திருவழிப்பாட்டு ஆண்டு C (24-02-2013)

அவருடைய ஆடை வெண்பனி போல இருந்தது/> அவருடைய ஆடை வெண்பனி போல இருந்தது/> அவருடைய ஆடை வெண்பனி போல இருந்தது/> அவருடைய ஆடை வெண்பனி போல இருந்தது/> அவருடைய ஆடை வெண்பனி போல இருந்தது/>


திருப்பலி முன்னுரை

திருமகன் இயேசுவில் அன்புள்ளம் கொண்டு தவக்கால பக்திமுயற்சிகளில் ஈடுபடும் அன்பின் சொந்தங்களுக்கு என் அன்பான வாழ்த்துக்களைக் கூறி தவக்காலம் இரண்டாம் வார ஞாயிறு வழிபாட்டில் பங்கேற்க அன்பு அழைப்பை விடுக்கிறேன்.

இன்று நாம் இயேசுவின் உருமாற்ற விழாவைக் கொண்டாடுகிறோம். இயேசுவின் வாழ்வில் நிகழ்ந்த ஒரு வித்தியாசமான நிகழ்வு இது. தம் சீடர்களில் மிகவும் நெருக்கமான மூவரை மட்டும் அழைத்துக்கொண்டு மலையேறும் இயேசு அங்கே செபிக்கிறார். செபிக்கும்போதே அவரது தோற்றம் மாறுகிறது. அவரது மனித சாயல் மறைந்து, இறைச் சாயல் வெளிப்படுகிறது. அவரது ஆடை வெண்ணிறத்தில் ஜொலிக்கிறது. விண்ணகக் காட்சியாக அது மாறுகிறது. பழைய ஏற்பாட்டின் இரு பெரும் தூண்களான மோசேயும், எலியாவும் தோன்றி அவருடன் உரையாடுகிறார்கள். ஒரு மேகம் வந்து அவர்களைச் சூழ்கிறது. “இவரே என் மைந்தர்” என்று ஒரு குரல் விண்ணிலிருந்து ஒலிக்கிறது. இதுதான் இயேசுவின் உருமாற்ற நிகழ்வு.

எதற்காக இயேசு தோற்றம் மாறினார்? இந்த நிகழ்வின் தாக்கம் என்ன? என்பதுதான் நாம் சிந்திக்க வேண்டிய கேள்விகள்.

1. இயேசு உண்மையிலேயே இறைமகன், தந்தை இறைவனால் அனுப்பப்பட்டவர் என்பதை இந்த நிகழ்வு எண்பிக்கிறது. எனவே, அவரது சீடர்களின் நம்பிக்கை ஆழப்படுவதற்காக இந்த உருமாற்றம் நிகழ்ந்தது.

2. இத்தனை மாட்சிமை நிறைந்த இறைமகனாம் இயேசு தந்தையின் விருப்பப்படி சிலுவைச் சாவை ஏற்க வேண்டும் என்பதை சீடர்கள் புரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காகவும் இந்த நிகழ்வு ஏற்பட்டது.

3. மாட்சியும், துன்பமும், பாராட்டும்-அவமானமும் மானிட வாழ்வு என்னும் நாணயத்தின் இரு பக்கங்கள் என்பதையும் இது எடுத்துச்சொல்கிறது.

இத்தகைய உணர்வுகளோடு இன்று இத் திருப்பலியில் பலிப்பொருட்களோடு ஒன்றித்து நம்மையே ஆண்டவருக்கு ஒப்புக்கொடுப்போம். அங்கே வேற்றுரு கொண்டவராய் அப்பத்தில் இரசத்தில் தன்னையே நமக்கு வழங்கும் இயேசுவுடன் இணைந்து நாம் அனைவரும் இயேசுவின் ஓருடலாய் மாறுவோம் – இந்த திருப்பலியில் பங்கேற்போம்.



