ஆன்மீக வலம்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, ஆண்டவரின் நற்செய்தி பணியில் ஆர்வமுள்ள பொதுநிலையினரே, உங்கள் ஆன்மீக சிந்தனைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholic.de என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். எமது ஆன்மீக இயக்குனரின் அனுமதி பெற்று, இங்கே பிரசுரிக்கப்படும்.

விடுதலைத்தாய் அன்னைமரியா

பாசத்துக்கு பாலமானவள்; கற்புக்கு சாட்சியானவள்!.
காவலுக்கு கைக்கொடுப்பவள்; கரை சேர வழிகாட்டுபவள்!.
உண்மைக்கு நிலையானவள்; நெஞ்சுக்கு உரமானவள்!.
இதயத்திற்கு இதமானவள்; எல்லோரையும் நேசிப்பவள்!.


அன்னை மரியா விடுதலைத்தாய்; ஏன்? எப்படி?

1.கானாவூர் திருமணம்

கானாவில் நடந்த திருமணத்திற்கு அன்னைமரியா சென்றிருந்தார். இயேசுவும் அவருடைய சீடரும் அழைப்புப்பெற்றிருந்தனர். திருமண விழாவில் திராட்சை இரசம் தீர்ந்து போகவே, அன்னைமரியா இயேசுவை நோக்கி, திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது என்றார். இயேசு அன்னையிடம் அம்மா அதைப்பற்றி நாம் என்ன செய்யமுடியும்? எனது நேரம் இன்னும் வரவில்லையே என்றார். இயேசுவின் தாய் பணியாளரிடம் அவர் உங்களுக்கு சொல்வதை செய்யுங்கள் என்றார். இயேசு அவர்களிடம் கல்தொட்டிகளில் தண்ணீர் நிரப்புங்கள் என்று கூறி, புனிதப்படுத்தி பின்பு பந்திமேற்பார்வையாளரிடம், கொண்டு போங்கள் என்று கூறினார். அவரும் திராட்சை இரசமாய் மாறியிருந்த தண்ணீரை பந்தியில் பரிமாறினார்.
அன்னை மரியா அங்கு தேவை இருப்பதை உணர்ந்தார். அவர்களுக்கு உதவி செய்ய நினைத்தார். தன் மகன் வழியாக உதவிகரம் நீட்டினார். பிறர் கேட்காமலேயே உதவுவதுதான் அன்னையின் குணம். அன்னை அந்நேரத்தில் குறிப்பறிந்து முன்வந்து உதவிசெய்து விடுதலையளிக்கும் தாயானார்.

2. மரியா எலிசபெத்தை சந்திக்கும்போது

மரியா புறப்பட்டு யூதேய மலைநாட்டிலுள்ள ஓர் ஊருக்கு விரைந்து சென்றார். அங்கு செக்கரியாவின் வீட்டை அடைந்து எலிசபெத்தை வாழ்த்தினார். மரியாவின் வாழ்த்தை எலிசபெத்து கேட்டபொழுது அவர் வயிற்றிலிருந்த குழந்தை மகிழ்ச்சியால் துள்ளிற்று. எலிசபெத் தூய ஆவியால் முற்றிலும் ஆட்கொள்ளப்பட்டு, பெண்களுள் நீர் ஆசிபெற்றவர்; உம் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசி பெற்றதே என்றார். ஒவ்வொரு தாயும் கருவுற்றிருக்கும்போது, அடையும் துன்பங்கள் ஏராளம் ஏராளம். அன்னைமரியாவும் தான் கருவுற்றபோதும், சாதாரண தாய்மார்களை போலவே துயரமடைந்தார். இருப்பினும் தன் உடல் வலிகளை, துயரங்களை பெரிதாக கருதவில்லை. ஆனால் வயது முதிர்ந்த பெண்மணி எலிசபெத்தின் துன்பத்தை நினைத்துப்பார்த்தார். தன்னை விட அவரையே பெரிதாக கருதினார். அதனால்தான் கால்நடையாகவே ஓடிப்போய் எலிசபெத்துக்கு உதவிகரம் நீட்டினார். அங்கும் அன்னை மரியா மற்றவரின் துன்பத்தை நீக்கி, விடுதலை அளிப்பவராக காட்சியளிக்கின்றார்.

