ஆன்மீக வலம்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, ஆண்டவரின் நற்செய்தி பணியில் ஆர்வமுள்ள பொதுநிலையினரே, உங்கள் ஆன்மீக சிந்தனைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholic.de என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். எமது ஆன்மீக இயக்குனரின் அனுமதி பெற்று, இங்கே பிரசுரிக்கப்படும்.









தூய ஆவியாரின் செயல்பாடுகள்
பாகம் 2

அவர்கள் இருவரும் கடவுள் பார்வையில் நேர்மையானவர்களாய் விளங்கினார்கள். ஆண்டவருடைய அனைத்துக் கட்டளைகளுக்கும் ஒழுங்குகளுக்கும் ஏற்பக் குற்றமற்றவர்களாய் நடந்து வந்தார்கள். (லூக்கா 1:6)

இறைவனின் நியமங்களையும் நீதிநெறிகளையும் கவனமாய்ச் செயல்படுதுத்தியவர்கள்தான் திருமுழுக்கு யோவானின் பெற்றோர்கள். இறைவன் அவர்களுக்கு புதிய இதயத்தையும், புதிய ஆவியையும் கொடுத்து ஆண்டவரின் வழியை செம்மைப்படுத்த, ஆண்டவரின் பார்வையில் பெரியவராய், தூய ஆவியால் முற்றிலும் அபிசேகம் பெற்றவரை உலகிற்கு கொண்டு வந்தார்கள். செக்கரியா, எலிசபெத்தின் வாழ்க்கையில் தூய ஆவியார் எவ்வாறு செயல்பட்டார் என்று சிந்திப்போம்.

திருமுழுக்கு யோவானின் பெற்றோர்களாகிய செக்கரியா, எலிசபெத்து இருவரும் இறைவனின் பார்வையில் நேர்மையாளர்களாகவும், இறைவனின் கட்டளைகளைப் பின்பற்றி குற்றமற்றவர்களாய் வாழ்ந்தார்கள் என்று லூக்கா நற்செய்தி அதிகாரம் ஒன்று, இறைவசனம் ஆறில் சொல்லப்படுகின்றது. செக்கரியா கடவுளின் திருமுன் குருத்துவப் பணி ஏற்று ஆண்டவருடைய திருக்கோவிலுக்கு தூபம் காட்டுவது வழக்கமாக இருந்தது. ஆண்டவருடைய பணிசெய்வதால் அவர் கண்டிப்பாக இறை அனுபவத்தை பலமுறை பெற்றிருக்கலாம். செக்கரியா, எலிசபெத்தின் முக்கிய குணங்களை இறைவசனத்தில் காண்பது முக்கியம். அவர்கள் நேர்மையானவர்கள், குற்றமற்றவர்கள், இறைவனுடைய கட்டளைகளை ஒழுங்காக கடைபிடித்தவர்கள் என்று இறைவார்த்தையில் நாம் காண்கின்றோம். “தூய உள்ளத்தோர் இறைவனைக் காண்பர்“ என்ற இறைவாக்கு இவர்களுடைய வாழ்க்கையில் நிறைவேறுகின்றது. செக்கரியா தூய்மையானவராக இருந்ததால்தான் இறைவனின் திருமுன் நிற்கும் வானதூதராகிய கபிரியேல் அவர்முன்தோன்றி திருமுழுக்கு யோவானின் பிறப்பை அறிவக்கின்றபோது அவரை நேராக காணமுடிந்தது.. செக்கரியாவும் எலிசபெத்தும் வயது முதிர்ந்தவர்கள் இருப்பினும் இறைவனின் தூயஆவியானவரால் வழிநடத்தப்பட்டவர்கள். அதனால் அவர்களுக்கு திருமுழுக்கு யோவான் இறைவனின் கொடையாக கிடைக்கின்றது. செக்கரியா முதலில் இறைவனின் நற்செய்தியை நம்பவில்லை ஆனால் எலிசபெத்து கருவுற்று திருமுழுக்கு யோவானின் பிறப்பில் இறைவனுடைய வல்லமையை அவர் உணர்கின்றார், காண்கின்றார். இதனால் அவருடைய நம்பிக்கை வலுப்பெறுகின்றது. இறைவனின் தூதர் செக்காரியாவிடம் சொல்லுவது இவ்வாறு: “தாய் வயிற்றில் இருக்கும்போதே தூய ஆவியால் முற்றிலும் ஆட்கொள்ளப்படுவார் “தாய் வயிற்றில் இருக்கும் குழுந்தை தூய ஆவியால் முழுதும் ஆட்கொள்ளப்பட்டால் அந்த அன்புத்தாயும் தூயஆவியால் ஆட்கொள்ளப்படுவார் என்பது உண்மை. லூக்கா நற்செய்தி 1:41 ல் காண்பது “மரியாவின் வாழ்த்தை எலிசபெத் கேட்டபொழுது அவர் வயிற்றிலிருந்த குழந்தை மகிழ்ச்சியால் துள்ளிற்று. எலிசபெத்து தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டார்“ ஆம் எலிசபெத்து ஆவியால் நிரம்பியிருந்ததால் அன்னைமரியாளைக் கண்டபோது “பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர், உம்வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசி பெற்றதே!, ஆண்டவர் உமக்குச் சொன்னவை நிறைவேறும் என்று நம்பிய நீர் பேறுபெற்றவர்“ என்று அவரால் கூறமுடிந்தது. கடவுளின் ஆவியால் இயக்கப்படுபவர்களே கடவுளின் மக்கள் என்று இறைவார்த்தை சொல்லுகின்றது. செக்கரியா முதலில் இறைவனின் நற்செய்தியை நம்பவில்லை ஆனால் இறைவனின் வல்லமையை உணர்ந்து அனுபவித்தபிறகு இறைவனின் செயல்கள்மீது நம்பிக்கை வைத்தார். அற்புதம் நடைபெறுகின்றது. பேச்சற்றவராய் இருந்த அவர் தனது மகனின் பெயரை எழுதுபலகையில் எழுதியபோது அவரது வாய் திறக்கப்படுகின்றது. ஆவியானவரின் ஆற்றலை அனுபவிக்க வேண்டுமென்றால் விசுவாசமும் நம்பிக்கையும் நமக்கு அவசியம்.

