ஆன்மீக வலம்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, ஆண்டவரின் நற்செய்தி பணியில் ஆர்வமுள்ள பொதுநிலையினரே, உங்கள் ஆன்மீக சிந்தனைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholic.de என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். எமது ஆன்மீக இயக்குனரின் அனுமதி பெற்று, இங்கே பிரசுரிக்கப்படும்.

இயேசுவும் பெண் சீடர்களும்
புதிய ஏற்பாட்டில் ஏராளமான பெண்கள் இயேசுவை பின்பற்றினார்கள். இப்பெண் சீடர்கள் திருத்தூதர்களைப்போல பணிதளங்களில் நேரடியாக காட்சியளிக்கவில்லை எனினும் மறைமுகமாக இருந்து எல்லாச் சூழலிலும் இயேசுவிற்கு உதவினர். இப்பெண்கள் இயேசுவின் வாழ்வில் இறுதிவரை உடனிருந்தார்கள் என்பதை நான்கு நற்செய்தியாளர்களும் சுட்டிக்காட்டுகின்றனர். உதாரணமாக………


மகதலா மரியா

இயேசு இவரிடமிருந்து 7 பேய்களை ஓட்டியிருந்தார் (மாற்கு 16:9)
இயேசு உயிர் துறக்கும்போது, சிலுவை அருகில் நின்ற சீடர்களுள் இவரும் ஒருவர். (யோவா 19:25, மாற் 15:40)
அடக்கம் செய்த இயேசுவின் உடலில் நறுமணத்தைலம் பூசச் சென்றவர் (மாற்கு 16:1)
.இயேசுவின் கல்லறை காலியாக இருந்ததை முதலில் கண்டவர் (யோவா 20:1)
உயிர்த்த ஆண்டவரை முதலில் கண்டவர் இவரே (மாற்கு 16:9)
இவர்தான் முதல் நற்செய்தியாளர். இயேசு உயிர்த்த செய்தியை அப்போஸ்தலர்கள் பதினொருவருக்கும், மற்ற அனைவருக்கும் முதலில் அறிவித்தவர் (லூக் 24:9-10).

மார்த்தா

இவர் பெத்தானியாவில் வாழ்ந்தவர். (யோவா 11:1)
இவர் இலாசர் மற்றும் மரியாவின் சகோதரி (யோவா 11:21)
இயேசு இவரிடம் தனி அன்பு கொண்டிருந்தார் (யோவா 11:5).
இயேசு தன் வீட்டிற்கு வந்தபோது பற்பல பணிவிடைகள் புரிந்து பரபரப்பாக இருந்தவர் (லூக் 11:40)
இயேசு இலாசரை உயிர்த்தெழச் செய்த பின் அங்கு அளிக்கப்பட்ட விருந்தை மார்த்தா பரிமாறினார். (யோவா 12:2)
இயேசுவே இறைமகன், மெசியா என்று அறிவித்தவர் (யோவா 11:27)

பெத்தானியா மரியா

இவர் பெத்தானியா என்னும் ஊரில் தன் சகோதரி மார்த்தாவுடன் வாழ்ந்து வாழ்ந்தவர் (யோவா 11:1)
இவர் இலாசர் மற்றும் மார்த்தாவின் சகோதரி (யோவா 11:21)
இந்த மரியாதான் ஆண்டவர்மேல் நறுமணத் தைலம் பூசித் தமது கூந்தலால் அவரின் காலடிகளைத் துடைத்தவர் (யோவா 11: 1-2).
இயேசு அவள் வீட்டிற்கு வந்தபோது அவர் காலடியில் அமர்ந்து அவர் சொல்வதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்தார். மரியா நல்லப் பங்கை தேர்ந்தெடுத்துக்கொண்டாள் என்று இயேசு அவளை பாராட்டினார். (லூக் 10:42)

சூசன்னா மற்றும் யோவன்னா

இவர்கள் ஏரோது மாளிகை மேற்பார்வையாளர் கூசாவின் மனைவியர். இயேசு நகர் நகராய், ஊர் ஊராய் சென்று இறையாட்சிப் பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றி வந்தபோது இவர்கள் தங்கள் உடைமைகளைக் கொண்டு அவருக்குப் பணிவிடை செய்துவந்தார்கள் (லூக் 8:1-3). இயேசு உயிர்பெற்றெழுந்த செய்தியை முதலில் மற்ற 11 சீடர்களுக்கு அறிவித்த பெண்களில் யோவன்னாவும் உடன் இருந்தார் (லூக் 24:10)

