ஆன்மீக வலம்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, ஆண்டவரின் நற்செய்தி பணியில் ஆர்வமுள்ள பொதுநிலையினரே, உங்கள் ஆன்மீக சிந்தனைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholic.de என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். எமது ஆன்மீக இயக்குனரின் அனுமதி பெற்று, இங்கே பிரசுரிக்கப்படும்.

தூய ஆவியாரின் செயல்பாடுகள்
பாகம் 1

நீங்கள் மனம் மாறுவதற்காக நான் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுக்கின்றேன். எனக்குப் பின் ஒருவர் வருகிறார். அவர் என்னைவிட வலிமை மிக்கவர். அவருடைய மிதியடிகளைத் தூக்கிச் செல்லக்கூட எனக்குத் தகுதியில்லை. அவர் தூய ஆவி என்னும் நெருப்பால் உங்களுக்குத் திருமுழுக்குக் கொடுப்பார்.(மத்தேயு:3:11)

புதிய ஏற்பாடு நூலில் தூய ஆவியானவர் பலருடைய வாழ்க்கையில் எப்படி செயல்பட்டார் என்றும், இன்று அவர் எவ்வாறு நமது வாழ்க்கையில் இறைவார்த்தைகளின் வழியாகவும், படைப்புக்களின் வழியாகவும் செயல்படுவதை தினமும் நம்மால் உணரமுடிகின்றது. தூய ஆவியானவர் மூவொரு இறைவனுள் ஒருவராகத் திகழ்கின்றார். இறைமகன் இயேசு வழியாக நாம் பெற்றுக் கொண்ட துணையாளர், நமக்காக இன்றும் என்றும் எப்பொழுதும் இயேசுவின் வழியாக இறைவனிடம் பரிந்து பேசுபவர், நமது உள்ளம் என்னும் ஆலயத்தில் உயிருடன் வாழ்பவர், இறைவனின் வழியில் நம்மை ஞானத்துடன் நடத்திச் செல்லும் ஒளியும், ஆற்றலும், அறிவும் உடையவர். இன்றும் மண்ணகத்தில் அசைவாடிக் கொண்டு செயல்புரிவதை நமது கண்ணால் காணவும், இதயத்தால் உணரவும் முடிகின்றது. மத்தேயு:5:8 இல் இயேசு மலைப்பொழிவில் கூறுவது "தூய்மையான உள்ளத்தோர் பேறுபெற்றோர், ஏனெனில் அவர்கள் இறைவனைக் காண்பர். நமது உள்ளம் தூய்மையாக இருக்கும்போதுதான் ஆவியானவரின் செயல்பாடுகளை உணரவும், ஆழமாக அனுபவிக்கவும் முடியும். 1பேதுரு:1:15,16. இல் காண்பது "உங்களை அழைத்தவர் தூய்மையுள்ளவராய் இருப்பதுபோல நீங்களும் உங்கள் நடத்தையிலெல்லாம் தூய்மையுள்ளவர்களாய் இருங்கள். நீங்கள் தூயவராயிருங்கள். ஏனெனில் நான் தூயவன் என்று மறைநூலில் எழுதப்பட்டிருக்கிறது. ஆம் தூய்மையான வாழ்க்கையைத்தான் இறைவன் நம்மிடம் விரும்புவது. தவக்காலத்தில் பயணம் செய்யும் நாம் தூய ஆவியாரின் செயல்பாடுகளை உணரவேண்டுமென்றால் உள்ளத்தில் உள்ள பாவக்கறைகளை முதலில் அகற்றி மனம்திரும்பி இறைவனில் முழுமையாக ஒன்றாக வேண்டும். இறைவாக்கினர் திருமுழுக்கு யோவான் வழியாகவும், அன்னை மரியாள் வழியாகவும், இறைமகன் இயேசு வழியாகவும் தூய ஆவியார் எவ்வாறு செயலாற்றினார் என்பதை தொடர்ந்து நற்செய்தி வாயிலாக அறிந்து, அதன்வழியாக நாமும் பயன் பெற்று ஆவியானவரின் தூண்டுதலுக்கேற்ப வாழ்வோம்.

