திருவழிப்பாட்டு ஆண்டு C (10-03-2013)

ஒருவருக்கு இரண்டு புதல்வர்கள் இருந்தார்கள்/> ஒருவருக்கு இரண்டு புதல்வர்கள் இருந்தார்கள்/> ஒருவருக்கு இரண்டு புதல்வர்கள் இருந்தார்கள்/> ஒருவருக்கு இரண்டு புதல்வர்கள் இருந்தார்கள்/> ஒருவருக்கு இரண்டு புதல்வர்கள் இருந்தார்கள்/> ஒருவருக்கு இரண்டு புதல்வர்கள் இருந்தார்கள்/> ஒருவருக்கு இரண்டு புதல்வர்கள் இருந்தார்கள்/>


திருப்பலி முன்னுரை

இறைமகன் இயேசுவில் அன்பு நிறை அருட்தந்தை! (அருட்தந்தையர்களே) அன்புநிறை சகோதர்களே சகோதரிகளே உங்கள் அனைவருக்கும் வணக்கம். தவக்காலத்தின் நான்காம் ஞாயிற்றின் மகிழ்ச்சிநிறை வாழ்த்துக்களைக் கூறி மகிழ்கிறேன். திருவழிபாட்டு ஆண்டில் தவக்காலத்தின் 4 ஆம் வாரம் மகிழ்ச்சியின் ஞாயிறு "லத்தாரே சண்டே" என்று சிறப்புக் காரணங்களுக்காக அழைக்கப்படுகிறது.

இன்றைய திருப்பலி வழிபாட்டில் நமக்கு நன்கு அறிமுகமான இந்த உவமை வழியாக இன்று நம் வாழ்வை, மனநிலையை சற்று ஆய்வு செய்ய அழைக்கிறது இறைவார்த்தை.

இந்த உவமையில் வருகிற தந்தை, ஊதாரி மைந்தன், அவனது சகோதரன் மூன்று பேருமே மூன்று மனநிலைகளைச் சித்தரிக்கிறார்கள். தந்தை அன்பின், பரிவின், நிபந்தனையற்ற மன்னிப்பின் மனநிலையைப் பிரதிபலிக்கிறார். நாம் அவ்வாறு வாழ முடியுமா? நமக்கு எதிராகச் செயல்பட்டவர்களைக்கூடப் பரிவுடன், பாசத்துடன் பார்க்க முடியுமா? மன்னித்து ஏற்றுக்கொள்ள முடியுமா? அவர்களின் ஒப்புரவை மகிழ்ந்து கொண்டாட முடியுமா? முயற்சி செய்வோம்.

ஊதாரி மைந்தன் நேர்மையான மனத்துயரைப் பிரதிபலிக்கிறான். அறிவுத் தெளிவு பெற்றதும் தந்தையிடம் திரும்பி வந்தான். அத்துடன், மகனாக அல்;ல, வேலையாளாகப் பணி செய்ய முன்வந்தான். நாமும் நமது குறைகளை, பாவங்களை மனதார ஏற்றுக்கொள்ள முன்வருகிறோமா? நமது குற்றங்களுக்கேற்ற பரிகாரத்தை, தண்டனையை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறோமா? முயற்சி செய்வோம்.

மூத்த மகன் குறை காணும் மனநிலையை, பொறாமையை, நன்மையை ஏற்றுக்கொள்ளாத மனதை, தீர்ப்பிடும் மனநிலையைப் பிரதிபலிக்கிறான். நாமும் பலநேரங்களில் அவ்வாறே பிறரைத் தீர்ப்பிடுகிறோம். பரிவின் பார்வையைப் புறக்கணித்து, தீர்ப்பிடும் பார்வையால் பிறரைப் பார்க்கிறோம். சட்டத்தின் பார்வையில், மனித நீதியின் அடிப்படையில் செயல்படுகிறோம். நம் பார்வையை மாற்றுவோமா? இத்தகைய உணர்வுகளோடு திருப்பலியில் பங்கேற்போம்.முதல் வாசகம்