முதல் வாசகம்

வானத்தை நிமிர்ந்து பார். முடியுமானால், விண்மீன்களை எண்ணிப்பார். இவற்றைப் போலவே உன் வழிமரபினரும் இருப்பர்
தொடக்க நூலிலிருந்து வாசகம் 15:5-12, 17-18, 21

5 அப்பொழுது ஆண்டவர் ஆபிராமை வெளியே அழைத்து வந்து, "வானத்தை நிமிர்ந்து பார். முடியுமானால், விண்மீன்களை எண்ணிப்பார். இவற்றைப் போலவே உன் வழிமரபினரும் இருப்பர்" என்றார். 6 ஆபிராம் ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டார். அதை ஆண்டவர் அவருக்கு நீதியாகக் கருதினார். 7 ஆண்டவர் ஆபிராமிடம், "இந்நாட்டை உனக்கு உரிமைச் சொத்தாக அளிக்க உன்னைக் கல்தேயரின் ஊர் என்ற நகரிலிருந்து இங்கு அழைத்து வந்த ஆண்டவர் நானே" என்றார். 8 அதற்கு ஆபிராம், "என் தலைவராகிய ஆண்டவரே, இதை நான் உரிமையாக்கிக் கொள்வேன் என்பதை எப்படித் தெரிந்து கொள்வேன்?" என்றார். 9 ஆண்டவர் ஆபிராமிடம், "மூன்று வயதுள்ள இளம் பசு, மூன்று வயதுள்ள வெள்ளாடு, மூன்று வயதுள்ள செம்மறியாடு, ஒரு காட்டுப்புறா, ஒரு மாடப்புறா ஆகியவற்றை என்னிடம் கொண்டுவா" என்றார். 10 ஆபிராம் இவற்றை எல்லாம் அவரிடம் கொண்டுவந்து, அவைகளை இரண்டிரண்டு கூறுகளாக வெட்டி, ஒவ்வொரு பகுதியையும் அததற்கு இணையான பகுதிக்கு எதிரெதிரே வைத்தார். ஆனால் பறவைகளை அவர் வெட்டவில்லை. 11 துண்டித்த உடல்களைப் பறவைகள் தின்ன வந்தபொழுது ஆபிராம் அவற்றை விரட்டிவிட்டார். 12 கதிரவன் மறையும் நேரத்தில் ஆபிராமுக்கு ஆழ்ந்த உறக்கம் வந்தது. அச்சுறுத்தும் காரிருள் அவரைச் சூழ்ந்தது.17 கதிரவன் மறைந்ததும் இருள்படர்ந்தது. அப்பொழுது புகைந்து கொண்டிருந்த தீச்சட்டி ஒன்றும் எரிந்து கொண்டிருந்த தீப்பந்தம் ஒன்றும் அந்தக் கூறுகளுக்கிடையே சென்றன. 18 அன்றே ஆண்டவர் ஆபிராமுடன் ஓர் உடன்படிக்கை செய்து, "எகிப்திலுள்ள ஆற்றிலிருந்து யூப்பிரத்தீசு பேராறுவரை உள்ளஇந்நாட்டை உன் வழிமரபினர்க்கு வழங்குவேன்" என்றார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

பல்லவி: ஆண்டவரே என் ஒளி; அவரே என் மீட்பு
திருப்பாடல்கள் 27:1-9, 13-14

1 ஆண்டவரே என் ஒளி; அவரே என் மீட்பு; யாருக்கு நான் அஞ்சவேண்டும்? ஆண்டவரே என் உயிருக்கு அடைக்கலம்; யாருக்கு நான் அஞ்சி நடுங்க வேண்டும்?2 தீயவர் என் உடலை விழுங்க என்னை நெருங்குகையில், என் பகைவரும் எதிரிகளுமான அவர்களே இடறி விழுந்தார்கள்.3 எனக்கெதிராக ஒரு படையே பாளையமிறங்கினும், என் உள்ளம் அஞ்சாது; எனக்கெதிராகப் போர் எழுந்தாலும், நான் நம்பிக்கையோடிருப்பேன்.

4 நான் ஆண்டவரிடம் ஒரு விண்ணப்பம் செய்தேன்; அதையே நான் நாடித் தேடுவேன்; ஆண்டவரின் இல்லத்தில் என் வாழ்நாள் எல்லாம் நான் குடியிருக்க வேண்டும், ஆண்டவரின் அழகை நான் காண வேண்டும்; அவரது கோவிலில் அவரது திருவுளத்தைக் கண்டறிய வேண்டும்.5 ஏனெனில், கேடுவரும் நாளில் அவர் என்னைத் தம் கூடாரத்தில் மறைத்து வைப்பார்; தம் கூடாரத்தினுள்ளே என்னை ஒளித்து வைப்பார்; குன்றின்மேல் என்னை பாதுகாப்பாய் வைப்பார்.

