ஆன்மீக வலம்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, ஆண்டவரின் நற்செய்தி பணியில் ஆர்வமுள்ள பொதுநிலையினரே, உங்கள் ஆன்மீக சிந்தனைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholic.de என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். எமது ஆன்மீக இயக்குனரின் அனுமதி பெற்று, இங்கே பிரசுரிக்கப்படும்.

தூய ஆவியாரின் செயல்பாடுகள்
பாகம் 3எருசலேமில் சிமியோன் என்பவர் இருந்தார். அவர் நேர்மையானவர், இறைப்பற்றுக் கொண்டவர். இஸ்ரயேலுக்கு வாக்களிக்கப்பட்ட ஆறுதலை எதிர்பார்த்திருந்தவர். தூய ஆவியை அவர் பெற்றிருந்தார். ஆண்டவருடைய மெசியாவைக் காணுமுன் அவர் சாகப்போவதில்லை என்று தூய ஆவியால் உணர்த்தப்பட்டிருந்தார்.(லூக்கா:2:25-26)

வாழ்வு தரும் ஊற்று உம்மிடமே உள்ளது இறைவா. நீர் கொடுக்கும் வாழ்வு மனிதருக்கு ஒளியாய் இருந்து. அவர்களை நேர்மையாளர்களாகவும், இறைபற்று உள்ளவர்களாகவும், தூய ஆவியானவர் தங்கும் கோவிலாகவும், தூய ஆவியானவரின் தூண்டுதலுக்கு செவி கொடுக்கும் உள்ளமாகவும் அவர்களை உறுமாற்றுகின்றது. அப்படி வாழ்ந்தவர்தான் லூக்கா நற்செய்தியில் கூறப்படும் சிமியோன். குழந்தை இயேசுவை கையில் ஏந்தி தந்தையாம் இறைவனைப் போற்ற பாக்கியம் பெற்றவர். மூவொரு இறைவனையே தனது கையில் சுமக்க தேர்ந்தெடுக்கப்பட்டவர். லூக்கா நற்செய்தியில் கூறப்படும் இறைவசனத்தில் அவருடைய முக்கியமான குணங்களைக் காணலாம். அவர் ஒர் நேர்மையாளர், இறைபற்றுடையவர், இறைவனுடைய வாக்குறுதிக்காக நம்பிக்கையுடன் காத்திருந்தவர், தூய ஆவியானவரால் ஆட்கொள்ளப்பட்டவர், தூய ஆவியானவரின் தூண்டுதலுக்கேற்ப வாழ்ந்தவர். தூய ஆவியானவரின் துணையால் குழந்தை இயேசுவுக்கும், அவருடைய அன்புத்தாய் மரியாளுக்கும் நிகழப்போவதை முன்கூட்டியே அறிவிக்கும் வல்லமையைப் பெற்றிருந்தவர். திருப்பாடல்119:1-2, காண்பது “மாசற்றவழியில் நடப்போர் பேறுபெற்றோர், ஆண்டவர் திருச்சட்டப்படி நடப்போர் பேறுபெற்றோர். அவர் தந்த ஒழுங்குமுறைகளைக் கடைப்பிடிப்போர், முழுமனத்தோடு அவரைத் தேடுவோர் பேறுபெற்றோர்“. இவ்வார்த்தையின்படி இறைவாக்கினர் சிமியோன் வாழ்ந்திருக்கலாம். அவர் இறைவனுக்கும், அவருடைய வழிமுறைகளுக்கும், விழுமியங்களுக்கும் முதலிடம் கொடுத்து இறைவனுடன் உறவில் நாளும் பொழுதும் வளர்ந்து இறைவனில் உயர்ந்த இடத்தைப் பெற்றிருந்ததால்தான் அவரால் மனிதனாகப் பிறந்த சிறு குழந்தையை இறைமகன் இயேசு பிற இனத்தாருக்கும் ஒளியாகவும், மீட்பராகவும் இருப்பவர் என்பதை அவரால் உணர்ந்து அறிந்து அவருடைய அகக்கண்கள் திறந்து இறைமகன் இயேசு என்று கூறமுடிந்தது. அதோடு அன்னை மாரியாளிடமும் குழந்தையைப்பற்றி கூறமுடிந்தது. மேலும் இறைவார்த்தை கூறுகின்றது அன்னை மரியாளின் உள்ளத்தையும் ஒரு வாள் ஊடுருவிப் பாயும் என்றும்; அவளுடைய அன்பு மகன் எதிர்கொள்ளப்போகும் சிலுவை மரணத்தைப் பற்றியும் அவரால் முன்கூடிட்டியே சொல்லமுடிந்தது. விடுதலைபப் பயணம் நூலில் இறைவன் மோசேயிடம் “நானே உன் நாவில் இருப்பேன். நீ பேசவேண்டியதை உனக்குக் கற்பிப்பேன் என்று கூறிய இறைவன், சிமியோன் என்பவரின் நாவிலிருந்து செயலாற்றுகின்றதை உணரலாம். இன்று இறைவாக்கினர் சிமியோனிடம் (சிமியோனுடைய) காணுகின்ற நற்குணங்களைப் பெற்றவர்களாக நாம் ஒவ்வொருவரும் வாழ வேண்டும். கிறிஸ்துவர்களாகிய நாம் பேறு பெற்றவர்கள். திருமுழுக்கின் வழியாக நாம் அவரோடு பங்குகொண்டுள்ளோம் என்பதை விசுவசிக்கின்றோம். உயிர்த்த இயேசுவின் பிரசன்னமும் அவர் வாக்களித்த ஆவியானவரும் நம்மில் என்றும் வாசம் செய்கின்றார். நாம் ஒவ்வொருவரும் இறைவனை சுமந்து செல்லும் மகனாக, மகளாக மாற வேண்டும். இறைமகன் இயேசு உயிருடன் மீண்டும் உயிர் பெற்று இறைபிரசன்னமாகும் உன்னத திருப்பலி, இறைவனுடைய வார்த்தையும், ஜெபம் என்னும் இறைஉறவு, அனைத்தும் நமக்கு இறைவனால் கொடுக்கப்பட்ட அருள்கொடையாகும். மேலைநாடுகளில் வாழும் நாம் அனைவரும் முக்கியமாக சிந்திக்க வேண்டியது நம்முடைய கிறிஸ்துவ வாழ்வைப்பற்றி. தாய்நாட்டில் பெற்ற கிறிஸ்துவ விசுவாச நெறிகளுக்கும், விழுமியங்களுக்கு முதலிடம் கொடுக்கின்றோமா என்று சிந்திப்போம்? நம்முடைய குடும்ப செபம் என்ற இறைசமூகத்தின் வழியாக இறைவனுடன் உறவாடுகின்றோமா? ஞாயிற்றுக்கிழமைத் திருப்பலி திருவழிபாட்டில் குடும்பமாக பங்குகொள்கின்றோமா? இறைவார்த்தையைக் குடும்பமாக வாசித்து பகிர்ந்து அதன்படி வாழ மற்றவர்களுக்கு பக்கத் துணையாக நிற்கின்றோமா? நமது உயிர்த்த ஆண்டவரை நம்பினால் அவருடைய மாட்சியையும், அதியங்களையும், அற்புதங்களையும் நம் கண்முன்னே நடத்துவார்.

