பெரிய வியாழன் - ஆண்டவரின் இராவுணவு

மாலைத் திருப்பலி

திருச்சபையின் மிகப் பழமையான வழக்கப்படி, இறைமக்கள் பங்குபெறாத திருப்பலிகள் எல்லாம் இன்று தடை செய்யப்படும். மாலை வேளையில், வசதியான நேரத்தில், ஆண்டவருடைய இராவுணவுத் திருப்பலி இறைமக்கள் அனைவரும் முழுப் பங்கேற்க, கொண்டாடப்படும். அதில் குருக்கள், திருப்பணியாளர்கள் எல்லாரும் தத்தம் பணி புரிவார்கள். திருத்தைலத் திருப்பலி அல்லது மக்கள் நலனுக்காக வேறு திருப்பலி ஒப்புக்கொடுத்த குருக்கள் மீண்டும் மாலையில் கூட்டுத்திருப்பலி நிறைவேற்றலாம். இறைமக்களின் நலனைக் கருதி, கோயிலிலோ சிற்றாலயங்களிலோ, மாலையில் அல்லது மிகமிகத் தேவையானால் காலையில், மற்றொரு திருப்பலி ஒப்புக்கொடுக்க ஆயர் அனுமதி வழங்கலாம். மாலைத் திருப்பலியில் பங்கேற்க யாதொரு வழியும் அற்றவர்களுக்கமட்டும் காலைத் திருப்பலிக்கு அனுமதி தரலாம்: இத்தகைய அனுமதி ஒருசிலரின் தனி வசதிக்காக அளிக்கக்கூடாது. மேலும், மாலையில் நடக்கும் முக்கியமான திருப்பலிக்கு இது ஊறுவிளைவிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். திருப்பலியில் மட்டும் இறைமக்களுக்கு நற்கருணை வழங்கலாம்: நோயாளிகளுக்கு எந்த நேரத்திலும் திருவுணவு வழங்கலாம்.

தொடக்கச் சடங்கும் இறைவாக்கு வழிபாடும்

திருப்பலி தொடங்குமுன் நற்கருணைப் பேழை வெறுமையாயிருக்கவேண்டும். இன்றும் மறுநாளும் மக்களுக்குத் திருவுணவு வழங்கப் போதுமான திரு அப்பத்தை இத்திருப்பலியில் வசீகரிக்க வேண்டும்.

வருகைப் பல்லவி கலா 6:14 காண்:

நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் சிலுவையில்தான் நாம் பெருமை கொள்ள வேண்டும்: அவரிலேதான் நமக்கு மீட்பும் உயிரும் உயிர்ப்பும் உண்டு; அவராலேதான் நாம் ஈடேற்றமும் விடுதலையும் அடைந்தோம்.

முன்னுரை

இயேசுவின் பாஸ்கா விழாவை இன்று கொண்டாடுகின்றோம். பாஸ்கா என்றால் கடத்தல் என்று பொருள் பழைய ஏற்பாட்டில் யாவே கடவுளின் இரக்கத்தினால் பாரவோனின் ஆதிக்கத்திலிருந்தும், அடிமைத்தனத்திலிருந்தும் இஸ்ரயேல் மக்கள் செழிப்புமிக்க... வளமையான கானான் தேசத்திற்குக் கொண்டுவரப்பட்டார்கள். அதாவது பாஸ்கா என்ற கடத்தல் நிகழ்வின் வழியாகத் தீமையின் ஆதிக்கத்திலிருந்து கடந்து வந்து இறைவனை பற்றிக்கொண்டனர். ஆனால் இன்று உலகம் முடியும் வரை எந்நாளும் உங்களோடு இருப்பேன் என்று சொன்ன இயேசு தன்னை உடைத்து தனது உடலையும் இரத்தத்தையும் நம்மீது கொண்ட அன்பின் வெளிப்பாடாக நமக்கு உணவாகத் தருகின்றார். அத்தோடு தன் மீட்புப் பணி இவ்வுலத்தில் தொடர குருத்துவத்தையும் ஏற்படுத்துகின்றார்.