6 அப்பொழுது, என்னைச் சுற்றிலுமுள்ள என் எதிரிகளுக்கு எதிரில் நான் தலைநிமிரச் செய்வார்; அவரது கூடாரத்தில் ஆர்ப்பரிப்புடன் பலிகளைச் செலுத்துவேன்; ஆண்டவரைப் புகழ்ந்து பாடல் பாடுவேன்.7 ஆண்டவரே, நான் மன்றாடும் போது என் குரலைக் கேட்டருளும்; என் மீது இரக்கங்கொண்டு எனக்குப் பதிலளித்தருளும்.8 'புறப்படு, அவரது முகத்தை நாடு' என்றது என் உள்ளம்; ஆண்டவரே உமது முகத்தையே நாடுவேன்.

9 உமது முகத்தை எனக்கு மறைக்காதிரும்; நீர் சினங்கொண்டு அடியேனை விலக்கிவிடாதிரும்; நீரே எனக்குத் துணை; என் மீட்பராகிய கடவுளே, என்னைத் தள்ளிவிடாதேயும்; என்னைக் கைவிடாதிரும்.

3 வாழ்வோரின் நாட்டினிலே ஆண்டவரின் நலன்களைக் காண்பேன் என்று நான் இன்னும் நம்புகின்றேன்.14 நெஞ்சே! ஆண்டவருக்காகக் காத்திரு; மன உறுதிகொள்; உன் உள்ளம் வலிமை பெறட்டும்; ஆண்டவருக்காகக் காத்திரு.

இரண்டாம் வாசகம்

ஆண்டவரோடுள்ள உறவில் நிலைத்திருங்கள்
பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 3:17 -4:1

17 சகோதர சகோதரிகளே, நீங்கள் அனைவரும் என்னைப்போல் வாழுங்கள். நாங்கள் உங்களுக்குக் காட்டிய முன்மாதிரியின்படி வாழ்பவர்களைப் பின்பற்றுங்கள்.18 கிறிஸ்துவின் சிலுவைக்குப் பகைவர்களாய் நடப்போர் பலர் உள்ளனர். அவர்களைப் பற்றி மீண்டும் மீண்டும் உங்களிடம் கூறியுள்ளேன். இப்பொழுதும் கண்ணீரோடு சொல்கிறேன்.19 அழிவே அவர்கள் முடிவு: வயிறே அவர்கள் தெய்வம்: மானக்கேடே அவர்கள் பெருமை: அவர்கள் எண்ணுவதெல்லாம் மண்ணுலகைச் சார்ந்தவை பற்றியே.20 நமக்கோ விண்ணகமே தாய்நாடு: அங்கிருந்துதான் மீட்பராம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வருவாரெனக் காத்திருக்கிறோம்.21 அவர் தமது ஆற்றலால் தாழ்வுக்குரிய நம் உடலை மாட்சிக்குரிய தமது உடலின் சாயலாக உருமாற்றவும் அனைத்தையும் தமக்குப் பணியவைக்கவும் வல்லவர்.ஆகவே என் அன்பார்ந்த சகோதர சகோதரிகளே, என் வாஞ்சைக்குரியவர்களே, நீங்களே என் மகிழ்ச்சி: நீங்களே, என் வெற்றி வாகை: அன்பர்களே, ஆண்டவரோடுள்ள உறவில் நிலைத்திருங்கள்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா!இவரே என் மைந்தர்; நான் தேர்ந்து கொண்டவர் இவரே. இவருக்குச் செவிசாயுங்கள்அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9:28-36

