ஆன்மீக வலம்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, ஆண்டவரின் நற்செய்தி பணியில் ஆர்வமுள்ள பொதுநிலையினரே, உங்கள் ஆன்மீக சிந்தனைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholic.de என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். எமது ஆன்மீக இயக்குனரின் அனுமதி பெற்று, இங்கே பிரசுரிக்கப்படும்.

இயேசு உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள் (யோவான்:2:5)

தந்தை மகன் தூய ஆவியானவருக்குத் துதியும் ஆராதனையும் நன்றியும்! தந்தையும் தாயுமான எங்கள் அன்பு இறைவா இன்றும் என்றும் எப்பொழுதும் உமது ஆவியின் வல்லமையால் எங்களை நிரப்பும். நாங்கள் கேட்கப்போகும் உமது வார்த்தை எங்கள் பாதைக்கு ஒளியாகவும் எங்கள் வாழ்வுக்கு விளக்காகவும் இருக்க கிருபை செய்தருளும்.

திருத்தூதர் யோவான் எழுதிய நற்செய்தி அதிகாரம் 2, இறைவசனம் ஐந்தில் இவ்இறைவார்த்தையை வாசிக்கின்றோம். செப்டம்பர் 8ம் தேதி நாம் அனைவரும் இயேசுவின் தாய் அன்னை மரியாளின் பிறந்த நாளைக் கொண்டாடுகின்றோம். இந்தவாரம் அன்னைமாயாவைப்பற்றி சிந்திப்போம். அன்னை மரியா எவ்வாறு இறைவனிள் சித்தத்திற்கு பணிந்து இறுதிமட்டும் இயேசுவுடன் பயணித்து தூய்மையான வாழ்வு வாழ்ந்து இறைவனுக்காக தன்னையே அர்ப்பணித்து இறுதியில் விண்ணக மண்ணகத் தாயாக முடிசூட்டி அவருடன் இணைந்து நமக்காக என்றும் பரிந்துரை செய்து வருகின்றாள்;. இன்று அவர் நம்மிடம் கேட்பது இறைமகன் இயேசு சொல்வதை நாம் செய்ய வேண்டுமென்று. இயேசுவின் தாய் பணியாளாரிடம் அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்.

அன்னை மரியளை நாம் மரியே வாழ்க, மிகவும் இரக்கமுள்ள தாயே, கிறிஸ்துவர்களின் சகாயமே, சமாதானத்தின் பெட்கமே, அருள் நிறைந்தவளே பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவள் என்று தினமும் வாழ்த்துகின்றோம் அப்படி நாம் நமது அன்பு அன்னையை வாழ்த்தும் போது நமது வேண்டுதல்கள் என்னவாய் இருக்க வேண்டுமென்றால் இறைமகன் இயேசு சொல்வதைச் செய்ய நமக்கு என்றும் துணை நிற்க மன்றாட வேண்டும். அன்னை மரியாளைப்பற்றி படைப்பின் தொடக்கத்திலே இறைவன் சொல்லியிருப்பதை தொடக்கநூலில் காணலாம். அதிகாரம் மூன்று இறைவசனம் 11 சொல்லுவது “உனக்கும் பெண்ணுக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகையை உண்டாக்குவேன். அவள் வித்து உன் தலையைக் காயப்படுத்தும்” என்று. மேலும் இறைவாக்கினர்; எசாயா நூல் அதிகாரம் 7, இறைவசனம் 14 சொல்லுவது “ஆதலால் ஆண்டவர் தாமே உங்களுக்கு ஓர்; அடையாளத்தை அருள்வார். இதோ கருவுற்றிருக்கும் அந்த இளம் பெண் ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பாள் அக்குழுந்தைக்கு அவள் ‘இம்மானுவேல்”என்று பெயரிடுவாள்” என்றும். திருத்தூதர் மத்தேயு எழுதிய நற்செய்தி அதிகாரம் ஒன்று, 20 முதல் 23 வரை உள்ள இறைவசனங்கள் சொல்லுவது “அவர் இவ்வாறு சிந்தித்துக் கொண்டிருக்கும்போது ஆண்டவரின் தூதர் அவருக்குக் கனவில் தோன்றி, யோசேப்பே, தாவீதின் மகனே, உம் மனைவி மரியாவை ஏற்றக்கொள்ள அஞ்ச வேண்டாம். ஏனெனில் அவர் கருவுற்றிருப்பது தூய ஆவியால்தான். அவர் ஒரு மகனைப் பெற்றெடுப்பார்;. அவருக்கு இயேசு எனப் பெயரிடுவீர். ஏனெனில் அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார் என்றார். இதோ! கன்னி கருவுற்று ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார். அக்குழந்தைக்கு இம்மானுவேல் எனப் பெயரிடுவர்” என்று இறைவாக்கினர் வாயிலாக ஆண்டவர் உரைத்தது நிறைவேறவே இவை யாவும் நிகழ்ந்தன. இம்மானுவேல் என்றால் ‘கடவுள் நம்முடன் இருக்கிறார் என்பது பொருள்” என்று.