சலோமி

இவர் செபதெயுவின் மனைவி (மத் 27:56)
இவர் பிள்ளைகள்தான் இயேசுவின் சீடர்களான யோவானும் , யாக்கோபும் (மத் 20:20, மத் 27:56)
சிலுவை அடியில் மற்ற பெண்களோடு தொலையில் நின்றுகொண்டிருந்தவர் (மாற்கு 15:40)
அடக்கம் செய்த இயேசுவின் உடலில் மற்ற பெண்களோடு நறுமணத்தைலம் பூசச் சென்றவர் (மாற்கு 16:1)

குளோப்பாவின் மரியா

இவர் சிலுவை அடியில் மற்ற பெண்களோடு நின்று கொண்டிருந்தவர் (யோவா 19:25)
மேற்குறிப்பிட்ட பெண்களைத் தவிர மேலும் பல பெண்கள் இயேசுவின் சீடர்களாக இருந்தார்கள் என்பதை லூக்கா நற்செய்தி 8 ஆம் அதிகாரத்தில் நாம் அறிகிறோம். இயேசு இறந்து உயிர்த்தபிறகும், இயேசுவில் விசுவாசம் கொண்டு அவரின் வழியைப் பின்பற்றிய பெண்களும் புதிய ஏற்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளனர். இவர்கள் இயேசுவின் மீது அன்புகொண்டிருந்தனர்.

பிரிஸ்கா, அக்கிலா

கிறிஸ்து இயேசுவுக்காக புனித பவுலுடன் சேர்ந்து உழைத்தவர்கள். இவர்கள் பவுலின் உயிரைக் காக்க தங்களின் உயிரைக் கொடுக்க முன்வந்தவர்கள். (உரோமை 16:3)

தொற்கா அல்லது தபித்தா

இவர் யோப்பா நகரைச் சேர்ந்தவர். நன்மை செய்வதிலும், இரக்கச் செயல்கள்முற்றிலும் ஈடுபட்டிருந்தார். இறந்து போன இவரை பேதுரு உயிருடன் எழுப்பினார் (திப 9: 36-42)

லீதியா

இவர் தியத்திரா நகரைச் சார்ந்தவர். செந்நிற ஆடைகளை விற்றவர். பவுல் பேசியதைக் கேட்டு ஆண்டவரிடம் நம்பிக்கை கொண்டார் (திப 16:14-15)

பெயீபா

இவர் கெங்கிரேயாவில் இருக்கும் சபையில் திருத்தொண்டராய் இருந்தவர். பலருக்கும் உதவியவர் (உரோமை 16:1-2)

யூனியா

திருத்தூதர்களுள் இவர் பெயர் பெற்றவர். புனித பவுலுக்கு முன் கிறிஸ்தவர் ஆனவர் (உரோமை 16:17)

திரிபேனா, திரிபோசா, யூலியா

இவர்கள் ஆண்டவருக்காக உழைத்தவர்கள். (உரோமை 16:12-15)

இன்றைய பெண்களின் சீடத்துவம் என்ன?

இன்றைய பெண்கள் தங்கள் சக்தியை, திறமைகளை உணர்ந்து வாழவேண்டும். பெண்களை விளம்பரப் பொருளாக, வியாபாரப் பொருளாக பார்க்கும் நிலையை மாற்றவேண்டும். பெண்களே பெண்களுக்கு எதிராக இல்லாமல் ஒருவரை ஒருவர் ஏற்று, மதித்து அன்பு செய்யவேண்டும். முன்னேறிய பெண், மற்ற பெண்களுக்கு வாழ்வில் முன்னேற வழிகாட்டவேண்டும். ஆண்களை போல பெண்களும் எல்லா துறைகளிலும் சாதிக்க முடியும் என்ற மனவுறுதியை வளர்த்துக்கொள்ளவேண்டும். சாதி, மத, இன, மொழி பேதமின்றி இறைவன் இயேசுவில் அனைவரும் சமம் என்ற தெளிந்த சிந்தனை வேண்டும். இயேசுவின் பெண் சீடர்கள் ஆற்றிய அளப்பரிய நற்செய்திப்பணியை நாமும் தொடர்ந்தாற்றவேண்டும்.
[2015-01-04 18:27:04]


எழுத்துருவாக்கம்:

அருள்சகோதரி சர்மிளா ரோசரி பிரியா FSAG,
டில்லன்பூர்க்,
யேர்மனி