பொதுக்காலம் 31 வது - ஞாயிறு

இரண்டாம் ஆண்டு 04-11-2012


''உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்புகூர்வாயாக''

உன் முழு இதயத்தோடும் 
முழு உள்ளத்தோடும் முழுமனத்தோடும் முழு ஆற்றலோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு கூர்வாயாக/> உன் முழு இதயத்தோடும் 
முழு உள்ளத்தோடும் முழுமனத்தோடும் முழு ஆற்றலோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு கூர்வாயாக உன் முழு இதயத்தோடும் 
முழு உள்ளத்தோடும் முழுமனத்தோடும் முழு ஆற்றலோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு கூர்வாயாக


திருப்பலி முன்னுரை


அழைக்கப்பட்டவர்களே, பொதுக்காலத்தின் 31 வது ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

அனைத்திலும் முதன்மையான கட்டளை எது? என்னும் கேள்விக்கு ஆண்டவர் இயேசு அளித்த விடையை இன்றைய சிந்தனைக்காக எடுத்துக்கொள்வோம்.

முதன்மையான கட்டளை!

"நம் ஆண்டவராகிய கடவுள் ஒருவரே ஆண்டவர். உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு மனத்தோடும், முழு ஆற்றலோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு கூர்வாயாக என்பது முதன்மையான கட்டளை" என்பதே இயேசுவின் விடை. இந்த முதன்மையான கட்டளையை நாம் நிறைவேற்றுகிறோமா? நன்றாக நிறைவேற்றுகிறோமா? என்பது நாம் நம்மையே கேட்கவேண்டிய கேள்வி. முழு இதயம், முழு உள்ளம், முழு மனம், முழு ஆற்றல்... என நான்கு சொற்கள் இறையன்பின் மேன்மையையும், அவசியத்தையும் வெளிப்படுத்துகின்றன. பல நேரங்களில் நமது அன்பின் வெளிப்பாடுகளான செபம், வழிபாடு, கடமையுணர்வு போன்றவை அரை மனத்தோடும், அரைகுறை ஆற்றலோடும் வெளிப்படுவது நாம் முதல் கட்டளையை மீறுகிறோம் என்பதையே காட்டுகிறது. நம் வாழ்வின் அனைத்துமான இறைவனுக்கு, நம் வாழ்வின் அனைத்தையும் கொண்டு நாம் அன்பு செய்யவேண்டும். நமது இறையன்பின் ஆழத்தை ஆழப்படுத்துவோம். அனைத்திற்கும் மேலாக இறைவனை அன்பு செய்வோம். இறைவனுக்காக நேரம், ஆற்றல், பொருளைப் பயன்படுத்துவோம். எனவே நாம் இறைவார்த்தையை நம் மனத்தில் ஆழமாக இருத்தி, அவ் வார்த்தைக்கு ஆழமாகச் செவிகொடுத்து, அவ்வார்த்தைகளையும், செய்தியையையும் கடைப்பிடித்து வாழ நம்மை முழுமையாக அர்ப்பணித்தவர்களாய் இத்திருப்பலியில் பங்கேற்றுச் செபிப்போம்.

முதல் வாசகம்


இணைச்சட்ட நூலிலிருந்து வாசகம் 6: 2-6

மோசே மக்களை நோக்கிக் கூறியது: நீங்களும் உங்கள் பிள்ளைகளும், பிள்ளைகளின் பிள்ளைகளும், உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு அஞ்சி நான் உங்களுக்குக் கட்டளையிட்ட எல்லா நியமங்களையும் கட்டளைகளையும் உங்கள் வாழ் நாளெல்லாம் கடைப்பிடிப்பீர்களாக! இதனால், நீங்கள் நெடுநாள் வாழ்வீர்கள். இஸ்ரயேலே, அவற்றிற்குச் செவிகொடு! அவற்றைச் செயல்படுத்த முனைந்திடு! அதனால், உன் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவர் உனக்கு வாக்களித்தபடி, பாலும் தேனும் நிறைந்துவழியும் நாட்டில் நீ நலம் பல பெற்று மேன்மேலும் பெருகுவாய். இஸ்ரயேலே, செவிகொடு! நம் கடவுளாகிய ஆண்டவர் ஒருவரே ஆண்டவர். உன் முழு இதயத்தோடும், உன் முழு உள்ளத்தோடும், உன் முழு ஆற்றலோடும் உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்பு கூர்வாயாக! இன்று நான் உனக்குக் கட்டளையிடும் இவ்வார்த்தைகள் உன் உள்ளத்தில் இருக்கட்டும்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றிபதிலுரைப் பாடல்


திருப்பாடல் 18: 1-2யbஉ, 2னநக-3. 46,50யb (பல்லவி: 1)

பல்லவி: என் ஆற்றலாகிய ஆண்டவரே! உம்மிடம் நான் அன்புகூர்கின்றேன்.

