ஆன்மீக வலம்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, ஆண்டவரின் நற்செய்தி பணியில் ஆர்வமுள்ள பொதுநிலையினரே, உங்கள் ஆன்மீக சிந்தனைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholic.de என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். எமது ஆன்மீக இயக்குனரின் அனுமதி பெற்று, இங்கே பிரசுரிக்கப்படும்.

வலிமைபெறு, துணிவுகொள், அஞ்சாதே... ( இணைச்சட்டம் 31:6)

வலிமைபெறு, துணிவுகொள், அஞ்சாதே, அவர்கள் முன் நடுங்காதே, ஏனெனில் உன் கடவுளாகிய ஆண்டவரே உனக்குமுன் செல்வார் அவர் உன்னைவிட்டு விலக மாட்டார். உன்னைக் கைவிடவும் மாட்டார்.(இணைச்சட்டம்: 31:6)

இன்று இறைவன் நமக்கு கொடுத்துள்ள அவருடைய உயிருள்ள வார்த்தைக்காக நன்றி சொல்லுவோம். நாம் சிந்திக்கப்போகும் இவ்இறைவார்த்தை நம்முடைய ஆன்மாவிற்கு அமைதியையும் நம்பிக்கையையும் ஆறுதலையும் எதிர்நோக்கையும் தருகின்றது. வாழ்க்கையின் பயணத்தில் நாம் சந்திக்கின்ற சாவல்களுக்கு இவ்இறைவார்த்தை நமது ஆன்மாவிற்கு திடமான ஆறுதலையும் மன அமைதியையும் தருகின்றது. இறைவன், இறைவாக்கினர் மோசேக்கு கொடுத்த வாக்குறுதிகளை தனது இறுதி நாட்களில் தான் வழிநடத்திய இஸ்ரயேல் மக்களிடம் சொல்லுகின்றார். அவர் அன்று சொல்லிய இவ்இறைவார்த்தை இன்று நமக்கு கேடயமாகவும் அரணாகவும் ஆறுதலாகவும் இருக்கின்றது. இறைவனுடைய ஒவ்வொரு சொல்லும் உயிர்தரக்கூடியதாகவும் நமது வாழ்க்கைக்கு விளக்காகவும் பாதைக்கு ஒளியாகவும் உள்ளன. வார்த்தை நமக்கு மிக அருகில் இருப்பது நம் வாயில் நம் இதயத்தில் இருப்பது என்று இறைவார்த்தை சொல்லுகின்றது. இறைவாக்கினர் எசாயா எழுதிய நூல் அதிகாரம் 55 இறைவசனம் 10,11 சொல்லுவது “மழையும் பனியும் வானத்திலிருந்து இறங்கி வருகின்றன, அவை நிலத்தை நனைத்து, முளை அரும்பி வளரச் செய்து, விதைப்பவனுக்கு விதையையும் உண்பவனுக்கு உணவையும் கொடுக்காமல், அது திரும்பிச் செல்வதில்லை. அவ்வாறே, என் வாயிலிருந்து புறப்பட்டுச் செல்லும் வாக்கும் இருக்கும். அது என் விருப்பத்தைச் செயல்படுத்தி, எதற்காக நான் அதை அனுப்பினேனோ அதை வெற்றி கரமாக நிறைவேற்றாமல் வெறுமையாய் என்னிடம் திரும்பி வருவில்லை” என்று. நம்முடைய குடும்ப வாழ்வில், தனி வாழ்வில், சமூகவாழ்வில், பலவகையான முரண்பாடுகளை புரிந்து கொள்ளாத் தன்மை, மன்னிக்க முடியாத மனங்கள் இப்படிபட்ட சம்பவங்களை நாம் சந்திக்கின்றபோது மனம் உடைந்து போகின்ற வேளையில் யாரைத்தேடி ஓடுகின்றோம் நாம் நம்புகின்ற இறைவனிடம்தானே. பல நேரங்களில் நாம் நம்பிய நண்பர்களால் கைவிடப்படுகின்றோம். ஏன் நம்முடைய சொந்த உறவுகளே நம்மைப் புரிந்து கொள்வதில்லை அவ்வேளைகளில் இறைவனும் இறைவார்த்தையும்தான் நமக்கு நம்பிக்கையைத் தருவது. வலிமைபெறு, துணிவுகொள், அஞ்சாதே என்று இறைவன் இன்று நமக்கு சொல்லும் வார்த்தை. இறைவனை நாம் அனுபவிக்க வேண்டுமென்றால் நாம் அவருடைய பிரசன்னத்தில் அமர்ந்து அவருடன் உறவு கொண்டு தூயஆவியால் நிரப்பட இடைவிடாது செபிக்க வேண்டும். அப்போது அவருடைய ஆவியானவர் நம்மில் இறங்கி வருவதை உணரமுடியும் அதனால் உண்மையான இறைஉறவு, இறைபிரசன்னம் நம்மில் மலரும். அனுபவிப்போம் வளர்வோம் தூய்மையான புனிதமான இறைஉறவில்.

