புனித வெள்ளி - ஆண்டவரின் திருப்பாடுகளின் கொண்டாட்டம்


தயாரிப்பு

மிகப் பழைமையான வழ்க்கப்படி, இன்றும் நாளையும் திருச்சபை திருவருட்சாதனங்களைக் கொண்டாடுவதில்லை.

சிலுவை திரிகள் பீடத்துகில் அனைத்தும் அகற்றப்பட்டு, பீடம் வெறுமையாயிருக்கும்.

பிற்பகலில், குறிப்பாக மூன்று மணி அளவில் திருப்பாடுகளின் வழிபாடு நடைபெறும். மக்களின் வசதிக்கேற்ப, இதற்குப் பிந்தின நேரத்தையும் தேர்ந்துகொள்ளலாம். வழிபாடு மூன்று பகுதிகளைக் கொண்டிருக்கும்: இறைவாக்கு வழிபாடு, திருச்சிலுவை ஆராதனை, திருவிருந்து.

இன்று இறைமக்களுக்கு இச்சடங்கில்மட்டும் திருவுணவு கொடுக்கலாம். சடங்கில் பங்கெடுக்க முடியாத நோயாளிக்கும் எந்நேரத்திலும் திருவுணவு கொண்டுபோகலாம்.

திருப்பலிக்குரிய சிவப்பு நிற உடைகள் அணிந்த குருவும் திருத்தொண்டரும் பீடத்தின்முன் வந்து, வணக்கம் செலுத்தி, முகம் குப்புற விழுந்து அல்லது வசதிக்கேற்ப முழந்தாட் பணிந்து இருப்பார்கள்: எல்லாரும் சிறிது நேரம் மௌனமாக மன்றாடுவர். பின் குருவும் பணியாளரும் தத்தம் இருக்கைக்குச் செல்வர். குரு அங்கு மக்களை நோக்கி நின்று, கைகுவித்துக் கீழுள்ள மன்றாட்டுகளில் ஒன்றைச் சொல்வார்.


தொடக்கச் சடங்குகள்

பொது முன்னுரை
பவனி
முகங்குப்புற விழுந்து செபிக்கிறார்
மன்றாட்டு


இறைவாக்கு வழிபாடு

முதல் வாசக முன்னுரை
முதல் வாசகம் - எசாயா52: 13-53: 12
பதிலுரைப்பாடல் - தந்தையே உம்கையில்
இரண்டாம் வாசக முன்னுரை
இரண்டாம் வாசகம் - எபி 4 :14 -16,5:7-9
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
நற்செய்தி வாசகம்
மறையுரை


விசுவாசிகளின் மன்றாட்டு

முன்னுரை
பெரிய மன்றாட்டுகள்


திருச்சிலுவை ஆராதனை

முன்னுரை
திருச்சிலுவை பவனி (எரியும் திரிகள்)
குருக்களும் பீடப்பணியாளரும் ஆராதனை செய்தல்


மக்கள் திருச்சிலுவைக்கு ஆராதனை செய்தல்

முன்னுரை திருச்சிலுவை பவனி (எரியும் திரிகள்) குருக்களும் பீடப்பணியாளரும் ஆராதனை செய்தல்

திருவிருந்து பகுதி

முன்னுரை
அனைவரும் நின்றுகொண்டிருப்பர்
பீடத்தின்மீது துணி விரித்தல்,
திருமேனித் துகில்,
திருப்பலி புத்தகம் வைக்கப்படும்,
நற்கருணை பீடத்திற்கு கொண்டுவருதல்
மீட்பரின் கட்டளையால்...
திருவிருந்து
நன்றி மன்றாட்டு
இறுதி செபம்


பொது முன்னுரை

நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் சிலுவையில்தான் நாம் பெருமை கொள்ள வேண்டும்: அவரிலேதான் நமக்கு மீட்பும் உயிரும் உயிர்ப்பும் உண்டு; அவராலேதான் நாம் ஈடேற்றமும் விடுதலையும் அடைந்தோம்.

முன்னுரை

சுமைசுமந்து சோர்ந்திருப்போரே எல்லோரும் என்னிடம் வாருங்கள் நான் உங்களுக்கு இளைப்பாறுதல் அளிப்பேன் என்று அனைவரையும் அன்பு செய்தவருக்கு, புதுமைகள் பல செய்தவருக்கு, அநீதியை, ஆதிக்க சக்திகளை எதிர்த்து போராடியவர்க்கு, கிடைத்த மாபெரும் பரிசு அவமானத்தின் சின்னம் சிலுவை. ஆனால் இயேசு நம்மீது கொண்ட அன்பினால் அதையும் ஏற்றுக்கொண்டார். தன்னுயிரையே தியாகம் செய்தார். அன்பின் உச்சக்கட்டம் பிறருக்காக தன் உயிரைக் கொடுப்பதுதான் அதைவிட மேலான அன்பு வேறு இல்லை என்பதை இதோ மாபரன் இயேசு நிருபித்து விட்டார். விண்ணிற்கும், மண்ணிற்கும் இடையில் சிலுவையில் பலியான செம்மறியாக உயர்த்தப்பட்டிருக்கிற இயேசுவைப் பார்த்து மீட்புப் பெற நாம் அனைவரும் அழைக்கப்படுகிறோம். அவமானத்தின் சின்னமாக இருந்த சிலுவை இயேசுவின் தியாக பலியால் மீட்பின் சின்னமாக மாறியது. எனவே, இயேசுவின் பாடுகளையும் இறப்பையும் சிந்தித்தவர்களாக இந்த வழிபாட்டில் பக்தியோடு பங்கு கொள்வோம். நம் ஆண்டவர் இயேசுவின் மரணத்தால் தாய்த் திருச்சபை துக்கத்தில் மூழ்கி ஈரப்பதை வெறுனையான பீடமும், எரியாத மெழுகுவத்திகளும், ஒலிக்காத மணிகளும் நமக்கு நினைவூட்டுகின்றன. இன்றைய வழிபாடானது நான்கு பிரிவுகளைக் கொண்டுள்ளது. இறைவார்த்தை வழிபாடு, பொது மன்றாட்டுகள், திருச்சிலுவை ஆராதனை, நற்கருணை விருந்து. முழு கவனத்தோடு பங்கு பெற்று நமக்காக இறந்த இயேசுவின் பாடுகளின் பயனை பெற்று செல்வோம். அனைவரும் எழுந்து நின்று குருவை வரவேற்போம்.