3. மரியாவின் விடுதலைப் பாடல்

1 சாமுவேல் 2 ல், அன்னா குழந்தை பேறின்றி இருந்தபோது குழந்தை வரம் பெற ஆண்டவரிடம் மன்றாடியதைப்போல, லூக்கா 1:46-56 ல் குழந்தை பேறின்றிருந்த வயது முதிர்ந்த எலிசபெத், குழந்தைப்பேறு பெற்றதற்காக ஆண்டவர் செய்த அருஞ்செயல்களை நினைத்து, அகமகிழ்ந்து, அக்களித்து, சமூகத்திலிருந்து பெற்ற விடுதலையை எண்ணி, தொடர்ந்து சமுதாயத்திற்கு நம்பிக்கை ஊட்டும் விதமாக, விடுதலை அடைந்தவர்களாய் இப்பாடலை பாடினார். தாழ்நிலையில் உள்ளோரை உயர்த்துகிறார். உள்ளத்தில் செருக்குடன் சிந்திப்போரை சிதறடித்து வருகிறார். வலியோரை அரியணையினின்று தூக்கி எரிந்துள்ளார். பசித்தோரை நலன்களால் நிரப்பியுள்ளார். செல்வரை வெறுங்கையராய் அனுப்பிவிடுகிறார் என்று பாடியதின் மூலம், ஏழை எளிய மக்களுக்கு ஆண்டவர் விடுதலை வழங்குபவர் என்பதை அறிவிக்கின்றார்.

4. மரியாவின் ஏழு வியாகுலங்கள்

- உமது உள்ளத்தையும் ஒரு வாள் ஊடுருவி பாயும் (லூக் 2:35).
- இயேசுவைக் காப்பாற்றும்பொருட்டு எகிப்துக்கு தப்பிச்செல்லுதல் (மத் 2:13-15).
- காணாமல் போன இயேசுவை கண்டடைந்தது ( லூக் 2: 46).
- சிலுவை சுமந்து சென்றபோது தாயும் மகனும் சந்தித்தது.
- இயேசு சிலுவையில் அறையப்பட்டு உயிர்விட்டது.
- இயேசுவின் உடலை தாய் மரியாவின் மடியில் கிடத்தியது.
- இயேசுவின் உடலை கல்லறையில் அடக்கம் செய்தது (லூக்கா 23:53).


இயேசுவின் பிறப்பு முதல் இறப்பு வரை, அனைத்து துன்பங்களையும் தாங்கி, இறைமகனோடு உடனிருந்தார். இயேசுவின் கல்வாரிப் பாதையில் இறுதிவரை இருந்து, தைரியமூட்டினார். கடவுளுக்காக வீரமும், துணிவும் அவரிடம் தென்பட்டது. தன் மகனுடன் இணைந்து மனுக்குலத்திற்கு விடுதலை வழங்கினார். பதுக்குவது விடுதலை அல்ல; மாறாக பகிர்வதே விடுதலை என்பதை தன் வாழ்வின் இறுதிவரை அன்னைமரியா நிரூபித்தார். மற்றவர்களின் துன்பத்தை துடைப்பதையே விடுதலையாக எண்ணினார். நாமும் நமது அன்பையும் பாசத்தையும் பொருளையும், பொன்னையும், பகிர்ந்து மற்றவர்களின் துன்பத்தில் துணையிருந்து விடுதலை பெற வழிவகுத்து, நலமான விடுதலையை காண முயல்வோம்..

ஒவ்வொருவரும் "தான்" என்ற நிலையிலிருந்து வெளிவந்து அன்னைமரியா வாழ்ந்த விடுதலை வாழ்வை வாழ முயல்வோம்..
[2014-08-04 21:54:23]


எழுத்துருவாக்கம்:

அருள்சகோதரி சர்மிளா ரோசரி பிரியா FSAG,
டில்லன்பூர்க்,
யேர்மனி