ஆன்மீக வலம்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, ஆண்டவரின் நற்செய்தி பணியில் ஆர்வமுள்ள பொதுநிலையினரே, உங்கள் ஆன்மீக சிந்தனைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholic.de என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். எமது ஆன்மீக இயக்குனரின் அனுமதி பெற்று, இங்கே பிரசுரிக்கப்படும்.









தப்பித்தல் தற்காலிகமானது!



டாக்டர்: நீங்கள் எப்போது கடைசியாக முழு உடற்பரிசோதனையை மேற்கொண்டீர்கள்?
டேவிட்: நான் அதை ஒருபோதும் செய்துகொண்டது இல்லை
டாக்டர்: ஏன் செய்யவில்லை? நாற்பது வயதைக் கடந்துவிட்டால், இரண்டு வருடத்திற்கு ஒரு முறை முழு உடற்பரிசோதனை செய்துகொள்வது அவசியம்
டேவிட்: நான் அப்பரிசோதனையைச் செய்து கொள்ள விரும்பவில்லை. அவர்கள் எனக்கு கொழுப்புச் சத்து அதிகமாக இருக்கிறது, சர்க்கரை வியாதி இருக்கிறது, அல்லது அதைவிட பயங்கரமான நோய் ஒன்று இருக்கிறது என்ற அறிக்கையுடன் வருவார்கள். நான் இப்பொழுது நன்றாக இருக்கிறேன். ஒரே ஒருமுறை உடல் பரிசோதனைக்கு சென்றுவிட்டேன் என்றால், நான் ஒரு நோயாளி போல உணர்வேன்.
மேற்கண்ட உரையாடலில் கண்டதுபோல, பல நேரங்களில் நாம் நமது பிரச்சினைகளிலிருந்து தப்பித்தால் போதும் என்று நினைக்கிறோம். சிக்கல்களே நமது வாழ்வில் வரக்கூடாது என்று எண்ணுகிறோம். எந்தளவு நாம் ஒதுங்க நினைக்கிறோமோ, அந்தளவுக்கு பிரச்சினைகள் நம் காலை சுற்றிய கயிறாய் நம்மோடே வந்துகொண்டிருக்கிறது.

அப்படியென்றால் அதை எதிர்கொண்டால் பிரச்சினைகளே வராதா?

அப்போதும் வரும். ஆனால் அதை எதிர்கொள்ளும் வல்லமை அல்லது அனுபவம் கிடைத்துவிடும். பல சோதனைகள், அனுபவங்களிலிருந்துதான் பல அறிவியல் கண்டுபிடிப்புகள் கூட நிகழ்த்தப்பட்டிருக்கிறது. சிக்கல்களை எதிர்கொண்டவர்களைத்தான் நாம் மகான்கள், புனிதர்கள், போராளிகள் என்றழைக்கின்றோம்.
இந்த உலகம் கெட்டவர்களால் பாழடையவில்லை. அமைதி காக்கும் நல்லவர்களால்தான் இவ்வுலகம் பாழடைகிறது. சிக்கல்களிலிருந்து ஒதுங்க நினைக்கும்போது அது இரட்டிப்பாகிறது. கோழைகளல்ல; யதார்த்தங்களை சந்திக்கும் தைரியமானவர்கள் நாம்.
தப்பிக்கும் போக்கு கோழைகளை உருவாக்குகிறது. இக்கோழைகள் மூடநம்பிக்கைகளை உருவாக்குகிறார்கள். அதன் விளைவாக சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படுகின்றன. இதுவே மாந்தரின் முழுதளாவிய முன்னேற்றத்திற்கு பெரிய தடைக்கல்.

இயேசு சிக்கல்களை எதிர்கொண்டார்

இயேசு என்றுமே பிரச்சனைகளை கண்டு பயந்து ஒதுங்கியதில்லை. தைரியம் அல்லது வீரம் என்பது வன்முறையின் வெளிப்பாடல்ல. வன்முறை எப்போதுமே கோழைகளின் ஆயுதமாகத்தான் இருந்திருக்கிறது. மென்முறை, அகிம்சை, மன்னிப்பு, அன்பு போன்றவற்றின் உச்சம்தான் தைரியம். இத்தகைய வீரம் இயேசுவிடம் இருந்தது. அடுத்தவர்க்கான பணியை முன்னெடுக்க இயேசு என்றுமே தயங்கதில்லை.

1. கோவிலை சந்தைக்கூடமாக்கிய வியாபாரிகளை இயேசு விரட்டியடித்தார் (யோவான் 2)
2. பரிசேயர்கள், சதுசேயர்கள் குறை கூறுவார்கள் என்று தெரிந்தும் பாவிகள், ஆயக்காரர்கள், வரித்தண்டுவோர் ஆகியோருடன் உணவருந்தினார்.
3. யூதர்கள் சமாரியர்களோடு உறவாடுவதில்லை என்று தெரிந்தும் யாக்கோபின் கிணற்றருகில் சமாரியப் பெண்ணை சந்தித்து பேசினார். (யோவான் 4)
4. மக்கள் அவரை அரசர் என்று கொண்டாடினாலும், கல்வாரி சிலுவைச் சாவை நோக்கியே இயேசுவின் எண்ணம் இருந்தது.
5. தனக்கு மரணம் நிகழும் என தெரிந்தும், அரசர்களை, பரிசேயர்களை, சதுசேயர்களை வன்மையாக கண்டித்தார்.

இயேசுவின் சிக்கல்களை எதிர்கொள்ளும் வீரம் என்பது அவரது மன்னிப்பின் வழி உருவானது.

தப்பித்தல் தற்காலிகமானது! எதிர்கொள்ளல் முகாமையானது!!
[2014-07-06 17:29:20]


எழுத்துருவாக்கம்:

அருள்திரு. மை. அடைக்கலம் டொனால்டு
கும்பகோணம் மறைமாவட்டம்
தமிழகம்
இந்தியா