மூன்றாம் ஆண்டு 20-01-2013

திருமண விழாவில் திராட்சை இரசம் தீர்ந்து போகவே 
இயேசுவின் தாய் அவரை நோக்கி, ″திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது″ என்றார். /> திருமண விழாவில் திராட்சை இரசம் தீர்ந்து போகவே 
இயேசுவின் தாய் அவரை நோக்கி, ″திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது″ என்றார். />


திருப்பலி முன்னுரை

திருமகன் இயேசுக் கிறிஸ்துவில் என் இனிய அருட்தந்தை! (அருட்தந்தையர்களே) மற்றும் சகோதரர்களே சகோதரிகளே நண்பர்களே! உங்கள் அனைவரையும் அன்புடன் வாழ்த்தி ஆண்டவரின் அருள்பெற அணிதிரளும் உங்கள் அனைவருக்காகவும் பணிவுடன் இறைவனை வேண்டி நிற்கின்றேன்.

ஆண்டின் பொதுக்காலம் 2ஆம் வாரத்திலிருக்கும் நாம் இன்றைய திருப்பலி வழிபாட்டிலிருந்து இறைவன் முன், உலகோர்முன் புதிய படைப்புக்களாக நிற்க வழிகாட்டப்படுகிறோம்.

கானாவூர் திருமணவிழா பற்றிய செய்தியைப் பலமுறை வாசித்து, சிந்தித்திருக்கிறோம். இன்று "திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது" என்னும் வாக்கியத்தை நமது சிந்தனைக்காக எடுத்துக்கொள்வோம்.

திராட்சை இரசம் என்பது மகிழ்ச்சியின் அடையாளம், விருந்தின் அடையாளம், உறவின் அடையாளம். திராட்சை இரசம் தீர்வது என்பது அவமானத்தின் அடையாளமாக, உறவுச் சிக்கலின் அடையாளமாக இருக்கிறது. எனவேதான், அச்சிக்கலைத் தீர்க்க தம் மகனை அணுகினார் அன்னை மரியா.

நமது வாழ்வில், பணியில், குடும்பத்தில் "திராட்சை இரசம் தீர்ந்துவிட்டதா?" என்று அவ்வப்போது நம்மைக் கண்காணித்துக்கொள்வது நல்லது. பல பணிகளில் பரபரப்பாக இருக்கும் பலரும், தங்களது நெருங்கிய உறவுகள் ஆழம் குறைந்துவருவதைக் கவனிக்கத் தவறிவிடுகின்றனர். பணம் சேகரிப்பதிலே கவனம் செலுத்தும் இல்லத் தலைவன் மனைவி, பிள்ளைகளின் பாசம் குறைந்துவருவதைக் கவனிப்பதில்லை. பணியிலே நிறைவின்றி, மகிழ்ச்சியின்றி வேலைசெய்வது "திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது" என்பதைக் காட்டுகிறது.

இன்றைய நாளில் நமது வாழ்வை, பணியை, உறவுகளைக் கொஞ்சம் அலசிப்பார்ப்போம். "திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது" என்று கண்டால், மனங் கலங்காமல், அன்னை மரியாவை நாடுவோம். அவர் நமக்காகப் பரிந்துபேசி, நமது வாழ்விலும் புதிய திராட்சை இரசம் என்னும் இனிமையை ஆண்டவர் இயேசுவிடமிருந்து பெற்றுத் தருவார். வரம் கேட்டு திருப்பலியில் பங்கேற்போம்.முதல் வாசகம்

ஆண்டவர் தம் நாவினால் சூட்டும் புதியதொரு பெயரால் நீ அழைக்கப்படுவாய்.
எசாயா நூலிலிருந்து வாசகம் 62:1-5