(குருவானவர் முகம் குப்புற விழுந்து செபிக்கும் போது)
தற்போது குருவானவர் இயேசுவின் பாடுகளையும் இரத்தக்களங்களையும் நினைவுப்படுத்தி செந்நிற உடை அணிந்து முகம் குப்புற விழுந்து நம் அனைவரோடும் சேர்ந்து செபிக்கிறார். இந்த நிகழ்வு கிறிஸ்துவின் மரணத்தால் வந்த துயரத்தையும், அவருக்கு முன்னால் நமது தகுதியில்லாத தன்மையையும் வெறுமையையும் காட்டுகிறது. அதோடு நாம் அனைவரும் அவரைச் சார்ந்து வாழுகிறோம் என்பதையும் காட்டுகிறது. நாமும் மண்டியிட்டு அமைதியாக குருவோடு செபிப்போம். எழுந்தவுடன் இப்போது குரு இயேசுவின் பாடுகளால் கிடைத்த மீட்பின் பலனை நமக்குக் கொடையாக கொடுத்தருளுமாறு தந்தையாம் இறைவனிடம் செபிப்பார். அனைவரும் எழுந்து நின்று செபிப்போம்.


மன்றாட்டு:(செபிப்போமாக அல்லது மன்றாடுவோமாக என்று சொல்வதில்லை)

இறைவா, உம் திருமகன் கிறிஸ்து உம் மக்கள் எங்களுக்காகத் தமது இரத்தத்தைச் சிந்தி உயிர் நீத்துப் பாஸ்கா மறைநிகழ்ச்சியை நிறைவேற்றினார். அவரது சாவிகளை இன்று சிறப்பாக நினைவுகூர்ந்து கொண்டாடுகின்ற நாங்கள் எங்கள் சிந்தனை, சொல, செயல் அனைத்தாலும் இத்திருவழிபாட்டில் ஆழ்ந்து பங்கேற்கச் செய்தருளும். எங்கள்.
எல். ஆமென்.

(அல்லது)

இரக்கமுள்ள இறiவா,
முதல் மனிதரின் பாவத்தின் விளைவான சாவுக்குத் தலைமுறை தலைமுறையாக நாங்கள் ஆளாகித் தவிக்கின்றோம். எங்கள் ஆண்டவராகிய உம் திருமகன் கிறிஸ்துவின் பாடுகளினால் நீவிர் அந்தச் சாவினை அழித்தீர். இயற்கை நியதிப்படி பழைய ஆதாமின் சாயாலைத் தாங்கியிருக்கும் நாங்கள்,உமது அருளால் புனிதமடைந்து, புதிய ஆதாமாகிய கிறிஸ்துவின் சாயலைத் தாங்கி, அனைத்திலும் அவரைப்போல் ஆகிடச் செய்தருளும். எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவழியாக உம்மை மன்றாடுகிறோம்.
எல்: ஆமென்


முதற் பகுதி இறைவாக்கு வழிபாடு

முதல் வாசக முன்னுரை (எசாயா 52: 13 - 53: 12)

எசாய இறைவாக்கினர் நான்கு இடங்களில் துன்புறும் ஊழியன் என்ற கருத்தில் கவிதை வடிவில் இயேசுவின் பாடுகளை முன்னுரைத்துள்ளார். இயேசு கிறிஸ்து துன்புறும் ஊழியர் என்பதையும், அவர் பாடுகள் பட்டு, துன்பங்களை ஏற்று எவ்வாறு இவ்வுலகத்தை மீட்க தன்னையே கையளிக்கப் போகிறார் என்பதை முதல் வாசகத்தில் வாசித்து தியானிப்போம்.

இறைவாக்கினர் எசாயா திருநூலிருந்து வாசகம்:
13 இதோ, என் ஊழியர் சிறப்படைவார். அவர் மேன்மைப்படுத்தப்பட்டு, உயர்த்தப்பட்டு, பெரிதும் மாட்சியுறுவார். 14 அவரைக் கண்ட பலர் திகைப்புற்றனர். அவரது தோற்றம் பெரிதும் உருக்குலைந்ததால் மனித சாயலே அவருக்கு இல்லாதிருந்தது. மானிடரின் உருவமே அவருக்கு இல்லை. 15 அவ்வாறே, அவர் பல பிறஇனத்தாரை அதிர்ச்சிக்குள்ளாக்குவார். அரசர்களும் அவரை முன்னிட்டு வாய்பொத்தி நிற்பர். ஏனெனில் தங்களுக்குச் சொல்லப் படாததை அவர்கள் காண்பர். தாங்கள் கேள்விப்படாததை அவர்கள் புரிந்து கொள்வர். அதிகாரம் 53 1 நாங்கள் அறிவித்ததை நம்பியவர் யார்? ஆண்டவரின் ஆற்றல் யாருக்கு வெளிப்படுத்தப்பட்டது? 2 இளந்தளிர்போலும் வறண்டநில வேர்போலும் ஆண்டவர் முன்னிலையில் அவர் வளர்ந்தார். நாம் பார்ப்பதற்கேற்ற அமைப்போ அவருக்கில்லை. நாம் விரும்பத்தக்க தோற்றமும் அவருக்கில்லை. 3 அவர் இகழப்பட்டார். மனிதரால் புறக்கணிக்கப்பட்டார். வேதனையுற்ற மனிதராய் இருந்தார். நோயுற்று நலிந்தார். காண்போர் தம் முகத்தை மூடிக்கொள்ளும் நிலையில் அவர் இருந்தார். அவர் இழிவுபடுத்தப்பட்டார். அவரை நாம் மதிக்கவில்லை. 4 மெய்யாகவே அவர் நம் பிணிகளைத் தாங்கிக்கொண்டார். நம் துன்பங்களைச் சுமந்து கொண்டார். நாமோ அவர் கடவுளால் வதைக்கப்பட்டு நொறுக்கப்பட்டவர் என்றும் சிறுமைப் படுத்தப்பட்டவர் என்றும் எண்ணினோம். 5 அவரோ நம் குற்றங்களுக்காகக் காயமடைந்தார். நம்தீச்செயல்களுக்காக நொறுக்கப்பட்டார். நமக்கு நிறைவாழ்வை அளிக்க அவர் தண்டிக்கப்பட்டார். அவர்தம் காயங்களால் நாம் குணமடைகின்றோம். 6 ஆடுகளைப் போல நாம் அனைவரும் வழிதவறி அலைந்தோம். நாம் எல்லாரும் நம் வழியே நடந்தோம். ஆண்டவரோ நம் அனைவரின் தீச்செயல்களையும் அவர்மேல் சுமத்தினார். 7 அவர் ஒடுக்கப்பட்டார். சிறுமைப்படுத்தப்பட்டார். ஆயினும், அவர் தம் வாயைத் திறக்கவில்லை. அடிப்பதற்கு இழுத்துச் செல்லப்பட்ட ஆட்டுக்குட்டிபோலும் உரோமம் கத்தரிப்போர் முன்னிலையில் கத்தாத செம்மறி போலும் அவர் தம் வாயைத் திறவாதிருந்தார். 8 அவர் கைது செய்யப்பட்டு, தீர்ப்பிடப்பட்டு, இழுத்துச் செல்லப்பட்டார். அவருக்கு நேர்ந்ததைப்பற்றி அக்கறை கொண்டவர் யார்? ஏனெனில், வாழ்வோர் உலகினின்று அவர் அகற்றப்பட்டார். என் மக்களின் குற்றத்தை முன்னிட்டுக் கொலையுண்டார். 9 வன்செயல் எதுவும் அவர் செய்ததில்லை. வஞ்சனை எதுவும் அவர் வாயில் இருந்ததில்லை. ஆயினும், தீயவரிடையே அவருக்குக் கல்லறை அமைத்தார்கள். செத்தபோது அவர் செல்வரோடு இருந்தார். 10 அவரை நொறுக்கவும் நோயால் வதைக்கவும் ஆண்டவர் திருவுளம் கொண்டார். அவர் தம் உயிரைக் குற்றநீக்கப்பலியாகத் தந்தார். எனவே, தம் வழிமரபு கண்டு நீடு வாழ்வார். ஆண்டவரின் திருவுளம் அவர் கையில் சிறப்புறும். 11 அவர் தம் துன்ப வாழ்வின் பயனைக் கண்டு நிறைவடைவார். நேரியவராகிய என் ஊழியர் தம் அறிவால் பலரை நேர்மையாளராக்குவார். அவர்களின் தீச்செயல்களைத் தாமே சுமந்து கொள்வார். 12 ஆதலால், நான் அவருக்கு மதிப்பு மிக்கவரிடையே சிறப்பளிப்பேன். அவரும் வலியவரோடு கொள்ளைப் பொருளைப் பங்கிடுவார். ஏனெனில், அவர் தம்மையே சாவுக்கு கையளித்தார். கொடியவருள் ஒருவராகக் கருதப்பட்டார். ஆயினும் பலரின் பாவத்தைச் சுமந்தார். கொடியோருக்காகப் பரிந்து பேசினர்.

