ஆன்மீக வலம்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, ஆண்டவரின் நற்செய்தி பணியில் ஆர்வமுள்ள பொதுநிலையினரே, உங்கள் ஆன்மீக சிந்தனைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholic.de என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். எமது ஆன்மீக இயக்குனரின் அனுமதி பெற்று, இங்கே பிரசுரிக்கப்படும்.

தூய ஆவியாரின் செயல்பாடுகள்
பாகம் 4“ஐயா, தண்ணீர் மொள்ள உம்மிடம் ஒன்றுமில்லை, கிணறும் ஆழமானது. அப்டியிருக்க வாழ்வு தரும் தண்ணீர் உமக்கு எங்கிருந்து கிடைக்கும்? அப்பெண் அவரை நோக்கி, “ஐயா. அத்தண்ணீரை எனக்குக் கொடும், அப்போது எனக்குத் தாகமும் எடுக்காது, தண்ணீர் மொள்ள நான் இங்கு வரத் தேவையும் இருக்காது. யோவான்:4:11:15.

வாழ்வு தரும் தண்ணீர் இறைவனிடம்தான் உள்ளது என்பதை இறைமகன் இயேசு சமாரியப் பெண்ணிடம் கூறுகின்றார். இறைமகன் இயேசுவிற்கும் சமாரியப் பெண்ணிற்கும் இடையில் நடைபெறுகின்ற உரையாடலின் வழியாக, சமாரியப் பெண்ணிற்கு இறைவனின் கொடைகளைப் பற்றியும், இறைமகன் இயேசுதான் மெசியா என்பதையும் அவளால் அறிய முடிகின்றது. திருத்தூதர் யோவான் எழுதிய நற்செய்தி அதிகாரம் 4:1-25 வரை உள்ள இறை வசனங்களை ஆவியானவரின் துணைகொண்டு மெளனமாக வாசித்து தியானித்தால், இறைமகன் இயேசுவை சமாரியப் பெண் கண்டுகொண்டதுபோல் உறுதியாக நம்மாலும் அவருடைய உயிருள்ள பிருசன்னத்தை உணர்ந்து கண்டுகொள்ள முடியும். இறைமகன் இயேசுதான் சமாரியப் பெண்ணிடம் உரையாடலைத் தொடங்கின்றார். நமது இறைவன் மனிதனைத் தேடிவருபவர். பாவகளாகிய நம்மை மீட்க வானிலிருந்து இறங்கி வந்து வாழ்வு தரும் இறைவன். அன்பும் பரிவும் கருணையும் கொண்ட இறைமகன் இயேசு பிறசமூகத்திற்கு வாழ்வு கொடுக்க முதலடி எடுத்து வைக்கின்றார். இறைமகன் இயேசு சமாரியாப் பெண்ணை எதிர்கொண்டபோது அவளுடைய வாழ்க்கையில் மூன்று சம்பவங்கள் நடக்கின்றது.

இறைமகன் இயேசுவை சந்திக்கின்றாள்.
இறைமகன் இயேசுவை மெசியா என்று தெளிவாக அறிகின்றாள்.
இறைமகன் இயேசுவைப் பற்றி தன்னுடைய மக்களுக்கு அறிவிக்கின்றாள்.