நமது அன்றாட நடைமுறை வாழ்க்கையில் மேலைநாட்டு சட்டதிட்டங்களைக் கடைபிடித்து அதற்பேற்ப நம்முடைய வாழக்கைப் பாதையை மாற்றிக்கொள்கின்றோம். அவற்றைக் கண்ணும் கருத்துமாய் நடைமுறையில் செயல்படுத்துகின்றோம். ஆனால் நிலைவாழ்வு தரும் இறைவனுக்கு முதலிடம் கொடுக்காமல் ஆடம்பர வாழ்க்கையிலும், கொண்டாட்டங்களிலும் நாம் அதிகம் நேரத்தை செலவிடுகின்றோம். நாம் பெற்ற இறைவிசுவாசம் இறைஆன்மீகத்தை தொலைத்துவிடாமல் இறைவாக்கினர் சிமியோனைப்போல் நேர்மையுள்ளவர்களாகவும், இறைபற்றுள்ளவர்களாகவும், ஆவியானவரின் தூண்டுதலுக்கேற்ப வாழ்பவர்களாகவும் மாற தூய ஆவியானவரின் துணைவேண்டுவோம். உலகம் முடியும் மட்டும் நான் உங்களோடு இருப்பேன் என்று சொல்லிய உயிர்த்த நம் ஆண்டவர் நமக்கு என்றும் துணையாக இருப்பார் என்பதை விசுவசித்து இனிவரும் நாட்களில் ஆவியானவரின் வருகைக்காக விழிப்போடு இறைவனுடன் இறைஉறவில் குடும்பமாக பங்கேற்று ஆவியானவரில் புதுப்படைப்பாக மாற இறைவிடாது கண்ணிர்விட்டு மன்றாடுவோம். இறைவனால் ஆகாதது ஒன்றுமில்லை. ஆண்டவரில் நமது வீட்டைக் கட்டி எழுப்புவோம்.

சிந்தனை:
அவரே உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார். உலகம் அவரை ஏற்றுக்கொள்ள இயலாது. ஏனெனில் அது அவரைக் காண்பதுமில்லை, அறிவதுமில்லை. நீங்கள் அவரை அறிந்திருக்கிறீர்கள். ஏனெனில் அவர் உங்களோடு தங்கியிருக்கிறார், உங்களுக்குள்ளும் இருக்கிறார். (யோவான் 14:17)
[2014-05-25 22:27:25]


எழுத்துருவாக்கம்:

Sr.Jophy Amalraj
Klooster Sancta Maria
6161 CV Geleen
Netherland