பாஸ்கா திருவிழிப்பு


புனித சனியன்று திருச்சபை ஆண்டவருடைய கல்லறையருகில் அவருடைய பாடுகளையும் மரணத்தையும் சிந்தித்துக்கொண்டு இருக்கின்றது. பீடம் வெறுமையாயிருக்கிறது. திருப்பலி ஒப்புக்கொடுப்பதில்லை. திருவிழிப்புக்குப்பின் பாஸ்கா மகிழ்ச்சிக்கு வாய்ப்பு கிடைக்கிறது. இம்மகிழ்ச்சி ஐம்பது நாள்கள் தொடரும். திருப்பயண உணவாக மட்டுமே இன்று நற்கருணை வழங்கலாம். தொன்றுதொட்டே இவ்விரவு ஆண்டவருடைய வருகைக்காகத் திருவிழிப்புக் காக்கும் இரவாக இருந்து வந்துள்ளது (யாத் 12:42): அன்று இறைமக்கள் நற்செய்தியின் அறிவுரைப்படி (லூக் 12:35 முதல் காண்க) எரியும் விளக்குளுடன் ஆண்டவர் எப்பொழுது வருவார் எனக் காத்திருப்போரைப் போன்றிருப்பார்கள். இவ்வாறு, அவர் வந்ததும், அவர்கள் விழித்திருக்கக் கண்டு அவர்களைத் தம் பந்தியில் அமர்ந்துவார்.

வழிபாட்டின் பாகங்கள்

திருஒளி வழிபாடு (முதற்பகுதி)
இறைவாக்கு வழிபாடு (இரண்டாம் பகுதி): இறைவன் தொடக்கத்திலிருந்தே தம் மக்களிடையில் புரிந்துள்ள ஆற்றல்மிகு செயல்களைத் திருச்சபை சிந்தித்து. அவர் தந்த வாக்குறுதிகளில் நம்பிக்கை கொள்ள முனைகிறது.
திருமுழுக்கு வழிபாடு (மூன்றாம் பகுதி): உயிர்ப்பு விழா இதற்குள் நெருங்கி வர, திருச்சபையின் புது உறுப்பினர் திருமுழுக்கால் புதுப் பிறப்பு அடைவர்.
நற்கருணை வழிபாடு (நானகாம் பகுதி): இறுதியாக, ஆண்டவர் தம் இறப்பாலும் உயிர்ப்பாலும் முன்னேற்பாடு செய்த திருவிருந்துக்குத் திருச்சபை அழைக்கப்படுகின்றது.


பாஸ்காத் திருவிழிப்பு விழா முழுவதும் இரவில் கொண்டாடப்படும்: எனவே, அதை இரவுக்குமுன் தொடங்கக் கூடாது, ஞாயிறு விடியுமுன் முடிக்க வேண்டும். இவ்விரவுத் திருப்பலியை நள்ளிரவுக்கு முன்னரே ஒப்புக்கொடுத்தாலும். ஆது ஆண்டவருடைய உயிர்த்தெழுதலின் பாஸ்கா ஞாயிறு திருப்பலியாகும். இவ்விரவுத் திருப்பலியில் பங்கெடுத்தவர்கள், இரண்டாவது பாஸ்காத் திருப்பலியிலும் நற்கருணை உட்கொள்ளலாம். தனியாகவோ கூட்டுத்திருப்பலியாகவோ இவ்விரவுத் திருப்பலியை நிறைவேற்றிய குரு மீண்டும் தனித்தோ கூட்டுத்திருப்பலியாகவோ இரண்டாவது பாஸ்காத் திருப்பலியை நிறைவேற்றலாம். குருவும் திருத்தொண்டரும் வெண்ணிறத் திருப்பலி உடைகளை அணிவர். திருவிழிப்பில் பங்கெடுக்கும் அனைவரும் மெழுகுதிரிகளை வைத்திருக்க வேண்டும்.

தயாரிப்பு

கோவிலின் விளக்குகள் அணைக்கப்பட்டிருக்கும்
பாத்திரத்தில் தண்ணீர் , புது நெருப்பு
பாஸ்கா மெழுகுவத்தி
திருமுழுக்கு பெறுவோர்