பல்லவி

1 என் ஆற்றலாகிய ஆண்டவரே! உம்மிடம் நான் அன்புகூர்கின்றேன். 2யbஉ ஆண்டவர் என் கற்பாறை; என் கோட்டை; என் மீட்பர். பல்லவி

2னநக என் இறைவன்; நான் புகலிடம் தேடும் மலை அவரே; என் கேடயம், எனக்கு மீட்பளிக்கும் வல்லமை, என் அரண், 3 போற்றற்குரிய ஆண்டவரை நோக்கி நான் மன்றாடினேன்; என் எதிரிகளிடமிருந்து நான் மீட்கப்பட்டேன். பல்லவி

46 ஆண்டவர் உண்மையாகவே வாழ்கின்றார்! என் கற்பாறையாம் அவர் போற்றப்பெறுவாராக! என் மீட்பராம் கடவுள் மாட்சியுறுவாராக! 50 தாம் ஏற்படுத்திய அரசருக்கு மாபெரும் வெற்றியை அளிப்பவர் அவர்; தாம் திருப்பொழிவு செய்த தாவீதுக்கும் அவர்தம் மரபினருக்கும் என்றென்றும் பேரன்பு காட்டுபவரும் அவரே. பல்லவிஇரண்டாம் வாசகம்


எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 7:23-28

சகோதரர் சகோதரிகளே,மேலும், அந்தக் குருக்கள் சாவுக்கு ஆளானவர்களாய் இருந்ததால் தம் பணியில் நிலைத்திருக்க முடியவில்லை. வேறு பலர் தொடர்ந்து குருக்களாயினர். இவரோ, என்றென்றும் நிலைத்திருப்பதால், மாறாத குருத்துவப் பணியைப் பெற்றுள்ளார். ஆதலின், தம் வழியாகக் கடவுளிடம் வருபவரை அவர் முற்றும் மீட்க வல்லவராயிருக்கிறார்; அவர்களுக்காகப் பரிந்து பேசுவதற்கென என்றுமே உயிர் வாழ்கிறார். இத்தகைய தலைமைக் குருவே நமக்கு ஏற்றவராகிறார். இவர் தூயவர், கபடற்றவர், மாசற்றவர், பாவிகளிடமிருந்து பிரித்தெடுக்கப்பட்டு, வானங்களுக்கு மேலாக உயர்த்தப்பட்டவர். ஏனைய தலைமைக் குருக்கள் செய்வது போல, முதலில் தம்முடைய பாவங்களுக்காகவும் பின்னர் மக்களுடைய பாவங்களுக்காகவும் இவர் நாள்தோறும் பலி செலுத்தத் தேவையில்லை. ஏனெனில் தம்மைத் தாமே பலியாகச் செலுத்தி இதை ஒரே ஒருமுறைக்குள் செய்து முடித்தார். திருச்சட்டப்படி வலுவற்ற மனிதர்கள் குருக்களாக ஏற்படுத்தப்படுகிறார்கள். ஆனால் அத்திருச்சட்டத்திற்குப் பின்னர், ஆணையிட்டுக் கூறப்பட்ட வாக்கின் மூலம் என்றென்றும் நிறைவுள்ளவரான மகனே குருவாக ஏற்படுத்தப்படுகிறார். ?

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றிநற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


யோவா 14: 23 - அல்லேலூயா, அல்லேலூயா! என்மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார். என் தந்தையும் அவர்மீது அன்பு கொள்வார். நாங்கள் அவரிடம் வந்து அவருடன் குடிகொள்வோம், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்


நற்செய்திக்கு முன் வசனம்

இவற்றைவிட மேலான கட்டளை வேறு எதுவும் இல்லை.


மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12:28-34

அக்காலத்தில், மறைநூல் அறிஞருள் ஒருவர், இயேசு அவர்களுக்கு நன்கு பதில் கூறிக்கொண்டிருந்ததைக் கண்டு அவரை அணுகி வந்து, "அனைத்திலும் முதன்மையான கட்டளை எது?" என்று கேட்டார். அதற்கு இயேசு, "இஸ்ரயேலே கேள். நம் ஆண்டவராகிய கடவுள் ஒருவரே ஆண்டவர். உன் முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் முழுமனத்தோடும் முழு ஆற்றலோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு கூர்வாயாக" என்பது முதன்மையான கட்டளை. "உன்மீது நீ அன்புகூர்வது போல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்புகூர்வாயாக" என்பது இரண்டாவது கட்டளை. இவற்றைவிட மேலான கட்டளை வேறு எதுவும் இல்லை" என்றார். அதற்கு மறைநூல் அறிஞர் அவரிடம், "நன்று போதகரே, "கடவுள் ஒருவரே; அவரைத் தவிர வேறு ஒரு கடவுள் இல்லை" என்று நீர் கூறியது உண்மையே. அவரிடம் முழு இதயத்தோடும் முழு அறிவோடும் முழு ஆற்றலோடும் அன்பு செலுத்துவதும், தன்னிடம் அன்புகொள்வது போல் அடுத்திருப்பவரிடம் அன்பு செலுத்தவதும் எரிபலிகளையும் வேறுபலிகளையும்விட மேலானது" என்று கூறினார். அவர் அறிவுத்திறனோடு பதிலளித்ததைக் கண்ட இயேசு அவரிடம், "நீர் இறையாட்சியினின்று தொலையில் இல்லை" என்றார். அதன்பின் எவரும் அவரிடம் எதையும் கேட்கத் துணியவில்லை.


- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.இறைமக்களின் வேண்டல்கள்:


முழுமையான இறைவனை நேசிப்பதும், அடுத்தவர் மீது அக்கறை காட்டுவதும், கிறிஸ்தவ வாழ்வின் இரு பக்கங்கள். அறைகுறையாக கடவுளை அன்பு செய்வதும் அவ்வப்போது அடுத்தவரை நினைத்துப் பார்ப்பதும் கடமை முடிந்து விட்டது என்ற குறைவுபட்ட கிறிஸ்தவ வாழ்வை வெளிப்படுத்துவதாகும்.

பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைத் தயவாய் கேட்டருளும்.

அனைவரும் என்னைப் போல இருங்கள் என்று சொன்ன எம் இறைவா!

உம் திருச்சபையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள, குருக்கள, கன்னியர் பொதுநிலையினர் அனைவரும் உம்மைப்போல வாழ்ந்து தங்களது வாழ்வால் மற்றவருக்கு நற்செய்தியை அறிவித்திட தேவையான அருள் வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

ஆண்டவராகிய இயேசுவே,

உம்மைப் போற்றுகிறோம். இறையாட்சியின் மதிப்பீடுகளைக் கண்டுணரவும், இறையாட்சியை நெருங்கி வரவும், எங்களுக்கு அறிவும், ஆர்வமும், திறந்த மனமும் தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

அமைதியான நீர்நிலைகளுக்கு எங்களை அழைத்துச் செல்லும் தந்தையே இறைவா!

இறந்து போன அனைத்து ஆன்மாக்களுக்கும் நித்திய இளைப்பாற்றியை அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடு கின்றோம்.

அன்பு இறைவா,

யாரும் நினையாத ஆன்மாக்களுக்காக சிறப்பாக மன்றாடுகிறோம். அவர்கள் தாங்கள் செய்த பாவங்களினால் உத்தரிக்கிற ஸ்தலத்தில் இருந்தாலும் அவர்கள் வேதனை குறைந்து உம் தெய்வீக விருந்தில் பங்குபெற அவர்களை ஆசிர்வதித்து உம்மிடம் எடுத்துக்கொள்ள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

இந்த சினனஞ்சிறு குழந்தைகளுக்கு செய்தபோதெல்லாம் என்கே செய்தீர்கள் என்று மொழிந்த இறைவா,

எம் பங்கில் உள்ள சிறுவர் சிறுமியர்கள் அனைவரும் படிப்பிலும், நல்லொலுக்கத்திலும் சிறந்து விளங்க வேண்டுமென்றும், இளைஞர்கள், இளம்பெண்கள் அனைவரும் தங்கள் எதிர்கால வாழ்வை தன் கண்முன் கொண்டு எப்போதும் உமக்கு ஏற்ற பிள்ளைகளாக வாழ தேவையான அருளைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

