பொதுக்காலம் 32 வது - ஞாயிறு

இரண்டாம் ஆண்டு 11-11-2012


''யாருடைய காணிக்கை மேலானது''

 இயேசு...வறுமையில் வாடிய ஒரு கைம்பெண்ணும் இரண்டு காசுகளைக் 
காணிக்கைப் பெட்டிக்குள் போடுவதைக் கண்டார் />  இயேசு...வறுமையில் வாடிய ஒரு கைம்பெண்ணும் இரண்டு காசுகளைக் 
காணிக்கைப் பெட்டிக்குள் போடுவதைக் கண்டார் />  இயேசு...வறுமையில் வாடிய ஒரு கைம்பெண்ணும் இரண்டு காசுகளைக் 
காணிக்கைப் பெட்டிக்குள் போடுவதைக் கண்டார் />


திருப்பலி முன்னுரை


அனைவருக்கும் அன்பு வணக்கம். ஒரே கூடாரத்தின் கீழ் ஒரே சகோதர உள்ளங்களாக நம்மை அழைத்திருக்கும் இறைவனுக்கு நன்றிகூறி நற்கருணை கொண்டாட்டத்தில் இணைவோம். இன்று நாம் பொதுக்காலம் 32வது ஞாயிறை கொண்டாடுகிறோம்.

யாருடைய காணிக்கை மேலானது!

இயேசு எருசலேம் கோவிலில் போதித்துவந்தார். ஒரு நாள் வழக்கம்போல இயேசு கோவிலுக்குச் செல்கிறார். அங்கே பலரும் காணிக்கைப் பெட்டிக்குள் நாணயங்களைப் போடுவதை இயேசு பார்க்கிறார். அப்போது ஓர் ஏழைக் கைம்பெண் அமைதியாக நடந்துவந்து, காணிக்கைப் பெட்டி அருகே பக்தியோடு செல்கிறார். அவரிடம் பெருமளவு செல்வம் கிடையாது. அன்றாட உணவுக்கே பிறரை நம்பித்தான் வாழ வேண்டும். அவர் கைவசம் இருப்பதெல்லாம் இரண்டு காசுகள். அதற்குப் பெரிய மதிப்பு கிடையாது. ஆனால் அந்த ஏழைப்பெண்ணின் முழுச் சொத்தும் அதுதான். அதை முழுவதும் அவர் காணிக்கையாகக் கொடுத்துவிட்டார். இதைப் பார்த்த இயேசு அக்கைம்பெண்ணின் இதயத்தை உற்றுநோக்குகிறார். அங்கே அன்பு தவிர வேறொன்றும் இல்லை. பிறர் தன்னைப் பார்த்து குறைவாக நினைப்பார்களே என்ற எண்ணம் அப்பெண்ணிடம் இல்லை. கடவுள் தனக்குத் தந்த சிறிய செல்வத்தைக் கடவுளுக்கே கொடுப்பேன் என நினைக்கிறார் அவர். அவருடைய உள்ளம் மகிழ்ச்சியாலும் நன்றியாலும் நிறைகிறது. மனிதரின் இதய ஆழத்தை அறிகின்ற இயேசு அந்த ஏழைக் கைம்பெண்ணின் தாராள மனத்தைப் போற்றுகிறார்.

நாம் கடவுளுக்கு என்ன கொடுக்கிறோம் என்று கேட்பதை விட, நாம் அவருக்குக் கொடுத்தபிறகு எதை நமக்கென்று வைத்துக்கொள்கிறோம் என்னும் கேள்வியைக் கேட்பது அதிகப் பொருத்தமாக இருக்கும். எவ்வளவு அன்போடு நாம் கொடுக்கிறோமோ அவ்வளவு அதிகமாக நமக்குக் கடவுள் தம் அருளை வழங்குவார். பொருளை விரும்புபவரல்ல நம் கடவுள்; நம்மையே நாம் அவருக்குக் கையளிக்க வேண்டும் என்பதுதான் அவருடைய விருப்பம். எனவே நாம் இறைவார்த்தையை நம் மனத்தில் ஆழமாக இருத்தி, அவ் வார்த்தைக்கு ஆழமாகச் செவிகொடுத்து, அவ்வார்த்தைகளையும், செய்தியையையும் கடைப்பிடித்து வாழ நம்மை முழுமையாக அர்ப்பணித்தவர்களாய் இத்திருப்பலியில் பங்கேற்றுச் செபிப்போம்.