வழிபாட்டு ஒழுங்குமுறை

பொது முன்னுரை
முதற்பகுதி - ஒளிவழிபாடு
முன்னுரை
வாழ்த்துரை
தீயை ஆசீர்வதித்தல்
முன்னுரை
பாஸ்காதிரியை புனிதப்படுத்துதல் - எண் - 10
புது தீயிலிருந்து திரியை பற்றவைத்தல்
பவனி - கிறிஸ்துவின் ஒளி இதோ
பாஸ்கா திரிக்கு தூபம்
பாஸ்கா புகழுரை
இரண்டாம் பகுதி - இறைவாக்கு வழிபாடு
திரிகள் அனைத்து வைக்கப்படும்
முன்னுரை
முதல் வாசகம் - தொ. நூ 1:1-2:2
பதிலுரைப்பாடல் -1 (ஆண்டவரே உம் பெருமையும்)
செபிப்போமாக - எண் 24
இரண்டாம் வாசகம் - வி.ப. 14:15-15:1
பதிலுரைப்பாடல் -2 (ஆண்டவர் மாண்புடன்)
செபிப்போமாக - எண் 26
மூன்றாம் வாசகம் - எசேக் 36:16-17, 18-28
பதிலுரைப்பாடல் -3 (கலைமான் நீரோடையை)
செபிப்போமாக
உன்னதங்களிலே (மணிகள் ஒலிக்கும்)
செபிப்போமாக
நான்காம் வாசகம் - உரோ 6:3-11
அல்லேலூயா
நற்செய்தி - லூக் 24:1-12
மறையுரை
மூன்றாம் பகுதி - திருமுழுக்கு வழிபாடு
முன்னுரை
திருமுழுக்கு பெறுவோர் முன்வருதல்
குரு அறிவுரை கூறுதல்
புனிதர்களின் மன்றாட்டுமாலை
திருமுழுக்குத் தண்ணீருக்கு ஆசிவழங்குதல்
திருமுழுக்கு அளித்தல்
திருமுழுக்கு வாக்குறுதிகளை புதுப்பித்தல்
தீர்த்தம் தெளித்தல் - தேவாலய வலப்புறமிருந்து
விசுவாசிகளின் மன்றாட்டு - (விசுவாச அறிக்கை இல்லை)
நான்காம் பகுதி - நற்கருணை வழிபாடு
முன்னுரை
காணிக்கை மன்றாட்டு
நற்கருணை மன்றாட்டு
நன்றி மன்றாட்டு
திருப்பலி முடிவு


முன்னுரை

இயேசு கிறிஸ்துவில் பிரியமானவர்களே, இந்நாள் நமக்கெல்லாம் பொன்னாள். மகிழ்ச்சியின் நாள். இன்றைய இரவு வெற்றியின் கொண்டாட்டமாகவும், மகிழ்ச்சியின் ஆரவாரமாகவும் திகழ்கிறது. திருச்சபையும், நம் விசுவாச வாழ்வும், கிறிஸ்துவின் உயிர்ப்பில் புது பிறப்பையும் புதுத்தெம்பையும் பெறுகிறது. பாஸ்கா என்ற எபிரேய சொல்லுக்கு ‘கடத்தல்’ அல்லது ‘கடந்து போதல்’ என்று பொருள். பழைய ஏற்பாட்டில் இஸ்ராயேல் மக்கள், செங்கடலையும், எகிப்தின் அடிமைத்தனத்தையும் கடந்து வாக்களிக்கப்பட்ட நாட்டிற்கு சுதந்திர குடிமக்களாக வந்தார்கள். இயேசுவின் உயிர்ப்பில் பாஸ்கா நமக்கு ஒரு புதிய பொருளைக் கற்றுத் தருகிறது. அதாவது, பாவத்திலிருந்து - புனித வாழ்விற்கும், இருளிலிருந்து ஒளிக்கும், சாவிலிருந்து நிலைவாழ்விற்கும் இயேசுவோடு நாம் கடந்து வருவதைத்தான் இந்த புதிய பாஸ்கா நமக்கு உணர்த்துகிறது. இனியும் நாம் ஊனியல்பிற்கு உட்பட்டவர்கள் அல்ல, மாறாக உயிர்த்தெழுந்த கிறிஸ்துவின் செயலுக்கு உட்பட்டவர்கள். நாம் இயேசுவின் விலை மதிப்பில்லாத திரு இரத்தத்தினால் மீட்கப்பட்ட மக்களாய், புது வாழ்வு பெற்றவர்களாய் வாழ இன்றைய வழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. இன்றைய திருவழிபாடானது நான்கு பெரும் பிரிவுகளைக் கொண்டுள்ளது. 1. ஒளி வழிபாடு 2. இறைவார்த்தை வழிபாடு 3. திருமுழுக்கு வழிபாடு 4. நற்கருணை வழிபாடு ஆகவே இன்றைய இத்திருவழிபாட்டில் பக்தியோடு பங்கு பெறுவோம், பலன் பெறுவோம்.

1. ஒளி வழிபாடு

பொது முன்னுரை
அணுக முடியாத ஒளியில் வாழ்பவர் இறைவன். எனவே சிறியதும் பெரியதுமான ஒளி விளக்குகளால் இறைவனின் பிரசன்னத்தை நாம் உணர முடிகிறது. அன்று இஸ்ராயேல் மக்களை விடுதலை பயணத்தல் ஈடுபடுத்திய இறைவன், மேகத்தூணாகவும் நெருப்புத்தூணாகவும் அவர்களுக்கு முன்னும் பின்னும், இரவும் பகலுமாக நடந்தார். இந்த பாஸ்கா என்னும் கடத்தல் நிகழ்வை நினைவுகூறும் விதமாக இஸ்ராயல் மக்கள் பாஸ்கா விழாவிலே, இரவு நேரங்களில் விளக்கை ஏற்றி, அதை மந்திரித்து, அதன் ஒளியில் திருப்பாடல்களை வாசித்து வந்தனர். புதிய இஸ்ராயேல் மக்களாகிய நாம் ஒளிவிழாவை கிறிஸ்துவின் உயிர்ப்புடன் தொடர்புபடுத்தி இந்த இரவில் கொண்டாடுகிறோம். இப்போது குருவானவர் நம்மை வாழ்த்தி இந்த பாஸ்கா இரவைப்பற்றி அறிரை கூறுவார். (எண். 8)

