ஆன்மீக வலம்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, ஆண்டவரின் நற்செய்தி பணியில் ஆர்வமுள்ள பொதுநிலையினரே, உங்கள் ஆன்மீக சிந்தனைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholic.de என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். எமது ஆன்மீக இயக்குனரின் அனுமதி பெற்று, இங்கே பிரசுரிக்கப்படும்.









ஆண்டவரே மீட்புப் பெறுவோர் சிலர் மட்டும்தானா? (லூக்கா 13: 23)
என் வாழ்வுக்கான ஆதாரம் என்ன?
பாகம் -ஏழு



நான் வாழ்வில் எதை நோக்கி தினமும் அயராது ஓடிக்கொண்டிருக்கிறேன்? நாம் பிறப்பு முதல் இறப்பு வரை பல்வேறு காரணங்களுக்காக ஓடிக்கொண்டே இருக்கின்றோம். கடவுள் நம்பிக்கை உள்ளவர்களும், கடவள் நம்பிக்கையை விமர்சிப்பவர்களும் தினமும் ஓடிக்கொண்டே இருக்கின்றனர். குழந்தையாய் இருந்த போது உள்ளத்தில் ஏற்படும் சிறு சிறு ஆசைகளையெல்லாம் தீர்த்து கொள்ள ஓடிக்கொண்டே இருக்கின்றோம். இளமைக்காலத்தில் படிப்பு, பெற்றோரின் ஆசையை நிறைவேற்ற ஓடுகின்றோம். அதன் பின்னர் வேலைக்காக, வாழ்வில் ஒரு சிறந்த நிலையை அடைய ஓடுகின்றோம். திருமணத்திற்கு பின் குடும்பம், பிள்ளைகளுக்காக ஓடிக்கொண்டே இருக்கின்றோம். இவ்வாறு வாழ்வின் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு காரணங்களுக்காக ஓடிக்கொண்டே இருக்கின்றோம். இந்த வாழ்வின் ஓட்டத்தை யாராலும் தடுக்க முடியாது. ஆனால் இறைவன் நமக்கு கொடுத்த மிகப்பெரிய வரம் நமது ஓட்டத்தை நாம் சீர்படுத்திக் கொள்ள முடியும் என்பது தான். இதற்கு மிகவும் அவசியமானது நமது அன்றாட அலுவல்களுக்கு மத்தியில் சற்று நேரம் கடவுளுக்காக ஒதுக்குதல்.

இன்றைய காலகட்டத்தில் நம்மில் ஒவ்வொருவரும் சொல்லும் வார்த்தை ‘எனக்கு நேரமே இல்லை’. கடவுள் நம் முன் தோன்றி ‘நான் இன்று உன்னை எடுத்து கொள்ள போகின்றேன்’ என்று சொன்னால் நமது பதில் ‘தயவு செய்து நாளை வரை காத்திருங்கள். எனக்கு செய்ய வேண்டிய வேலைகள் நிறைய இருக்கின்றது’ என்று தான் கூறுவோம். கடவுள் தந்த 24 மணி நேரம் நமக்கு போதுமானதாக இல்லை. இந்த உலகை மீட்க வந்த யேசுவுக்கு நேரம் இருந்தது, தனிமையில் கடவுளோடு உரையாட. ஆனால் நமக்கு தான் நேரமில்லை என்று கூறுவது உண்மை போல தோன்றுகின்றது. ஆனால் அதில் உண்மை இல்லை என்பது தான் எதார்த்தம். நேரமின்மையல்ல நமது பிரச்சனை, மாறாக நேரம் ஒதுக்க மனமில்லை அல்லது சரியாக திட்டமிட்டு நேரத்தை ஒதுக்க தெரியவில்லை என்பது தான் உண்மை. நம்மை படைத்த இறைவனுக்காக நாம் அன்றாடம் சில மணி நேரம் ஒதுக்க வேண்டும், நமது பயணம் சீராக அமைந்திட, நமது பயணத்தை சரியான பாதையில் கொண்டு செல்ல, நமது பயணத்தில் வெற்றி பரிசை பெற இது மிகவும் அவசியம். கடவுள் தன்னை தேடிவருபவர்களுக்கு நேரம் இல்லை என்ற பதிலை தருவதில்லை.
யோவான் நற்செய்தி 6:27 "அழிந்துபோகும் உணவுக்காக உழைக்க வேண்டாம். நிலைவாழ்வு தரும் அழியாத உணவுக்காகவே உழையுங்கள்". யேசு கிறிஸ்து தனது வாழ்வில் இந்த அழியாத வாழ்வை நாம் எப்படி தேட வேண்டும் என்பதை வாழ்ந்து காட்டினார். அதற்காக தன் உயிரை சிலுவையில் பலியாக தந்து, மீட்பு என்ற வெற்றியை நமக்கு தந்தார். இறைவன் நம்மிடம் எதிர்பார்ப்பது நமது அன்றாட வேலை பளுவுக்கு மத்தியில் அவருக்காக சிறிது நேரத்தை ஒதுக்கவேண்டும் என்பதை தான். கடவுள் 24 மணி நேரம் மட்டுமல்ல நமது வாழ்வின் இறுதி வரை நமக்காக அன்போடு காத்திருக்கின்றார்.