இறைவனின் வார்த்தை சொல்லுவது “தாகமுற்ற நிலத்தில் நீரை ஊற்றுவேன், வறண்ட தரையில் நீரோடைகள் ஓடச் செய்வேன். உன் வழிபரபினர் மீது என் ஆவியைப் பொழிவேன். உன் வழித்தோன்றகளுக்கு நான் ஆசி வழங்குவேன்” என்று. இறைநம்பிக்கையும் விசுவாசமும்தான் நம்மை இறைவனின் பாதையில் நடத்திச் செல்லும் ஒரு சிறப்பு கருவியாக இருக்கின்றது. இறைவன் பலமுறை நம்மிடம் சொல்லுவது இதுதான். அஞ்சாதே, நான் உன்னோடு இருக்கின்றேன். நீர்நிலைகளில் வழியாக நீ செல்லும்போது நான் உன்னோடு இருப்பேன். அஞ்சாதே! நான் உன்னை மீட்டுக் கொண்டேன் என்ற இனிமையான வார்த்தைகள் நம்மை திடப்படுத்துவதுடன் எப்பொழுதும் உறுதுணையாக இருக்கின்றார். நீதிமொழிகள் நூல் அதிகாரம் 8, இறைவசனம் 17ல் சொல்லுவது இவ்வாறு “எனக்கு அன்பு காட்டுவோர்க்கு நானும் அன்புகாட்டுவேன், என்னை ஆவலோடு தேடுகின்றவா;கள் என்னைக் கண்டுபிடிப்பார்கள்” என்று. ஆகையால் நம்முடைய ஒவ்வொரு செயலும் அசைவும் சொல்லுகின்ற வார்த்தைகள் அனைத்தும் இறைவனுக் உகந்ததாகவும் அவரை மகிமைபடுத்துக்கூடியதாக அமையவேண்டும் அதோடு நம்முடைய முழு ஒத்துழைப்பும் தேவை இறைவனின் ஆற்றலை பெறுவதற்கு. நாம் இறைவனை அன்பு செய்வதற்குமுன்பு அவரே நம்மை அன்பு செய்து நம்மை மீட்டுள்ளார். இன்று உலக நாடுகளில் நடக்கின்ற அனைத்து காரியங்களும் நமக்கு ஒருவிதமான விழிப்புணர்வைத் தருகின்றது. நாம் பாவ வழியைவிட்டு மனம்திரும்ப வேண்டுமென்று. பாவிகளை மீட்க வந்த இறைமகன் இயேசு என்றும் நம்மோடு உலகம் இறுதிமட்டும் இருப்பேன் என்று சொல்லிய வார்த்தையை நம்பி அவரிடம் செல்வோம். வாழ்வும் வழியும் உண்மையுமான இறைனை விட்டுவிடாமல் அவரது வலது கையைப்பற்றிக் கொண்டு நமது அன்றாட வாழ்க்கைப் பயணத்தில் பயணிப்போம். திருப்பாடல் 23, இறைவசனம் 4ல் காண்பது “சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும் நீர் என்னோடு இருப்பாதால் எத்தீங்கிற்கும் அஞ்சிடேன் உம் கோலும் நெடுங்கழியும் என்னைத் தேற்றும் என்று நம்பி வாழ்வோம். மேலும் திருப்பாடல் 91 இறைவசனம் 4ல் காண்பது “அவர் தம் சிறகுகளால் உம்மை அரவணைப்பார். அவர் தம் இறக்கைகளின்கீழ் நீர் புகலிடம் காண்பீர். அவரது உண்மையே கேடயமும் கவசமும் ஆகும்” என்று. கோழி தன் குஞ்சுகளை எவ்வாறு அனைத்து காத்து வருவது போல் இறைவனும் நம்மை காத்துவருகின்றார். அன்பே உறைவிடமான அன்பு இறைவனுக்கு நமது வாழ்வையே கொடையாக கொடுத்து அவரை என்றும் புகழக்கூடிய மகனாக மகளாக வாழ்வோம். இனிவரும் நாட்களில் இறைவனின் கையைபற்றிக்கொண்டு துணிவுடன் அவரது நிழலில் நாம் பயணம் செய்வோம்.

இறைவன் நமக்கு கொடுக்கின்ற இறைவார்த்தைகளை தியானித்து அவர் நம்மேல் எவ்வளவு கருணையும் அக்கறையும் கொண்டுள்ளார் என்பதை அறிந்து அவருக்கு நன்றி சொல்வோம்.
[2013-09-09 22:10:28]


எழுத்துருவாக்கம்:

Sr.Jophy
Klooster Sancta Maria
6161 CV Geleen
Nederland