இத்தருணத்தில் இயேசு தன்னல நாட்டமின்றி இந்த மானிடரின் மீட்புக்காக தன்னையே வழங்கியதுபோல நம் அருகில் வாழும் மனிதர்களை அன்பு செய்துவாழவும், மேலும் குருக்கள் ஆண்டினை கொண்டாடும் நாம், குருக்கள் அனைவரும் இயேசு செய்த பணியை மனத்துணிவுடனும், மனித மாண்புடனும் தொடர்ந்து செய்து நீதி, அன்பு சகோதரத்துவம், சமுத்துவம் போன்றவற்றை நிலைநாட்டாவும், இயேசுவை மக்களுக்கு கொடுப்பவர்களாகவும் திகழ வேண்டிய வரத்தை தந்தருள குருக்களுக்காகவும் நமக்காகவும் சிறப்பாக இத்திருப்பலியில் செபிப்போம்.


இன்றைய திருவழிபாடானது நான்கு பகுதிகளைக் கொண்டுள்ளது.

இறைவார்த்தை வழிபாடு
பாதம் கழுவும் சடங்கு
நற்கருணை வழிபாடு
நற்கருணை இடமாற்றம் பவனி.
இந்த வாழிபாட்டு நிகழ்வுகளில் பொருளுணர்ந்து பக்தியோடு பங்கெடுப்போம். வழக்கம் போல திருப்பலி தொடங்கிறது. 12 ஆண்களுடன் குருவானவர் பவனியாக பீடம் நோக்கி வருவார்.இன்று உன்னதங்களிலே கீதம் பாடும்போது அனைத்து மணிகளும் ஒலிக்க வேண்டும். இது முதல் பாஸ்கா திருவிழிப்பு வரை மணி ஒலிக்காது.


1. இறைவார்த்தை வழிபாடு

முதல் வாசகம் (வி.ப 12, 1-8, 11-14)

பாஸ்கா என்றால் கடந்து செல்லுதல் என்று பொருள். தங்கள் சொந்த நாட்டை விட்டு, எகிப்தில் அடிமைகளாக வாழ்ந்த தம் மக்களை கடவுள் விடுவித்து, கானான் தேசத்திற்குக் கொண்டு வந்தார். அந்த நிகழ்வுதான் பாஸ்கா, நாமும் பாவத்திலிருந்து விடுபட்டு இறைவனோடு இணைய நம் பழைய நிலையிலிருந்து கடந்துவர நம்மை அழைக்கும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

தியானப்பாடல்: சங் 116 12-13, 15-16, 17-18

நாம் ஆசீர்வதிக்கும் கிண்ணம் கிறிஸ்துவின் இரத்ததில் பங்குகொள்ளல் அன்றோ!

ஆண்டவர் எனக்குச் செய்த எல்லா நன்மைகளுக்காகவும்
நான் என்ன கைம்மாறு செய்வேன்?
மீட்புக்காக நன்றிகூறி கிண்ணத்தைக் கையில் எடுத்து,
ஆண்டவருடைய திருப் பெயரைச் சொல்லி கூப்பிடுவேன்.

ஆண்டவர் தம் அடியாரின் மரணம்
அவருடைய பார்வையில் மிக மதிப்புக்குரியது
நான் உம் அடியேன் உம் அடியாளின் மகன்
என் கட்டுகளை நீர் அவிழ்த்துவிட்டீர்.