இது ஆண்டவரின் அருள்வாக்கு
இறைவா உமக்கு நன்றி



தியானப்பாடல் : திருப்பாடல் 31: 2,6 12-13, 15-16, 17, 25

பல்லவி: தந்தையே உம் கையில் என் ஆவியை ஒப்படைக்கிறேன்

ஆண்டவரே உம்மிடம் அடைக்கலம் புகுகிறேன்
ஒருநாளும் ஏமாற்றம் அடைய விடாதேயும்
உம்முடைய நீதியின்படி என்னை விடுவித்தருளும்.
உம் கையில் என் ஆவியை ஒப்படைக்கிறேன் ஆண்டவரே
வார்தையில் தவறாத இறைவா
நீர் என்னை மீட்டருள்வீர்

என் எதிரிகள் அனைவரும்டையவும் பழிச்சொல்லுக்கு நான் ஆளானேன்
என் அயலாரின் நகைப்புக்கு இலக்கானேன்
எனக்கு அறிமுகமானவர்களின் அச்சத்துக்குரியவன் ஆனேன்
வெளியே என்னைக் காண்கிறவர்கள் என்னைவிட்டு ஓடுகின்றனர்
இறந்து போனவன் போல் பிறர் கண்களுக்கு மறைவானேன்
உடைந்து போன மட்கலத்தைப் போலானேன்

ஆனால் ஆண்டவரே நான் உம்மீது நான் உம்மீது நம்பிக்கை வைக்கன்றேன்
நீரே என் கடவுள் என்றேன்
என்கதி உம் கையில் உள்ளது ஆண்டவரே
என் எதிரிகளிடமிருந்தும் என்னைத்
துன்புறுத்து வோரிடமிருந்தும்
நீர் என்னை விடுவித்தருளும்

கனிந்த உம் திருமுகத்தை எனக்குக் காட்டியருளும்
உம் அருளன்பைக் காட்டி என்னை ஈடேற்றும்
ஆண்டவர் மீது நம்பிக்கையுள்ளவர்களே
மனத்திடன் கொள்ளுங்கள்
உங்கள் நெஞ்சம் உறுதி கொள்ளட்டும்

இரண்டாம் வாசக முன்னுரை (எபி 4 : 14 - 16, 5 : 7-9)

இயேசுவை நித்திய தலைமை குருவாக படம்பிடித்துக்காட்டி அவர் எவ்வாறு பழைய ஏற்பாடடின் குருக்களிலிருந்து மாறுபட்டவராக இருக்கின்றார் என்பதையும், பழைய ஏற்பாட்டின் பலிபொருட்கள் குறையுடையதாய் இருக்கும்போது, புதிய பலிப் பொருளாகிய இயேசு எப்படி குறைவில்லாத செம்மறியாக இருக்கிறார் என்பதையும் விளக்கும் இரண்டாம் வாசகத்திற்கு செவிகொடுப்போம்.

எபிரேயருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம்
14 எனவே, வானங்களைக் கடந்து சென்ற இறைமகனாகிய இயேசுவை நாம் தனிப்பெரும் தலைமைக் குருவாகக் கொண்டுள்ளதால் நாம் அறிக்கையிடுவதை விடாது பற்றிக்கொள்வோமாக! 15 ஏனெனில், நம் தலைமைக் குரு நம்முடைய வலுவின்மையைக் கண்டு இரக்கம் காட்ட இயலாதவர் அல்ல@ மாறாக, எல்லா வகையிலும் நம்மைப்போலச் சோதிக்கப்பட்டவர்@ எனினும் பாவம் செய்யாதவர். 16 எனவே, நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற வேளையில் உதவக் கூடிய அருளைக் கண்டடையவும், அருள் நிறைந்த இறை அரியணையைத் துணிவுடன் அணுகிச் செல்வோமாக. 7 அவர் இவ்வுலகில் வாழ்ந்த காலத்தில், தம்மைச் சாவிலிருந்து காப்பாற்ற வல்லவரை நோக்கி உரத்த குரல் எழுப்பி, கண்ணீர் சிந்தி, மன்றாடி வேண்டினார். அவர் கொண்டிருந்த இறைப்பற்று கலந்த அச்சத்தை முன்னிட்டு, கடவுள் அவருக்குச் செவி சாய்த்தார். 8 அவர் இறைமகனாயிருந்தும், துன்பங்கள் வழியே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார். 9 அவர் நிறைவுள்ளவராகி, "தமக்குத் கீழ்ப்படிவோர் அனைவரும் என்றென்றும் மீட்படையக் காரணமானார்.

