ஆன்மீக வலம்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, ஆண்டவரின் நற்செய்தி பணியில் ஆர்வமுள்ள பொதுநிலையினரே, உங்கள் ஆன்மீக சிந்தனைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholic.de என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். எமது ஆன்மீக இயக்குனரின் அனுமதி பெற்று, இங்கே பிரசுரிக்கப்படும்.

மௌனம் கொணரும் அமைதிஅமைதி கடவுளின் மொழி
அமைதி காலையில் கதிர்களை விரிக்கும் கதிரவன்
அமைதி மொட்டுக்கள் அவிழ்ந்து மலரும் பூக்கள்
அமைதி விதையிலிருந்து வெடித்தெழும் முளை

இறைமகன் இயேசுவின் அமைதி

இயேசு இவ்வுலகின் அமைதியின் தூதுவராக வந்தார். நாள் முழுவதும் மக்களுக்கு பணிவிடைப் புரிந்தபின், மாலைப்பொழுதில் தனிமையான இடத்திற்குச் சென்று செபித்தார். அமைதியில் தன் தந்தையோடு உறவாடினார். அமைதியில் தனித்திருந்தபோது இறைவனின் ஆற்றலைப் பெற்றார். இதன்வழியாக "அமைதியை ஏற்படுத்தவே இவ்வுலகிற்கு வந்தேன்" என்றுரைத்தார்.

மறைநூல் அறிஞரும், பரிசேயரும் விபசாரத்தில் பிடிபட்ட ஒரு பெண்ணைக் கூட்டிக்கொண்டு வந்து நடுவில் நிறுத்தி, போதகரே, இப்பெண் விபசாரத்தில் கையும் மெய்யுமாக பிடிப்பட்டாள். இப்படிப்பட்டவர்களை கல்லால் எறிந்து கொல்லவேண்டும் என்பது மோசே நமக்குக் கொடுத்த கட்டளை; நீர் என்ன சொல்கிறீர்? என்று அவர்கள் கேட்டபோது, இயேசு அமைதியாக இருந்தார். இறுதியில் உங்களுள் தவறிழைக்காதவன் இவள் மீது கல்லெறியட்டும், என்று கூறியதும் அப்பெண்ணை எதுவும் செய்யாமல் அக்கூட்டம் கலைந்தது. இயேசு அப்பெண்ணை நிமிர்ந்து பார்த்து, "அம்மா நீர் குற்றவாளி என்று எவரும் தீர்ப்பிடவில்லையா?" என்று கேட்டார். அவள், "இல்லை ஐயா" என்றார். இயேசு அவளிடம் "நானும் தீர்ப்பு அளிக்கவில்லை" என்று கூறினார். (யோவான் 8:1-11). இயேசு அங்கு அமைதியாய் இருந்ததால் மன்னிப்பு வழங்குவதை மட்டும் உணர்த்தவில்லை. மாறாக சாவுக்குரிய பெருந்தண்டனையிலிருந்தும் மனிதரை காப்பதைப் பற்றியும் தன் மௌனத்தின் மூலம் விளக்குகிறார். தான் பாடுபட்டு, மீண்டும் உயிர்த்தெழுந்தபோது, அமைதியின்றி தவித்த தன் சீடர்களிடம், "உங்களுக்கு அமைதி உரித்தாகுக" (லூக்கா 24:36) என்று அவர்களை வாழ்த்தினார்.

மனிதனுக்கு அமைதி தேவையா?

நான் அண்மையில் தொடர்வண்டியில் ம்யூனிக்கை நோக்கி பயணம் செய்தபோது, சுமார் 25 வயதுடைய ஒரு இஸ்ரேல் நாட்டு பெண்ணை சந்தித்தேன். என் பக்கத்தில் அமர்ந்திருந்த அவள் என்னிடம் தன் வாழ்வில் நடந்த சோகங்களை பகிர்ந்துகொண்டாள். இளம் வயது திருமணத்தால் தன் படிப்பை இழந்தாள். மாமியாரின் வசைமொழி, புலம்பல் மத்தியில் வாழ்க்கையை தொடர்ந்தாள். ஏன் என்னை திட்டுகிறீர்கள் என்று கேட்டதால் கணவனின் வெறுப்பை சம்பாதித்தாள். பிறகு புகுந்த வீட்டிலிருந்து துரத்தப்பட்டாள். தன் பெற்றோர் மற்றும் உடன்பிறந்தோர் இல்லாத நிலையில் வேலைத்தேடி வெளியூர் சென்றாள். அங்கே சிலரால் கற்பழிக்கப்பட்டு மனநோயாளிக்கப்பட்டாள். பின்னர் நாட்டை விட்டு வெளியேறி அகதியாக ஜெர்மனிக்கு வந்தாள். அமைதி இல்லாத சூழலில் ஒருநாள் அருகில் உள்ள ஓர் ஆலயத்திற்கு சென்று சிறிது நேரம் அமைதியாக அமர்ந்தார். மன உளைச்சலினால் பாதிக்கப்பட்டு இருந்த அவள் உள்ளொளி ஏற்பட்டு சிறிது நேரம் செபிக்க ஆரம்பித்தாள். அதன் விளைவாக இப்போது ஓர் தியானம் கொடுக்கும் ஆசிரியராக பணியாற்றுவதாக கூறினார். இப்போது பல உறவுகளை பெற்று அமைதியான வாழ்வை மேற்கொள்கிறார்.

மௌனம் வார்த்தைகளைவிட வலிமையானது

அமைதி பிறரின் எண்ணங்கள், ஏக்கங்கள், உள்ளக்கிடக்கைகள், ஊமை உணர்வுகள் அனைத்தையும் புரிந்து கொள்ள உதவும். தேவையற்ற பற்றை நீக்கும். உணர்வுகளை கட்டுப்படுத்தும். மனிதனுடைய நல்வாழ்வுக்கு மிக அவசியமான மருந்தாகும். அமைதியில் இறைவனின் படைப்புகள் நம்மோடு உரையாடும். இறைவன் நம்முடன் உரையாடுவார். அமைதியில் இருக்கும்போது பிறரை புரிந்துகொள்ளவும், மன்னிக்கவும் முடியும். நமது பலவீனங்களை கண்டறிந்து அதிலிருந்து வெளியேற முடியும். அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன்: என் அமைதியை உங்களுக்கு அளிக்கிறேன் (யோவான் 14:27) என்று கூறியவர் நமது வாழ்வில் அமைதி அருள்வார் என்ற நம்பிக்கையோடு அமைதியை தேடிச் செல்வோம்.

நம் தந்தையாம் கடவுளிடமிருந்தும் ஆண்டவராம் இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் உங்களுக்கு அருளும் அமைதியும் உரித்தாகுக (எபே 1:2)

[2014-10-26 22:10:26]


எழுத்துருவாக்கம்:

அருள்சகோதரி சர்மிளா ரோசரி பிரியா FSAG,
டில்லன்பூர்க்,
யேர்மனி