கானான் நிலத்தின் விளைச்சலை அந்த ஆண்டு உண்டனர்.
யோசுவா நூலிலிருந்து வாசகம் 5:9, 10-12

9 ஆண்டவர் யோசுவாவிடம், இன்று எகிப்தியரின் பழிச்சொல்லை உங்களிடமிருந்து நீக்கிவிட்டேன் என்றார். ஆகவே அந்த இடம் இந்நாள்வதை கில்கால் என்று அழைக்கப்படுகின்றது..10 இஸ்ரயேலர் கில்காலில் தங்கினர். மாதத்தின் பதினான்காம் நாள் மாலை எரிகோ சமவெளியில் பாஸ்கா கொண்டாடினர்.11 பாஸ்காவின் மறுநாள் நிலத்தின் விளைச்சலையும் புளிப்பற்ற அப்பத்தையும் வறுத்த தானியத்தையும் உண்டனர்.12 நிலத்தின் விளைச்சலை உண்ட மறுநாளிலிருந்து மன்னா மீண்டும் கிடைக்கவில்லை. கானான் நிலத்தின் விளைச்சலை அந்த ஆண்டு உண்டனர்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றிபதிலுரைப் பாடல்

பல்லவி: ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்
திருப்பாடல்கள் 34:1-6

1 ஆண்டவரை நான் எக்காலமும் போற்றுவேன்; அவரது புகழ் எப்பொழுதும் என் நாவில் ஒலிக்கும்.2 நான் ஆண்டவரைப்பற்றிப் பெருமையாகப் பேசுவேன்; எளியோர் இதைக் கேட்டு அக்களிப்பர்.

3 என்னுடன் ஆண்டவரை பெருமைப்படுத்துங்கள்; அவரது பெயரை ஒருமிக்க மேன்மைப்படுத்துவோம்.4 துணைவேண்டி நான் ஆண்டவரை மன்றாடினேன்; அவர் எனக்கு மறுமொழி பகர்ந்தார்; எல்லா வகையான அச்சத்தினின்றும் அவர் என்னை விடுவித்தார்.

5 அவரை நோக்கிப் பார்த்தோர் மகிழ்ச்சியால் மிளிர்ந்தனர்; அவர்கள் முகம் அவமானத்திற்கு உள்ளாகவில்லை.6 இந்த ஏழை கூவியழைத்தான்; ஆண்டவர் அவனுக்குச் செவிசாய்த்தார்; அவர் எல்லா நெருக்கடியினின்றும் அவனை விடுவித்துக் காத்தார்.

இரண்டாம் வாசகம்

கடவுளோடு ஒப்புரவாகுங்கள் என்று கிறிஸ்துவின் சார்பில் நாங்கள் மன்றாடுகிறோம்
கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 5:17-21

17 எனவே ஒருவர் கிறிஸ்துவோடு இணைந்திருக்கும்போது அவர் புதிதாகப் படைக்கப்பட்டவராய் இருக்கிறார். பழையன கழிந்து புதியன புகுந்தன அன்றோ!18 இவை யாவும் கடவுளின் செயலே. அவரே கிறிஸ்துவின் வாயிலாக நம்மைத் தம்மோடு ஒப்புரவாக்கினார்: ஒப்புரவாக்கும் திருப்பணியையும் நமக்குத் தந்துள்ளார்.19 உலகினரின் குற்றங்களைப் பொருட்படுத்தாமல் கடவுள் கிறிஸ்துவின் வாயிலாக அவர்களைத் தம்மோடு ஒப்புரவாக்கினார். அந்த ஒப்புரவுச் செய்தியை எங்களிடம் ஒப்படைத்தார்.20 எனவே நாங்கள் கிறிஸ்துவின் தூதுவர்களாய் இருக்கிறோம். கடவுளே எங்கள் வாயிலாக வேண்டுகோள் விடுக்கிறார். ஆகவே கடவுளோடு ஒப்புரவாகுங்கள் என்று கிறிஸ்துவின் சார்பில் நாங்கள் மன்றாடுகிறோம்.21 நாம் கிறிஸ்து வழியாகத் தமக்கு ஏற்புடையவராகுமாறு கடவுள் பாவம் அறியாத அவரைப் பாவநிலை ஏற்கச் செய்தார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா!இவன் இறந்து போயிருந்தான்; மீண்டும் உயிர்பெற்றுள்ளான்அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 15:1-3:11-32