தீயை ஆசீர்வதித்தல்
புதிய பாஸ்காவின் நினைவாக இப்போது புதுத்தீயை குரு மந்திரிக்கிறார். நெருப்பு தூய்மைபடுத்தும் கருவியாகவும், ஒளியைக் கொடுக்கக் கூடியதாகவும் விளங்குகிறது. திருவழிபாட்டில் நெருப்பு தூபத்திற்கு பயன்படுகிறது. எனவே இந்த நெருப்பை இப்போது குருவானவர் புனிதப்படுத்துகிறார். (எண் 9)

பாஸ்காத் திரியை மந்திரித்தல் - இப்போது குருவானவர் பாஸ்கா திரியை புனிதப்படுத்தவிருக்கிறார். பாஸ்காத் திரி கிறிஸ்துவை குறிக்கிறது.

சிலுவை - சிலுவை மரத்தின் வழியாகத்தான் உயிர்ப்பின் மகிமை விளங்குகிறது என்பதைக் குறிக்க இப்போது குருவானவர் பாஸ்கா திரியில் சிலுவையின் நேர்கோட்டையும் குறுக்குக்கோட்டையும் வரைகிறார்.
அகரமும் னகரமும் - கிறிஸ்து காலங்கள் யாவற்றையும் கடந்து நிற்கிறார் என்பதைக் குறிக்கின்ற வகையில் குருவானவர் பாஸ்கா திரியில் தமிழ் எழுத்துகளின் முதல் எழுத்தான அகரம் என்ற எழுத்தையும் , கடைசி எழுத்தான ன என்ற எழுத்தையும், வரைகிறார்.
ஆண்டின் எண் 2010 - காலங்களும் யூகங்களும், மாட்சியும் ஆட்சியும் ஆண்டவருக்கே உரியன என்பதை குறிக்கும் விதமாக சிலுவையின் நான்கு கோணங்களில் நிகழும் ஆண்டின் எண்களையும் எழுதுகின்றார். ஆண்டவர் இயேசுவின் தன்னுடைய ஐந்து காயங்களால் நம்மை கண்காணித்து பேணி காக்க வேண்டுமென்று ஐந்து சாம்பிராணி மணிகளை சிலுவையில் பதிக்கிறார்ஐந்து சாம்பிராணி மணிகளை சிலுவையில் பதிக்கிறார்.

பாஸ்கா திரி ஒளியேற்றுதல் - பாவம் என்னும் இருள் நிறைந்த வாழ்வைத் களைத்துவிட்டு புது வாழ்வு என்னும் ஒளியின் படைக்கலன்களை அணிந்துகொள்ள வேண்டும் என்பதன் அடையாளமாக புனிதப்படுத்தப்பட்ட தீயிலிருந்து பாஸ்காத் திரி பற்ற வைக்கப்படுகிறது. உயிர்த்த இயேசு நம்முடைய மத்தியில் இருக்கிறார் என்பதை இது காட்டுகிறது.

பாஸ்கா பவனி

முன்னுரை
அன்று இஸ்ராயேல் மக்களை இறைவன் நெருப்புத்தூண் வடிவில் மோயீசன் தலைமையில் வழிநடத்த, செங்கடலை கடந்து வாக்களிக்கப்பட்ட நாட்டிற்குச் சென்றனர். பாஸ்காவின் உண்மையை அதாவது. பாவத்திலிருந்து, நாம் புதுவாழ்வு பெறவும், கிறிஸ்துவின் ஒளியை எல்லா மக்களுக்கும் காட்டி அவர்களையும், ஒளியாகிய இறைவனிடம் கூட்டி வரவும் இந்த பவனி நமக்கு நினைவுப்படுத்துகிறது.

பவனியின் போது, ஒவ்வொரு முறையும் குருவானவர் கிறிஸ்துவின் ஒளி இதோஎன்று பாடும்போதும் இறைவா உமக்கு நன்றி என்று அனைவரும் சேர்ந்து பதில் பாடுவோம். கிறிஸ்துவின் உயிர்ப்பு புத்தொளியில் நாமும் பங்கு பெறுவதை குறிக்கும் வண்ணம் இரண்டாம் முறையாக இறைவா உமக்கு நன்றி என்ற பதில் பாடிய பிறகு நம்மிடம் உள்ள மெழுகு திரிகளை பாஸ்கா திரியிலிருந்து பற்ற வைத்துக் கொள்வோம். மூன்றாம் முறையாக பாடிய பிறகு அனைத்து விளக்குகளும் ஏற்றப்படும்.


பாஸ்கா புகழுரை

மெசியாவாகிய இயேசு ஒளியானவர். இந்த ஒளி திருச்சபையில் இன்று மீட்பின் கருவியாக செயலாற்றுகின்றது. இந்த மீட்பின் வரலாறு இப்போது புகழுரையாக பாடப்படுகிறது. ஆகவே அனைவரும் கைகளில் எரியும் மெழுகுதிரிகளை பிடித்துக்கொண்டு, நின்ற வண்ணம் பக்தியோடு மீட்பின் வரலாற்று உண்மைகளை நமது உள்ளத்தில் ஏற்றுக்கொள்வோம்.
குரு பாஸ்கா புகழுரை பாடுபவருக்கு ஆசி வழங்கிவிட்டு பாஸ்கா திரிக்கு தூபமிடுவார்.