28 இவற்றையெல்லாம் சொல்லி ஏறக்குறைய எட்டுநாள்கள் ஆனபிறகு இயேசு பேதுருவையும் யோவானையும் யாக்கோபையும் கூட்டிக்கொண்டு இறைவனிடம் வேண்டுவதற்காக ஒரு மலைமீது ஏறினார்.29 அவர் வேண்டிக்கொண்டிருந்தபோது அவரது முகத்தோற்றம் மாறியது; அவருடைய ஆடையும் வெண்மையாய் மின்னியது.30 மோசே, எலியா என்னும் இருவர் அவரோடு பேசிக் கொண்டிருந்தனர்.31 மாட்சியுடன் தோன்றிய அவர்கள் எருசலேமில் நிறைவேறவிருந்த அவருடைய இறப்பைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள்.32 பேதுருவும் அவரோடு இருந்தவர்களும் தூக்கக் கலக்கமாய் இருந்தார்கள். அவர்கள் விழித்தபோது மாட்சியோடு இலங்கிய அவரையும் அவரோடு நின்ற இருவரையும் கண்டார்கள்.33 அவ்விருவரும் அவரை விட்டுப் பிரிந்து சென்றபோது, பேதுரு இயேசுவை நோக்கி, ' ஆண்டவரே, நாம் இங்கேயே இருப்பது நல்லது. உமக்கு ஒன்றும் மோசேக்கு ஒன்றும் எலியாவுக்கு ஒன்றுமாக மூன்று கூடாரங்களை அமைப்போம் ' என்று தாம் சொல்வது இன்னதென்று தெரியாமலே சொன்னார்.34 இவற்றை அவர் சொல்லிக்கொண்டிருக்கும்போது ஒரு மேகம் வந்து அவர்கள்மேல் நிழலிட்டது. அம்மேகம் அவர்களைக் சூழ்ந்தபோது அவர்கள் அஞ்சினார்கள்.35 அந்த மேகத்தினின்று, ″ இவரே என் மைந்தர்; நான் தேர்ந்து கொண்டவர் இவரே. இவருக்குச் செவிசாயுங்கள் ″ என்று ஒரு குரல் ஒலித்தது.36 அந்தக் குரல் கேட்டபொழுது இயேசு மட்டும் இருந்தார். தாங்கள் கண்டவற்றில் எதையும் அவர்கள் அந்நாள்களில் யாருக்கும் சொல்லாமல் அமைதி காத்தார்கள்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.



விசுவாசிகள் மன்றாட்டுகள்:


யாரை நான் அனுப்புவேன்? நமது பணிக்காக யார் போவார்?, இதோ நானிருக்கிறேன். அடியேனை அனுப்பும்.

பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைத் தயவாய் கேட்டருளும்.

இறைவாக்கினரைத் தேர்ந்தெடுத்து அனுப்பும் தந்தையே இறைவா!

நீர் இவ்வுலகில் எமக்கு இறைவாக்குரைத்துப் பணிசெய்யத் தந்திருக்கும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவிகள், பொதுநிலைப் பணியாளர்கள் அனைவரும் தம்மை வந்தடையும் எல்லாவித சோதனைகளையும் வென்று, இறைமக்களை மனமாற்றத்திற்கு இட்டுச் செல்லும் பணியை இக்காலத்தில் சிறப்பாக முன்னெடுத்துச் செல்லுவதற்கு வேண்டிய வலிமையும், சக்தியும், மனப்பக்குவமும் பெற்று செயற்படுவதற்கு, ஞான ஒளியை அவர்களுக்கு அளித்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

தெய்வீக மாட்சி மிக்க ஆண்டவர் இயேசுவே இறைவா,

உம்மைப் போற்றுகிறோம். உமது மாட்சியை நீர் விட்டுவிடாமல், உம்மையே தாழ்த்தி சிலுவைச் சாவை ஏற்றுக்கொண்டீரே, உமக்கு நன்றி. எங்கள் வாழ்வில் நாங்கள் சந்திக்கும் சிலுவைகளை ஏற்றுக்கொள்ள ஆற்றல் தந்தருள இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

கடவுள் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருப்பானாக என்ற ஆசீரோடு குடும்ப உறவை உருவாக்கிய அன்புத் தந்தையே இறைவா!

எமது குடும்பங்களுக்காக உம்மிடம் வருகின்றோம். இன்றைய நாட்களில் குடும்ப உறவுக்கும் ஒற்றுமைக்கும் மகிழ்ச்சிக்கும் தடையாக இருக்கும் அனைத்துத் தீமைகளையும் உமது இரக்கத்தால் தகர்த்தெறிந்து குடும்பங்களில் அமைதியும் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் நிலவ வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

கருணையும் இரக்கமும் நிறைந்த தந்தையே!

நோயினால் வாடுவோர், தனிமையில் இருப்போர், கவலையினாலும் துன்பங்களினாலும் கலங்குவோர், தேவையில் உழல்வோர், அடிமைத்தனத்துள் வாழ்வோர் அனைவரையும் உமது கருணையினாலும், இரக்கத்தினாலும் நிறைத்து அவர்கள் அனைவருக்கும் ஆறுதலையும் , நிம்மதியையும் அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

அன்புத் தந்தையே இறைவா!

