ஆன்மீக வலம்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, ஆண்டவரின் நற்செய்தி பணியில் ஆர்வமுள்ள பொதுநிலையினரே, உங்கள் ஆன்மீக சிந்தனைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholic.de என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். எமது ஆன்மீக இயக்குனரின் அனுமதி பெற்று, இங்கே பிரசுரிக்கப்படும்.

தூய ஆவியாரின் செயல்பாடுகள்
பாகம் 5
"இழந்து போனதைத் தேடி மீட்கவே மானிடமகன் வந்திருக்கிறார்" லூக்கா:19.10சக்கேயுவின் வாழ்வில் இறைமகன் இயேசுவின் மகிமை:

இறைமகன் இயேசுவும் சக்கேயுவும் சந்திக்கின்ற நேரத்தில் ஆவியானவர் சக்கேயுவின் வாழ்க்கையில் மாற்றத்தைக் கொண்டு வருகின்றார். சக்கேயு என்பவர் எரிக்கோவில் செல்வந்தர், வரிதண்டுவோருக்குத் தலைவர், குட்டையான தோற்றம் உடையவர் என்று லூக்கா; 19 அதிகாரத்தில் காண்பது, இழந்து போனதைத் தேடி மீட்கவே இறைமகன் வந்தார் என்ற உண்மை இவர்களுடைய சந்திப்பில் காணமுடிகின்றது. இறைவன் மனிதனைத் தேடி வருகின்ற நேரம், மனிதன் இறைவனைத் தேடிப் போகின்ற நேரம் என்பதை மிக அழகாக உணரமுடிகின்றது. சக்கேயுவின் தாகம் என்னவென்றால் இறைமகன் இயேசுவைப் பார்க்க வேண்டுமென்ற ஒர் தீராத ஆர்வம். ஆழமான விருப்பம். ஆனால் அவருடைய வாழ்க்கையில் மூன்று முக்கியமான தடைகள் இறைமகன் இயேவைக் காணமுடியாமல் தடுக்கின்றது. அவை என்னெவென்றால் அவருயை தோற்றம் குட்டையாய் இருப்பது, செல்வந்தராக இருப்பது, திரளான மக்கள் கூட்டம். இந்த மூன்று தடைகளையும் உடைப்பதற்கு இறைவனே அவருக்கு வழி அமைத்து தருகின்றார். இறைவனுடைய ஆவியானவர் சக்கேயுவின் ஆன்மாவில் இயேசுவைக் காணவேண்டுமென்ற அகத்தூண்டலை எற்படுத்துகின்றார். ஆனால் அவர் குட்டையாய் இருந்ததாலும், திரளான மக்கள் கூடி இருந்ததாலும் இயேசுவைக் காண முடியவில்லை அதனால் அவர் அந்த நிலையிலே இருக்கவில்லை மாறாக அவர் வேகமாக கூட்டத்திற்கு இடையில் ஒடிப்போய் முசுக்கட்டை மரத்தில் ஏற ஆவியானவர் அவரைத் துண்டுகிறார். அவர் முயற்சியின் பலனால் மரத்தில் ஏறி இயேசுவின் வருகைக்கா காத்திருக்கின்றார்.