புகழ்ச்சிப் பலியை உமக்குச் செலுத்துவேன்
ஆண்டவருடைய திருப்பெயரை கூவி அழைப்பேன்
ஆண்டவருடைய மக்கள் அனைவரிடையேயும்
அவருக்கு என் பொருத்தனைகளைச் செலுத்துவேன்


இரண்டாம் வாசகம் (1கொரி 11, 23-26)

அர்த்தமற்ற வழிபாடுகள் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்துவதில்லை. வழிபாடுகள் வாழ்வாகும்போதுதான் வாழ்வில் மாற்றம் பிறக்கிறது. வாழ்வு சிறக்கிறது. எனவே திருப்பலியின் போது இயேசுவின் உடலை உண்டு அவரது இரத்தததைப் பருகுவது என்பது வெற்றுச் சடங்காக மாறிவிடாமல் நாம் அன்றாட வாழ்வில் இறையரசை வாழ்வாக்க வேண்டும் என்ற புனித பவுலின் வார்த்தைகளுக்குச் செவிமடுப்போம்.

நற்செய்திக்குமுன் வசனம் யோவான் 13:34

புதியதோர் கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்.


2. பாதம் கழுவும் சடங்கு

யூத சமுகத்தில் தன் வீட்டில் இருக்கும் பணியாளர் வெளியில் சென்று வரும் தனது தலைவரின் கால்களைக் கழுவுவது வழக்கம். ஆனால் இதே சமுதாயத்தில் பிறந்த இயேசு ஒரு வித்தியாசமான செயலைச் செய்கிறார். பணிவிடைப் பெற அன்று,பணிவிடைப் புரியவே வந்தார் என்று வார்த்தையில் மட்டுமல்ல. தன் சீடர்களின் பாதங்களை கழுவி அவ்வார்த்தைகளுக்கு உருவம் கொடுத்தார் இயேசு. தன்னையே தாழ்த்திக் கொண்டார் இறைமகன் இயேசு. எனவே இப்பாதம் கழுவும் சடங்கில் பார்வையாளர்களாக, வேடிக்கையாளர்களாக இல்லாமல், நாம் சாதி, மதம், இனம், தூய்மைத்தீட்டு, ஏழைகள், பணக்காரர்கள், இருப்பவர், இல்லாதவர் போன்ற மனிதத்தை உருக்குலைக்கும் வேற்றுமைகளைக் களைந்து அருகில் வாழும் மனிதர் இறைவன் படைப்பு என்பதை உணர்ந்து இச்சடங்கில் பங்குபெறுவோம். குறிப்பு:பாதம் கழுவும் சடங்கு முடிந்தபின் விசுவாசிகளின் மன்றாட்டு நடைபெறும். இத்திருப்பலியில் விசுவாச அறிக்கை சொல்வதில்லை.

பல்லவி 2 அரு 13:6-8

"ஆண்டவரே, நீரோ என் பாதங்களைக் கழுவுவது?"
அதற்கு இயேசு: "நான் உன் பாதங்களைக் கழுவாவிடில்
உனக்கு என்னோடு பங்கில்லை" என்றார்.

சீமோன் இராயப்பரிடம் அவர் வரவே
இராயப்பர் அவரை நோக்கிச் சொன்னது:
"ஆண்டவரே, நீரோ என் பாதகங்களைக் கழுவவது?"

அதற்கு இயேசு: "நான் உன் பாதங்களைக் கழுவாவிடில்
உனக்கு என்னோடு பங்கில்லை" என்றார்.
"நான் செய்வது இன்னதென்று உனக்கு
இப்போது தெரியாது, பின்னரே விளங்கும்."

"ஆண்டவரே, நீரோ என் பாதங்களைக் கழுவுவது?"
அதற்கு இயேசு: "நான் உன் பாதங்களைக் கழுவாவிடில்
உனக்கு என்னோடு பங்கில்லை" என்றார்.

இறைமக்களின் வேண்டல்

1. பணிவிடை புரியவே வந்தேன் என்று சொன்ன இறைவா!
திருச்சபையை வழிநடத்தும் திருத்தந்தை, அவரோடு இணைந்து பணியாற்றும் ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் மற்றும் பொதுநிலையினர் அனைவரையும் உடல் உள்ள ஆன்ம நலனோடு வாழவும், இறைமக்களை ஒருவருக்கொருவர் பணிபுரிந்து வாழ்பவர்களாக வழிநடத்திட வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.