சமாயரியப் பெண்ணின் வாழ்க்கையில் இறைமகன் இயேசுதான் முதல்அடி எடுத்து வைக்கின்றார். ஏனென்றால் நமது இறைவன் மனிதர்களின் நடுவே வாழ விரும்புகின்றவர். அவருடைய உறைவிடம் மனிதர்களின் நடுவே உள்ளது என்று இறைவார்த்தை கூறுகின்றது. இங்கு இறைமகன் இயேசுவின் உரையாடலைக் கவனிப்போம். “குடிக்க எனக்குத் தண்ணீர் கொடும்“ என்று கேட்டபோது, அவள் சொல்லுகின்ற பதில் நீர் யூதர், நானோ சமாரியப் பெண் நீர் என்னிடம் குடிக்கத் தண்ணீர் கேட்பது எப்படி? ஏனெனில் யூதர்கள் சமாரியரோடு பழுகுவதில்லை என்று ஆனால் இறைமகன் இயேசு யூதர்களுக்கு மட்டும் இறைவனாக வரவில்லை மாறாக எல்லோருக்கும் வாழ்வு கொடுக்க வந்தவர் என்பதை அவருடைய வார்த்தையாலே சமாரியப் பெண்ணுக்கு விடை தருகின்றார். “கடவுளுடைய கொடை எது என்பதையும் குடிக்கத் தண்ணீர் கொடும் எனக் கேட்பவர் யார் என்பதையும் நீர் அறிந்திருந்தால் நீரே அவரிடம் கேட்டிருப்பீர். அவரும் உமக்கு வாழ்வு தரும் தண்ணீரைக் கொடுத்திருப்பார் “ என்று தனது உரையாடலைத் தொடங்குகின்றார். சமாரியப் பெண் இயேசுவுடன் உரையாடியபோது அவர் ஓர் இறைவாக்கினர் என்பதை அவர் பகிர்ந்த வார்த்தையாலே அவளால் உணரமுடிகின்றது. இயேசுவின் கையில் தண்ணீர் மொள்ள ஒன்றுமில்லை, கிணறும் ஆழமானது. வழக்கமாக நாங்கள் அனைவரும் குடிக்கும் தண்ணீர், இவரால் எப்படி எனக்கு வாழ்வு தரும் தண்ணீரை கொடுக்க முடியும் என்று எண்ணியிருக்கலாம்.

உயிருள்ள இயேசுவின் வார்த்தை அவளுடைய உள்ளத்தை ஊடுருவி இருக்கும். அவளுடைய சிந்தனையையும் நோக்கங்களையும் சீர்தூக்கிப் பார்க்க தூண்டியிருக்கும். இறைமகனை முதல்முறை சந்தித்ததால் ஏற்படுகின்ற மாற்றங்கள் அவளுடைய வாழ்க்கையில் புதிய பாதையை நோக்கி வழி நடத்தியிருக்ககூடும். மேலும் இறைமகன் இயேசு கூறிய இரண்டு வசனங்களால் அவளுடைய வாழ்வு மாற்றம் பெற்றிருப்பதை காணலாம். “இந்தத் தண்ணீரைக் குடிக்கும் ஒவ்வொருவருக்கும் மீண்டும் தாகம் எடுக்கும். நான் கொடுக்கும் தண்ணீர் அதைக் குடிப்பவருக்குள் பொங்கி எழும் ஊற்றாக மாறி நிலைவாழ்வு அளிக்கும் என்று. சமாரியப் பெண் இயேசுவிடம் அத்தண்ணீரைக் கொடுக்கும்படி அவரிடம் தாழ்மையுடன் வேண்டுகின்றாள். அவளிடம் நாம் படிக்கவேண்டிய பண்புகள் தான் தாழ்மையுடன் இறைவனின் குரலுக்கு செவிமடுப்பது. தாழ்மையுடன் தனது தவறுகளை ஒப்புக்கொள்வது. இறைவனை நாம் செப உறவின் வழியாக அவருடன் உறவாடி அவரை நமது விசுவாசக் கண்களால் சந்திக்கும் போது நமது வாழ்வு முழுமையாக மாறும் என்பதில் ஐயமே இல்லை. அதோடு தூயஆவியானவர் நம்மை தனது வார்ததையால் நம்மை ஆட்கொள்ளும்போது நல்வழிகளையும் நமது உள்ளத்தின் நோக்கங்களையும் ஆய்வு செய்ய துணைபுரிவார். ஆண்டவரே நான் தகுதியற்றவன் ஆனால் ஒரு வார்த்தை சொல்லும் எனது ஆன்மா குணமடையும் என்று சமாரியப் பெண் உள்ளத்தில் வேண்டியிருக்கக் கூடும். இறைமகன் இயேசு அவள் வாழ்ந்த வாழ்க்கையைப்பற்றிய உண்மைகளை எடுத்துக் கூறியபோது வியப்படைந்து மனம்மாறி அவரில் நம்பிக்கையும் விசுவாசமும் வளர ஆரம்பிக்கின்றது. இறைமகன் இயேசுவோடு கொண்ட உறவின் ஆழமான சங்கமம் அவரை ஓர் இறைவாக்கினர் என்று உணரக்கூடிய ஆற்றலைப் பெறுகின்றாள். சமாரியப் பெண்ணின் முன்னோர்கள் இறைவனிடம் பற்று உள்ளவர்கள் என்பதை அவள் உணர்ந்திருந்தபோதும் அவளுக்கு உண்மையான இறைஅனுபவம் எது என்பதை உணராமல் பழைய வாழ்க்கையிலே வாழ்ந்து கொண்டிருந்தவள். இயேசுவுடன் உரையாடியதால் புது இறை அனுபவத்தைப் பெறுகின்றாள். இறைமகன் இயேசுதான் உண்மையான மெசியா என்பதை அவளால் நன்றாக உணரமுடிகின்றது. அதனால்தான் அவளுடைய உடமைகளை விட்டுவிட்டு ஊருக்குள் சென்று இறைமகன் இயேசுவைப் பற்றி எல்லோரிடமும் பறைசாற்ற முயல்கின்றாள். அவள்பெற்ற ஓர் இறைஅனுபவத்தால் ஊர் முழுவதுமே இறைமகன் இயேசு ஓர் இறைவாக்கினர்இ மெசியா என்பதை நம்ப முடிந்தது. ஏனென்றால் அவர்களும் மெசியாவின் வருகைக்காக காத்திருந்தவர்கள்.