1 சீயோனின் வெற்றி வைகறை ஒளியெனவும், அதன் மீட்பு சுடர் விளக்கெனவும் வெளிப்படும்வரை, அதனை முன்னிட்டு மவுனமாயிரேன்: எருசலேம் பொருட்டுச் செயலற்று அமைதியாயிரேன்.2 பிறஇனத்தார் உன் வெற்றியைக் காண்பர்: மன்னர் யாவரும் உன் மேன்மையைப் பார்ப்பர்: ஆண்டவர் தம் நாவினால் சூட்டும் புதியதொரு பெயரால் நீ அழைக்கப்படுவாய்.3 ஆண்டவரின் கையில் நீ அழகிய மணிமுடியாகத் திகழ்வாய்: உன் கடவுளின் கரத்தில் அரச மகுடமாய் விளங்குவாய்.4 கைவிடப்பட்டவள் என்று இனி நீ பெயர்பெற மாட்டாய்: பாழ்பட்டது என இனி உன் நாடு அழைக்கப்படாது: நீ எப்சிபா என்று அழைக்கப்படுவாய்: உன் நாடு பெயுலா என்று பெயர் பெறும். ஏனெனில், ஆண்டவர் உன்னை விரும்புகின்றார்: உன் நாடு மணவாழ்வு பெறும்.5 இளைஞன் கன்னிப் பெண்ணை மணப்பதுபோல உன்னை எழுப்பியவர் உன்னை மணந்து கொள்வார்: மணமகன் மணப்பெண்ணில் மகிழ்வதுபோல் உன் கடவுள் உன்னில் மகிழ்வார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றிபதிலுரைப் பாடல்

பல்லவி: அனைத்து மக்களினங்களுக்கும் அவர்தம் வியத்தகு செயல்களை அறிவியுங்கள்.
திருப்பாடல்கள் 96:1-3,7-9

1 ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; உலகெங்கும் வாழ்வோரே, ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்; 2 ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்; அவர் பெயரை வாழ்த்துங்கள்;

அவர் தரும் மீட்பை நாள்தோறும் அறிவியுங்கள். 3 பிற இனத்தார்க்கு அவரது மாட்சியை எடுத்துரையுங்கள்; அனைத்து மக்களினங்களுக்கும் அவர்தம் வியத்தகு செயல்களை அறிவியுங்கள்.

7 மக்களினங்களின் குடும்பங்களே, ஆண்டவருக்குச் சாற்றுங்கள். மாட்சியையும் ஆற்றலையும் ஆண்டவருக்குச் சாற்றுங்கள். 8 ஆண்டவரின் பெயருக்குரிய மாட்சியை அவருக்குச் சாற்றுங்கள்; உணவுப்படையல் ஏந்தி அவர்தம் கோவில் முற்றங்களுக்குள் செல்லுங்கள். 9 தூய கோலத்துடன் ஆண்டவரை வழிபடுங்கள்; உலகெங்கும் வாழ்வோரே, அவர் திருமுன் நடுங்குங்கள்.

இரண்டாம் வாசகம்

பொது நன்மைக்காகவே தூய ஆவியாரின் செயல்பாடுகள் ஒவ்வொருவரிலும் வெளிப்படுகிறது
கொரிந்தியருக்கு எழுதிய முதலாம் நிருபத்திலிருந்து வாசகம் 2:1-11

4 அருள்கொடைகள் பலவகையுண்டு: ஆனால் தூய ஆவியார் ஒருவரே.5 திருத் தொண்டுகளும் பலவகையுண்டு: ஆனால் ஆண்டவர் ஒருவரே.6 செயல்பாடுகள் பலவகையுண்டு: ஆனால் கடவுள் ஒருவரே. அவரே எல்லாரிடமும் எல்லாவற்றையும் செயல்படுத்துபவர்.7 பொது நன்மைக்காகவே தூய ஆவியாரின் செயல்பாடுகள் ஒவ்வொருவரிலும் வெளிப்படுகிறது.8 தூய ஆவியார் ஒருவருக்கு ஞானம் நிறைந்த சொல்வளத்தை அருளுகிறார். இன்னொருவருக்கோ அதே ஆவியார் அறிவுசெறிந்த சொல்வளத்தை அளிக்கிறார்.9 அதே ஆவியார் வேறொருவருக்கு நம்பிக்கை அருளுகிறார். அந்த ஒரே ஆவியார் மற்றொருவருக்குப் பிணிதீர்க்கும் அருள் கொடையையும் அளிக்கிறார்.10 தூயஆவியார் ஒருவருக்கு வல்ல செயல் செய்யும் ஆற்றலையும் இன்னொருவருக்கு இறைவாக்குரைக்கும் ஆற்றலையும் வேறொருவருக்கு ஆவிக்குரியவற்றைப் பகுத்தறியும் ஆற்றலையும் மற்றொருவருக்குப் பல்வகை பரவசப் பேச்சு பேசும் ஆற்றலையும் பிறிதொருவருக்கு அப்பேச்சை விளக்கும் ஆற்றலையும் அருளுகிறார்.11 அந்த ஒரே ஆவியாரே இவற்றையெல்லாம் செயல்படுத்துகிறார்: அவரே தம் விருப்பம்போல் ஒவ்வொருவருக்கும் இவற்றைப் பகிர்ந்தளிக்கிறார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா!இயேசு செய்த முதல் அரும் அடையாளம். இது கலிலேயாவில் உள்ள கானாவில் நிகழ்ந்தது. இதன் வழியாக அவர் தம் மாட்சியை வெளிப்படுத்தினார்அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2:1-11