வரிதண்டுவோர், பாவிகள் யாவரும் இயேசு சொல்வதைக் கேட்க அவரிடம் நெருங்கிவந்தனர்.2 பரிசேயரும், மறைநூல் அறிஞரும், ' இவர் பாவிகளை வரவேற்று அவர்களோடு உணவருந்துகிறாரே ' என்று முணுமுணுத்தனர்.3 அப்போது அவர் அவர்களுக்கு இந்த உவமையைச் சொன்னார்:11 மேலும் இயேசு கூறியது: ' ஒருவருக்கு இரண்டு புதல்வர்கள் இருந்தார்கள்.12 அவர்களுள் இளையவர் தந்தையை நோக்கி, ' அப்பா, சொத்தில் எனக்கு உரிய பங்கைத் தாரும் ' என்றார். அவர் சொத்தை அவர்களுக்குப் பகிர்ந்து அளித்தார்.13 சில நாள்களுக்குள் இளைய மகன் எல்லாவற்றையும் திரட்டிக்கொண்டு, தொலை நாட்டிற்கு நெடும் பயணம் மேற்கொண்டார்; அங்குத் தாறுமாறாக வாழ்ந்து தம் சொத்தையும் பாழாக்கினார்.14 அனைத்தையும் அவர் செலவழித்தார். பின்பு அந்த நாடு முழுவதும் கொடிய பஞ்சம் ஏற்பட்டது. அப்பொழுது அவர் வறுமையில் வாடினார்;15 எனவே அந்நாட்டுக் குடிமக்களுள் ஒருவரிடம் அண்டிப் பிழைக்கச் சென்றார். அவர் அவரைப் பன்றி மேய்க்கத் தம் வயல்களுக்கு அனுப்பினார்.16 அவர் பன்றிகள் தின்னும் நெற்றுகளால் தம் வயிற்றை நிரப்ப விரும்பினார். ஆனால் அதைக்கூட அவருக்குக் கொடுப்பார் இல்லை.17 அவர் அறிவு தெளிந்தவராய், ' என் தந்தையின் கூலியாள்களுக்குத் தேவைக்கு மிகுதியான உணவு இருக்க, நான் இங்குப் பசியால் சாகிறேனே!18 நான் புறப்பட்டு என் தந்தையிடம் போய், ' அப்பா, கடவுளுக்கும் உமக்கும் எதிராக நான் பாவம் செய்தேன்; 19 இனிமேல் நான் உம்முடைய மகன் எனப்படத் தகுதியற்றவன்; உம்முடைய கூலியாள்களுள் ஒருவனாக என்னை வைத்துக் கொள்ளும் என்பேன் ' என்று சொல்லிக்கொண்டார்.20 ' உடனே அவர் புறப்பட்டுத் தம் தந்தையிடம் வந்தார். தொலையில் வந்துகொண்டிருந்தபோதே அந்தத் தந்தை அவரைக் கண்டு, பரிவு கொண்டு, ஓடிப்போய் அவரைக் கட்டித் தழுவி முத்தமிட்டார்.21 மகனோ அவரிடம், ' அப்பா, கடவுளுக்கும் உமக்கும் எதிராக நான் பாவம் செய்தேன்; இனிமேல் நான் உம்முடைய