எங்களைப் படைத்து, காத்து, வழிநடத்தும் அன்புத் தந்தையே இறைவா,

உம்மைப் போற்றுகிறோம். இறையன்பால் எங்களை நிரப்பும். உம்மை முழுமையாக அன்புசெய்யும் ஆற்றலை எங்களுக்குத் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


சிந்தனை


''மறைநூல் அறிஞருள் ஒருவர்...இயேசுவை அணுகிவந்து, 'அனைத்திலும் முதன்மையான கட்டளை எது?' என்று கேட்டார். அதற்கு இயேசு,...'உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்புகூர்வாயாக... உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்புகூர்வாயாக' என்றார்'' (மாற்கு 12:28-31)

யூத சமயம் மக்களுக்குப் பல கட்டளைகளை வழங்கியிருந்தது. அக்கட்டளைகளுள் முக்கியமானது எது என்னும் கேள்விக்குப் பல யூத அறிஞர்கள் பதில் தந்தனர். இயேசுவை அணுகிச் சென்று ''அனைத்திலும் முதன்மையான கட்டளை எது?'' என்று கேட்ட மறைநூல் அறிஞர் நல்ல எண்ணத்தோடுதான் அக்கேள்வியைக் கேட்டார். இயேசு அவருக்கு அளித்த பதில் ''கடவுளை அன்பு செய்க; மனிதரை அன்பு செய்க'' என்பதாகும். இயேசு இப்பதிலைப் பழைய ஏற்பாட்டிலிருந்து மேற்கோள் காட்டி எடுத்துரைக்கிறார் (காண்க: இச 6:4-5; லேவி 19:18). கடவுள் நம்மைப் படைத்து, பாதுகாத்து, அன்போடு வழிநடத்துகின்ற தந்தை. எனவே, அவரை நாம் முழுமையாக அன்புசெய்வது பொருத்தமே. அவரிடத்தில் நம்மை நாம் எந்தவித நிபந்தனையுமின்றிக் கையளித்திட வேண்டும். இது முதன்மையான கட்டளை. இதற்கு நிகரான கட்டளையாக இயேசு ''பிறரை அன்புசெய்க'' என்னும் வழிமுறையை நல்குகின்றார். நாம் எல்லா மனிதரையும் வேறுபாடின்றி அன்பு செய்ய அழைக்கப்டுகிறோம். -- இயேசு அன்புக் கட்டளை பற்றி அளித்த பதிலைக் கேட்ட மறைநூல் அறிஞர் இயேசு கூறிய பதிலை முழுமையாக ஏற்றுக்கொண்டதோடு, அன்புக் கட்டளையை நிறைவேற்றுவது எருசலேம் கோவிலில் நிகழ்ந்த பலிகளை எல்லாம் விட மிகச் சிறந்தது எனக் கூறித் தம் இசைவைத் தெரிவிக்கிறார் (மாற் 12:32-33). இயேசு பழைய ஏற்பாட்டில் காணப்பட்ட அன்புக் கட்டளையை மக்களுக்கு மீண்டும் எடுத்துக் கூறிய நேரத்தில் அன்பு என்பது இரு பக்கங்களைக் கொண்டது எனக் காட்டுகிறார். கடவுளை அன்புசெய்வதோடு நாம் பிறரையும் அன்புசெய்ய வேண்டும். ஒன்றில்லாமல் மற்றது இல்லை. எனவே, இயேசு கடவுளின் அன்பில் எந்நாளும் நிலைத்திருந்து, அதே நேரத்தில் நம்மை முழுமையாக அன்புசெய்து நமக்காகத் தம்மையே பலியாக்கியதுபோல நாமும் இறையன்பிலும் பிறரன்பிலும் சிறந்து விளங்க அழைக்கப்படுகிறோம். அன்பு இல்லாத இடத்தில் வேறு நற்பண்புகளும் இராது. அன்பு இருக்குமிடத்தில் தன்னலம் மறையும்; பிறருடைய நலனுக்கு நாம் முன்னுரிமை கொடுப்போம். கடவுள் நம்மை எந்தவொரு நிபந்தனையுமின்றி அன்புசெய்வது போல நாமும் முழுமையாகக் கடவுளை அன்புசெய்து, அவருடைய அன்பின் தூண்டுதலால் எல்லா மக்களையும் அன்புசெய்திட முன்வருவோம்.

மன்றாடுவோம்:

இறைவா, எங்கள் வாழ்க்கை அன்பின் வெளிப்பாடாக அமைந்திட அருள்தாரும்.
-->