நாம் அனைவரும் பேறுபெற்றவர்கள் ஏனெனில் அன்னை மரியாளின் ஆம் என்ற சொல்லால் இறைமகன் இயேசு நமக்கு ஆண்டவராகவும் மீட்பராகவும் கிடைக்கப்பெற்றார். இம்மானுவேலாகிய இறைவன் எப்பொழுதும் நம்முடன் இருப்பதற்கு. அதே போல் இறைமகன் இயேசுவின் வழியாக அன்னை மரியாள் நமக்கு அன்னையாக கிடைக்கப்பெற்றார். மனுக்குலத்திற்கே இறைவன் கொடுத்த மிகப் பெரிய கொடையாகும். அன்னை மரியாளுக்கு நமது நன்றியை இன்று பிறந்தநாள் பரிசாக கொடுப்போம்.

திருத்தூதர் லூக்கா எழுதிய நற்செய்தி அதிகாரம் ஒன்று, இறைவசனம் 28 சொல்லுவது “வானதூதா; மரியாவுக்குத் தோன்றி “அருள்மிகப் பெற்றவரே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்” என்று. மேலும் அதே அதிகாரத்தில் இறைவசனம் 30 முதல் 32 வரை காண்பது “வானதூதர் அவரைப் பார்த்து மரியா அஞ்சவேண்டாம் கடவுளின் அருளைக் கண்டடைந்துள்ளீர். இதோ கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்; அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர். அவர் பெரியவராயிருப்பார், உன்னத கடவுளின் மகன் எனப்படுவார். அவருடைய தந்தை தாவீதின் அரியணையை ஆண்டவராகிய கடவுள் அவருக்கு அளிப்பார்” என்றும், இறைவசனம் 35 காண்பது “வானதூதர் அவரிடம் தூய ஆவி உம்மீது வரும். உன்னத கடவுளின் வல்லமை உம்மேல் நிழலிடும். ஆதலால் உம்மிடம் பிறக்கப் போகும் குழந்தை தூயது. அக்குழந்தை இறைமகன் எனப்படும்”. இறைவசனம் 37ல் காண்பது “ஏனெனில் கடவுளால் இயலாது ஒன்றுமில்லை என்றார்” என்ற வானதூதானின் வார்த்தைக்கு அன்னை மரியாளின் பதில் இவ்வாறு “நான் ஆண்டவரின் அடிமை உம் சொற்படியே எனக்கு நிகழட்டும் என்றார்”. மேலே சொல்லப்பட்ட இறைவார்த்தைகளில் முக்கியமான வார்த்தைகளை சிந்திப்போம். அருள் மிகப் பெற்றவரே வாழ்க, ஆண்டவா; உம்முடனே, மரியா அஞ்சவேண்டாம் கடவுளின் அருளைக் கண்டடைந்துள்ளீர். தூய ஆவி உம்மீது வரும் உன்னத கடவுளின் வல்லமை உம்மேல் நிழலிடும், ஏனெனில் கடவுளால் இயலாது ஒன்றுமில்லை” இறைவன் அன்று அன்னை மரியாவிடம் சொன்ன உயிருள்ள வார்த்தை இன்று நமது வாழ்க்கைக்கு விளக்காகவும் ஒளியாகவும் இருக்கின்றது. இறைமகன் இயேசு நமக்கு சொல்லிய ஆறுதலான வார்த்தை என்னெவென்றால் உங்களோடு என்றும் இருக்கும்படி மற்றொரு துணையாளரை உங்களுக்குத் தருமாறு நான் தந்தையிடம் கேட்பேன். என் பெயரால் தந்தை அனுப்பப்போகிற