மகன் எனப்படத் தகுதியற்றவன் ' என்றார்.22 தந்தை தம் பணியாளரை நோக்கி, ' முதல்தரமான ஆடையைக் கொண்டுவந்து இவனுக்கு உடுத்துங்கள்; இவனுடைய கைக்கு மோதிரமும், காலுக்கு மிதியடியும் அணிவியுங்கள்;23 கொழுத்த கன்றைக் கொண்டு வந்து அடியுங்கள்; நாம் மகிழ்ந்து விருந்து கொண்டாடுவோம்.24 ஏனெனில் என் மகன் இவன் இறந்துபோயிருந்தான்; மீண்டும் உயிர் பெற்று வந்துள்ளான். காணாமற்போயிருந்தான்; மீண்டும் கிடைத்துள்ளான் ' என்றார். அவர்கள் மகிழ்ந்து விருந்து கொண்டாடத் தொடங்கினார்கள்.25 ' அப்போது மூத்த மகன் வயலில் இருந்தார். அவர் திரும்பி வீட்டை நெருங்கி வந்துகொண்டிருந்தபோது, ஆடல் பாடல்களைக் கேட்டு, 26 ஊழியர்களுள் ஒருவரை வரவழைத்து, ' இதெல்லாம் என்ன? ' என்று வினவினார்.27 அதற்கு ஊழியர் அவரிடம், ' உம் தம்பி வந்திருக்கிறார். அவர் தம்மிடம் நலமாகத் திரும்பி வந்திருப்பதால் உம் தந்தை கொழுத்த கன்றை அடித்திருக்கிறார் ' என்றார்.28 அவர் சினமுற்று உள்ளே போக விருப்பம் இல்லாதிருந்தார். உடனே அவருடைய தந்தை வெளியே வந்து, அவரை உள்ளே வருமாறு கெஞ்சிக் கேட்டார்.29 அதற்கு அவர் தந்தையிடம், ' பாரும், இத்தனை ஆண்டுகளாக நான் அடிமைபோன்று உமக்கு வேலை செய்துவருகிறேன். உம் கட்டளைகளை ஒருபோதும் மீறியதில்லை. ஆயினும், என் நண்பரோடு நான் மகிழ்ந்துகொண்டாட ஓர் ஆட்டுக்குட்டியைக்கூட என்றுமே நீர் தந்ததில்லை.30 ஆனால் விலைமகளிரோடு சேர்ந்து உம் சொத்துகளையெல்லாம் அழித்துவிட்ட இந்த உம் மகன் திரும்பி வந்தவுடனே, இவனுக்காகக் கொழுத்த கன்றை அடித்திருக்கிறீரே! ' என்றார்.31 அதற்குத் தந்தை, ' மகனே, நீ எப்போதும் என்னுடன் இருக்கிறாய்; என்னுடையதெல்லாம் உன்னுடையதே.32 இப்போது நாம் மகிழ்ந்துகொண்டாடி இன்புற வேண்டும். ஏனெனில் உன் தம்பி இவன் இறந்து போயிருந்தான்; மீண்டும் உயிர்பெற்றுள்ளான். காணாமற்போயிருந்தான்; மீண்டும் கிடைத்துள்ளான் ' என்றார். '

