பொதுக்காலம் 27 வது - ஞாயிறு

இரண்டாம் ஆண்டு 07-10-2012


'கடின உள்ளமும், மண விலக்கும் !

 'இனி அவர்கள் இருவர் அல்ல; ஒரே உடல். />  'இனி அவர்கள் இருவர் அல்ல; ஒரே உடல்.


திருப்பலி முன்னுரை


அன்புமிக்க சகோதர சகோதரிகளே!

தமது திருப் பெயரின் வல்லமையால் நம்மைக்காப்பாற்றும் விண்ணகத் தந்தையின் திருப்பெயரால் நல்வாழ்த்துக்கள் கூறி இத் திருப்பலிக் கொண்டாட்டத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கின்றோம்.

பொதுக்காலம், வாரம் 27 வது ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். மணவாழ்வு ஒரு மிகப் பெரிய சவால் என்பதை நாம் அறிவோம். மணவிலக்குகள் பெருகி வரும் இக்காலத்தில் மணவாழ்வின் ஒற்றுமைக்காக செபிக்கவும், முயற்சிகள் எடுக்கவும் கடமைப்பட்டிருக்கிறோம். மோசேயின் அனுமதியைப் பற்றி பரிசேயர் இயேசுவிடம் வினவியபோது உங்கள் கடின உள்ளத்தின் பொருட்டே மோசே இவ்வாறு எழுதிவைத்தார் என்கிறார் இயேசு. மணவிலக்கு, மண முறிவு என்பதெல்லாம் கடின உள்ளத்தின் வெளிப்பாடுகள். எப்போது கணவன் அல்லது மனைவியின் உள்ளம் கடினப்பட்டுவிட்டதோ, அப்போது அவர்களின் மனதில் மணமுறிவு ஏற்பட்டுவிடுகிறது. அம்மனமுறிவின் வெளிப்பாடே மணவிலக்கு. எனவே, தம்பதியர் தங்கள் உள்ளம் கடினப்பட்டுப் போகாமல் காத்துக்கொள்ளவேண்டும். தன்னலம் என்பது கடின உள்ளத்தின் ஓர் அடையாளம். புரிந்துகொள்ளாமை, ஏற்றுக்கொள்ளாமை, மன்னிக்காமை, பாசம் கொள்ளாமை, நல்லதைப் பாராட்டாமை ... இவை அனைத்துமே கடின உள்ளத்தின் வெளிப்பாடுகள்தாம். இத்தகையோர் மனதில் ஏற்கனவே மணமுறிவு ஏற்பட்டுவிட்டது என்றே கூறலாம். கல்லான இதயத்தை எடுத்துவிட்டு, கனிவான இதயத்தைப் பெற நாம் இறைவனிடம் இறைஞ்சுவோம். அவ்வாறே, கணவன் மனைவி இருவரும் புரிந்துகொண்டு, ஏற்றுக்கொண்டு, மன்னித்து, பாசம் காட்டி, பாராட்டி வாழ்ந்தால் இல்லறம் இனிமையாய் இருக்கும். ஆண்டவரின் ஆவியைப் பெற்றவர்களாய், புனிதமான வாழ்வு வாழும் வரம் வேண்டி, இந்த திருப்பலியில் பங்கேற்போம்.