நமது இறைவன் மறைவாய் உள்ளதைக் காண்பவர். நமது நோக்கத்தையும் விருப்பத்தையும் நாம் கேட்பதற்கு முன்பே அறியக்கூடியவர். தேடுங்கள் நீங்கள் கண்டடைவீர்கள் என்று சொன்னவர். இறைவாக்கினர் எசாயா வழியாக இறைவன் கூறுகின்றார் என் எண்ணங்கள் உங்கள் எண்ணங்கள் அல்ல. உங்கள் வழிமுறைகள் என் வழிமுறைகள் அல்ல. மண்ணுலுகத்திலிருந்து விண்ணுலகம் மிக உயர்ந்து இருப்பதுபோல உங்கள் வழிமுறைகளைவிட என் வழிமுறைகளும் உங்கள் எண்ணங்களைவிட என் எண்ணங்களும் மிக உயர்ந்தன என்ற வாக்கின்படி இறைவனின் வழிமுறையானது மிகவும் வேறுபட்டதாக உள்ளது சக்கேயுவின் வாழ்க்கையில். இறைமகன் இயேசு அவர் எடுத்த முயற்சியையும், அவர் இயேசுவைக் காண வேண்டிய விருப்பத்தையும் அறிந்து அவரை அண்ணாந்து பார்த்து 'சக்கேயு, விரைவாய்.இறங்கி வாரும், இன்று உமது வீட்டில் நான் தங்க வேண்டும் " சற்று சிந்திப்போம் இன்றைய நடைமுறை சம்பவத்தை திருச்சபையின் தலைவராக இருக்கும் நமது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நாம் வசிக்கும் வீதிவழியாக செல்லும்போது என்னிடமும் உங்களிடமும் நம்முடைய பெயரைச்சொல்லி அழைத்து இன்று உங்கள் வீட்டில் நான் தங்க வேண்டமென்று சொன்னால் நாம் அதிர்ச்சியும் ஆனந்தமும் அளவில்லா மகிழ்ச்சியும் கொண்டிருப்போம் அல்லவா அதேபோல்தான் சக்கேயுவின் வாழ்க்கையிலும் நடைபெறகின்றது. சக்கேயு தான் பற்றிகொண்ட மரத்தை விட்டுவிட்டு உடனே இறங்கி வந்து அவரை அன்புடன் வரவெற்கின்றார். இயேசுவின் பார்வை அவரை மனமாற்றத்திற்கு அழைக்கின்றது. புனித பேதுரு மூன்று முறை இயேசுவை தெரியாது என்று மறுதலித்தபோது இயேசுவின் பார்வையால் மனம்மாறி திருச்சபையைக் கட்டி எழுப்ப அடித்தளப் பாறையாக பொறுப்பு பெற்றார். இயேசுவின் பார்வையும். அவரின் அன்பின் பிரசன்னமும் அவரை முழுமனிதனாக மாற்றியது. சக்கேயு தனது பாவ வழியில் சம்பாதித்த உடைமைகளையும். பிறர்மீது குற்றம் சுமத்தி பெற்றவற்றையும் நன்றாக உணரக்கூடிய மன அழுத்தத்தையும் உறுத்தலையும் பெறுகின்றார். இறைபிரசன்னம் நிறைந்தபோது பாவச்சுமைகள் விட்டுவிலகுவதை சக்கேயுவின் வாழ்வில் நாம் காணலாம். அவர் தப்பு வழியில் சம்பாதித்த உடைமைகளை நான்கு மடங்காக எளியவரக்கு திருப்பிக் கொடுக்கின்றார். அதனால் அவருமட்டுமல்ல அவரது வீடு முழுவதும் மீட்பு பெறுகின்றது.

இயேசு மறைஉரை பொழிவில் கூறியதுபோல் 'தூய உள்ளத்தோர் பேறுபெற்றோர் ஏனெனில் இறைவனைக் காண்பர்' " என்ற வசனத்திற்கேற்ப அவர் இயேசுவான இறைமகனைக் காண விரும்பினார், அந்த விருப்பம் அவரை நேரடியாக சந்திக்க வைத்தது. அந்த ஒருநிமிட சந்திப்பு மனமாற்றத்தைக் தந்தது, அந்த மனமாற்றம் எளியவருக்கு உதவ வழி அமைத்தது. எளியவருக்கு உதவியது, தனது வீட்டிற்கு இறைமீட்பைத் தேடித்தந்தது. இறைமகன் இயேசுவால் எல்லாம் முடியும். அவருடைய பார்வையும் அவருடைய வார்த்தையும் அவருடைய பிரசன்னமும் நம் ஒவ்வொருவரிலும் மாற்றம் கொண்டுவரலாம். இன்று இறைவனின் பிரசன்னத்தை உணரமுடியாமல் நம்மை தடுக்ககூடிய உலகத்தில் நாம் வாழ்ந்து கொண்டுள்ளோம். இறைவனின் பிரசன்னம் இல்லாத இடங்களில்தான் கழகமும் குழப்பங்களும் நிறைந்து இருளின் ஆட்சியில் சிக்கி தவித்தக் கொண்டிருக்கின்றது நமது மனிதகுலம். பணம் சுகம் பதவி பொருள் வன்முறைகள் பிரிவுகள் நம்மை இறைவனிடம் கொண்டுபோக முடியாது என்பது நிச்சயம். ஆனால் இறைவனின் பிரசன்னமும் தூய்மையான உள்ளமும் மனமாற்றமும் தான் நம்மை இறைஇயேசுவில் ஒன்றிணைக்கும். சக்கேயுவைப்போல் இயேசுவைக் காண ஆவல் கொண்டு அவரை நமது உள்ளக் குகையில் வரவேற்று அவரோடு இணைந்து வாழ்வோம். இழந்து போனதைத் தேடி மீட்கத்தான் நம் இறைமகன் இம் மண்ணகத்தில் வார்த்தையாக வந்து நம்மிடையே குடிகொண்டது. நம்புவோம் அவரில் வாழ்வோம்.
[2014-10-07 23:57:59]


எழுத்துருவாக்கம்:

Sr.Jophy Amalraj
Klooster Sancta Maria
6161 CV Geleen
Netherland