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.விசுவாசிகள் மன்றாட்டுகள்:


நான் புறப்பட்டு என் தந்தையிடம் போய், அப்பா, கடவுளுக்கும் உமக்கும் எதிராக நான் பாவம் செய்தேன்: என்று அவரிடம் சொல்வேன்.

பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைத் தயவாய் கேட்டருளும்.

இறைவாக்கினரைத் தேர்ந்தெடுத்து அனுப்பும் தந்தையே இறைவா!

நீர் இவ்வுலகில் எமக்கு இறைவாக்குரைத்துப் பணிசெய்யத் தந்த, திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் திறமையான திருப்பணிக்கும், ஆண்டவரின் திராட்சைத் தோட்டத்தில் அவரது அயராத உழைப்புக்கும் நன்றி சொல்லி, அவர் தொடர்ந்தும் பிரார்த்தனையிலும், தியானத்திலும் தனது வாழ்நாளைச் செலவிடவும், திருஅவைக்கு புதிய திருத்தந்தையைத் தந்தருளவும், ஆயர்கள், குருக்கள், துறவிகள், பொதுநிலைப் பணியாளர்கள் அனைவரும் தம்மை வந்தடையும் எல்லாவித சோதனைகளையும் வென்று, இறைமக்களை மனமாற்றத்திற்கு இட்டுச் செல்லும் பணியை இக்காலத்தில் சிறப்பாக முன்னெடுத்துச் செல்லுவதற்கு வேண்டிய வலிமையும், சக்தியும், மனப்பக்குவமும் பெற்று செயற்படுவதற்கு, ஞான ஒளியை அவர்களுக்கு அளித்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

கொடை வள்ளலான தந்தையே,

உம்மைப் போற்றுகிறோம். உமது ஞானத்திலும், பேரன்பிலும் நீர் எங்களை மன்னித்து, அரவணைப்பதில் வள்ளலாக, தாராள உள்ளம் கொண்டவராக இருப்பதற்காக நன்றி கூறுகிறோம். உமது இரக்கத்தை நினைத்து வியக்கிறோம். எத்தனை முறை பாவம் செய்தாலும், மன்னித்து இரங்கும் உம் தாராள இதயம் கண்டு மகிழ்கிறோம். இதோ, மீண்டும் உம்மிடம் திரும்பி வருகிறோம். எம்மை ஏற்றுக்கொள்ள இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

கடவுள் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருப்பானாக என்ற ஆசீரோடு குடும்ப உறவை உருவாக்கிய அன்புத் தந்தையே இறைவா!

எமது குடும்பங்களுக்காக உம்மிடம் வருகின்றோம். இன்றைய நாட்களில் குடும்ப உறவுக்கும் ஒற்றுமைக்கும் மகிழ்ச்சிக்கும் தடையாக இருக்கும் அனைத்துத் தீமைகளையும் உமது இரக்கத்தால் தகர்த்தெறிந்து குடும்பங்களில் அமைதியும் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் நிலவ வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

கருணையும் இரக்கமும் நிறைந்த தந்தையே!

நோயினால் வாடுவோர், தனிமையில் இருப்போர், கவலையினாலும் துன்பங்களினாலும் கலங்குவோர், தேவையில் உழல்வோர், அடிமைத்தனத்துள் வாழ்வோர் அனைவரையும் உமது கருணையினாலும், இரக்கத்தினாலும் நிறைத்து அவர்கள் அனைவருக்கும் ஆறுதலையும் , நிம்மதியையும் அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

அன்புத் தந்தையே இறைவா!

நீர் எமக்குக் கொடுத்துள்ள மக்கள் செல்வங்களுக்காக உமக்கு நன்றி கூறுகின்றோம். அவர்கள் இதுவே தகுந்த காலம், இன்றே மீட்பின் நாள் என்னும் இறைவெளிப்பாட்டை தம் உள்ளத்தில் ஆழமாகப் பதித்து: இக்காலத்தை உம்மையே தேடி நேசிப்பதிலும், உமது வார்த்தைக்கு ஆர்வத்துடன் செவிமடுத்து வாழுவதிலும் தங்கள் கவனத்தைச் செலுத்தவும் உமக்குகந்த பிள்ளைகளாக வாழவும், செயற்படவும் அவர்களை ஆசீர்வதித்து வழிப்படுத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

அன்புத் தந்தையே இறைவா,

உமது வார்த்தையை தாம் விரும்பியவாறு விளக்கியுரைத்துக்கொண்டு விசுவாசிகளிடையே பிளவை ஏற்படுத்துவோர் அதிகமாகிவிட்ட இன்றைய நாட்களிலே நீரே உண்மையை வெளிப்படுத்தி உண்மை விசுவாசத்தை நோக்கி மக்களை வழிநடாத்தவும், பிளவுபட்டுக்கிடக்கும் அத்தனை விசுவாசிகளையும் ஒன்று சேர்த்து உமது தலைமைத்துவத்தின் கீழ் அவர்களை வைத்துக் காத்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
இன்றைய சிந்தனை