பாஸ்கா புகழுரை

வானகத் தூதர் அணி மகிழ்வதாக
இத்திருச்சடங்கிலே பெருமகிழ்ச்சி பொங்குவதாக
மாண்புமிக்க மன்னரது வெற்றிக்காக
எக்காளம் தொனித்து மீட்பை அறிவிப்பதாக.
இப்பெருஞ் சுடர்களால் ஒளிவீசப் பெற்று
இவ்வுலகும் பெருமகிழ்ச்சி கொள்வதாக
முடிவில்லா மன்னரது பேரொளியால்
உலகெல்லாம் துலங்கி, தன்னைச் சூழ்ந்த
இருளனைத்தும் ஒழிந்ததென உணர்வதாக.

திருவிளக்கின் பெருஞ்சுடரால் அழகுபெற்று
அன்னையாம் திருச்சபையும் களிகூர்வதாக.
இறைமக்கள் அனைவரது பேரொலியால்
இக்கோயில் எதிரொலித்து முழங்குவதாக.

எனவே, இத்திருவிளக்கின் வியத்தகு ஒளியைச்
சூழ்ந்துநிற்கும் அன்புமிக்க சகோதரர் சகோதரிகளே,
உங்களை வேண்டுகிறேன்:
என்னுடன் சேர்ந்து, எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சுவீரே.
தகுதியற்ற அடியேனைத் திருப்பணியாளருள்
சேர்த்திடத் தயைகூர்ந்த இறைவன்தாமே
திருவிளக்கின் பேரொளியை என்மேல் வீசி
இத்திரியின் புகழ்சாற்றச் செய்வாராக).

முன்மொழி: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
பதில்: உம்மோடு இருப்பாராக.

முன்: இதயங்களை ஆண்டவரிடம் எழுப்புங்கள்.
பதில்: ஆண்டவரிடம் எழுப்பிள்ளோம்.

முன்: நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றிகூறுவோம்.
பதில்: அது தகுதியும் நீதியுமானதே.

கண்ணுக்குப் புலப்படாத இறைவனாகிய எல்லாம் வல்ல தந்தையையும்,
அவருடைய ஒரே மகனாகிய நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவையும்
இதயப் பற்றுதலோடு வாயாரப் பாடிப் புகழ்வது
மெய்யாகவே தகுதியும் நீதியுமாகும்.

கிறிஸ்துவே ஆதாமினால் வந்த கடனை
நமது பெயரால் என்றும் வாழும் தந்தைக்குச் செலுத்தி,
பாவத்துக்குரிய கடன்சீட்டை தம் திருஇரத்தத்தால் அழிந்துவிட்டார்.
ஏனெனில், பாஸ்கா விழா இதுவே
இதில், மெய்யான செம்மறியாகிய கிறிஸ்து கொலையுண்டார்
இவரது இரத்தத்தால் விசுவாசிகளின் கதவுநிலைகள் அர்ச்சிக்கப்படுகின்றன.

முற்காலத்தில், நம் முன்னோரான இஸ்ராயேல் மக்களை
எகிப்திலிருந்து விடுவித்து அவர்கள் பாதம் நனையாமல்
செங்கடலைக் கடக்கச் செய்தது இந்த இரவிலேதான்.
நெருப்புத் தூணின் வெளிச்சத்தால்
பாவத்தின் இருளை அகற்றிய இரவும் இதுவே.
பூவுலகெங்கும் இன்று கிறிஸ்துவில் விசுவாசங்கொண்டவர்களை
உலகின் தீய வழியிலிருந்தும் பாவ இருளிலிருந்தும் பிரித்து,
அருள்வாழ்வில் மீண்டும் சேர்த்துத் தூயவராக்கியதும் இந்த இரவிலேதான்.
சாவின் தளைகளைத் தகர்த்தெறிந்து,
கிறிஸ்து பாதாளத்திலிருந்து வெற்றி வீரராய் எழுந்ததும் இந்த இரவிலேதான்.
இத்தகைய மீட்பின் பயனை யாம் பெறாவிடில்
பிறந்ததால் எப்பயனும் இல்லையே.
நீர் எம்மீது தறைகூர்ந்து காட்டிய இரக்கம் எத்துணை வியப்புக்குரியது!
அடிமையை மீட்குமாறு மகனையே கையளித்த அளவில்லா அன்புப்பெருக்கே!
ஓ ஆதாமின் பாவமே!
உன்னை அழிக்க கிறிஸ்துவின் மரணம் திண்ணமாய்த் தேவைப்பட்டது!
இத்துணை மாண்புமிக்க மீட்பரை அடையப் பேறுபெற்றதால்
பாக்கியமான குற்றமே!
ஓ மெய்யாகவே பேறுபெற்ற இரவே!
பாதாளத்திலிருந்து கிறிஸ்து உயிர்த்தெழுந்தகாலமும் நேரமும் அறிய
நீ மட்டுமே பேறுபெற்றாய்!
இரவு பகல்போல் ஒளிபெறும்.
நான் மகிழ்வுற இரவும் ஒளிதரும் என எழுதியுள்ளது இந்த இரவைக் குறித்தே.
எனவே, புனிதப்படுத்தும் இவ்விரவின் திருநிகழ்ச்சி
அக்கிரமங்களை ஒழிக்கின்றது,
குற்றங்களைக் கழுவிப் போக்குகின்றது
தவறினோர்க்கு மாசின்மையையும்
துயருற்றோர்க்கு மகிழ்ச்சியையும் அளிக்கின்றது
பகைமையை விரட்டுகின்றது,
ஆணவத்தை அடக்குகின்றது
மன ஒற்றுமையை உருவாக்குகின்றது.