1 மூன்றாம் நாள் கலிலேயாவில் உள்ள கானாவில் திருமணம் ஒன்று நடைபெற்றது. இயேசுவின் தாயும் அங்கு இருந்தார். 2 இயேசுவும் அவருடைய சீடரும் அத்திருமணத்திற்கு அழைப்புப் பெற்றிருந்தனர். 3 திருமண விழாவில் திராட்சை இரசம் தீர்ந்து போகவே இயேசுவின் தாய் அவரை நோக்கி, "திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது" என்றார். 4 இயேசு அவரிடம், "அம்மா, அதைப்பற்றி நாம் என்ன செய்யமுடியும்? எனது நேரம் இன்னும் வரவில்லையே" என்றார். 5 இயேசுவின் தாய் பணியாளரிடம், "அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்" என்றார். 6 யூதரின் தூய்மைச் சடங்குகளுக்குத் தேவையான ஆறு கல்தொட்டிகள் அங்கே இருந்தன. அவை ஒவ்வொன்றும் இரண்டு மூன்று குடம் தண்ணீர்கொள்ளும். 7 இயேசு அவர்களிடம், "இத்தொட்டிகளில் தண்ணீர் நிரப்புங்கள்" என்று கூறினார். அவர்கள் அவற்றை விளிம்பு வரை நிரப்பினார்கள். 8 பின்பு அவர், "இப்போது மொண்டு பந்தி மேற்பார்வையாளரிடம் கொண்டு போங்கள்" என்று அவர்களிடம் கூறினார். அவர்களும் அவ்வாறே செய்தார்கள். 9 பந்தி மேற்பார்வையாளர் திராட்சை இரசமாய் மாறியிருந்த தண்ணீரைச் சுவைத்தார். அந்த இரசம் எங்கிருந்து வந்தது என்று அவருக்குத் தெரியவில்லை; தண்ணீர் மொண்டு வந்த பணியாளருக்கே தெரிந்திருந்தது. ஆகையால் பந்தி மேற்பார்வையாளர் மணமகனைக் கூப்பிட்டு, 10 "எல்லாரும் நல்ல திராட்சை இரசத்தை முதலில் பரிமாறுவர்; யாவரும் விருப்பம் போலக் குடித்தபின்தான் தரம் குறைந்த இரசத்தைப் பரிமாறுவர். நீர் நல்ல இரசத்தை இதுவரை பரிமாறாமல் ஏன் வைத்திருந்தீர்?" என்று கேட்டார். 11 இதுவே இயேசு செய்த முதல் அரும் அடையாளம். இது கலிலேயாவில் உள்ள கானாவில் நிகழ்ந்தது. இதன் வழியாக அவர் தம் மாட்சியை வெளிப்படுத்தினார். அவருடைய சீடரும் அவரிடம் நம்பிக்கை கொண்டனர்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.இறைமக்களின் வேண்டல்கள்:


ஆண்டவர் தம் நாவினால் சூட்டும் புதியதொரு பெயரால் நீ அழைக்கப்படுவாய். ஆண்டவரின் கையில் நீ அழகிய மணிமுடியாகத் திகழ்வாய்: உன் கடவுளின் கரத்தில் அரச மகுடமாய் விளங்குவாய்.

பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைத் தயவாய் கேட்டருளும்.

நல்ல ஆயனே,

எங்களை வழிநடத்த நீர் தேர்ந்தெடுத்த திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள் உமக்கு என்றும் பணிசெய்து, தாங்கள் பெற்றுக் கொண்ட கொடைகளுக்கு நன்றியுள்ளவர்களாக திகழ வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

வானகத் தந்தையே இறைவா,

அன்னை மரியா வழியாக உமது நீதியை நிலைநாட்டியதற்காக உமக்கு நன்றி கூறுகிறோம். இவ்வுலகம் யாரையெல்லாம் ஒதுக்கி வைக்கிறதோ, அவர்களுக்கு நாங்கள் முக்கியத்துவமும், முதன்மை நன்மைகளும் கொடுத்து, இறைநீதியை நிலைநாட்ட எங்களுக்கு வரம் அருள இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

கடவுள் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருப்பானாக என்ற ஆசீரோடு குடும்ப உறவை உருவாக்கிய அன்புத் தந்தையே இறைவா!