இது ஆண்டவரின் அருள்வாக்கு
இறைவா உமக்கு நன்றி



நற்செய்திக்கு முன் வசனம் பிலிப்பியர் 2:8-9

8 தம்மைத் தாழ்த்திச் சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிபவரானார். 9 ஆதலால் தான் கடவுள் அவரை எல்லாருக்கும் மேலாய் உயர்த்தி, எப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அருளினார்

பின்பு, அருளப்பர் எழுதிய திருப்பாடுகளின் வரலாறு (18:1-19:42) வாசிக்கப்படும்.
(முடிவில் வசதிக்கேற்ப, சுருக்கமாக மறையுரையாற்றலாம். பின் சிறிது நேரம் மௌனமாக மன்றாட குரு மக்களை அழைக்கலாம்).

விசுவாசிகளின் மன்றாட்டு

இறைவாக்கு வழிபாடு விசுவாசிகளின் மன்றாட்டுடன் முடிவடையும். அதன் முறையாவது: திருத்தொண்டர்வாசக மேடையில் நின்றுகொண்டு, பின்வரும் மன்றாட்டின் கருத்தை அறிவிப்பார். அக்கருத்துக்காக அனைவரும் சிறிது நேரம் மௌனமாகச் செபிப்பர். பின் குரு, இருக்கையருகில் அல்லது தேவையானால் பீடத்தருகில் நின்றுகொண்டு, கைகளை விரித்து மன்றாட்டைச் சொல்வார். விசுவாசிகளின் மன்றாட்டின்போது மக்கள் முழந்தாளில் இருக்கலாம் அல்லது நிற்கலாம். குருவின் மன்றாட்டிற்குமுன் இறைமக்கள் (எடுத்துக்காட்டாக: ஆண்டவரே, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் என்று) ஒன்றாக ஆர்ப்பரிக்க வேண்டும் அல்லது திருத்தொண்டர்: முழந்தாளிடுங்கள் - எழுந்திருங்கள் என்று அழைப்பு விடுக்க, எல்லாரும் முழந்தாட்பணிந்து பணிக்கலாம். மிக முக்கியமானதொரு பொதுத் தேவைக்காகத் தனிப்பட்ட கருத்தையும் சேர்த்துக்கொள்ள ஆயர் அனுமதி அல்லது கட்டளை தரலாம். இங்குத் தரப்பட்ட கருத்துகளில் இடத்திற்கும் காலத்திற்கும் மிகப் பொருத்தமானவற்றைக் குரு தேர்ந்துகொள்ளலாம்: ஆனால் விசுவாசிகளில் மன்றாட்டிற்குப் பொதுவாகக் குறிப்பிட்ட கருத்துகளை விட்டுவிடக்கூடாது (இவற்றைப் "பொதுப் போதனை", எண் 46இல் காண்க)

விசுவாசிகளின் மன்றாட்டு முன்னுரை

நமக்காக பலியாகி நம்முடைய தேவைகளுக்காக தந்தையிடம பரிந்துரைத்து செபிக்க இயேசு சிலுவையில் கரங்களை விரித்துள்ளார். எனவே இத்தகைய சக்தி வாய்ந்த இணைப்பாளராக இயேசுவைப் பெற்றுள்ள இந்த வேளையில் நம் செபம் கட்டாயம் கேட்கப்படும் என்ற நம்பிக்கையில் திருச்சபை 10 பெரிய மன்றாட்டுகளைச் செபிக்கிறது. ஒவ்வொரு மன்றாட்டுக்கு பிறகும் ஆண்டவரை எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் என்று பாடி செபிப்போம்.

1. தூய திருச்சபைக்காக:
அன்புச் சகோதரர்களே சகோரிகளே இறைவனின் புனித திருச்சபைக்காக மன்றாடுவோம்.
நம் இறைவனாகிய ஆண்டவர் திருச்சபைக்கு அமைதியும் ஒற்றுமையும் அளித்து, அதனைப் பேணிக்காக்க வேண்டுமென்றும், நாம் கலக்கமின்றி அமைதியான வாழ்வு நடத்தி எல்லாம் வல்ல இறைத்தந்தையை மகிமைப்படுத்த நமக்கு அருள்புரிய வேண்டுமென்றும் மன்றாடுவோமாக.
மௌன மன்றாட்டு. பின்பு குரு:
என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா, கிறிஸ்து வழியாக உமது மாட்சியை உலக மக்களுக்கெல்லாம் வெளிப்படுத்தினீர்: நீர் இரக்கத்துடன் ஏற்படுத்திய திருச்சபையைப் பேணிக்காத்து, அது உலகெங்கும் பரவி, உறுதியான விசுவாசம் கொண்டு, உமது திருப்பெயரை என்றும் புகழ்வதில் நிலைத்திருக்கச் செய்தருளும். எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
எல். ஆமென்.

2. திருத்தந்தைக்காக
நம் திருத்தந்தை (பெயர். . . )க்காக மன்றாடுவோம்.

துலைமை ஆயர் நிலைக்கு அவரைத் தேர்ந்தெடுத்த நம் இறைவனாகிய ஆண்டவர் எவ்வகைத் தீங்குமின்றி அவரைப் பேணிக்கர்ப்பாராக. இதனால் அவர் இறைமக்களை வழிநடத்தித் திருச்சபை வளம் பெறச் செய்யவேண்டுமென்று மன்றாடுவோமாக.
மௌன மன்றாட்டு. பின்பு குரு:
என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா, உமது திட்டப்படியே அனைத்தும் அமைந்திருக்கின்றன.உமது அதிகாரத்தினால் ஆளப்படும் கிறிஸ்தவ மக்களாகிய எங்கள் வேண்டுதலைக் கேட்டு, திருத்தந்தையின் தலைமையின்கீழ் நாங்கள் விசுவாசத்தில் வளரும்படி அவரைப் பரிவுடன் காத்தருளும். எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
எல். ஆமென்.