முதல் வாசகம்


அரசர்கள் முதல் நூலிலிருந்து வாசகம் 17: 10-16

அந்நாள்களில் எலியா புறப்பட்டு, சாரிபாத்துக்குப் போனார். நகரின் நுழைவாயிலை வந்தடைந்தபொழுது, அங்கே ஒரு கைம்பெண் சுள்ளிகளைப் பொறுக்கிக் கொண்டிருந்தார். அவர் அவரை அழைத்து, �ஒரு பாத்திரத்தில் எனக்குக் குடிக்கக் கொஞ்சம் தண்ணீர் கொண்டு வா� என்றார். அவர் அதைக் கொண்டு வரச் செல்கையில், அவரைக் கூப்பிட்டு, �எனக்குக் கொஞ்சம் அப்பமும் கையோடு கொண்டு வருவாயா?� என்றார். அவர், �வாழும் உம் கடவுளாகிய ஆண்டவர்மேல் ஆணை! என்னிடம் அப்பம் ஏதும் இல்லை; பானையில் கையளவு மாவும் கலயத்தில் சிறிதளவு எண்ணெயுமே என்னிடம் உள்ளன. இதோ, இப்போது இரண்டொரு சுள்ளிகளைப் பொறுக்கிக் கொண்டு வீட்டிற்குப் போய் அப்பம் சுட்டு, நானும் என் மகனும் சாப்பிடுவோம். அதன்பின் சாகத்தான் வேண்டும்� என்றார். எலியா அவரிடம், �அஞ்ச வேண்டாம், போய் நீ சொன்னபடியே செய். ஆனால், முதலில் எனக்கு ஒரு சிறிய அப்பம் சுட்டுக் கொண்டு வா. பிறகு உனக்கும் உன் மகனுக்கும் சுட்டுக்கொள். இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் உரைப்பது இதுவே: நாட்டில் ஆண்டவர் மழை பெய்யச் செய்யும் நாள் வரை பானையிலுள்ள மாவு தீராது; கலயத்திலுள்ள எண்ணெயும் குறையாது� என்று சொன்னார். அவர் போய் எலியா சொன்னபடியே செய்தார். அவரும் அவருடைய மகனும், அவர் வீட்டாரும் பல நாள் சாப்பிட்டனர். எலியா வழியாக ஆண்டவர் உரைத்த வாக்கின்படி பானையிலிருந்து மாவு தீரவில்லை; கலயத்திலிருந்த எண்ணெயும் குறையவில்லை.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்


திருப்பாடல் 146: 7. 8-9ய. 9bஉ-10 (பல்லவி: 1)

பல்லவி: என் நெஞ்சே! நீ ஆண்டவரைப் போற்றிடு. அல்லது: அல்லேலூயா.

பல்லவி

7 ஆண்டவர் ஒடுக்கப்பட்டோர்க்கான நீதியை நிலைநாட்டுகின்றார்; பசித்திருப்போர்க்கு உணவளிக்கின்றார்; சிறைப்பட்டோர்க்கு விடுதலை அளிக்கின்றார். பல்லவி

8 ஆண்டவர் பார்வையற்றோரின் கண்களைத் திறக்கின்றார்; தாழ்த்தப்பட்டோரை உயர்த்துகின்றார்; நீதிமான்களிடம் அன்பு கொண்டுள்ளார். 9 ஆண்டவர் அயல் நாட்டினரைப் பாதுகாக்கின்றார். பல்லவி

9 அனாதைப் பிள்ளைகளையும் கைம்பெண்களையும் ஆதரிக்கின்றார்; ஆனால், பொல்லாரின் வழிமுறைகளைக் கவிழ்த்து விடுகின்றார். 10 சீயோனே! உன் கடவுள், என்றென்றும், எல்லாத் தலைமுறைகளுக்கும் ஆட்சி செய்வார். பல்லவி



