ஆன்மீக வலம்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, ஆண்டவரின் நற்செய்தி பணியில் ஆர்வமுள்ள பொதுநிலையினரே, உங்கள் ஆன்மீக சிந்தனைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholic.de என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். எமது ஆன்மீக இயக்குனரின் அனுமதி பெற்று, இங்கே பிரசுரிக்கப்படும்.

நான் தனியாக இருக்கிறேன், ஆனால் தனிமையில் இல்லை
[செபம்]

"செபிக்கும் கிறித்தவர்கள் தனிமையில் இல்லை" என்கிறார் திருத்தந்தை 16ஆம் பெனடிக்ட். கடவுளின் மகனாய் இருந்தபோதும் கூட இயேசு செபிப்பதை விடவில்லை. அப்பாவோடு உரையாடுவதை, உறவாடுவதை மகன் இயேசு தொடர்ச்சியாக செய்தார்.

மத்தேயு நற்செய்தி

இயேசுவின் மலைப்பொழிவு 5 முதல் 7 வரை உள்ள பிரிவுகளில் காண்கிறோம். செபிப்பதை திருச்சட்டமாக சொல்கிறார் இயேசு. [மத் 5:17-18].
5:44 "உங்களை துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள்."
6:6-8 "நீங்கள் இறைவனிடம் வேண்டும் பொழுது உங்கள் உள்ளறைக்குச் சென்று, கதவை அடைத்துக்கொண்டு, மறைவாய் உள்ள உங்கள் தந்தையை நோக்கி வேண்டுங்கள்"

மேலும் எப்படி செபிக்கவேண்டும் என்று "விண்ணகத்திலிருக்கிற எங்கள் தந்தையே" என்ற செபத்தில் கற்றுத்தருகிறார்.[6:9-13].
முதலாவதாக, கடவுளை புகழ்வது
இரண்டாவதாக, பிறரை மன்னிப்பது அல்லது பிறருக்காக செபிப்பது
மூன்றாவதாக, தனக்காக வேண்டுவது
கடவுள், பிறர், நான் என்ற வசையில் நம் செபம் இருக்கவேண்டும்.மாற்கு நற்செய்தி

11: 24 ல் சொல்லியுள்ளபடி ஏற்கெனவே பெற்றுவிட்டோம் என்று நம்பி செபியுங்கள். இயேசுவின் சீடர்களால் சிலவகைப் பேய்களை ஓட்டமுடியவில்லை. இயேசு சொல்கிறார்: "இவ்வகைப் பேய் இறைவேண்டலினாலும், நோன்பினாலும் அன்றி வேறு எதனாலும் வெளியேறாது." [9:29]. 6:46 ல் குறிப்பிட்டுள்ளதுபோல இயேசு இறைவனிடம் வேண்டுவதற்காக தனியாக மலைக்குச் சென்றார்.லூக்கா நற்செய்தி

1:46-55 மற்றும் 1:67-79 ல் உள்ள மரியாவின் பாடல் மற்றும் செக்கரியாவின் பாடல் கடவுளை புகழும், போற்றும் செபமே.
லூக்கா நற்செய்தியாளர் 9:18 ல் இயேசு தனித்து இறைவனிடம் வேண்டினார்.
9:29 ல் இயேசுவின் உருமாற்றம் செபத்தினால் விளைந்தது.
18:1-8 ல் மனந்தளராமல் எப்பொழுதும் இறைவனிடம் மன்றாடவேண்டும் என்பதை நேர்மையற்ற நடுவரும் கைம்பெண்ணும் பற்றிய உவமை வாயிலாக விளக்குகிறார்.யோவான் நற்செய்தி

யோவான் 17 ம் பிரிவு முழுவதுமே இயேசுவின் இறைவேண்டலாக இருப்பதை காண்கிறோம். இறைமக்களின் ஒற்றுமைக்காக வேண்டுகிறார்.
மேலும் 11:41 ல் லாசரை உயிர்ப்பிக்கும் நிகழ்வில் இயேசு அண்ணாந்து பார்த்து அழுது செபிக்கிறார்.சிலுவை துன்ப வேளை