எமது குடும்பங்களுக்காக உம்மிடம் வருகின்றோம். இன்றைய நாட்களில் குடும்ப உறவுக்கும் ஒற்றுமைக்கும் மகிழ்ச்சிக்கும் தடையாக இருக்கும் அனைத்துத் தீமைகளையும் உமது இரக்கத்தால் தகர்த்தெறிந்து குடும்பங்களில் அமைதியும் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் நிலவ வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

நீதியின் நாயனனே ஆண்டவரே,

அன்னை மரியாள் வழியாக நீர் எமக்குத் தரும் செய்தியையும், உமது விருப்பத்தையும், சித்தத்தையும் நாம் சரியான விதத்திலே புரிந்துகொண்டு அந்த அன்னையைப் போன்று அடுத்தவரின் நலனில் அக்கறை கொண்டு, மற்றவர்களின் இக்கட்டான வேளைகளில் அவர்களுக்கு துணைக்கரம் கொடுக்கும் நன்மனதை எமக்குத் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

எல்லாம் வல்ல அன்புத்தந்தையே இறைவா,

எம் பங்கில் உள்ள அனைத்து குடும்பங்களையும், குழுக்களையும் நினைத்து உமக்கு நன்றி கூறுகின்றோம். இவற்றில் நாங்கள் வேற்றுமைகளை களைந்து, உம்மோடு இணைந்து நலமுடன் வாழ வரம் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

சிறார்களை நேசிக்கும் இறைவா,

எம் பங்கின் சிறுவர், சிறுமியரை நினைத்து உமக்கு நன்றி கூறுகின்றோம். பிள்ளைகளின் வளர்ச்சியில் பெற்றோரும், நாங்களும் துணைபுரியவும், அவர்களுக்கு தேவையான கல்வி ஞானத்தை தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
இன்றைய சிந்தனை

"திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது" !

மரியா காட்டிய இறைநீதி! மனிதர்களின் நீதி உணர்வுக்கும், இறைவனின் நீதி உணர்வுக்குமுள்ள வேறுபாடு மலைக்கும், மடுவுக்கும் உள்ள வேறுபாடு என்பதனை விவிலியத்தின் பல பக்கங்களில் காண்கிறோம். குறிப்பாக, ஆண்டவர் இயேசு இறைத் தந்தையின் நீதியைப் பல உவமைகள் வழியாக நன்கு எடுத்துரைத்துள்ளார். ஆனால், இன்றைய நற்செய்தி வாசகத்தில் அன்னை மரியாவும் அந்த இறைநீதியின் அறிவிப்பாளராகச் செயல்படுவதைப் பார்க்கிறோம். முதலில் வந்தவர்களுக்கு நல்ல இரசத்தைப் பரிமாறுவதும், கடைசியில் வருபவர்களுக்குத் தரம் குறைந்த இரசத்தைப் பரிமாறுவதும் மனித நீதியாக, ஏற்றுக்கொண்டுவிட்ட பழக்கமாக இருந்தது. ஆனால், மரியாவோ தம் மகன் இயேசுவின் அரும் அடையாளத்தின் வழியாக, கடைசியாக வந்த, ஒடுக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட, சமூக அந்தஸ்து குறைந்த மக்களுக்கு நல்ல, தரமான இரசம் கிடைக்க வழிசெய்துவி;ட்டார். ஒதுக்கப்பட்டவர்களுக்கு, முதலில் வந்தவர்களுக்குச் சமமான இரசம் கிடைக்கச் செய்யாமல், அதைவிடச் சிறந்த இரசம் கிடைக்கச் செய்வதே இறைவனின் நீதி, இறைவனின் திருவுளம். அதனை அன்னை மரி இந்த அற்புதச் செயல்வழி நிறைவேற்றிவி;ட்டார். நாமும் மனித நீதியை அல்ல, இறைநீதியைச் செயல்படுத்துபவர்களாக வாழ முயலுவோம்.

மன்றாட்டு:

நீதியின் நாயனனே ஆண்டவரே, அன்னை மரியா வழியாக உமது நீதியை நிலைநாட்டியதற்காக உமக்கு நன்றி கூறுகிறோம். இவ்வுலகம் யாரையெல்லாம் ஒதுக்கி வைக்கிறதோ, அவர்களுக்கு நாங்கள் முக்கியத்துவமும், முதன்மை நன்மைகளும் கொடுத்து, இறைநீதியை நிலைநாட்ட எங்களுக்கு வரம் அருள்வீராக.