பொதுக்காலம் 26 வது - ஞாயிறு

இரண்டாம் ஆண்டு 30-09-2012


'இயேசுவின் கடிந்துரை ....

 இயேசு, 'நமக்கு எதிராக இராதவர் நமக்குச் சார்பாக இருக்கிறார்' என்றார் />  இயேசு, 'நமக்கு எதிராக இராதவர் நமக்குச் சார்பாக இருக்கிறார்' என்றார்


திருப்பலி முன்னுரை


அன்புமிக்க சகோதர சகோதரிகளே!

இன்றைய நற்செய்தியில், யேசு, 'நமக்கு எதிராக யார் யாரெல்லாம் இல்லையோ அவர்களெல்லாம், நம்மை சார்ந்தவர்கள் " என்று கூறுகிறார். இறையரசில் நிறைய ஆச்சரியங்கள் காத்திருக்கிறது. மக்களோடு பழகுவதில், அவர்கள் எண்ணங்கள் , நம்மிடம் அனுகுவது பற்றி பல ஆச்சரியங்கள் காத்திருக்கிறது.

அன்புமிக்க சகோதர சகோதரிகளே! தமது திருப் பெயரின் வல்லமையால் நம்மைக்காப்பாற்றும் விண்ணகத் தந்தையின் திருப்பெயரால் நல்வாழ்த்துக்கள் கூறி இத் திருப்பலிக் கொண்டாட்டத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கின்றோம்.

பொதுக்காலத்தின் இருபத்தாறாம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். நமது பாவ இயல்புகளைக் களைந்துவிட்டு கடவுளுக்கு உரியவர்களாக வாழ இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. உண்மை கடவுளை அறிந்துகொள்ளாத மற்றவர்கள் முன்னிலையில், கடவுளுக்கு சான்று பகர்பவர்களாக வாழவும், கிறிஸ்துவின் பெயரால் நற்செயல் புரிவோரை ஏற்றுக்கொள்ளவும் நாம் அழைக்கப்படுகிறோம். நமது உடல் உறுப்புகளைக் கொண்டு பாவம் செய்வதை விட, அவற்றை வெட்டி எரிந்துவிடுவதே நல்லது என்ற கடுமையான வார்த்தைகள் இயேசுவின் வாயில் இருந்து புறப்படுவதை இன்றைய நற்செய்தியில் காண்கிறோம். ஆண்டவரின் ஆவியைப் பெற்றவர்களாய், புனிதமான வாழ்வு வாழும் வரம் வேண்டி, இந்த திருப்பலியில் பங்கேற்போம்.

முதல் வாசகம்


எண்ணிக்கை நூலிலிருந்து வாசகம் 11: 25-29

அந்நாள்களில் ஆண்டவர் மேகத்தில் இறங்கி வந்து மோசேயோடு பேசினார்; அவரில் இருந்த ஆவியில் கொஞ்சம் எடுத்து எழுபது மூப்பருக்கு அளித்தார்; ஆவி அவர்கள் மேல் இறங்கவே அவர்கள் இறைவாக்கு உரைத்தனர்; அதன் பின்னர் அவர்கள் அப்படிச் செய்யவில்லை. இரண்டு மனிதர் பாளையத்திலேயே தங்கி விட்டனர்; ஒருவன் பெயர் எல்தாது, மற்றவன் பெயர் மேதாது. அவர்கள்மீதும் ஆவி இறங்கியது; பதிவு செய்யப்பட்டவர்களில் இவர்களும் உண்டு; ஆனால் அவர்கள் கூடாரத்துக்குச் சென்றிருக்கவில்லை. ஆகவே அவர்கள் பாளையத்திலேயே இறைவாக்கு உரைத்தனர். ஓர் இளைஞன் ஓடி வந்து மோசேயிடம், ``எல்தாதும் மேதாதும் பாளையத்தில் இறைவாக்கு உரைக்கின்றனர்'' என்று சொன்னான். உடனே தேர்ந்தெடுக்கப்பட்டோரில் ஒருவரும் மோசேயின் ஊழியரும் நூனின் மைந்தருமான யோசுவா, ``மோசே! என் தலைவரே! அவர்களைத் தடுத்து நிறுத்தும்'' என்றார். ஆனால் மோசே அவரிடம், ``என்னை முன்னிட்டு நீ பொறாமைப்படுகிறாயா? ஆண்டவரின் மக்கள் அனைவருமே இறைவாக்கினராகும்படி ஆண்டவர் அவர்களுக்குத் தம் ஆவியை அளிப்பது எத்துணைச் சிறப்பு!'' என்றார். பின் மோசேயும் இஸ்ரயேலின் மூப்பரும் பாளையத்துக்குத் திரும்பினர்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றிபதிலுரைப் பாடல்


திருப்பாடல்: 19: 7,9. 11-12. 13 (பல்லவி: 8a)

பல்லவி: ஆண்டவரின் நியமங்கள் சரியானவை; இதயத்தை மகிழ்விக்கின்றன.

