ஆன்மீக வலம்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, ஆண்டவரின் நற்செய்தி பணியில் ஆர்வமுள்ள பொதுநிலையினரே, உங்கள் ஆன்மீக சிந்தனைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholic.de என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். எமது ஆன்மீக இயக்குனரின் அனுமதி பெற்று, இங்கே பிரசுரிக்கப்படும்.

அன்பின் இதயம்இதயம் என்றால் உயிர், இயக்கம், உணர்வு இருக்கும். இப்படி இன்னும் மனிதவாழ்க்கைக்கு தேவையான எல்லா மதிப்பீடுகளையும் தன்னகத்தே கொண்ட இதயம் தான் இயேசுவின் திரு இருதயம், அன்னை மரியாவின் வியாகுல இதயம். இவ்விரண்டும் நம்மை காக்கும், நம்மை வழிநடத்தும், நம்மை அன்பு செய்யும் இதயம்.

இயேசுவின் இதயம்

இயேசுவின் திரு இதய பெருவிழா 19 ஆம் நூற்றாண்டிலிருந்தே கத்தோலிக்க திருச்சபையில் கொண்டாடப்பட்டு வருகிறது. மரித்த பிறகும் கூட இரத்தமும், தண்ணீரும் வெளிவந்து நம்மை குணமளிக்கும் அருட்சாதனமானார் இயேசு. (யோவான் 19:34). இயேசுவின் இதயம் தம் தந்தையின் அன்பை, உறவை நிறைவாக வெளிப்படுத்தும் அடையாள சின்னமாக உள்ளது. இயேசுவின் திருஇதயம் மனித இனத்தின் மீது வைத்த அளவில்லா பேரன்பை குறிக்கும் குறியீடு ஆகும். காணாமல் போன அந்த ஒற்றை ஆட்டைத் தேடும் இதயம். தேடி கண்டுபிடித்தவுடன் அதை உரக்க சொல்லி குதித்து மகிழும் இதயம். சிலுவை வேதனையிலும் கள்வனை மன்னித்து, சிலுவையில் அறைந்த யூதர்களை மன்னித்த இதயம்.

அன்னை மரியாவின் இதயம்

அன்னை மரியாவின் திரு இருதய பெருவிழாவை திருத்தந்தை பன்னிரெண்டாம் பயஸ் அவர்கள் 1944 ஆம் ஆண்டு தொடங்கிவைத்தார். அன்னை மரியாவின் அமல இதயம் தூய்மையின் குறியீடு. "இதோ உமது அடிமை" என்ற வார்த்தையின் மூலம் படைத்தவருக்கே தன்னை முழுவதும் அர்ப்பணித்த இதயம் தான் அன்னை மரியாவின் திரு இதயம். கானாவூர் திருமண நிகழ்ச்சியில் நாம் அறிந்ததுபோல, பிறருக்காக துடிக்கின்ற தாய்மை இதயம். பிறருக்காக பரிந்து பேசும் இதயம். எலிசபெத் பேறுகாலத்தில், கேள்விப்பட்டவுடன் ஓடோடி சென்று உதவும் இதயம். புனித பெர்னார்டு சொல்வதைப்போல, படைப்பின் சிகரமான மானிடவாழ்வின் தாயான அன்னை மரியாவின் இதயம் இறையன்பின் களஞ்சியமாக உள்ளது.

இதயம்: அது அன்பு, கனிவு, தியாகம்
இதயம்: அது பண்பு, பரிவு, பாசம்
இதயம்: அது இரக்கம், இனிமை, பகிர்வு
இதயம்: அது ஞானம், தூய்மை, தெளிவு


இருதயராஜ் என்பவர் விபத்தில் அடிப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு இரத்தம் தேவைப்பட்டது. அந்தோ பரிதாபம்! அவரின் மனைவியின் இரத்தமும் சேரவில்லை. உறவினர்கள், நண்பர்கள் அவருக்காக இரத்தம் கொடுக்க முன்வரவில்லை. ஆனால் அமல்ராஜ் என்பவர் முன்வந்து இரத்தம் கொடுத்தார். இதற்கு நன்றி கூறும் விதமாக இருதயராஜின் மனைவி, இரத்தம் வழங்கிய அமல்ராஜூக்கு அவரின் நிலையை கண்டு பணஉதவி செய்ய முன்வந்தார். ஆனால் அமல்ராஜ் அதை வாங்க மறுத்து, "இயேசு நமக்காக இரத்தம் சிந்தினாரே; அவர் என்ன வாங்கினார்?" என்று கூறிவிட்டு தன் வழி நடந்தார். நாம் பலரது இதயத்தில் இடம்பெற வேண்டும் என்று விரும்புகிறோம். இருப்பினும் நமது மனம் நிறைவு காண்பது இல்லை. இயேசுவே நம் மனதின் நிறைவு. அவரின் அன்பொழுகும் இதயமே நம்மை நிறைவாக்கும் கூடு.
[2014-05-22 22:34:19]


எழுத்துருவாக்கம்:

அருள்சகோதரி ஷர்மிலா ரோசரி ப்ரியா FSAG,
டில்லன்பூர்க்,
யேர்மனி