இரண்டாம் வாசகம்


எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 9: 24-28

சகோதரர் சகோதரிகளே, கிறிஸ்து, மனிதரின் கையால் அமைக்கப்பட்டதும் உண்மையான தூயகத்திற்கு முன்னடையாளமாய் இருப்பதுமான இவ்வுலகத் தூயகத்திற்குள் நுழையாமல் விண்ணுலகிற்குள்ளேயே நுழைந்திருக்கிறார். அங்கே இப்போது நம் சார்பாகக் கடவுளின் திருமுன் நிற்கிறார். தலைமைக் குரு விலங்குகளின் இரத்தத்துடன் ஆண்டுதோறும் தூயகத்திற்குள் செல்வார். அதற்கு மாறாக, கிறிஸ்து தம்மையே ஒரே முறை பலியாகக் கொடுத்தார். அதை மீண்டும் மீண்டும் செய்யவில்லை. அவ்வாறு செய்திருப்பார் என்றால், உலகம் தோன்றிய காலந்தொட்டு, அவர் மீண்டும் மீண்டும் துன்புற்றிருக்க வேண்டும். அதற்கு மாறாக, உலகம் முடியும் காலமான இப்போது தம்மையே பலியாகக் கொடுத்து, பாவங்களைப் போக்குவதற்காக ஒரே முறை உலகில் வெளிப்படுத்தப்பட்டார். மனிதர் ஒரே முறை சாவுக்கு உட்படுகின்றனர். பின்னர் இறுதித் தீர்ப்பு வருகிறது. இதுவே அவர்களுக்கென உள்ள நியதி. அவ்வாறே, கிறிஸ்துவும் பலரின் பாவங்களைப் போக்கும் பொருட்டு, ஒரே முறை தம்மைத்தாமே பலியாகக் கொடுத்தார். அவர் மீண்டும் ஒரு முறை தோன்றுவார். ஆனால், பாவத்தின் பொருட்டு அல்ல, தமக்காகக் காத்திருப்பவர்களுக்கு மீட்பு அருளும் பொருட்டே தோன்றுவார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


மத் 5: 3
அல்லேலூயா, அல்லேலூயா! ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது. அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்


நற்செய்திக்கு முன் வசனம்

இந்த ஏழைக் கைம்பெண், எல்லாரையும்விட மிகுதியாகப் போட்டிருக்கிறார்.


மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 38-44

அக்காலத்தில் இயேசு கற்பித்துக் கொண்டிருந்தபோது, ``மறைநூல் அறிஞர்களைக் குறித்துக் கவனமாய் இருங்கள். அவர்கள் தொங்கல் ஆடை அணிந்து நடமாடுவதையும் சந்தை வெளிகளில் மக்கள் தங்களுக்கு வணக்கம் செலுத்துவதையும் விரும்புகிறார்கள்; தொழுகைக்கூடங்களில் முதன்மையான இருக்கைகளையும் விருந்துகளில் முதன்மையான இடங்களையும் பெற விரும்புகிறார்கள்; கைம்பெண்களின் வீடுகளைப் பிடுங்கிக்கொள்கிறார்கள்; நீண்ட நேரம் இறைவனிடம் வேண்டுவதாக நடிக்கிறார்கள். கடுந்தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாக இருப்பவர்கள் இவர்களே'' என்று கூறினார். இயேசு காணிக்கைப் பெட்டிக்கு எதிராக அமர்ந்து கொண்டு மக்கள் அதில் செப்புக் காசு போடுவதை உற்று நோக்கிக்கொண்டிருந்தார். செல்வர் பலர் அதில் மிகுதியாகப் போட்டனர். அங்கு வந்த ஓர் ஏழைக் கைம்பெண் ஒரு கொதிராந்துக்கு இணையான இரண்டு காசுகளைப் போட்டார். அப்பொழுது, அவர் தம் சீடரை வரவழைத்து, ``இந்த ஏழைக் கைம்பெண், காணிக்கைப் பெட்டியில் காசு போட்ட மற்ற எல்லாரையும் விட மிகுதியாகப் போட்டிருக்கிறார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். ஏனெனில் அவர்கள் அனைவரும் தங்களுக்கு இருந்த மிகுதியான செல்வத்திலிருந்து போட்டனர். இவரோ தமக்குப் பற்றாக்குறை இருந்தும் தம்மிடம் இருந்த அனைத்தையுமே, ஏன் தம் பிழைப்புக்காக வைத்திருந்த எல்லாவற்றையுமே போட்டுவிட்டார்'' என்று அவர்களிடம் கூறினார்.


- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.



இறைமக்களின் வேண்டல்கள்:


புகழ் விரும்பிகள், விளம்பர வேட்கையாளர்கள், சுயநலப் பிரியர்கள் மலிந்து கிடக்கிற உலகம் இது. வேடங்களால் உண்மையை விலைபேசி ஆன்மீக கவர்ச்சியால் மற்றவர்களை மயக்கி நற்பேறு தேடும் பரிசேயர்கள் நம் மத்தியில் பலருண்டு. தெய்வத்தின் பார்வையில் எவரும் தப்ப இயலாது. உண்மை ஒரு நாள் வெளிச்சத்திற்கு வரும். நேரிய முறையில் வாழும் நீதிமான் பனைமரம் போல செழிப்பான். இக்காலத்தில் உரியபேற்றை அடையாது இறைவனால் குறிக்கப்பட்ட காலத்தில் உறுதியாக உயர்வடைவான்

பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைத் தயவாய் கேட்டருளும்.

ஆயனே எம் இறைவா!

எம் தாய் திருச்சபையை வழி நடத்தும் திருத்தந்தை ஆயர்கள் குருக்கள் துறவறத்தார் ஆகிய அனைவரும் பெரிய குருவாகிய இயேசுவின் வழி நடந்து மக்களுக்காக உழைத்திட வேண்டிய ஞானத்தைத் தர இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

ஞானம் நிறை நாயகனே இயேசுவே,

வறுமையில் வாடிய கைம்பெண்ணைப் பாராட்டி, அவரை எங்களுக்கு மாதிரியாகத் தந்ததற்காக நன்றி கூறுகிறோம். கொடுக்கின்ற பண்பை வளர்த்துக்கொள்ளும் அருளையும்; கொடுப்பதை நிறைவாக, முழமையாக, நூறு விழுக்காடாகக் கொடுக்கின்ற தாராள மனத்தையும் எங்களுக்குத் தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

அமைதியான நீர்நிலைகளுக்கு எங்களை அழைத்துச் செல்லும் தந்தையே இறைவா!

இறந்து போன அனைத்து ஆன்மாக்களுக்கும் நித்திய இளைப்பாற்றியை அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடு கின்றோம்.

அன்பு இறைவா,

யாரும் நினையாத ஆன்மாக்களுக்காக சிறப்பாக மன்றாடுகிறோம். அவர்கள் தாங்கள் செய்த பாவங்களினால் உத்தரிக்கிற ஸ்தலத்தில் இருந்தாலும் அவர்கள் வேதனை குறைந்து உம் தெய்வீக விருந்தில் பங்குபெற அவர்களை ஆசிர்வதித்து உம்மிடம் எடுத்துக்கொள்ள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

இறைவா,

எங்களையே உமக்குக் காணிக்கையாக அளிக்க அருளைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

மருத்துவரே எம் இறைவா!

எம்மத்தியில் உடல் நோயினாலும் மனநோயினாலும் வாடுவோரை உம் பாதம் சமர்ப்பிக்கின்றோம். இவர்கள் அனைவரும் தங்கள் துன்பத்திலிருந்து விடுபட்டவர்களாக வாழ வேண்டிய அருளைத்தர இறைவா உம்மை மன்றாடுகிறோம்.