3. திருச்சிபையில் பல்வேறு நிலைகளில் உள்ளவர்களுக்காக
இங்குக் குறிப்பிடவேண்டிய ஆயர்களையும், குறிப்பிடும் முறையையும் "பொதுப் போதனை" எண் 109இல் காண்க.
நம் ஆயர் (பெயர்...)க்காகவும், திருச்சபையிலுள்ள எல்லா ஆயர்கள், குருக்கள், திருத் தொண்டர்க்காகவும், விசுவாசிகள் அனைவர்க்காகவும் மன்றாடுவோமாக.
மௌன மன்றாட்டு. பின்பு குரு:
என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா, உம்முடைய ஆவியால் திருச்சபை அனைத்தும் அர்ச்சிக்கப்பெற்று, ஆளப்படுகின்றது. உம்முடைய திருப்பணியாளர்கள் அனைவர்க்காகவும் நாங்கள் செய்யும் செபத்தை கனிவோடு கேட்டருளும். எல்லா நிலையினரும் உமது அருள்துணையால் உமக்கு உண்மையோடு ஊழியம் புரிவார்களாக. எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
எல். ஆமென்.

4.திருமுழுக்குப் பெறத் தயாரிப்புச் செய்வோர்க்காக
திருமுழுக்குப் பெறத் தயாரிப்புச் செய்வோர்கக்காகவும் மன்றாடுவோம்.
நம் இறைவனாகிய ஆண்டவர் தம் இரக்கத்தைப் பொழிந்து அவர்களுடைய இதயங்களைத் திறந்துவிடுவாராக் இவ்வாறு அவர்கள், புதுப்பிறப்பளிக்கும் திருமுழுக்கினால், பாவங்களுக்கெல்லாம் மன்னிப்படைந்து, நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவில் வாழவேண்டுமென்று மன்றாடுவோமாக.
மௌன மன்றாட்டு. பின்பு குரு: என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா, புதிய மக்களைச் சேர்த்துத் திருச்சபை வளம்பெறச் செய்கின்றீர். திருமுழுக்கு பெற இருப்போரிடம் விசுவாசமும் அறிவும் வளரச் செய்தருளும். இவர்கள் திருமுழுக்கு நீரினால் புதுப்பிறப்படைந்து, தேர்ந்துகொள்ளப்பட்ட உம்முடைய மக்களின் திருக்கூட்டத்தில் சேர்ந்துகொள்வார்களாக. எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
எல். ஆமென்.

5. கிறிஸ்துவர்களின் ஒற்றுமைக்காக
கிறிஸ்துவில் விசுவாசம் கொண்டுள்ள நம் சகோதரர் சகோதரிகள் அனைவர்க்காகவும் மன்றாடுவோம். நம் இறைவனாகிய ஆண்டவர் தம்மில் விசுவாசம் கொண்டோர் அனைவரையும் உண்மையின் பாதையில் வழிநடத்தித் தமது ஒரே திருச்சபையில் கூட்டிச்சேர்த்துக் காத்தருள வேண்டுமென்று மன்றாடுவோமாக.
மௌன மன்றாட்டு. பின்பு குரு:
என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா, பிரிந்தவற்றை இணைப்பவரும் இணைந்தவற்றைப் பேணிக்காப்பவரும் நீரே. உம் திருமகனின் மந்தையைக் கனிவுடன் கண்ணோக்கியருளும். ஒரே திருமுழுக்கினால் திருநிலைப்படுத்தப்பெற்ற அனைவரையும், விசுவாசத்தின் முழுமையால் இணைத்து, அன்பின் பிணைப்பால் ஒன்றுசேர்த்தருளும். எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

6. யூத மக்களுக்காக
யூத மக்களுக்காக மன்றாடுவோம்.
முற்காலத்தில் அவர்களோடு பேசிய நம் இறைவனாகிய ஆண்டவர், தமது திருப்பெயரின் மீதுள்ள அன்பிலும் தமது உடன்படிக்கை மீதுள்ள பற்றுறுதியிலும் இவர்களை வளர்ச்சியடையச் செய்தருள வேண்டுமென்று மன்றாடுவோமாக.
மௌன மன்றாட்டு. பின்பு குரு:
என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா,
ஆபிராகாமுக்கும் அவர்தம் வழிவந்தோர்க்கும். நீர் அளித்த வாக்குறுதிகளை நினைவுகூரும். உமது திருச்சபையின் வேண்டுதலுக்குத் தயவாய்ச் செவிசாய்த்து, முதன்முதலாக நீர் தேர்ந்துகொண்ட இம்மக்கள் உமது மீட்பின் நிறைவைப் பெற அருள்வீராக. எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
எல். ஆமென்

7. கிறிஸ்துவில் இன்னும் விசுவாசம் கொள்ளாதவர்களுக்காக
கிறிஸ்துவில் இன்னும் விசுவாசம் கொள்ளாதவர்களுக்காகவும் மன்றாடுவோம்.
இவர்கள் தூய ஆவியின் ஒளியைப் பெற்று மீட்புப் பாதைக்கு வந்துசெர வேண்டுமென்று மன்றாடுவோமாக.
மௌன மன்றாட்டு. பின்பு குரு:
என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா, கிறிஸ்துவை இன்னும் ஏற்றுக்கொள்ளாத மக்கள் உம் திருமுன் நேர்மையான உள்ளத்தோடு நடந்து, உண்மையைக் கண்டடைவார்களாக. நாங்களும் உம் வாழ்வின் மறையுண்மைகளை மேன்மேலும் ஆழமாகக் கண்டுணர்வோமாக. மேலும் உமது அன்புக்கு இவ்வுலகில் சிறந்த சாட்சிகளாய் விளங்குமாறு, ஒருவர் ஒருவரை அன்புசெய்து வாழவும், பிற சமய சகோதரர் சகோதரிகளோடு அன்புறவு கொண்டு ஒழுகவும் வரமருளும். எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
எல். ஆமென்.

8. கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களுக்காக
கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களுக்காகவும் மன்றாடுவோம்.
இவர்கள் நேர்மையான உள்ளத்தோடு நன்னெறியில் வாழ்ந்து, உண்மைக் கடவுளைக் கண்டடையுமாறு மன்றாடுவோமாக.
மௌன மன்றாட்டு. பின்பு குரு:
என்றும் வாழும் எல்லாம் வல் இறைவா, மாந்தர் அனைவரும் எப்போதும் உம்மையே விரும்பித் தேடவும், உம்மை அடைவதால் அமைதி பெறவுமே நீர் அவர்களைப் படைத்தீர். இவ்வுலகில் ஏற்பாடும் எல்லாவித இடையூறுகளுக்கு நடுவிலும், அவர்கள் அனைவரும் உமது அன்பைக் காட்டும் அறிகுறிகளையும், உம்மை விசுவாசிப்போர் ஆற்றும் நற்செயல்களின் சான்றுகளையும் கண்டுணர்ந்து, உம்மை ஒரே மெய்யங்கடவுள் என்றும் மக்களின் தந்தை என்றும்மகிழ்வுடன் ஏற்றுக்கொள்ளச் செய்தருளும். எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
எல். ஆமென்.

9. நாடுகளை ஆள்வோர்க்காக
நாடுகளை ஆளும் அனைவர்க்காகவும் மன்றாடுவோம்.
உலக மக்கள் அனைவரும் உண்மையான அமைதியும் உரிமை வாழ்வும் பெறும்பொருட்டு, நம் இறைவனாகிய ஆண்டவர் தம் திருவுளப்படி இவர்களுடைய சிந்தனை, சொல், செயல் அனைத்தையும் ஆண்டு நடத்தியருள வேண்டுமென்று மன்றாடுவோமாக.
மௌன மன்றாட்டு. பின்பு குரு: என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா, மனித இதயங்களின் எதிர்ப்பார்ப்புகளை நீர் அறிவீர் அவர்களின் உரிமைகளை நீரே பேணிக்காக்கின்றீர். உலகமெங்கும் அமைதியும் பாதுகாப்பும் வளமான வாழ்வும் சமய உரிமையும் நிலைபெறுமாறு, எங்கள் தலைவர்களை உம்முடைய ஞானத்தால் நிரப்பி, அவர்கள் உண்மையான மக்கள் தொண்டர்களாக விளங்கிடச் செய்வீராக. எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
எல். ஆமென்

10. துன்புறுவோர்க்காக
அன்புச் சகோதரர்களே சகோதரிகளே, துன்புறும் அனைவர்க்காகவும் மன்றாடுவோம்.
எல்லாம் வல்ல தந்தையாகிய இறைவனின் அருளால், உலகிலிருந்து தவறுகள் அகலவும், பிணிகள் நீங்கிப் பஞ்சம் ஒழியவும், சிறைகள் திறக்கப்பட்டுத் தளைகள் தகர்க்கப்படவும், வழிப்போக்கர் பாதுகாப்புப் பெறவும், பயணம் செய்வோர் நலமாக வீடு திரும்பவும், நோயுற்றோர் நலம் பெறவும், இறக்கின்றவர் மீட்பின் நிறைவு பெறவும் மன்றாடுவோமாக.
மௌன மன்றாட்டு. பின்பு குரு: என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா, துயருற்றோர்க்கு ஆறதலும், வருந்துவோர்க்குத் திடனும் நீரே. எத்தகையே துன்ப வேளையிலும் உம்மை நோக்கிக் கூவியழைப்போரின் வேண்டுதலைக் கேட்டருளும்.இவர்கள் தங்கள் தேவைகளில் நீர் இரக்கத்துடன் துணைபுரிவதைக் கண்டு மகிழ்வார்களாக. எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
எல். ஆமென்.

திருச்சிலுவை ஆராதனை முன்னுரை

இப்போது திருச்சிலுவை ஆராதனை ஆரம்பமாகிறது. இயேசு கிறிஸ்துவின் தியாக பலியில் சிலுவை வெற்றியின் சின்னமாக, மீட்பின் சின்னமாக, தியாகத்தின் சின்னமாக மாறியது. சுமார் 4ம் நூற்றாண்டில் இயேசுவின் பாடுபட்ட சிலுவைக் கண்டுபிடிக்கப்பட்டது. அன்றிலிருந்து திருச்சிலுவைக்கு ஆராதனை செய்து முத்தி செய்யும் முறை உருவானது. அதன் அடிப்படையில் குருவானவர் மூடப்பட்டிருக்கும் திருச்சிலுவையை பீடத்தை நோக்கி பவனியாக கொண்டுவருவார். குருவானவர் மூடப்பட்டிருக்கும் சிலுவையை சிறிது சிறிதாக முதலில் வலதுகரம், பிறகு இடதுகரம், இறுதியில் முழுவதும் அகற்றி திருச்சிலுவை மரம் இதோ என்று பாடி ஆராதனை செய்ய அழைப்பார் அப்போது நாம் அனைவரும் சேர்ந்து ‘வருவீர் ஆராதிப்போம்’ என பாடுவோம். குருக்களும் பீடச்சிறுவர்களும் திருச்சிலுவையை முத்தி செய்வார்கள். இன்றைய வழிபாட்டின் இருதியில் நாம் அனைவரும் திருச்சிலுவையை முத்திசெய்வோம். திருச்சிலுவையைக் காட்டும்போது அழைப்பு
குரு: திருச்சிலுவை மரம் இதோ! இதிலேதான் தொங்கியது உலகத்தின் இரட்சணியம் (3 முறை)
எல். வருவீர், ஆராதிப்போம்.(3 முறை)

திருச்சிலுவை ஆராதனை

திருச்சிலுவை ஆராதனைக்குக் குருவும் திருப்பணியாளரும் இறைமக்களும் ஒழுங்காகப் பவனி போல வந்து வணக்கம் செலுத்திச் செல்வர். முழந்தாட்படிந்தோ, நாட்டுப் பழக்கத்திற்கேற்ப வேறு வகையிலோ, உ-ம்: முத்திசெய்தோ கைகளில் தொட்டுக் கண்களில் (நெற்றியில்) ஒற்றிக்கொண்டோ இவ்வணக்கத்தைக் காட்டலாம். ஆராதனையின்போது ஆண்டவரே யாம் என்னும் பல்லவி, திருமுறைப்பாடுகள் அல்லது வேறு பொருத்தமான பாடல்கள் பாடப்படும். அப்போது ஆராதனைபுரிந்தவர்கள் எல்லாரும் அமர்ந்திருப்பர். ஒரே ஒரு சிலுவைதான் ஆராதனைக்கு வைக்கப்படவேண்டும். பெருங் கூட்டத்தின் காரணமாக ஒவ்வொருவரும் தனித்தனியே ஆராதனை செலுத்த முடியாதெனில். ஒருசிலர் ஆராதனை செய்தபின் குரு சிலுவையை எடுத்துப் பீடத்தின்முன் நின்றுகொண்டு. சிற்றுரையாற்றி அனைவரையும் ஆராதனை செய்ய அழைப்பார். அவர் சிலுவையைச் சிறிது நேரம் உயர்த்திப் பிடித்துக்கொண்டிருக்க, எல்லாரும் மௌனமாக ஆராதிப்பர். ஆராதனைக்குப்பின் சிலுவை பீடத்திற்கு அருகில் அதற்குரிய இடத்தில் வைக்கப்படும். திரிகள் அதன் இருபுறம் அல்லது பீடத்தின்மீதோ அருகிலோ வைக்கப்படும்.
திருச்சிலுவை ஆராதனையின்போது பாடல்கள்: எனது ஜனமே நான் உனக்கு என்ன தீங்கு செய்தேன் சொல்
எதிலே உனக்குத் துயர் தந்தேன் எனக்குப் பதில் நீ கூறிடுவாய்

