழைக்கிறது.
[2015-02-20 23:27:37]


எழுத்துருவாக்கம்:

அருட்.சகோ. சி. குழந்தை திரேசா FSAG
பிரின் ஆம் கிம்சே
யேர்மனி