ஆகவே, தூய தந்தையே,
இப்புனிதமான இரவில்
நாங்கள் உமது புகழ்ச்சிக்காக அளிக்கும் மாலைப் பலியை ஏற்றருளும்
தேனிக்களின் உழைப்பாலான மெழுகிலிருந்து உருவான இத்திரியைப
புனித திருச்சபை தன் பணியாளரின் கையால்
பக்திச் சிறப்புடன் உமக்கு ஒப்புக்கொடுத்து மாலைப் பலி செலுத்துகின்றது.
இறைவனின் மகிமைக்காகச் செந்தீயாய்ச் சுடர்விட்டெரியும்
இந்த நெருப்புத் தூணின் பெருமையை அறிந்திருக்கின்றோம்.
இத்தீயிலிருந்து பல விளக்குகளை ஏற்ற,
தன் ஒளியிலிருந்து பங்குகொடுத்தாலும், அது குறைவுபடுவதில்லை.
ஏனெனில், தாய்த்தேனீ தந்த மெழுகு உருகுவதால்
இத் தீ வளர்க்கப்படுகின்றது.
விண்ணுக்குரியவை மண்ணுக்குரியவையோடும்
கடவுளுக்குரியவை மனிதனுக்குரியவையோடும் இணைந்தது
மெய்யாகவே பாக்கியமான இந்த இரவிலேதான்!
ஆகவே ஆண்டவரே, உம்மை வேண்டுகிறோம்.
உமது திருப்பெயரின் மகிமைக்காக அர்ச்சிக்கப்பெற்ற இந்த மெழுகுதிரி,
இவ்வுரவின் இருளை ஒழிக்குமாறு,
குறைவுபடாமல் நின்று எரிவதாக.
இது இனிமைதரும் நறுமணமாக ஏற்கப்பட்டு,
விண்ணக விளக்குகளுடன் கலந்துகொள்வதாக.
விடிவெள்ளி எழும்போதும் இது சுடர்விட்டு எரிவதாக.
ஓருபோதும் மறையாத இந்த விடிவெள்ளி
உம் திருமகன் கிறிஸ்துவேதான்.
பாதாளத்திலிருந்து திரும்பி வந்து,
மனித இனத்தின்மீது அமைதியுடன் ஒளிவீசி,
என்றென்றும் வாழ்ந்து ஆட்சிசெய்கின்றவர் அவரே.

எல்: ஆமென்



2. இறைவாக்கு வழிபாடு

மெழுகு திரிகளை அனைத்துவிட்டு அமர்வோம். இன்றைய வழிபாட்டின் இரண்டாம் பகுதியான இறைவாக்கு வழிபாடு ஆரம்பமாகிறது. பழைய ஏற்பாட்டில் இஸ்ரயேல் மக்கள் இரவு நேரங்களில் கண் விழித்திருந்து, கடவுள் தங்களுக்கு செய்த மாபெரும் மீட்பு செயல்களைத் திரு நூலிலிருந்து வாசித்து திருப்பாடல்களை பாடி செபிப்பார்கள். புதிய இஸ்ராயேல் மக்களான நாமும் கிறிஸ்துவின் வழியாக கடவுள் செய்த மாபெரும் மீட்பின் செயல்களை தியானிக்கும் விதமாக பழைய ஏற்பாட்டிலிருந்து மூன்று வாசகங்கள் வாசிக்ககேட்போம் ஒவ்வொரு வாசகத்திற்கு பிறகும் அதன் தொடர்புடைய திருப்பாடல்களும் பாடப்படும், பின்னர் குரு அவ்வாசகத்தின் பின்னனியில் செபிப்பார்.