எகிப்து நாட்டில் நின்றுன்னை மீட்டுக்கொண்டு வந்தேனே
அதனாலோ உன் மீட்பருக்கு சிலுவை மரத்தை நீ தந்தாய்

நாற்பது ஆண்டுகள் நான் உன்னை பாலைவனத்தில் வழிநடத்தி
உமக்கு மன்னா உணவூட்டி வளமிகு நாட்டினுள் வரச்செய்தேன்
அதனாலோ உன் மீட்பருக்கு சிலுவை மரத்தை நீ தந்தாய்

நான் உனக்காக எகிப்தியரை அவர் தம் தலைச்சன் பிள்ளைகளை
வதைத்து ஒழித்தேன் நீ என்னை கசையால் வதைத்து கையளித்தாய்

பாரவோனைச் செங்கடலிலாழ்த்தி எகிப்தில் நின்றுன்னை விடுவித்தேன்
நீயோ என்னைத் தலைமையாம் குருக்களிடத்தில் கையளித்தாய்

நானே உனக்கு முன்பாகக் கடலைக் திறந்து வழி செய்தேன்
நீயோ எனது விலாவை ஓர் ஈட்டியினாலே திறந்தாயே

மேகத் தூணில் வழிகாட்டி உனக்கு முன்னே யான் சென்றேன்
நீயோ பிலாத்தின் நீதி மன்றம் என்னை இழுத்து சென்றாயே

பாலைவனத்தில் மன்னாவால் நானே உன்னைக் உண்பித்தேன்
நீயோ என்னைக் கன்னத்தில் அடித்து கசையால் வதைத்தாயே

இனிய நீரைப் பாறை நின்று உனக்குக் குடிக்க தந்தேனே
நீயோ பிச்சும் காடியுமே எனக்கு குடிக்கத் தந்தாயே

கானான் அரசரை உனக்காக நானே அடித்து நொறுக்கினேன்
நீயோ நாணல் தடி கொண்டு எந்தன் தலையில் அடித்தாயே

அரசருக்குரிய செங்கோலை உனக்குத் தந்தகு நானன்றோ
நீயோ எந்தன் சிரசிற்கு முள்ளின் முடியைத் தந்தாயே

உன்னை மிகுந்த வன்மையுடன் சிறந்த நிலைக்கு உயர்த்தினேன்
நீயோ என்னை சிலுவை மரத்தில் தொங்க வைத்தாய்

நம்பிக்கை தரும் சிலுவையே நீ மரத்துள் சிறந்த மரமாவாய்
உன்னைப் போன்ற தழை பூ கனியை எந்தக் காவும் ஈந்திடுமோ
இனிய சுமையை இனிய ஆணியால் இனிது தாங்கும் மரமே நீ

மாட்சிமை மிக்க போரின் வெற்றி விருதை நாவே பாடுவாய்
உலக மீட்பர் பலியதாகி வென்ற விதத்தைக் கூறியே
சிலுவைச் சின்னமதைப புகழ்ந்து செயத்தின் கீதம் ஓதுவாய்

தீமையான கனியைத் தின்று சாவிலே விழுந்த நம்
ஆதித் தந்தைக்குற்ற தீங்கை கண்டு நொந்த சிருஷ்டிகர்
மரத்தால் வந்த தீங்கை நீக்க மரத்தை அன்றே குறித்தனர்

கசந்த காடி அருந்திச் சோர்ந்து முட்கள் ஈட்டி ஆணிகள்
மென்மை உடலைத் துளைத்ததாலே செந்நீர் பெருகிப் பாயவே
விண்ணும் மண்ணும் கடலும் உலகும் அதனால் தூய்மை ஆயின

வளர்ந்த மரமே உன் கிளை தாழ்த்தி விரைத்த உடலைத் தளர்த்துவாய்
இயற்கை உனக்கு ஈந்த வைரம் இளகி மென்மை ஆகி நீ
உயர்ந்த வானின் அரசர் உடலின் வருத்தம் தணித்து தாங்குவாய்

மரமே நீயே உலகின் விலையைத் தாங்குகத் தகுதியாகினை
திருச்செம்மறியின் குருதி உன்மேல பாய்ந்து தோய்ந்த தாதலால்
புயில் தவிக்கும் உலகிற் கெல்லாம் புகலிடம் நீ பேழை நீ

பரம திரித்துவ இறைவனுக்கு முடிவில்லாத மங்களம்
தந்தை மகனும் தூய ஆவியும் சரிசமப் புகழ் பெறுகவே
அவர் தம் அன்பின் அருளினாலே நம்மைக் காத்து மீட்கின்றார்

தயை செய்வாய் நாதா என் பாவங்ளை நீக்கி

அன்புடனே ஏழை என்மேல் இரக்கம் வையும்
அனுதபித்து என்பிழையை அகற்றுமையா
பாவமதை நீக்கி என்னை பனிபோலாக்கும்
தோஷமெல்லாம் தீர்த்து என்னை தூய்மையாக்கும்

என்குற்றம் நானறிவேன் வெள்ளிடை மலைபோல்
தீவினையை மறவாதென் மனது என்றும்
உம் புனிதத்தை போக்கி நான் பாவியானேன்
நீர் தீமையென்று கருதுவதை துணிந்து செய்தேன்

உள்ளத்தில் உண்மையை நீர் விரும்புகிறீர்
என் ஆத்துமத்தில் அந்தரத்தில் அறிவையூட்டும்
என்பாவம் தீர்ப்பாய் உன் தூய்மையாவேன்
பனிவெண்மைக்கு உயர்வாகப் புனிதமாவேன்