இன்று நம்முடைய கடமை நிலைவாழ்வின் பாதையில் பயணிப்பது ஆகையால் இறைமகன் நமக்கு கற்பித்ததுபோல் உருவமற்ற தந்தையாம் இறைவனை ஆவியிலும் உண்மையிலும் வழிபட்டு ஆராதிக்கும்போது அவருடைய இயல்பையும் சாயலையும் பெற்று அவரைப்போல் சொல்லிலும் செயலிலும் மாறுதல் பெறுவோம். நீங்களும், நானும் பல ஆண்டுகளாக இறைமகன் இயேசுவை அறிவோம் விசுவசிக்கின்றோம் நம்புகின்றோம். சமாரியப் பெண் இயேசுவுடன் உரையாடியதுபோல நாமும் பயமின்றி இயேசுவை அணுகிச்செல்லுகின்றோமா? இயேசுவுடன் நமது உறவுமுறை எப்படி? அந்த ஆழமான பகிர்வு உறவுகள் நம்மை நிலைவாழ்வுக்கு கொண்டு செல்கின்றதா? திருப்பாடலில் செபிக்கின்றோம் “கடவுளுக்கேற்ற பலி நொறுங்கிய நெஞ்சம், குற்றமுணர்ந்த உள்ளத்தை அவர் அவமதிப்பதில்லை என்று. மேலும் இயேசு சக்கேயுவிடம் சொல்லுவது “ இழந்து போனதைத் தேடி மீட்கவே மானிடமகன் வந்திருக்கின்றார் என்று. நாம் அனைவரும் பாவிகள் நம்மை மீட்டு நிலைவாழ்வு கொடுக்க இறைவன் என்றும் காத்து நிற்கின்றார். சமாரியப் பெண்ணைப்போல் இயேசுவுடன் உண்மையில் உறவாடி அவருடை அருள் மழையான ஆவியானவரின் கொடைகளைப் பெற்று அவருக்கு விருப்பமுள்ள சாட்சிகளாக வாழ்வோம்.

சிந்தனை:

கடவுள் உருவமற்றவர். அவரை வழிபடுவோர் அவரது உண்மை இயல்புக்க ஏற்ப உள்ளத்தில்தான் வழிபட வேண்டும். யோவான்:4:24 [2014-07-10 22:20:25]


எழுத்துருவாக்கம்:

Sr.Jophy Amalraj
Klooster Sancta Maria
6161 CV Geleen
Netherland