பல்லவி

7 ஆண்டவரின் திருச்சட்டம் நிறைவானது; அது புத்துயிர் அளிக்கின்றது. ஆண்டவரின் ஒழுங்குமுறை நம்பத்தக்கது; எளியவருக்கு அது ஞானம் அளிக்கின்றது. 9 ஆண்டவரைப் பற்றிய அச்சம் தூயது; அது எந்நாளும் நிலைத்திருக்கும். ஆண்டவரின் நீதிநெறிகள் உண்மையானவை; அவை முற்றிலும் நீதியானவை. பல்லவி

11 அவற்றால் அடியேன் எச்சரிக்கப்படுகின்றேன். அவற்றைக் கடைப்பிடிப்போருக்கு மிகுந்த பரிசுண்டு. 12 தம் தவறுகளை உணர்ந்து கொள்பவர் யார்தாம்? என் அறியாப் பிழைக்காக என்னை மன்னியும். பல்லவி

13 ஆணவமிக்கோரிடமிருந்து உம் அடியானைக் காத்தருளும். அவர்கள் என்னை ஆட்டிப் படைக்காதிருக்கட்டும்; அப்பொழுது, நான் மாசற்றிருப்பேன்; பெரும்பிழை எதையும் செய்யாதிருப்பேன். பல்லவிஇரண்டாம் வாசகம்திருத்தூதர் யாக்கோபு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 5: 1-6

செல்வர்களே, சற்றுக் கேளுங்கள். உங்களுக்கு வரப்போகும் இழிநிலையை நினைத்து அலறி அழுங்கள். உங்கள் செல்வம் மக்கிப் போயிற்று. உங்கள் ஆடைகள் பூச்சிகளினால் அரிக்கப்பட்டுவிட்டன. உங்கள் பொன்னும் வெள்ளியும் துருப்பிடித்துவிட்டன. அந்தத் துருவே உங்களுக்கு எதிர்ச் சான்றாக இருக்கும்; அது நெருப்புப் போல உங்கள் சதையை அழித்துவிடும். இந்த இறுதி நாள்களில் செல்வத்தைக் குவித்து வைத்திருக்கின்றீர்களே! உங்கள் வயலில் அறுவடை செய்த வேலையாள்களுக்குரிய கூலியைப் பிடித்துக் கொண்டீர்கள்; அது கூக்குரலிடுகிறது. அறுவடை செய்தவர்களின் கூக்குரல் படைகளின் ஆண்டவருடைய செவிக்கு எட்டியுள்ளது. இவ்வுலகில் ஆடம்பரமாகவும் இன்பமாகவும் வாழ்ந்தீர்கள். கொல்லப்படும் நாளுக்காக உங்கள் உள்ளங்களைக் கொழுக்க வைத்தீர்கள். நேர்மையானவரைக் குற்றவாளி எனத் தீர்ப்பளித்துக் கொலை செய்தீர்கள். ஆனால் அவர் உங்களை எதிர்த்து நிற்கவில்லை.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றிநற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


யோவா 17: 17b, - அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரே, உமது வார்த்தையே உண்மை. உண்மையினால் எங்களை உமக்கு அர்ப்பணமாக்கியருளும். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்நற்செய்திக்கு முன் வசனம்

நமக்கு எதிராக இராதவர் நம் சார்பாக இருக்கிறார்.


மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 38-48

38 அக்காலத்தில் யோவான் இயேசுவிடம், "போதகரே , ஒருவர் உமது பெயரால் பேய்கள் ஓட்டுவதைக் கண்டு, நாங்கள் அவரைத் தடுக்கப் பார்த்தோம். ஏனெனில் அவர் நம்மைச் சாராதவர்" என்றார். 39 அதற்கு இயேசு கூறியது; "தடுக்க வேண்டாம். ஏனெனில் என் பெயரால் வல்லசெயல் புரிபவர் அவ்வளவு எளிதாக என்னைக் குறித்து இகழ்ந்து பேச மாட்டார். 40 ஏனெனில் நமக்கு எதிராக இராதவர் நம் சார்பாக இருக்கிறார். 41 நீங்கள் கிறிஸ்துவைச் சார்ந்தவர்கள் என்பதால் உங்களுக்கு ஒரு கிண்ணம் தண்ணீர் கொடுப்பவர் கைம்மாறு பெறாமல் போகார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்." 42 "என்மீது நம்பிக்கைகொண்டுள்ள இச்சிறியோருள் எவரையாவது பாவத்தில் விழச் செய்வோருடைய கழுத்தில் ஓர் எந்திரக் கல்லைக் கட்டி, கடலில் தள்ளிவிடுவதே அவர்களுக்கு நல்லது. 43 உங்கள் கை உங்களைப் பாவத்தில் விழச் செய்தால் அதை வெட்டி விடுங்கள். நீங்கள் இரு கையுடையவராய் அணையாத நெருப்புள்ள நரகத்துக்குள் தள்ளப்படுவதைவிட, கை ஊனமுற்றவராய் நிலைவாழ்வில் புகுவது உங்களுக்கு நல்லது. 44 உங்கள் கால் உங்களைப் பாவத்தில் விழச் செய்தால் அதை வெட்டி விடுங்கள். 45 நீங்கள் இரு காலுடையவராய் நரகத்தில் தள்ளப்படுவதைவிட கால் ஊனமுற்றவராய் வாழ்வில் புகுவது உங்களுக்கு நல்லது. 46 உங்கள் கண் உங்களைப் பாவத்தில் விழச் செய்தால், அதைப் பிடுங்கி எறிந்து விடுங்கள். 47 நீங்கள் இரு கண்ணுடையவராய் நரகத்தில் தள்ளப்படுவதைவிட ஒற்றைக் கண்ணராய் இறையாட்சிக்கு உட்படுவது உங்களுக்கு நல்லது. 48 நரகத்திலோ அவர்களைத் தின்னும் புழு சாகாது; நெருப்பும் அவியாது.


- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.இறைமக்களின் வேண்டல்கள்:


இறையருளும் மனித முயற்சியும் சேர்ந்து செல்லுகின்ற போது அற்புதங்களைக் காண முடியும். நாம் செய்ய வேண்டிய கடமைகளை இறைவனிடம் தள்ளிப் போடுவது உண்மையான அர்ப்பணத்திலிருந்து தப்பித்துக் கொள்வதாகும். ஆன்மீகம் என்ற போர்வையில் சோம்பேறித்தனத்தை வளர்ப்பதற்கு இயேசு கிறிஸ்து உடன்படுவதில்லை. வெளிப்படையாக ஆன்மீகத்தை வாழாது, நேரிய வழியில் நடக்கின்ற மனிதன் மறைமுகமாக கடவுளுக்கு சான்று பகர்கின்றான்.

பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைத் தயவாய் கேட்டருளும்.

அன்புத் தந்தையே இறைவா!

எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவிகள், அனைவருக்காகவும் மன்றாடுகின்றோம்: அவர்கள் தலைசிறந்த பணியாளர்களாகவும், அமைதியை ஏற்படுத்துவோராகவும், அனைவருக்கும் ஆறுதலாகவும், ஆசீர்வாதமாகவும் செயற்படுவதற்கும் வேண்டிய ஆற்றலையும், ஞானத்தையும் அவர்களுக்கு அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

தாழ்ந்தோரை உயர்த்தும் இறைவா,

உம்மைப் போற்றுகிறேன். தாழ்நிலை நின்ற அடியார்கள் பலரையும் நீர் உயர்த்தி, தலைமைப் பொறுப்பில் அமர்த்திப் பெருமைப்படுத்தியிருக்கிறீர். அதற்காக உம்மைப் புகழ்கிறேன். சிறியோர் எவரையும் உம் பெயரால் தலைவர்களாக ஏற்கின்ற நல்ல மனதை எங்களுக்குத் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

வாழ்வளிக்கும் நல்ல தந்தையே இறைவா!