ஆணிகொண்ட உம் காயங்களை அன்புடன் முத்தி செய்கின்றேன்
பாவத்தாலுமைக் கொன்றேனே ஆயனே என்னை மன்னியும்

வலது கரத்தின் காயமே அழகு நிறைந்த இரத்தினமே
அன்புடன் முத்தி செய்கின்றேன்

இடது கரத்தின் காயமே கடவுளின் திரு அன்புருவே
அன்புடன் முத்தி செய்கின்றேன்

வலது பாத காயமே பலம் மிகத் தரும் நற்கனியே
அன்புடன் முத்தி செய்கின்றேன்

இடது பாதக் காயமே திடம் மிகத் தரும் தேனமுதே
அன்புடன் முத்தி செய்கின்றேன்

திருவிலாவின் காயமே அருள் சொரிந்திடும் ஆலயமே
அன்புடன் முத்தி செய்கின்றேன்

காணிக்கை பகுதி

இன்று நாம் தருகின்ற காணிக்கை எருசலேமில் உள்ள இயேசு பாடுபட்டு இறந்து, உயிர்த்த புனித பூமியை பராமரிக்க அனுப்பி வைக்கப்படும்

திருவிருந்து பகுதி முன்னுரை
அனைவரும் எழுந்து நிற்போம். இன்றைய வழிபாட்டின் இறுதி பகுதியை அடைந்திருக்கிறோம். திருச்சபையின் திருவழிபாட்டில் திருப்பலியும், திருவருட்சாதனங்களும் நடைபெறாத ஒரே நாள் பெரிய வெள்ளிதான். ஏனென்றால் திருப்பலியில் நாம் நினைவு கூர்ந்து புதுபிக்கும் கல்வாரி நிகழ்ச்சிகளை இன்றைய சிலுவைப்பாடுகள் மூலம் இயேசு நிகழ்த்திவிட்டார். எனவே நேற்றைய திருப்பலியில் வசீகரம் செய்யப்பட்ட பரிசுத்த நற்கருணை இப்போது பீடத்திற்கு கொண்டுவரப்படுகின்றது. ஆண்டவரின் பாடுகளைத் தியானித்து அதில் பங்கேற்று அதன் பலனை முழுமையாய் பெறும் ஏக்கத்தோடு திருவிருந்தில் பங்கு பெறுவோம். நற்கருணை வழங்கியபின், அதிகாரமுள்ள மற்றொரு பணியாளர் நற்கருணைப் பாத்திரத்தைக் கோயிலுக்கு வெளியே தகுதியான இடத்திற்குக் கொண்டுபோய் வைப்பர் அல்லது வேறு வழியில்லையென்றால், அதை நற்கருணைப் பேழையில் வைக்கலாம். இறுதியில்
சிலுவை யூதருக்கு தடைக்கல்லாகவும், பிற இனத்தவருக்கு மடமையாகவும் இருந்தது ஆனால் அழைக்கப்பட்ட நமக்கோ சிலுவை கடவுளின் வல்லமையும் ஞானமுமாய் இருக்கிறது. கல்வாரிப் பலியும், சிலுவையும் இறை வல்லமையான அருளும், ஆசிரும் பொங்கி வருகின்ற சக்தியின் இருப்பிடம். எனவே ஒவ்வொரு நாளும் கிறிஸ்துவின் பாடுகளையும், மரணத்தையும் தியானித்து அருள் வாழ்விற்காய் உயிர்க்க வேண்டும். மேலும் நமக்கு மீட்பைக் கொணர்ந்த வெற்றியின் சின்னம் சிலுவையையும், அதில் பலியான நம் மீட்பர் இயேசுவையும் திருச்சிலுவையில் முத்தி செய்து அவருடைய பாடுகளை தியானித்த வண்ணம் அமைதியாக வீடு செல்வோம்.

நன்றி மன்றாட்டு:

செபிப்போமாக (மன்றாடுவோமாக)

என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா, உம்முடைய திருமகனின் பாடுகளாலும் சிலுவைச் சாவினாலும் உயிர்ப்பினாலும் எங்களை மீட்டருளினீர். பேரிரக்கத்துடன் நீர் ஆற்றிய இம்மீட்புச் செயலின் பலன் எங்களில் என்றும் நிலைத்திருக்கச் செய்தருளும். எங்கள் ஆண்டவருடைய மரணத்தில் வெளிப்பட்ட உமது பேரன்பைக் கண்டுணர்ந்து, நாங்கள் அவ்வன்பிலே என்றும் நிலைத்து வாழ்த்திட அருள்வீராக. எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவழியாக உம்மை மன்றாடுகிறோம்.
எல்: ஆமென்
பிரியாவிடை கூற, குரு மக்களைநோக்கி நின்று அவர்கள்மீது தம் கைகளை விரித்துக் கொண்டு இச் செபத்தைச் சொல்கிறார்:
தயை நிறை தந்தையே,
உம் திருமகனின் உயிர்ப்பு எங்களுக்கு அளிக்கும் நம்பிக்கையோடு, அவரது சாவை இப்பொழுது நினைவுகூர்ந்த உம் மக்கள் எங்கள் மீது உமது ஆசி நிறைவாய் இறங்குவதாக. உமது திருமகனின் பாடுகளுக்குக் காரணமாயிருந்த எங்களுக்கு மன்னிப்பு கிடைப்பதாக. துன்பங்களால் துயருறும் நாங்கள் ஆறுதல் அடைவோமாக. தளர்வுறும் எங்கள் விசுவாசம் வளர்ச்சி பெறுவதாக. முடிவில்லா வாழ்வு கிடைக்கும் என்ற எங்கள் நம்பிக்கை உறுதி பெறுவதாக. எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவழியாக உம்மை மன்றாடுகிறோம். எல்: ஆமென்

எல்லாரும் மௌனமாகக் கலைந்து செல்கின்றனர். வசதியான நேரத்தில் பீடத்தின் அணிகளெல்லாம் அகற்றப்படும். இத்திருச்சடங்கில் பங்கெடுத்தவர்கள் திருப்புகழ்மாலையின் மாலை வழிபாட்டைச் செபிப்பதில்லை. திருச்சிலுவை வழிபாட்டிற்கு பின்னரோ அல்லது அனைவருக்கும் பொருத்தமான வேறொறு நேரத்திலோ சிலுவைப்பாதை செய்யலாம்.