ஆன்மீக வலம்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, ஆண்டவரின் நற்செய்தி பணியில் ஆர்வமுள்ள பொதுநிலையினரே, உங்கள் ஆன்மீக சிந்தனைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholic.de என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். எமது ஆன்மீக இயக்குனரின் அனுமதி பெற்று, இங்கே பிரசுரிக்கப்படும்.

திருமுக தரிசனம்வாழ்க்கை என்பது தேடலை நோக்கிய பயணம், மகிழ்வை தேடியப் பயணம், நிறைவை நோக்கிய விசுவாச பயணம். ஆம் அறியாமையில் இருந்து ஞானத்தை நோக்கிய பயணம், இருளில் இருந்து ஒளியை நோக்கிய பயணம், குழம்பிய வாழ்வில் இருந்து ஆன்ம வாழ்வை நோக்கிய பயணம். இதுத்தான் ஞானிகளின் பயணம். இந்த ஞானிகள் கிழக்கிலிருந்து தங்களது பயணத்தை தொடர்ந்தார்கள் என மத்தேயு 2:2 நற்செய்தியில் வாசிக்க கேட்கிறோம்.

ஆம் ஞானிகள் என பன்மையில் கூறிப்பிட்டுள்ளதை பார்க்கலாம். குறிப்பிட்ட நேரத்தில் வீண்மீன் வழிகாட்டுதலோடு பாலன் இயேசுவையும், அன்னை மரியையும், தந்தை யோசேப்பையும் கண்டவர்கள் மூவர். இவர்கள் அடைய வேண்டிய குறிக்கோள் ஒன்றாகவே இருந்தது. பாலன் இயேசுவைக் கண்டு தரிசிப்பதாக மட்டுமே இருந்தது.

வீண்மீன்
தேடுங்கள் அப்போது கண்டடைவீர்கள் என்பது திருவிவிலியம் நமக்குக் கற்றுத்தரும் நம்பிக்கையின் வீண்மீன். இறைநம்பிக்கையில் ஞானிகள் வீண்மீன் ஒளியில் நடந்தார்கள். இறைவனால் படைக்கப்பட்ட இயற்கையின் அடையாளம் தான் வீண்மீன். இவ்வீண்மீன் புதிய நம்பிக்கையின் அடிவேர். இறைவனின் திருமுகத்தை தரிசிப்பதற்கு பலர் விரும்புகின்றோம், மேலும் ஆசிக்கின்றோம். நெஞ்சத்தில் எளிமை, கபடற்ற ஆசை, தாழ்ச்சி, தெய்வப்பயம் இவை ஞானிகளிடம் காணப்பட்டதால் உலக மீட்பரைக் கண்டார்கள். ஏரோதுவும் இயேசுவை காண விழைகின்றான். ஆனால் அவனது மனதில் ஞானிகளிடம் காணப்பட்ட குணத்திற்கு எதிர்மாறான எண்ணங்களும், குணங்களும் இருந்ததால் நன்மைத்தனத்தை காண அவனுக்கு முடியாமல் போகிறது.

இணைந்து செயல்படல்
ஞானிகள் இணைந்து பயணம் மேற்கொள்கிறார்கள், இவ்வாறு இணைந்து செல்லும் போது பலம் பெறுகிறோம், சலிப்பு தோன்றாது, நீண்ட பயணம் கூட சோர்வுகளை கொடுக்காது, வலிமை, துணிவு, புதிய ஆற்றல் கிடைக்கிறது. தனிமனிதராக செபித்து, செயல்படுவதை விட நம்பிக்கையின் சமூகமாக இணைந்து செபிப்பதும், செயல்படுவதும் சிறந்ததாகும். செபம் என்னும் துணைகோல் வழியாக இணையப்படும் நாம், திருச்சபை, நாடு, மற்றும் உலகத்தில் வாழ்பவர்களுக்காக செபிப்போம். செபத்தின் வழி பிரமாணிக்கமுள்ளவர்களாக வாழ திருக்காட்சிப் பெருவிழா அழைப்பு விடுக்கிறது. ஒருவர் ஒருவருக்காக செபிப்போம், அருள் வரங்களை பகிர்ந்து வாழுவோம். செபத்தின் வழியாக இயேசுவைக் கண்டுக்கொள்வோம். பிறந்திருக்கும் இயேசு பாலனின் திருமுக தரிசனம் நம்மில் வீண்மீன் ஒளியாய் பிரகாசித்து தெளிவு தர வேண்டுவோம்.
[2015-01-09 02:57:21]


எழுத்துருவாக்கம்:

அருட்.சகோ. சி. குழந்தை திரேசா FSAG
பிரின் ஆம் கிம்சே
யேர்மனி