நீர் எமக்குக் கொடுத்துள்ள மக்கள் செல்வங்களுக்காக உமக்கு நன்றி கூறுகின்றோம். அவர்கள் இதுவே தகுந்த காலம், இன்றே மீட்பின் நாள் என்னும் இறைவெளிப்பாட்டை தம் உள்ளத்தில் ஆழமாகப் பதித்து: இக்காலத்தை உம்மையே தேடி நேசிப்பதிலும், உமது வார்த்தைக்கு ஆர்வத்துடன் செவிமடுத்து வாழுவதிலும் தங்கள் கவனத்தைச் செலுத்தவும் உமக்குகந்த பிள்ளைகளாக வாழவும், செயற்படவும் அவர்களை ஆசீர்வதித்து வழிப்படுத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

எங்களை உமது மாட்சியின் பங்குதாரர்களாக அழைக்கும் ஆண்டவரே,

உம்மைப் போற்றுகிறோம். உமது சாயலாகப் படைக்கப்பட்டிருக்கும் நாங்கள் எங்களது உண்மையான சாயலை, மாட்சியைக் கண்டுகொள்ளும் அனுபவங்களை எங்களுக்குத் தாரும். இத்தவக்காலத்தில் நாங்கள் செபத்திலும், தவ முயற்சிகளிலும் உம்மோடு ஒன்றித்து, உரு மாற வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.




இன்றைய சிந்தனை

''அப்போது ஒரு மேகம் வந்து அவர்கள்மேல் நிழலிட அந்த மேகத்தினின்று, 'என் அன்பார்ந்த மைந்தர் இவரே; இவருக்குச் செவி சாயுங்கள்'என்று ஒரு குரல் ஒலித்தது'' (மாற்கு 9:7)

பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகிய மூன்று சீடர்களும் இயேசுவுக்கு மிகவும் நெருக்கமானவர்கள். அவர்கள் இயேசுவின் வாழ்க்கையில் முக்கியமான நிகழ்ச்சிகளின் போது அவரோடு கூட இருந்தார்கள். எடுத்துக்காட்டாக, பேதுருவின் மாமியார் குணமடைந்தபோதும் (மாற் 1:29-31), தொழுகைக்கூடத் தலைவர் யாயிரின் மகள் உயிர்பெற்றெழுந்தபோதும் (மாற் 5:37), கெத்சமனித் தோட்டத்தில் இயேசு இறைவேண்டல் செய்தபோதும் (மாற் 14:33) இயேசுவோடு கூடச் சென்றவர்கள் பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகியோரே. இவர்கள் இயேசு தோற்றம் மாறிய வேளையிலும் அவரோடு இருந்தார்கள். அப்போது இயேசு யார் என்பது அவர்களுக்கு வெளிப்படுத்தப்பட்டது. வானிலிருந்து வந்த குரல் இயேசுவை அடையாளம் காட்டுகிறது; ''இயேசு கடவுளின் மகன்''. -- இயேசுவின் போதனைக்குச் செவிமடுப்போர் கடவுளின் குரலுக்கே செவிமடுக்கின்றனர் என்னும் உண்மை இங்கே வெளிப்படுகிறது. வானில் தோன்றிய மேகம் கடவுளின் பிரசன்னத்திற்கு அடையாளம். எனவே, இயேசுவுக்கும் அவர் தந்தை என அழைத்த கடவுளுக்கும் இடையே நெருங்கிய உறவு இருந்ததை நற்செய்தி சுட்டுகின்றது. இன்று இயேசுவின் சீடராக வாழ்வோர் இயேசுவின் குரலுக்குச் செவிமடுக்க அழைக்கப்படுகின்றனர். இயேசுவின் போதனையை நாம் ஏற்று அதற்கேற்ப வாழும்போது அது நம் உள்ளத்தையும் இதயத்தையும் உருமாற்றுவதோடு நம்மைப் புதுப் பிறப்புகளாகவும் மாற்றும். கடவுளின் புத்துயிரைப் பெறும் நாம் அதைப் பிறரோடு பகிர்ந்திட முன்வருவோம்.

மன்றாட்டு:

இறைவா, எங்கள் உள்ளங்களில் ஒலிக்கின்ற உம் திருமகனின் குரலுக்கு நாங்கள் எப்போதும் செவிசாய்த்திட அருள்தாரும்.