முதல் வாசகம்


தொடக்க நூலிலிருந்து வாசகம் 2: 18-24

18 பின்பு ஆண்டவராகிய கடவுள், மனிதன் தனிமையாக இருப்பது நல்லதன்று; அவனுக்குத் தகுந்த துணையை உருவாக்குவேன் என்றார். 19 ஆண்டவராகிய கடவுள் மண்ணிலிருந்து எல்லாக் காட்டு விலங்குகளையும் வானத்துப் பறவைகளையும் உருவாக்கி, அவற்றிற்கு மனிதன் என்ன பெயரிடுவான் என்று பார்க்க, அவற்றை அவனிடம் கொண்டு வந்தார். உயிருள்ள ஒவ்வொன்றுக்கும் அவன் என்ன பெயரிட்டானோ அதுவே அதன் பெயராயிற்று. 20 கால்நடைகள், வானத்துப் பறவைகள், காட்டு விலங்குகள் ஆகிய எல்லாவற்றிற்கும் மனிதன் பெயரிட்டான்; தனக்குத் தகுந்த துணையையோ மனிதன் காணவில்லை. 21 ஆகவே ஆண்டவராகிய கடவுள் மனிதனுக்கு ஆழ்ந்த உறக்கம் வரச்செய்து, அவன் உறங்கும் பொழுது அவன் விலா எலும்பு ஒன்றை எடுத்துக்கொண்டு, எடுத்த இடத்தைச் சதையால் அடைத்தார். 22 ஆண்டவராகிய கடவுள் தாம் மனிதனிடமிருந்து எடுத்த விலா எலும்பை ஒரு பெண்ணாக உருவாக்கி மனிதனிடம் அழைத்துவந்தார். 23 அப்பொழுது மனிதன், "இதோ! இவளே என் எலும்பின் எலும்பும் சதையின் சதையும் ஆனவள்; ஆணிடமிருந்து எடுக்கப்பட்டதால், இவள் பெண் என்று அழைக்கப்படுவாள்" என்றான். 24 இதனால் கணவன் தன் தாய் தந்தையை விட்டுவிட்டுத் தன் மனைவியுடன் ஒன்றித்திருப்பான்; இருவரும் ஒரே உடலாய் இருப்பர்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றிபதிலுரைப் பாடல்


திருப்பாடல்: 128: 1-6

பல்லவி: உம் வாழ்நாளெல்லாம் ஆண்டவர் உமக்கு ஆசி வழங்குவாராக.

பல்லவி

1 ஆண்டவருக்கு அஞ்சி அவர் வழிகளில் நடப்போர் பேறுபெற்றோர்! 2 உமது உழைப்பின் பயனை நீர் உண்பீர்! நீர் நற்பேறும் நலமும் பெறுவீர்! பல்லவி

3 உம் இல்லத்தில் உம் துணைவியார் கனிதரும் திராட்சைக்கொடிபோல் இருப்பார்; உண்ணும் இடத்தில் உம் பிள்ளைகள் ஒலிவக் கன்றுகளைப் போல் உம்மைச் சூழ்ந்திருப்பர். 4 ஆண்டவருக்கு அஞ்சி நடக்கும் ஆடவர் இத்தகைய ஆசி பெற்றவராய் இருப்பார். பல்லவி

5 ஆண்டவர் சீயோனிலிருந்து உமக்கு ஆசி வழங்குவாராக! உம் வாழ் நாளெல்லாம் நீர் எருசலேமின் நல்வாழ்வைக் காணும்படி செய்வாராக! 6 நீர் உம் பிள்ளைகளின் பிள்ளைகளைக் காண்பீராக! இஸ்ரயேலுக்கு நலம் உண்டாவதாக! பல்லவிஇரண்டாம் வாசகம்எபிரேயருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 2:9-11

9 சகோதர சகோதரிகளே! நாம் காண்பதோ சிறிது காலம் வானதூதரைவிடச் சற்றுத் தாழ்ந்தவராக்கப்பட்ட இயேசுவையே. இவர் துன்புற்று இறந்ததால், மாட்சியும் மாண்பும் இவருக்கு முடியாகச் சூட்டப்பட்டதைக் காண்கிறோம். இவ்வாறு கடவுளின் அருளால் அனைவருடைய நலனுக்காகவும் இவர் சாவுக்கு உட்பட வேண்டியிருந்தது. 10 கடவுள் எல்லாவற்றையும் தமக்கென்று தாமே உண்டாக்கினார். அவர், மக்கள் பலரை மாட்சியில் பங்குகொள்ள அழைத்துச் செல்ல விரும்பியபோது, அவர்களது மீட்பைத் தொடங்கி வழி நடத்துபவரைத் துன்பங்கள் மூலம் நிறைவுள்ளவராக்கினார். இது ஏற்ற செயலே. 11 தூய்மையாக்குகிறவர், தூய்மையாக்கப்படுவோர் அனைவருக்கும் உயிர்முதல் ஒன்றே. இதனால் இயேசு இவர்களைச் சகோதரர் சகோதரிகள் என்று அழைக்க வெட்கப்படவில்லை.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றிநற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


அல்லேலூயா, அல்லேலூயா! உம் வாழ்நாளெல்லாம் ஆண்டவர் உமக்கு ஆசி வழங்குவாராக. அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்நற்செய்திக்கு முன் வசனம்

கடவுள் இணைத்ததை மனிதர் பிரிக்காதிருக்கட்டும்.


மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 2-16

2 அக்காலத்தில் பரிசேயர் அவரை அணுகி, "கணவன் தன் மனைவியை விலக்கிவிடுவது முறையா?" என்று கேட்டு அவரைச் சோதித்தனர். 3 அவர் அவர்களிடம் மறுமொழியாக, "மோசே உங்களுக்கு இட்ட கட்டளை என்ன?" என்று கேட்டார். 4 அவர்கள், "மோசே மணவிலக்குச் சான்றிதழ் எழுதி அவரை விலக்கிவிடலாம் என்று அனுமதி அளித்துள்ளார்" என்று கூறினார்கள். 5 அதற்கு இயேசு அவரிகளிடம், "உங்கள் கடின உள்ளத்தின் பொருட்டே அவர் இக்கட்டளையை எழுதி வைத்தார். 6 படைப்பின் தொடக்கத்திலேயே கடவுள். "ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார். 7 இதனால் கணவன் தன் தாய் தந்தையை விட்டுவிட்டுத் தன் மனைவியுடன் ஒன்றித்திருப்பான். 8 இருவரும் ஒரே உடலாய் இருப்பர். 'இனி அவர்கள் இருவர் அல்ல; ஒரே உடல். 9 எனவே கடவுள் இணைத்ததை மனிதர் பிரிக்காதிருக்கட்டும்" என்றார். 10 பின்னர் வீட்டில் இதைப் பற்றி மீண்டும் சீடர் அவரைக் கேட்டனர். 11 இயேசு அவர்களை நோக்கி, "தன் மனைவியை விலக்கிவிட்டு வேறொரு பெண்ணை மணப்பவன் எவனும் அவருக்கு எதிராக விபசாரம் செய்கிறான். 12 தன் கணவரை விலக்கிவிட்டு வேறொருவரை மணக்கும் எவளும் விபசாரம் செய்கிறாள்" என்றார். 13 சிறு பிள்ளைகளை இயேசு தொட வேண்டுமென்று அவர்களைச் சிலர் அவரிடம் கொண்டுவந்தனர். சீடரோ அவர்களை அதட்டினர். 14 இயேசு இதைக் கண்டு, கோபம் கொண்டு, "சிறு பிள்ளைகளை என்னிடம் வர விடுங்கள். அவர்களைத் தடுக்காதீர்கள். ஏனெனில் இறையாட்சி இத்தகையோருக்கே உரியது. 15 இறையாட்சியைச் சிறு பிள்ளையைப்போல் ஏற்றுக் கொள்ளாதோர் அதற்கு உட்படமாட்டார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்" என்றார். 16 பிறகு அவர் அவர்களை அரவணைத்து, தம் கைகளை அவர்கள்மீது வைத்து ஆசி வழங்கினார்.


- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.இறைமக்களின் வேண்டல்கள்:


இறையருளும் மனித முயற்சியும் சேர்ந்து செல்லுகின்ற போது அற்புதங்களைக் காண முடியும். நாம் செய்ய வேண்டிய கடமைகளை இறைவனிடம் தள்ளிப் போடுவது உண்மையான அர்ப்பணத்திலிருந்து தப்பித்துக் கொள்வதாகும். ஆன்மீகம் என்ற போர்வையில் சோம்பேறித்தனத்தை வளர்ப்பதற்கு இயேசு கிறிஸ்து உடன்படுவதில்லை. வெளிப்படையாக ஆன்மீகத்தை வாழாது, நேரிய வழியில் நடக்கின்ற மனிதன் மறைமுகமாக கடவுளுக்கு சான்று பகர்கின்றான்.

பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைத் தயவாய் கேட்டருளும்.

அன்புத் தந்தையே இறைவா!

எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவிகள், அனைவருக்காகவும் மன்றாடுகின்றோம்: அவர்கள் தலைசிறந்த பணியாளர்களாகவும், அமைதியை ஏற்படுத்துவோராகவும், அனைவருக்கும் ஆறுதலாகவும், ஆசீர்வாதமாகவும் செயற்படுவதற்கும் வேண்டிய ஆற்றலையும், ஞானத்தையும் அவர்களுக்கு அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

மணவாழ்வின் நாயகனே இறைவா,

உம்மைப் போற்றுகிறோம். தம்பதியரின் மணவாழ்வு அன்பு மணம் வீச உம்மை மன்றாடுகிறோம். நீரே அவர்களின் கடின இதயத்தை மாற்றி, கனிவான இதயமாக மாற்றியருள எங்களுக்கு வரம் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

வாழ்வளிக்கும் நல்ல தந்தையே இறைவா!

உம்மால் உருவாக்கப்பட்ட குடும்ப உறவும், அழைப்பும் சவால்களுக்குள் அகப்பட்டுக் கிடக்கும் இவ்வேளையில், ஒவ்வொரு குடும்பத்திலுமுள்ள கணவனும் - மனைவியும் தங்கள் அழைப்பின் உட்பொருளை ஆழமாக உணர்ந்து, உறவுடனும் - ஒற்றுமையுடனும் வாழ அருள் கூர்ந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

நம்பிக்கை தருபவராம் இறைவா,

இறைவா, உம் அன்புப் பெருக்கை உணர்ந்து நாங்கள் வாழ்ந்திட எங்களுக்கு அருள்தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

அன்புத் தந்தையே இறைவா,

உம்மைப் போற்றுகிறோம். உமது திருமகனின் மாதிரியைப் பின்பற்றி, நாங்களும் நம்பிக்கையுடனும், தூய ஆவியாரின் துணையுடனும் உம்மை நோக்கி மன்றாடும் அருளை எங்களுக்கு அருள்தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

”தூய்மையின் நிறைவாம் இறைவா,

திருமணங்கள் கடவுள் இணைக்கும் ஒரு அருஞ் செயல். திருமணத்தில் இணையும் ஆணும் பெண்ணும் ஆண்டவன் செயல்பட உதவும் இன்றியமையாத கருவிகள். இந்தச் சமுதாயம் அவர்களுக்கு உதவும் கரங்கள். எனவே இதில் மனிதர்கள் யாருக்கும் பிரிக்கும் அதிகாரம் இல்லை. இறைவன் தானே முன்வந்து இணைத்த திருமணத்தை அவர் எத்தனை சிரமங்களுக்கு மத்தியிலும் மேன்மையுறச்செய்வார். ஆகவே கடவுள் இணைத்ததை மனிதர் பிரிக்காதிருக்க எங்களுக்கு அருள்தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

“ஒடுக்கப்பட்டோர் மீண்டும் ஆண்டவரில் மகிழ்ச்சி பெறுவர்” என்று திருவாய் மொழிந்த கடவுளே.

உரிமைகள் இழந்து நாம் இன்று வேடர் கண்ணியின்று தப்பிப் பிழைத்த பறவைபோல் ஆனோம். அதிகார வாதிகளால் அலைக்களிக்கப் படுகின்றோம். ஒடுக்கப்பட்ட ஒரினமாக நாம் தவிக்கின்றோம் ஏறெடுத்துப் பார்க்க யாருமின்றி, ஏக்கங்கள் மத்தியில் ஏன் இந்த வாழ்க்கை என எம் இதயம் கேட்கிறது. எனினும் எம் வாழ்விற்கு ஒளி தரும் விடிவெள்ளியாக உம்மையே எண்ணி வருகின்றோம் எம் ஏக்கங்களை துடைத்தருளும் எம் தவிப்புக்களை மகிழ்வாக்கியருளும். இவற்றினூடாக நாம் நிரந்தர நிம்மதியான வாழ்வை கண்டடைய வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
சிந்தனை


''பரிசேயர் இயேசுவை அணுகி, 'கணவன் தன் மனைவியை விலக்கிவிடுவது முறையா?' என்று கேட்டு அவரைச் சோதித்தனர்'' (மாற்கு 10:2)