இறைவனை நாம் அப்பா தந்தையே என்று அழைக்கும்போது தூய ஆவியானவர் நம்மிலிருந்து செயலாற்றுகின்றார். படைப்பின் தொடக்கதிலிருந்தே இறைவனின் ஆவியார் செயல்பட்டதுபோல் இன்றும் அவர் நமது வாழ்க்கையில் செயல்படுவதை நம்மால் கண்டிப்பாக அனுபவிக்கமுடியும். திருமுழுக்கு யோவானின் பெற்றோர்களுடைய வாழக்கையிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியவை என்னெவென்றால் அவர்களுடைய நேர்மையான வாழ்க்கை, இறைவனின் நெறிகளையும் நியமங்களையும் கடைபிடித்து, குற்றமற்றவர்களாக வாழ்ந்த வாழ்க்கை. நமது வாழ்க்கையிலும் ஆவியாவரின் செயல்பாடுகளை உணர அனுபவிக்க வேண்டுமென்றால் தினமும் நாம் ஜெப உறவில் இறைவனுடன் உறவாட வேண்டும். ஆவியானவரால் நிரப்படவேண்டுமென்று வாஞ்சையோடு செபிக்க வேண்டும். தூய்மையான வாழ்வு வாழ நமது பாவ வழிகளிலிருந்து விடுபட்டு இறைவார்த்தையின்படி வாழ வேண்டும். வாழ்வின் பெருவிழாவாகிய உயிர்ப்பின் விழாவை கொண்டாட இருக்கின்றோம். இயேசுவோடு இணைந்த புதுவாழ்வின் வாழ்க்கை வாழ உயிர்ப்பின் இயேசு நமக்கு தினமும் அழைப்பு விடுக்கின்றார்.

யாரேனும் தாகமாய் இருந்தால் என்னிடம் வரட்டும். என்னிடம் நம்பிக்கை கொள்வோர் பருகட்டும். அவருடைய உள்ளத்திலிருந்து வாழ்வு தரும் தண்ணீர் ஆறாய்ப் பெருக்கெடுத்து ஓடும்

வாழ்க்கை சுமைகளால் மனம் தளர்ந்துபோய் வாழும் நாம் அனைவரும் வாழ்வு தரும் இறைவனிடம் செல்வோம். நமது இதயக்கதவு அருகில் நின்று தட்டிக்கொண்டு இருக்கும் இறைவனுக்கு இதயக்கதவை திறந்து ஆவியானவரின் குரலுக்கு செவிகொடுத்து அவருடைய மகிழ்ச்சி தரும் வாழ்வை அனுபவிப்போம். இறைவன் நம்மோடு வாழ விரும்புபவர். கடவுளின் உறைவிடம் மனிதர் நடுவே உள்ளது. அவர் அவர்கள் நடுவே குடியிருப்பார். இறைவன் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பார்ப்போம். அவருடைய பிரசன்னம் அளவில்லா மகிழ்ச்சியைத் தரும். இன்று பெற்றோர்களின் கடமை தனது பிள்ளைகளுக்கு இறைவனின் பாதையை காட்டி அதில் பயணம் செய்ய என்றும் துணையாக இருந்து அவர்களுக்கு இறை அனுபவத்தை கொடுக்க வேண்டும். குடும்பமாக ஆவியானவரின் அபிசேகத்திற்காக வாஞ்சையோடு ஜெபத்தில் ஒருங்கிணைந்து அவரின் மகிழ்ச்சியில் பங்கேற்போம்.

சிந்தனை:
இறந்த இயேசுவை உயிர்த்தெழச் செய்தவரின் ஆவி உங்களுள் குடிகொண்டிருந்தால், கிறிஸ்துவை உயிர்த்தெழச் செய்த அவரே உங்களுள் குடிகொண்டிருக்கும் தம் ஆவியினாலே சாவுக்குரிய உங்கள் உடல்களையும் உயிர்பெறச் செய்வார். (உரோமையர் 8:11)
[2014-04-22 21:51:25]


எழுத்துருவாக்கம்:

Sr.Jophy
Klooster Sancta Maria
6161 CV Geleen
Netherland