பழைய ஏற்பாட்டின் இறுதி இறைவாக்கினராக திருமுழுக்கு யோவான் தூய ஆவியானவரின் அருளால் நிரப்பட்டு, இறைமகனின் வருகைக்காக மக்களை ஆயத்தப்படுத்தினார். ஆவியானவரின் அருளால்தான் அவரால் இவ்வாறு கூறமுடிந்தது "அவர் என்னைவிட வலிமை மிக்கவர். அவர் தூய ஆவி என்னும் நெருப்பால் உங்களுக்குத் திருமுழுக்கு கொடுப்பார் என்று. மனிதராய் பிறந்தவர்களுள் இறைவாக்கினர் திருமுழுக்கு யோவானைவிட மிகப் பெரியவர் எவரும் தோன்றியதில்லை என்று இயேசு மத்தேயு 11,11 இறைவசனத்தில் கூறுகின்றார். இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்டு இறைவனின் வழியை ஆயத்தம் செய்ய அனுப்பபட்டவர். ஆண்டவர் பார்வையில் பெரியவராய் இருப்பார், தாய் வயிற்றில் இருக்கும்போதே தூய ஆவியால் முற்றிலும் ஆட்கொள்ளப்படுவார் என்று வானதூதர் கபிரியேல் கூறியதை லூக்கா:1,15 இல் காண்கின்றோம். தனது தாயின் வயிற்றில் இருக்கும்போதே இயேசுவின் தாய் மரியாளின் குரலைக் கேட்டு மகிழ்ச்சியால் துள்ளியவர். உண்மைக்காக தன் உயிரையே கொடுத்தவர். இறைமகன் இயேசுவாகிய மீட்பரை ஏற்க யோர்தான் ஆற்றில் மக்கள் தங்களுடைய பாவங்களை அறிக்கையிட்டு திருமுழுக்கு கொடுத்து மனம்மாற்றம் பெறுவதற்கு ஒரு ஆன்மீக கருவியாக இருந்தவர். எளிமையான வாழ்க்கையை வாழ்ந்தவர். திருமுழுக்கு யோவான் பரிசேயர்களையும், சதுசேயர்களையும் கடுமையான வார்த்தையால் கண்டிக்கின்றார். விரியன் பாம்புக் குட்டிகளே! வரப்போகும் சினத்திலிருந்து தப்பிக்க இயலும் என உங்களிடம் சொன்னவர் யார்? நீங்கள் மனம் மாறியவர்கள் என்பதை அதற்கேற்ற செயல்களால் காட்டுங்கள் என்று சொல்லுகின்றார். இன்று இறைவன் நம் அனைவரையும் திருமுழுக்கு யோவானாக இருக்க விரும்புகின்றார். தீமையைச் சுட்டிக் காட்டும் இறைவாக்கினராக வாழ இறைவன் ஆசிக்கின்றார். உங்களோடு என்றும் தங்குவதற்காக மற்றொரு துணையாளரை உங்களுக்குத் தருவேன் என்று சொல்லிய இயேசுவின் வார்த்தை கிறிஸ்துவராகிய நம் ஒவ்வொருவரிலும் நிறைவடைகின்றது. நாம் அனைவரும் பாவிகள்தான். பலமுறை இறைவனின் அன்பிற்கு மாறாக பாவங்கள் செய்து அவருடைய அருள் கொடைகளை இழந்து தவிக்கின்றோம்.

தவக்காலத்தில் இறைவனுடைய அருளைப் பெற, இறைவனுடன் ஒப்புரவாகி அவருடன் ஒருங்கிணைந்து, ஆவியாரின் வழிநடத்தலின்படி வாழ வேண்டுமென்று நமது உள்ளமாகிய கோவிலில் வாழும் தூய ஆவியானவரிடம் வேண்டுவோம். பாவிகளை மீட்கவந்த இறைவன் நம்மைத் தேடிவருகின்றார். இழந்து போனதைத் தேடி மீட்கவே மானிடமகன் வந்திருக்கின்றார் என்பதை உணர்ந்து வாழ்வுக்கு வழிகாட்டும் இறைவனை நோக்கி பயணம் செய்வோம். புலம்பெயர் வாழும் நாம் அனைவரும் கத்தோலிக்க இறைவிசுவாசத்தை கைவிடாமல், இறைவார்த்தையின் விழுமியங்களை முழுமையாக அறிந்து அதன்படிவாழ ஒருவருக்கொருவர் உற்றத் துணையாக இருப்போம் என்று இம்மனமாற்றத்தின் காலத்தில் உறுதி எடுப்போம். நம்மத்தியில் கிறிஸ்துவ விசுவாசத்தை குழப்பிக் கொண்டிருப்பவர்களுக்கு ஒரு சாவாலாக வாழ்வோம். தூய்மையான உள்ளத்துடன் ஒப்புரவு அருட்சாதனத்தில் பங்குபெற்று இறைவனில் புது உறவு கொள்வோம். இறைவாக்கினர் திருமுழுக்கு யோவானைப்போல் உண்மைக்கும், இறைவனுடைய வார்த்தைக்கும் சாட்சியாய் வாழ்ந்து மற்றவர்களையும் அதன் வழி நடக்க துணைபுரிவோம். இறைவனை முழுமனத்தோடு அன்பு செய்து, அவரது குரலுக்கு செவிசாய்த்து, அவருடன் வாழ்வோம்.

இறைசிந்தனை:
உங்கள் உடல் நீங்கள் கடவுளிடமிருந்து பெற்றுக்கொண்ட தூய ஆவி தங்கும் கோவில் என்று தெரியாதா ? நீங்கள் உங்களுக்கு உரியவரல்ல. கடவுள் உங்களை விலை கொடுத்து மீட்டுள்ளார். எனவே உங்கள் உடலால் கடவுளுக்குப் பெருமை சேருங்கள்.(1 கொரிந்தியர்:6: 19.20)
[2014-03-15 02:02:35]


எழுத்துருவாக்கம்:

Sr.Jophy
Klooster Sancta Maria
6161 CV Geleen
Netherland