வாசக முன்னுரை
இறைவன் அனைத்துலகிற்கும் தலைமை வகிப்பவராக அனைத்தையும் ஆளுபவராக இருக்கிறார். எனவேதான் அவர் அனைத்தையும் படைத்து, இருளை இல்லாமல் செய்து, இறுதியில் மனிதனை தம் சாயலிலே படைத்து அவனை படைப்பின் சிகரமாக்கினார், அவனோடு உறவுகொண்டு வழிநடத்தினார் என்று முதல் வாசகத்தில் வாசிக்க கேட்போம். இறைவன் தொடக்கம் முதல் இஸ்ராயேல் மக்களை பல்வேறு துன்பங்களிலிருந்து காத்தார். மோயீசன் தலைமையில் இஸ்ராயேல் மக்கள் செங்கடலைக் கடந்து சென்ற அற்புத நிகழ்வுகளையும், எகிப்தியரை முறியடித்து மக்களைக் காப்பாற்றினார் என்பதை இரண்டாம் வாசகத்தில் வாசிக்க கேட்போம். இத்தகைய இறைவனின் அன்பையும் அரவணைப்பையும் உணராததால் பாபிலோனுக்கு நாடு கடத்தப்பட்ட இஸ்ராயேல் மக்கள், தங்கள் பாவத்திலிருந்து மனம்திரும்பி ஆண்டவருக்குள் வருகிறபோது, தூய நீரினால் தூய்மையாக்கி தன்னோடு சேர்த்துக்கொள்வார் என்று மூன்றாம் வாசகத்தில் வாசிக்க கேட்போம். நான்காம் வாசகம்: ஞானஸ்நானம் பெற்ற ஒவ்வொருவரும் கிறிஸ்துவின் மரணத்திலும் உயிர்ப்பிலும் இணைக்கப்பட்டவர்கள் என்ற கருத்தை எடுத்துக் கூறும் புனித பவுல், இயேசு கிறிஸ்துவோடு துன்பப்படுகிறபோதும், நம் திருமுழுக்கினால் பாவத்திற்கு இறக்கிறபோது கிறிஸ்துவோடு உயிர்த்தெழுவோம் என்று கூறுவதை வாசிக்க கேட்போம். உன்னதங்களிலே இப்போது மகிழ்ச்சியின் கீதமான உன்னதங்களிலே கீதம் பாடப்படுகிறது. மணிகள் ஒலிக்க, நாமும் இயேசுவின் உயிர்ப்பின் மகிழ்ச்சியை கொண்டாடும் விதமாக அனைவரும் சேர்ந்து ஆர்பரித்து பாடுவோம். அல்லேலூயா அனைவரும் எழுந்து நிற்போம். அல்லேலூயா என்ற பாடல் கிறிஸ்தவர்களுக்கே உரிய சிறப்பான பாடல், உயிர்த்த மக்களுடைய புகழ்ச்சிப்பாடல். அல்லேலூயா என்றால் ஆண்டவரை புகழுங்கள் என்று பொருள். இந்த மகிழ்ச்சியின் பாடலை தவத்தின் அடையாளமாக தவக்காலத்தில் நாம் பாடவில்லை. எனவே இப்போது குருவானவர் துவக்கிவிட முழு உற்சாகத்தோடும் மகிழுச்சியோடும் இப்பாடலை பாடி கிறிஸ்து உயிர்த்து விட்டார் என்று முழக்கம் செய்வோம்.


3. திருமுழுக்கு வழிபாடு

முன்னுரை
அனைவரும் எழுந்து நிற்போம். இன்றைய வழிபாட்டின் மூன்றாம் பகுதியான திருமுழுக்கு வழிபாடு இப்போது தொடங்குகிறது. இந்த திருமுழுக்கு வழிபாடு, கிறிஸ்தவர்களாகிய நாம் அனைவரும் இய¼சுவின் இறப்பிலும், உயிர்ப்பிலும் பங்கேற்கிறோம் என்பதைக் குறித்து காட்டுகிறது, கிறிஸ்துவின் உயிர்ப்பு நமது விசுவாசத்தின் ஆணிவேர். ஆகவே கிறிஸ்து இயேசுவின் உயிர்ப்பில் விசுவாசம் கொண்டு, நமது வாழ்வை தூய்மைப்படுத்திக் கொள்ளவோம். இப்போது குருவானவர் இந்த வழிபாட்டில் பங்கெடுக்க நமக்கு அழைப்பும் அறிவுரை வழங்குகிறார். (எண் 38).


புனிதர்களின் மன்றாட்டு மாலை

இந்த பகுதியில் நாம் நம்முடைய ஞானஸ்நான வாக்குறுதிகளை புதுபிக்க இருக்கிறோம், அதற்கான தகுதியான மனநிலையை அளிக்குமாறு செபிக்கும் நேரமிது. நமக்குமுன் இயேசுவின் உயிர்ப்பில் பங்கு பெற்றுள்ள அனைத்து புனிதர்களையும் அழைத்து அவர்களின் உதவியைக் கேட்டு புனிதர்களின் பிரார்த்தனையை பாடுவோம்.

ஆண்டவரே, இரக்கமாயிரும் - ஆண்டவரே, இரக்கமாயிரும்
கிறிஸ்துவே, இரக்கமாயிரும் - கிறிஸ்துவே, இரக்கமாயிரும்
ஆண்டவரே, இரக்கமாயிரும் - ஆண்டவரே, இரக்கமாயிரும்

புனித மரியாயே, இறைவனின் தாயே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
புனித மிக்கேலே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
இறைவனின் புனித தூதர்களே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.
புனித ஸ்நாபக அருளப்பரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
புனித சூசையப்பரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
புனித இராயப்பரே, புனித சின்னப்பரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.
புனித பெலவேந்திரரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
புனித அருளப்பரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
புனித மதலேன் மரியம்மாளே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
புனித ஸ்தேபானே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
புனித அந்தியோக்கு இஞ்ஞாசியாரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
புனித லவுரேஞ்சியாரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
புனித பெர்பேத்துவா பெரிசித்தம்மாளே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
புனித அஞ்ஞேசம்மாளே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
புனித கிரகோரியாரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
புனித அகுஸ்தீனாரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
புனித அத்தனாசியாரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
புனித பசிலியாரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
புனித மார்த்தீனாரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
புனித ஆசீர்வாதப்பரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
புனித பிரான்சிஸ்குவே, சுவாமிநாதரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
புனித பிரான்சிஸ்கு சவேரியாரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
புனித வியான்னி மரிய அருளப்பரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
புனித சியன்னா கத்தரீனம்மாளே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
புனித அவிலா தொரேசம்மாளே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
இறைவனின் எல்லாப் புனிதர்களே, புனிதையர்களே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.