2. வழிநடத்திடும் மாபரனே!
எங்கள் நாட்டை வழிநடத்திடும் தலைவர்கள் சுயநலத்தில் மூழ்கிடாது, நாட்டு மக்களின் வாழ்வாதார பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் தந்து, அமைதியாக மக்களை வழிநடத்திட வரம் தர வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.

3. அன்பின் இறைவா!
நீர் சீடர்களின் பாதங்களை கழுவி அன்பின் முக்கியத்துவத்தை முழுçமாயக எங்களுக்கு உணர்த்தினீர். இதை உணர்ந்து, உமது அன்பின் அடிச்சுவட்டில் நாங்கள் தொடர்ந்து நடக்கவும், எங்களுடைய உள்ளத்தையும், சிந்தனைகளையும் பிறருக்கு அர்பணித்திடவும் வரம் தர வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.

4. ஒப்பற்ற குருவே!
தனிக்குருத்துவத்தில் உம் பணி செய்யும் குருக்கள் யாவரும் தங்களது வாழ்வில் எதிர்கொள்ளும் போரட்டங்களில் வெற்றிக்கொள்ள தேவையான மன உறுதியைçயும், ஆற்றலையும் தந்து வழிநடத்திடவும், பொது குருத்துவத்தில் உமது வழி வாழ அழைப்பு பெற்ற இறைமக்களும் அவ்வாறே வாழ்ந்திடவும் வரம்தர வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.


3.நற்கருணை வழிபாடு

காணிக்கைப் பாடல் : அன்பும் நட்பும் எங்குள்ளதோ....

அன்பும் நட்பும் எங்குள்ளதோ அங்கே இறைவன் இருக்கின்றார் -2

கிறிஸ்துவின் அன்பு நம்மை எல்லாம் ஒன்றாய் கூட்டி சேர்த்ததுவே
அவரில் அக்களித்திடுவோம் யாம் அவரில் மகிழ்சி கொள்வோமே
ஜீவிய தேவனுக்கு அஞ்சிடுவோம் அவருக்கன்பு செய்திடுவோம்
நேரிய உள்ளத்துடனே யாம் ஒருவரை ஒருவர் நேசிப்போம்

எனவே ஒன்றாய் நாமெல்லாம் வந்து கூடும் போதினிலே
மனதில் வேற்றுமை கொள்ளாமல் விழிப்பாய் இருந்து கொள்வோமே
தீய சச்சரவுகள் ஒளிந்திடுக பிணக்குகள் எல்லாம் போய் ஒழிக
நமது மத்தியில் நம் இறைவன்கிறிஸ்து நாதர் இருந்திடுக

முக்தி அடைந்தோர் கூட்டத்தில் நாமும் ஒன்றாய் சேர்ந்து மனம்
மகிழ்ந்து கிறிஸ்து இறைவா நின் மகிமை வதனம் காண்போமே
முடிவில்லாமல் என்றென்றும் நித்திய காலம் அனைத்திற்கும்
அளவில்லாக மாண்புடைய பேரானந்தம் இதுவே யாம்


(காணிக்கை மன்றாட்டுடன் திருப்பலி தொடரும், நன்றி மன்றாட்டு முடிந்த பிறகு நற்கருணை இடமாற்றப் பவனி)