ஒரு பொருள் பற்றிப் பிறர் என்ன நினைக்கிறார்கள் என அறிய விரும்பும்போது நாம் அவர்களிடம் அப்பொருள் பற்றிக் கேள்வி கேட்கிறோம். ஆனால் கேள்விகள் பல விதம். சிலர் நேர்மையான உள்ளத்தோடு பிறருடைய கருத்தை அறியும் ஆவலோடு கேள்வி கேட்பார்கள். வேறு சிலரோ பிறரிடம் குற்றம் காண்கின்ற நோக்கத்தோடு கேள்வி கேட்பார்கள். இயேசுவிடம் கேள்வி கேட்டவர்கள் பலர் இருந்தார்கள். சிலர் நேர்மையான உள்ளத்தோடு அவரை அணுகியதுண்டு. ஆனால் வேறு சிலரோ ''இயேசுவைச் சோதிக்கும் எண்ணத்துடன்'' அவரிடம் கேள்வி கேட்டார்கள். மண விலக்குப் பற்றி இயேசுவிடம் கேட்கப்பட்ட கேள்வி இந்த இரண்டாம் வகையைச் சேர்ந்தது. எனவேதான் இயேசு தம்மிடம் கேள்வி கேட்ட பரிசேயரிடம் ஒரு மறு கேள்வியைக் கேட்கிறார்: ''மோசே உங்களுக்கு இட்ட கட்டளை என்ன?'' (மாற் 10:3). கணவன் மணவிலக்குச் சான்று எழுதி, தன் மனைவியை விலக்கிவிடலாம் என்று மோசே அனுமதி அளித்ததாக அவர்கள் பதிலிறுக்கிறார்கள் (மாற் 10:4). உண்மையில் மோசே மண விலக்குப் பற்றி எந்தவொரு ''கட்டளை''யும் கொடுக்கவில்லை. மாறாக, மண விலக்குச் செய்யும் கணவன் மீண்டும் அதே பெண்ணை மணமுடித்தல் ஆகாது என்பதே சட்டம். -- எவ்வாறிருந்தாலும், அக்காலத்தில் திருமண உறவு சீர்குலையத் தொடங்கியது என்பது மட்டும் தெரிகிறது. இயேசு வீண் வாதங்களில் ஈடுபடுவர் அல்ல. அதே நேரத்தில் அவர் திருமணம் பற்றி ''படைப்பின் தொடக்கத்திலேயே'' கடவுள் வழங்கிய சட்டத்தைத் தம் எதிரிகளுக்கு நினைவூட்டுகிறார். அதாவது, கடவுள் மனிதரை ஆணும் பெண்ணுமாகப் படைத்து, அவர்கள் திருமண உறவில் வாழ்நாள் முழுவதும் நிலைத்து நிற்க வேண்டும் எனவும், ''கடவுள் இணைத்ததை மனிதர் பிரிக்கலாகாது'' எனவும் தொடக்கத்திலிருந்தே கட்டளை தந்துள்ளார் (காண்க: தொநூ 2:24; மாற் 10:6-9). இன்றைய உலகில் திருமண உறவு பல விதங்களில் முறிந்துவிடும் நிலையில் உள்ளது. கணவனும் மனைவியும் கடவுள் தங்கள் மீது காட்டுகின்ற அன்பின் அடிப்படையில் ஒருவர் ஒருவரை ஏற்கும்போது திருமண அன்பு நிலைத்துநிற்கும். மாறாக, தன்னலப் போக்கு குடும்பத்தின் உள்ளே நுழைந்துவிட்டால் குடும்ப உறவும் அதன் அடிப்படையான திருமண ஒன்றிப்பும் ஆபத்துக்கு உள்ளாகக் கூடும். ஆனால் கடவுளின் விருப்பம் யாதென இயேசு தெளிவாகக் கற்பிக்கிறார். கிறிஸ்துவில் நம்பிக்கை கொள்வோர் அனைவரும் திருமண மற்றும் குடும்ப உறவும் ஒற்றுமையும் இன்றைய உலகில் தழைத்தோங்க வேண்டும் என்னும் குறிக்கோளை அடைய உழைத்திட வேண்டும்.

மன்றாட்டு:
இறைவா, உம் அன்புப் பெருக்கை உணர்ந்து நாங்கள் வாழ்ந்திட அருள்தாரும்.
-->