கருணைகூர்ந்து - எங்களை மீட்டருளும் ஆண்டவரே
தீமை அனைத்திலுமிருந்து - எங்களை மீட்டருளும் ஆண்டவரே
பாவம் அனைத்திலிமிருந்து - எங்களை மீட்டருளும் ஆண்டவரே
நித்திய மரணத்திலிருந்து - எங்களை மீட்டருளும் ஆண்டவரே
உமது மனித அவதாரத்தினாலே - எங்களை மீட்டருளும் ஆண்டவரே
உமது மரணத்தினாலே, உயிர்ப்பினாலே - எங்களை மீட்டருளும் ஆண்டவரே
தூய ஆவியின் வருகையினாலே - எங்களை மீட்டருளும் ஆண்டவரே

பாவிகளாகிய நாங்கள் உம்மை மன்றாடுகிறோம் - எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.


திருமுழுக்குப் பெறவேண்டியவர் இருந்தால்:
தேர்ந்துகொள்ளப் பெற்ற இம்மக்கள் திருமுழுக்கின் அருளினால் புத்துயிர் பெறச் செய்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம் - எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
திருமுழுக்குப் பெறவேண்டியவர் இல்லையென்றால்:
உமக்குப் பிள்ளைகளாக மக்கள் மறுபிறப்பு அடையுமாறு, இந்த நீருற்றை உமது அருளினால் புனிதமாக்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம் - எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
உயிருள்ள கடவுளின் திருமகனாகிய இயேசுவே, உம்மை மன்றாடுகிறோம் - எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
கிறிஸ்துவே எங்களுக்கு செவிசாய்தரும் - கிறிஸ்துவே எங்களுக்கு செவிசாய்தரும்.
கிறிஸ்துவே தயவாய் செவிசாய்தரும் - கிறிஸ்துவே தயவாய் செவிசாய்தரும்
திருமுழுக்குப் பெறுவோர் அங்கிருந்தால், குரு கைகுவித்துப் பின்வரும் மன்றாட்டைச் சொல்வார்:
என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா,
உமது இரக்கத்தின் திருவருட்சாதனங்களில் நீர் உடனிருந்து செயலாற்றுகின்றீர். இத்திருமுழுக்கின் ஊற்றிலிருந்து உமக்கெனப் புதிய மக்களைப் பிறப்பிக்குமாறு உம்முடைய திருமகனின் ஆவியை அனுப்பியருளும். இந்த எங்கள் எளிய திருப்பணி உம்முடைய பேராற்றலால் நிறைபயன் தருவதாக. - எங்கள்ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவழியாக உம்மை மன்றாடுகிறோம்.
எல். ஆமென்.

திருமுழுக்கு தண்ணீருக்கு ஆசி வழங்குதல் - இப்போது குருவானவர் நீரின் மீது இறைவனின் ஆசி இறங்கிவர நம் அனைவரையும் மன்றாட அழைக்கிறார். தொடர்ந்து புனிதர்கள் மன்றாட்டு பாடப்படுகிறது. அனைத்துப் புனிதர்களின் பரிந்துரை வழியாக இறைவனின் அருள் இந்த திருமுழுக்குத் தொட்டியில் உள்ள நீரில் இறங்க அனைவரும் மன்றாடுவோம்.
இறுதியில் எல்லோரும் - நீறுற்றுகளே, ஆண்டரைப் போற்றுங்கள், என்றென்றும் அவரைப் புகழ்ந்தேத்துங்கள். திருமுழுக்கு வாக்குறுதிகளை புதுப்பித்தல்
அனைவரும் மெழுகுத்திரிகளை பற்றவைத்துக் கொள்ளுங்கள். இது ஒரு மகத்துவமிக்க நேரம். திருமுழுக்கின்போது நமது ஞானப் பெற்றோர் நமக்காக அறிவிக்கயிட்ட விசுவாசப் பேருண்மைகளைக் நாம் கடைப்பிடிப்பதாக உறுதி கூறுவோம். உயிர்த்த இயேசுவின் மகிழ்ச்சியில் பங்குகொள்ள வேண்டுமானால், இறைவனுக்கு எதிரான தீயசக்திகளை விட்டுவிடுகிறேன் என்றும், கடவுளின் வெளிப்பாட்டினையும், வழிகாட்டுதலையும் ஏற்றுக்கொள்கிறேன் என்றும் ஒருமையில் பதிலளிப்போம்.
குரு மக்கள்மீது மந்திரித்த தண்ணீர் தெளிப்பார்; அப்போது அனைவரும் பாடுவதாவது:
பல்லவி: தேவாலய வலப்புறமிருந்து தண்ணீர் புறப்படக் கண்டேன் - அல்லேலூயா
அந்தத தண்ணீர் யாரிடம் வந்ததோ அவர்கள் யாவருமே ஈடேற்றம் பெற்றுக் கூறுவர்:
அல்லேலூயா, அல்லேலூயா.