சிந்தனை


''இயேசு, 'இக்கைம்பெண்ணோ தமக்குப் பற்றாக்குறை இருந்தும் தம் பிழைப்புக்காக வைத்திருந்த எல்லாவற்றையுமே போட்டுவிட்டார்' என்றார்''

இயேசு வாழ்ந்த காலத்தில் சமுதாயத்தால் ஓரம் தள்ளப்பட்ட மக்களுள் கைம்பெண்களும் உண்டு. கணவனே வீட்டுக்குத் தலைவன் என்னும் கருத்து நிலவிய அக்காலத்தில் பெண்கள் கணவனுக்கும் வீட்டிலுள்ள பிற ஆண்களுக்கும் கட்டுப்பட்டே நடக்கவேண்டியிருந்தது. நற்செய்தியில் வருகின்ற கைம்பெண் இவ்வாறு சமுதாயத்தால் ஒடுக்கப்பட்ட ஒருவராகவே இருந்தார். ஆனால் அவர் கடவுளின் இல்லமாகிய எருசலேம் கோவிலுக்குச் செல்கிறார். அங்கே காணிக்கை செலுத்துகிறார். அவர் அளித்த காணிக்கை மிகச் சிறியதுதான். ஆனால் அவருடைய தாராள உள்ளத்திற்கு எல்லையே இல்லை. தன்னிடமிருந்து எல்லாவற்றையுமே அவர் கடவுளுக்கென்று கொடுத்துவிட்டார். கோவில் நிர்வாகத்தைத் தம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த தலைமைக் குரு, பிற குருகுலத்தார் எல்லாருமே பேராசை பிடித்தவர்கள் என நாம் கூற இயலாது. ஆனால் அவர்களில் சிலராவது ஏழை மக்களைப் பிழிந்து தங்களுக்குச் செல்வம் தேடிக்கொண்டார்கள் என அறிகிறோம் (காண்க: லூக் 20:47). -- இன்றைய சமுதாயத்திலும் ஓரங்கட்டப்பட்ட மக்கள் பல்லாயிரம் பேர் உண்டு. அவர்கள் சமுதாயத்தில்ல நிலவுகின்ற அநீதிகளின் காரணமாகப் பல நெருக்கடிகளுக்கு உள்ளாகின்றார்கள். ஆனால் சமுதாயத்தில் நிலவுகின்ற சுய நலத்தின் காரணமாக ஒடுக்கப்படுகின்ற மக்கள் கடவுள் பெயராலும் அநீதிகளுக்கு உள்ளாக்கப்படுவது பெரும் கொடுமையே. ஏழைகள், அனாதைகள், கைம்பெண்கள், அன்னியர் போன்றோரை வெறுத்து ஒதுக்காமல் அவர்கள் மட்டில் தனிக் கரிசனை காட்ட வேண்டும் என்பது பழைய ஏற்பாட்டுச் சட்டம் (காண்க: விப 22:22; இச 24:18). ஆனால் இயேசுவின் காலத்தில் பலர் இச்சட்டத்தை மறந்துவிட்டிருந்தார்கள். இயேசு கோவிலில் காணிக்கை போட்ட கைம்பெண்ணின் தாராள குணத்தைப் போற்றினார். ஏனென்றால் அக்கைம்பெண் ''தமக்குப் பற்றாக்குறை இருந்தும் தம் பிழைப்புக்காக வைத்திருந்த எல்லாவற்றையுமே போட்டுவிட்டார்'' (லூக் 21:4). கடவுள் நம்மீது இவ்வாறே நடந்துகொள்கின்றார். அவர் தம் அன்பை நமக்கு அளந்து கொடுப்பதில்லை. அவருடைய அன்பு எல்லையற்றது; எந்தவொரு மனித அன்பையும் விட ஆயிரம் மடங்கு மேலானது. கடவுளின் எல்லையற்ற இரக்கமும் அன்பும் நம் வாழ்விலும் துலங்க வேண்டும். நம் உள்ளத்தின் நேர்மையைக் காண்கின்ற கடவுள் நாம் தாராள உள்ளத்தோடு அவரையும் அவர் மதிக்கின்ற மானிட உலகையும் அன்புசெய்திட நம்மை அழைக்கின்றார்.

மன்றாடுவோம்:

இறைவா, உம் அன்புப் பெருக்கு எங்கள் வாழ்வில் ஆறாய் வழிந்தோடுவதை நாங்கள் உணர்ந்து வாழ்ந்திட அருள்தாரும்.
-->