ஆன்மீக வலம்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, ஆண்டவரின் நற்செய்தி பணியில் ஆர்வமுள்ள பொதுநிலையினரே, உங்கள் ஆன்மீக சிந்தனைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholic.de என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். எமது ஆன்மீக இயக்குனரின் அனுமதி பெற்று, இங்கே பிரசுரிக்கப்படும்.

கிறீஸ்துவின் வழியில் சமாதானத்தை நோக்கினால்?சமாதானம் பற்றி இயேசுபிரான் நேரில் தோன்றின் என்ன கூறுவார்? காணிக்கை கொடுக்க முதல் எவருடனும் சமாதானம் செய்யும்படியே இடித்துக்கூறுவார்.

“ஒருவருக்கொருவர் சமாதானம் தெரிவித்துக் கொள்வோம்” என , பிரார்த்தனைகள், வழிபாடுகளின் போது ஒப்பிப்பது சாதனைக்கு ஒவ்வா நடைமுறையும், பயனற்ற பரிசேயத்தனமிக்க சம்பிரதாயமுமாகும்.

புண்ணியம் வீட்டிலே தொடங்குகின்றது.போதனையிலும் பார்க்க சாதனையே சிறந்தது.

யாரும் நடைமுறையில் சமாதானத்தையும், ஒற்றுமையையும் முன்நிலைப்படுத்தாமல், வெறுமனே வழிபாடுகளிலும், போதனை களிலும் மக்களை மூழ்கடித்து சமாதானத்திற்கான அர்ப்பணிப்பற்ற பணிகளில் மக்கள் மத்தியில் ஈடுபடுதல், ஏதோ தொழில் சார்ந்த சம்பிரதாயமும் நகைப்பிற்கும், பரிகாசத்திற்கும் உரிய செயற்பாடு களுமாகும்.

மத்தேயு 5: 23-24 ஐ நோக்குவோமாயின் ”ஆகையால், நீ பலிபீடத் தினிடத்தில் உன் காணிக்கையைச் செலுத்த வந்து உன்பேரில் உன் சகோதரனுக்குக் குறையுண்டு என்று நினைவு கூருவாயாகில், அங்கே தானே பலிபீடத்தின் முன் உன் காணிக்கையை வைத்துவிட்டுப் போய் முன்பு உன் சகோதரனுடன் ஒப்புரவாகி, பின்பு வந்து உன்காணிக் கையைச் செலுத்து" என்று கூறப்பட்டுள்ளது.

ஏட்டிலே வரையப்பட்ட கறிக்குதவாத சுரைக்காய் என்னும் வெற்று வார்த்தை போன்று, ஏட்டிலே எழுதப்பட்ட தித்திப்பற்ற சர்க்கரை என்னும் வெற்று வார்த்தை போன்று, சாந்தி, சமாதானம் என்னும் வெற்று வார்த்தைகளால் எதுவுமே ஆகிவிடா.

’’நோய் நாடி, நோய் முதல்நாடி, அது தணிக்கும் வாய் நாடி வாய்ப்பச் செயல்’’ என்னும் குறளுக்கு அமைய எங்குசரி விளங்காத்தனங்களோ, கருத்துவேறுபாடுகளோ, மேலாதிக்கப்போக்குகளினால் அடக்கு முறைகளோ தோன்றும்வேளை அவை கொதிநிலை அடைய முன்னரே தாமதங்களைத்தவிர்த்து உடனுக்குடன், பொறுப்பிலுள்ள வர்கள் தமது ஆளுமைமூலம் நீதியான தீர்வுக்கான வழிமுறைகளைக் காணல் வேண்டும். தாமதிக்கப்படும் தீர்வு மறுக்கப்படும் நீதியாகும்.

சமாதானத்திற்கான ஆழ்ந்த ஈடுபாட்டுடனான வாஞ்சை இன்றி, பிரிவினைகளைச் சிதறடிக்கும் கொள்கை இன்றி, சாந்தி, சமாதானம் என்பனவற்றிற்காக எதனை யாகுதல் நடைமுறையில் ஆக்கபூர்வமாக செய்தல் வேண்டும் என்ற அர்ப்பணிப்பு இன்றி, கடமையின் நிமித்தம் வழக்கமான செயல்முறையாக ’’ஆண்டவனே, ஆண்டவனே’’ எனக் கூக்குரல் இடுபவர்களாலும், நாளும், பொழுதும் செபிப்பவர்களாலும், பூசை, பிரார்த்தனை, யாத்திரை என்று அலைபவர்களாலும் சாந்தி, சமாதானம் என்றென்றும் எட்டாக்கனியாகவே பரிணமிக்கும்.

மக்கள் சேவைக்கெனவும், சாந்தி, சமாதானம் போன்றவற்றை முன்னெடுப்பதற்கெனவும் தங்களை அர்ப்பணிப்பதாகக் கூறிக்கொண்டு சுய ஆதாயத்திற்காக வாழும் ஒரு சில மத வாதிகளுக்கும், அரசியல் வாதிகளுக்கும் பொருந்துமுகமாக லூக் 6:43-44 ன் பிரகாரம் ’’போலி இறைவாக்கினரைக் குறித்து எச்சரிக்கையாக இருங்கள். ஆட்டுத் தோலைப் போர்த்துக்கொண்டு உங்களிடம் வருகின்றனர். ஆனால் உள்ளேயோ அவர்கள் கொள்ளையிட்டுத்தின்னும் ஓநாய்கள்’’ என இயேசு பிரான் கூறியுள்ளார்.
[2014-09-04 01:26:18]


எழுத்துருவாக்கம்:

எஸ்.பி. யேசுதாசன்,
’’புஷ்பகம்’’,
சில்லாலை வடக்கு,
பண்டத்தரிப்பு