கடவுளை தேடும் மனப்பான்மை இன்றைய காலகட்டத்தில் ஏன் குறைந்து கொண்டே வருகிறது என்பதை சற்று யோசித்து பார்ப்போம். நமது வாழ்வில் நாம் சந்திக்கும் வெற்றிகள், நாம் சாதித்த சாதனைகள், நாம் அனுபவித்த மகிழ்ச்சியான தருணங்களுக்கெல்லாம் நாம் மட்டுமே காரணம் என்றும், நாம் சந்தித்த தோல்விகள், சோகமான தருணங்கள் எல்லாவற்றுக்கும் கடவுள் மட்டுமே காரணம் என்று முரண்பட்டு நினைக்கும் மனநிலை தான். தனது மகன் தோல்வியை அடையவேண்டும் என்று எந்த தந்தையும் நினைப்பதில்லை. அப்படியே மகன் தோல்வியை சந்தித்தாலும் தந்தை அமைதியாக உட்கர்ந்து வேடிக்கை பார்ப்பதில்லை. உதவுவதற்கு அவசியமான வாய்ப்புகளையெல்லாம் பயன்படுத்தி நாம் வெற்றியை அடையும் வரை அவர் ஓய்வதில்லை.

  ஆனால் நாம் நினைப்பது எனது என் தந்தையாகிய கடவுள் என்னை தனியே தவிக்கவிட்டுவிட்டார் என்று நம்புகின்றோம். இந்த தவறான நம்பிக்கையை நீக்கி என் வாழ்வின் வெற்றிகளிலும் தோல்விகளிலும் நம்மோடு உடனிருக்கிறார் என்ற நம்பிக்கை நம்மில் ஆழமாக இருக்க வேண்டும்.

சிந்தனை:
யோவான் நற்செய்தி 16: 20 – 22 இல் "உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன் நீங்கள் அழுவீர்கள், புலம்புவீர்கள் அப்போது உலகம் மகிழும். நீங்கள் துயருறுவீர்கள் ஆனால் உங்கள் துயரம் மகிழ்ச்சியாக மாறும். பிள்ளையைப் பெற்றெடுக்கும்போது தாய் தனக்குப் பேறுகாலம் வந்துவிட்டதால் வேதனை அடைகிறார். ஆனால் பிள்ளையைப் பெற்றெடுத்த பின்பு உலகில் ஒரு மனித உயிர் தோன்றியுள்ளது என்னும் மகிழ்ச்சியால் தம் வேதனையை அவர் மறந்துவிடுகிறார். இப்போது நீங்களும் துயருறுகிறீர்கள். ஆனால் நான் உங்களை மீண்டும் காணும்போது உங்கள் உள்ளம் மகிழ்ச்சி அடையும். உங்கள் மகிழ்ச்சியை யாரும் உங்களிடமிருந்து நீக்கிவிட முடியாது." இந்த ஆழமான நம்பிக்கை நம்மில் ஏற்பட அன்றாடம் கடவுளுக்காக சற்று நேரம் செலவிடவேண்டும். காரணம் நமது வாழ்வின் ஓட்டதிற்கான சக்தி கடவுளோடு நாம் கொள்ளும் அமைதியான உரையாடலில் தான் மறைந்திருக்கின்றது. யேசு கிறிஸ்து சிலுவைச் சாவை ஏற்றுகொள்ள சக்தி தந்தது அவர் தந்தையோடு கொண்ட தனிப்பட்ட உரையாடல் தான். நமது அன்றாட வாழ்வின் ஓட்டத்தில் தேவையற்ற காரியங்களுக்காக, அவசியமற்ற ஆட்களுக்காக நமது நேரத்தை செலவிடும் மனநிலையை மாற்றி நம்மை படைத்து, நம்மோடு பயணிக்கும் கடவுளுளோடும் நேரத்தை செலவிட முடிவெடுப்போம் சாட்சிய வாழ்வின் இலக்கை அடைவோம். இறைவனின் துணையோடும், உடனிருப்போடும் உங்கள் சாட்சியப் பயணம் வெற்றியை நோக்கி தொடர வாழ்த்துகின்றேன், இறைஆசியை பெற ஒருவர் ஒருவருக்காக இறைவேண்டலை தொடருவோம்.

--------- நன்றி ---------- நன்றி ------------ நன்றி -----------

நமது சாட்சிய வாழ்வின் பல்வேறு நிலைகளை உங்களோடு இந்நாள் வரை தொடர்ந்து சிந்திக்க, எனது சிந்தனைகளை எழுத்துருவாக்கம் செய்ய, வாய்ப்புகளை ஏற்படுத்தி தந்த யேர்மன் தமிழ் கத்தோலிக்க ஆன்மீக பணியாளருக்கு எனது மனமார்ந்த நன்றிகள், இறையரசுப் பணியை திறம்பட தொடர்ந்து ஆற்ற என் வாழ்த்துகள்.
[2014-07-21 23:10:00]


எழுத்துருவாக்கம்:

Pater.John Sowri Charles ocd
Karmeliten Kloster
Würzburg
Germany.