தூயஆவியாராம் துணையாளர் உங்களுக்கு அனைத்தையும் கற்றுத் தருவார். நான் கூறிய அனைத்தையும் உங்களுக்கு நினைவூட்டுவார், என்று சொல்லிய வாக்கு இன்று எத்தனையோ உள்ளங்களின் வழியாக நடைபெறுவதை அறிகின்றோம் உணர்ந்தும் இருக்கின்றோம். அன்னை மரியாள் தூயஆவியாரால் என்றும் வழிநடத்தபட்டதுபோல் நாமும் இறைவனிடம் தூய ஆவியால் ஆட்கொண்டு அவரது குரலுக்குச் செவிசாய்த்து அதன்படி வாழ்வோம். இறைவனின் ஆவியால் அன்னை மரியாள் நிழலிட்டபோது அவரது உள்ளம் மகிழ்ச்சியால் நிறைந்து “ஆண்டவரை எனது உள்ளம் போற்றிப் பெருமைப் படுத்துகின்றது என்று அவரை புகழந்து போற்றுகின்றாள். தனது உறவினறான எலிசபெத்துக்கு பணிசெய்ய விரைந்து சென்று அவருக்கு எல்லா உதவிகளையும் செய்கின்றார். இறைமகன் இயேசுவுடன் 33 வருடங்களாக நெருக்கமாய் இருந்து அவரை முழுமையாக அறிந்த அன்புத்தாய். கானவில் திருமணம் நேரத்தில் தவித்த குடும்பத்திற்காக இயேசுவிடம் பரிந்துபேசி அவர்களுடைய தேவைகளை பூர்த்தி செய்கின்றார்; நமது அன்பு அன்னை. இயேசுவே அவருடைய அன்புத் தாயை நம் அனைவருக்கும் அன்னையாக இருக்க, தான் சிலுவையில் தொங்கும்போது கொடுத்தவர். நமக்கென்று இறைவனிடம் பரிந்துபேச இறைவனின் அம்மா உள்ளார்கள் ஆகையால் எதற்கும் கவலைப்படவோ பயப்படவோ தேவையிலை ஆனால் அவர்கள் நம்மிடம் கேட்பது ஒன்றே ஒன்று இறைமகன் இயேசு சொல்லுவதை நமது வாழ்க்கையில் கடைபிடித்து வாழ வேண்டுமென்று. இன்று நாம் யார் சொல்லுவதை கேட்டு வாழ்கின்றோம்? இறைவன் சொல்லுவதையா அல்லது உலகம் என்னும் மாயை சொல்லுவதையா என்று சற்று சிந்திப்போம். இறைவன் கொடுத்த வார்த்தைகள் நம் கைகளில் உள்ளது அதைப்படித்து அதன்படி வாழ ஆவல் எடுக்கின்றோமா? என்று நம்மை நாமே சோதிப்போம். இறைவன் நமது கதவருகில் நின்ற தட்டிக்கொண்டிருப்பதை கேட்கவில்லையா? மனம்மாறி இறைவனை நம்புவோம். அன்னை மரியாவைப்போல் இறைவனுடன் இணைந்து வாழப் பழகுவோம்.

அன்னை மரியாள் திருத்தூதர்களுடன் ஒன்றித்து செபித்து தூய ஆவியின் கெடைகளைப் பெற்றது போல் நாமும் நமது குடும்பத்தில் ஒன்றித்து செபத்தில் இறைவனுடன் உறவாடி ஆவியானவரின் கொடைகளால் நிரம்ப வழிநடத்த தினமும் செபிப்போம். கிறிஸ்துவர்களின் சகாயமே எங்களுக்காக இறைவனிடம் மன்றாடும்.
[2013-09-09 22:10:28]


எழுத்துருவாக்கம்:

Sr.Jophy
Klooster Sancta Maria
6161 CV Geleen
Nederland