இயேசு தான் கைது செய்யப்படும் முன்னர் இறைவேண்டல் செய்தார் என்று முதல் மூன்று நற்செய்தியாளர்களும் கூறுகின்றனர். இராவுணவில் இயேசு ஏற்படுத்திய நற்கருணை, செபத்திற்கு உன்னத உதாரணமாக இருக்கிறது. சிலுவை மரத்தில் தொங்கிக்கொண்டிருந்த போதும்கூட "என் இறைவா, என் இறைவா, ஏன் என்னை கைவிட்டீர்" என்ற திருப்பாடல் 22ஐ பாடி செபிக்கிறார். அவர் இறக்கும் தருவாயில்கூட "தந்தையே, உம் கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன்." என்ற திருப்பாடல் 31:5 ஐ பாடி செபித்து உயிர்விடுகிறார். தாகமாயிருக்கிறது என்று அவர் சொன்ன வார்த்தைகூட திருப்பாடல் வரிகள் 42:3, 63:1,2, மற்றும் 69:21 போன்றவற்றின் எதிரொலியே ஆகும்.எப்படி நாம் செபிப்பது

1. யூதர்கள் 3 முறையும், இஸ்லாமியர்கள் 5 முறையும் தினமும் செபிக்கிறார்கள். ஆனால் நமக்கு இதுபோன்ற சட்டம் இல்லாவிட்டாலும் நாமே நமக்கென்று செபிக்க நேரம் ஒதுக்கவேண்டும்.
2. அடுத்து செபிக்க ஏற்ற இடத்தை வீடுகளில் தேர்வுசெய்யவேண்டும்.
3. கடவுள், பிறர், நான் என்ற முறையில் செபிக்கவேண்டும்.
4. திருப்பலி, இயேசுவே ஏற்படுத்திய செபம்
5. செபமாலை செபித்தல், விவிலியம் வாசித்தல், சிலுவைப்பாதை தியானித்தல் போன்றவை செபத்தின் வடிவமே.வளன், நலன் இருவரும் சந்திக்கிறார்கள். வளன் நலனிடம், " எங்கே செல்கிறாய்?" என்று கேட்டான். நலன்,"நான் சினிமாவுக்கு செல்கிறேன்" என்கிறான். வளன்," என்ன சினிமாவுக்கா, நான் கோயிலுக்கு போகிறேன். புத்தாண்டு நாளில் கோயிலுக்கு வராமல் சினிமாவுக்கு செல்கிறாயே" என்று திட்டிவிட்டு கோவிலுக்கு செல்கிறான். ஆனால் கோயிலுக்குள் இருந்தாலும் வளன் நலனைப் பற்றியும், அவன் சென்ற சினிமா பற்றியுமே சிந்தித்துக்கொண்டிருந்தான். நலன் சினிமாவுக்கு சென்றாலும் , ஐயோ! தவறு செய்துவிட்டேனே, புத்தாண்டு நாளில் கோயிலுக்கு செல்லவில்லையே , என்று மனம் வருந்திக்கொண்டிருந்தான். வளனின் வேண்டுதல் கேட்கப்படவில்லை. ஆனால் நலன் கடவுளால் புரிந்துகொள்ளப்பட்டான்.

முழுமனதோடு கூடிய செபமே கேட்கப்படும்.

செபிக்கும்போது நாம் தனிமையில் இருப்பதில்லை. நம்மோடு அன்னை மரியா, புனிதர்கள், வானதூதர்கள் கூட இருப்பார்கள்.

[2014-02-20 23:17:22]


எழுத்துருவாக்கம்:

அருள்திரு. மை. அடைக்கலம் டொனால்டு
கும்பகோணம் மறைமாவட்டம்
தமிழகம்
இந்தியா