ஆண்டவரைப் போற்றுங்கள் ஏனெனில் அவர் நல்லவர்
அவர் தம் இரக்கம் என்றென்றும் உள்ளதே
பிதாவும் சுதனும் தூய ஆவியும் துதியும் புகழும் ஒன்றாய் பெறுக
ஆதியில் இருந்ததுபோல் இன்றும் என்றும் நித்தியமாகவும் - ஆமென்



இறைமக்களின் மன்றாட்டு

1. உயிரளிக்கும் உடனிருப்பே எம் இறைவா!
எம் தாய் திருச்சபையை உம் கையில் அர்ப்பணிக்கிறோம். முழுவிடுதலையை நோக்கி பயணமாகும் திருச்சபை புத்துயிர் பெற்ற புதிய எருசலேம் திருநகராக திகழ்ந்து உலகிற்கு ஒளியாய் திகழவும். திருச்சபை வழிகாட்டிகள் அனைவரும் உம் திருவுளத்தின்படி அன்பையும், நீதியையும் சமாதானத்தையும் இப்புவியில் பரப்பிட எங்களை வழிநடத்த எம் தலைவர்களுக்கு வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. உலகின் பேரொளியே இறைவா!
சாவை வென்று வெற்றி வீரராய் நீர் பவனி வந்ததை போன்று, நாங்களும் துன்பங்களைக் கண்டு துவண்டுவிடாமல் இருக்கவும், சோதனைகளைக் கண்டு கண்ணீர் வடிக்காமல் அவற்றைத் துணிவோடு போராடி வெற்றிகொள்ளவும் வரம் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. உலகின் ஒளியே இறைவா!
பாஸ்கா என்றாலே கடத்தல் என்பதை உணர்ந்து, எங்களது பழைய பாவ இயல்புகளில் இருந்து கடந்து உம் அன்பின் சிறகுகளுக்குள் தஞ்சம் அடையவும், நம்பிக்கை அன்பு, அருள் போன்ற பாஸ்கா விழாவின் கனிகளை நிரம்ப பெற்று வாழ்ந்திடவும் வரம் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. உலகின் மீட்பரே எம் இறைவா!
உயிர்ப்பின் பாஸ்கா பலியை கொண்டாடும் உம் பிள்ளைகள் எங்கள் ஒவ்வொருவரையும் நீர் நிறைவாக ஆசீர்வதியும். உமது உயிர்ப்பின் ஒளியால் வளமான எதிர்காலத்தையும், ஆசீர்வாதத்தையும் பெற்று வாழ்வில் வெற்றி பெற இறைவா உம்மை மன்றாடுகின்றோம். (விசுவாச அறிக்கை சொல்வதில்லை).


4. நற்கருணை வழிபாடு

நாம் இப்போது நற்கருணை வழிபாட்டில் நுழைகிறோம். அன்பினால் மீட்பைக் கொண்டு வந்த இறைமகன் இயேசு, அதிலிருந்து தனக்கென்று எதையும் திரும்ப எடுத்துச் செல்லவில்லை. சிலுவைப் பலியில் தன்னைக் கொடுத்த இறைமகன், இன்றைய திருப்பலி வழியாக நம்மையே அவரோடு இணைய அழைப்பு விடுக்கிறார். இறைவன் கரத்தில் நம்மையே காணிக்கையாக்கி, சிறுதுளி நீராய் நாமும் இறைமகன் இயேசுவின் பலியில் கலந்துகொள்வோம்.

திருப்பலி முடிவு

நன்றி மன்றாட்டு: இறைவா, இம்மாபெரும் இரவில் விழித்திருந்து உம் வார்த்தைகளைக் கேட்டு, உம் திருமகனுடைய உயிர்த்தெழுதலைக் கொண்டாடி மகிழ்ந்தோம். சாவை வென்று உயிர்த்தெழுந்த உம் திருமகனின் ஆவியை எங்கள் மீது நிறைவாகப் பொழிந்தருளும். இதனால் நாங்கள் எங்கள் வாழ்வில் நேரிடும் அனைத்தையும் பாஸ்காவின் வெற்றிப் பூரிப்புடன் எதிர்கொள்ளத் துணிந்து செல்வோமாக. எங்கள் ஆண்டவர் கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

குரு : ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
மக்கள் : உம்மோடும் இருப்பாராக.
குரு : எல்லாம் வல்ல இறைவன் பிதா, சுதன், பரிசுத்த ஆவி உங்களை ஆசீர்வதிப்பாராக!
மக்கள் : ஆமென்.

பிரியாவிடையாக, திருத்தொண்டர்/குரு: சென்று வாழுங்கள், திருப்பலி நிறைவேறிற்று, அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலூயா.
மக்கள் : இறைவா, உமக்கு நன்றி, அல்லேலூயா, அல்லேலூயா,அல்லேலூயா.