4.நற்கருணை இடமாற்றம்

இயேசு சென்றவிடமெல்லாம் நன்மைகளையே செய்துகொண்டுச் சென்றார். என்னை அவர் தொடமாட்டாரா? என்னை அவர் பார்க்க மாட்டாரா? என் குரலுக்கு அவர் செவி கொடுக்கமாட்டாரா என இயேசுவை எண்ணி ஏங்கியோர் பலருண்டு அவரை அண்டிச் சென்றவர்கள் அருள்மழையில் நனைந்தார்கள். அவரரை அனுகியோர் அவரின் ஆசிர்வாத்தில் ஆனந்த கூத்தாடினார்கள். இன்றும் அதே இயேசு அப்ப வடிவில் நம் மத்தியில் பவனி வரப் போகின்றனர். இயேசுவை திறந்த உள்ளத்தோடு ஏற்க மறுத்த யூத குருமார்கள், பிலாத்து, ஏரோதுவைப் போல் அல்லாமல் நம் உள்ளத்தில் பச்சைக் கம்பளம் விரித்து அவருக்கு வரவேற்பு கொடுப்போம். அவரின் ஆசிர்வாதத்தால் நிரப்பப்படுவோம்.

பாடுவாய் என் நாவே மாண்புமிக்க உடலின் இரகசியத்தை
பாரின் அரசர் சீருயர்ந்த வயிற்றுதித்த கனியவர் தம்
புதலத்தை மீட்கச் சிந்தும் விலைமதிப்பில்லா துயர்ந்த
தேவ இரத்த இரகசியத்ததை எந்தன் நாவே பாடுவாயே

அவர் நமக்காய் அளிக்கப்படவே மாசில்லாத கன்னி நின்று
நமக்கென்றே பிறக்கலானார் அவனி மீதில் அவர் வதிந்து
அரிய தேவ வார்த்தையான வித்து அதனை விதைத்த பின்னர்
உலக வாழ்வின் நாளை மிகவே வியக்கும் முறையில் முடிக்கலானார்

இறுதி உணவை அருந்த இரவில் சகோதரர்கள் யாவரோடும்
அவர் அமர்ந்து நியமனத்தின் உணவை உண்டு நியமனங்கள்
அனைத்தும் நிறைவு பெற்ற பின்னர் பன்னிரண்டு சீடருக்குத்
தம்மைத்தாமே திவ்விய உணவாய்த் தம் கையாலே அருளினாரே

ஊன் உருவான வார்த்தையானவர் வார்த்தையாலே உண்மை அப்பம்
அதனைச் சரீரம் ஆக்கினாரே இரசமும் கிறிஸ்து இரத்தமாகும்
மாற்றம் இது நம் மனித அறிவை முற்றிலும் கடந்த தெனினும்
நேர்மையுள்ளம் உறுதிகோள்ள மெய் விசுவாசம் ஒன்றே போதும்

அவ்விடத்தை அடைந்ததும் குரு நற்கருணைப் பாத்திரத்தை வைப்பார்: சாம்பிராணியிட்டபின் முழந்தாளிட்டுத் தூபம் காட்டுவார்.
அப்போது "மாண்புயர் இவ்வருட் சாதனத்தை" என்னும் அடி பாடப்படும். பின் பேழை பூட்டப்படும்.

சிறிது நேரம் மௌனமாக மன்றாடியபின் குருவும் பணியாளரும் தாழ்ந்து பணிந்து வணங்கிவிட்டுத் திருப்பண்ட அறைக்குச் செல்வர்.
பின் பீடத்தின் அணிகள் எல்லாம் நீக்கப்படும்: கூடுமானால் சிலுவைகள் எல்லாம் கோயிலிலிருந்து அகற்றப்படும். அகற்ற முடியாத சிலுவைகள் திரையிடப்படும்.
மாலைத் திருப்பலியில் பங்கெடுத்தவர்கள் திருப்புகழ்மாலையின் மாலைப்புகழ் சொல்வது இல்லை.

இடத்தின் வழக்கத்திற்கும் சூழ்நிலைகளுக்கும் ஏற்றவாறு நற்கருணை ஆராதனை இரவிலும் நடைபெற இறைமக்களுக்கு அறிவுரை கூறவேண்டும்;
ஆனால் நள்ளிரவுக்குப் பின் ஆராதனை வெளியாடம்பரமின்றி நடைபெறவேண்டும்.