''என்னோடு மகிழுங்கள்; ஏனெனில் காணாமற்போன என் ஆட்டைக் கண்டுபிடித்து விட்டேன்'' (லூக்கா 15:6)

இயேசு யாரைத் தேடி வந்தார்? கடவுளிடமிருந்து அகன்றுசெல்வோர் யாராயிருந்தாலும் அவர்களுக்கு வாழ்வளிக்கவே இயேசு வந்தார். ஆனால் சில வேளைகளில் சில மனிதர்கள் தங்களுடைய உண்மையான நிலையை மறந்துபோகிறார்கள். கடவுளின் முன்னிலையில் தாங்கள் நல்லவர்கள் என இவர்கள் இறுமாப்புக் கொள்வதோடு, பிறரைக் குறைகூறுவதிலும் பிறர் பாவிகள் எனக் குற்றம் சாட்டுவதிலும் இவர்கள் ஈடுபடுவது வழக்கம். ஆனால் இயேசுவின் போதனைப்படி, நாம் எல்லோருமே கடவுளின் இரக்கத்தை நம்பி வாழ வேண்டியவர்களே. நமக்குக் கடவுளின் உதவி தேவை இல்லை என நாம் கூற இயலாது. ஏனெனில் நாம் எல்லாருமே மந்தையைவிட்டு அகன்று போகின்ற ஆட்டிற்கு ஒப்பானவர்களே. நம்மைத் தேடி வருகின்ற அன்புமிக்க கடவுள் நம்மைக் கண்டுபிடித்து நம்மேல் தம் அன்பைப் பொழிகிறார் என்னும் உண்மையை நாம் ஏற்றாக வேண்டும். -- காணாமற்போன ஆட்டைத் தேடிச் செல்கின்ற ஆயரைப் போல நம்மைத் தேடி வருகின்ற கடவுளை நாம் எவ்வாறு புரிகின்றோம்? எல்லையற்ற அன்பு அவருடைய உள்ளத்தில் இருக்கிறது என்பதில் ஐயமில்லை; தவறிப்போகின்ற நம்மைத் தேடிக் கண்டுபிடிக்கின்ற கு கடவுள் உண்மையிலேயே மட்டற்ற ''மகிழ்ச்சியடைகின்றார்'' (லூக்கா 15:8). அந்த மகிழ்ச்சி நல்லவர்கள் குறித்து அவர் அடைகின்ற மகிழ்ச்சியைவிடப் பன்மடங்கு அதிகமாக இருக்கும் என்பதுதான் நமக்கு வியப்பைத் தருகிறது. தொண்ணுற்றொன்பது ஆடுகள் தம்மோடு இருந்தபோதிலும், அவற்றையெல்லாம் விட்டுவிட்டுக் காணாமற்போன நூறாவது ஆட்டினைத் தேடிச் செல்கின்ற ஆயர் உண்மையிலேயே அந்த ஆட்டின்மீது அளவுகடந்த அன்புகொண்டிருக்க வேண்டும். இதுவே கடவுள் பாவிகள் மீது காட்டுகின்ற அன்பு. அதாவது, பாவிகளாகிய நம்மீது அவர் காட்டுகின்ற அன்புக்கு அளவு கிடையாது; எல்லை கிடையாது. கடவுளின் அன்பு கடலின் விரிவைவிட மிகப் பரந்தது. அந்த அன்பின் ஆழத்தை அளந்திட மனித அறிவால் இயலாது. எனவே, அளவுகடந்த விதத்தில் நம்மை அன்புசெய்யும் கடவுளை விட்டுப் பிரியாமல் அவருடைய அன்பில் நாம் என்றும் நிலைத்திருக்கவேண்டும் என்பதே கடவுள் நமக்க விடுக்கின்ற அழைப்பு.

மன்றாட்டு:

இறைவா, உம்மைவிட்டுப் பிரியா வரம் எங்களுக்குத் தந்தருளும்.