உம்மால் உருவாக்கப்பட்ட குடும்ப உறவும், அழைப்பும் சவால்களுக்குள் அகப்பட்டுக் கிடக்கும் இவ்வேளையில், ஒவ்வொரு குடும்பத்திலுமுள்ள கணவனும் - மனைவியும் தங்கள் அழைப்பின் உட்பொருளை ஆழமாக உணர்ந்து, உறவுடனும் - ஒற்றுமையுடனும் வாழ அருள் கூர்ந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

நம்பிக்கை தருபவராம் இறைவா,

பிறர் மட்டில் யாதொரு வேறுபாடும் காட்டாமல் அன்போடு அவர்களை ஏற்றிட எங்களுக்கு அருள்தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

அன்புத் தந்தையே இறைவா,

உம்மைப் போற்றுகிறோம். உமது திருமகனின் மாதிரியைப் பின்பற்றி, நாங்களும் நம்பிக்கையுடனும், தூய ஆவியாரின் துணையுடனும் உம்மை நோக்கி மன்றாடும் அருளை எங்களுக்கு அருள்தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

”தூய்மையின் நிறைவாம் இறைவா,

குறைகளை களைந்து நிறைவான வாழ்வு வாழ்வதுவே வாழ்வின் லட்சியம் என்பதனை உணர்ந்து, அதனை மெசியாவாலேயே தந்திட முடியும் என்று உணர்ந்து வாழ அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

“ஒடுக்கப்பட்டோர் மீண்டும் ஆண்டவரில் மகிழ்ச்சி பெறுவர்” என்று திருவாய் மொழிந்த கடவுளே.

உரிமைகள் இழந்து நாம் இன்று வேடர் கண்ணியின்று தப்பிப் பிழைத்த பறவைபோல் ஆனோம். அதிகார வாதிகளால் அலைக்களிக்கப் படுகின்றோம். ஒடுக்கப்பட்ட ஒரினமாக நாம் தவிக்கின்றோம் ஏறெடுத்துப் பார்க்க யாருமின்றி, ஏக்கங்கள் மத்தியில் ஏன் இந்த வாழ்க்கை என எம் இதயம் கேட்கிறது. எனினும் எம் வாழ்விற்கு ஒளி தரும் விடிவெள்ளியாக உம்மையே எண்ணி வருகின்றோம் எம் ஏக்கங்களை துடைத்தருளும் எம் தவிப்புக்களை மகிழ்வாக்கியருளும். இவற்றினூடாக நாம் நிரந்தர நிம்மதியான வாழ்வை கண்டடைய வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
சிந்தனை


நமக்கு எதிராக இராதவர் நம் சார்பாக இருக்கிறார்.

இன்றைய நற்செய்தியில், யேசு, 'நமக்கு எதிராக யார் யாரெல்லாம் இல்லையோ அவர்களெல்லாம், நம்மை சார்ந்தவர்கள் " என்று கூறுகிறார். இறையரசில் நிறைய ஆச்சரியங்கள் காத்திருக்கிறது. மக்களோடு பழகுவதில், அவர்கள் எண்ணங்கள் , நம்மிடம் அனுகுவது பற்றி பல ஆச்சரியங்கள் காத்திருக்கிறது. சில நேரங்களில், ஒரு சிலர் நமக்கு எதிராக இருக்கின்றனர் என்று நாம் நினைப்போம், ஆனால், உண்மையில் அவர்கள் அது மாதிரியான எண்ணத்தில் இல்லாமல் இருப்பார்கள். எடுத்து காட்டாக , சிலர் ஒரு சில உண்மைகளை ,நம்மிடம் சொல்லும்போது, நமக்கு பிடிக்காத விசயமாக இருந்தால், அவர்களை நம் எதிரி போல் பார்க்கிறோம், ஆனால், அவர்கள் கடவுளின் தூதர்கள் மற்றும் தீர்க்கதரிசி ஆவர். வேறு சில நேரங்களில், பலர் அவர்களின் தேவைகளுக்காக, நம்மோடு சேர்ந்து இருப்பது போல் இருப்பார்கள், கடவுள் நம்மை எதற்காக தேர்ந்தெடுத்தாரோ, நம்மை என்ன செய்ய சொல்கிறாரோ , அதனை செய்ய அவர்கள் நமக்கு உதவுவதில்லை. சில சமயம் இறைபணி செய்பவர்கள், நாம் எதிர்பார்ப்பது போல் அவர்கள் இறைபணி செய்வதில்லை. அதனால், கடவுள் என்ன செய்ய சொல்கிறாரோ, அதனை அவர்கள் செய்யவில்லை என நாமாக தீர்மானித்து கொள்கிறோம். நீங்கள் யாரையாவது உங்கள் கருத்துகளுக்காக ஆண்டவரிடம் வேண்டிகொள்ள சொல்லி, அவர்கள் அந்த கருத்துக்கு எதிராக வேண்டி கொண்டார்களா? இது மாதிரியான அனுபவம் உங்களுக்கு ஏற்பட்டது உண்டா? பல வருடங்களுக்கு முன், எனது கணவர் கம்பெனியில் ஆள்குறைப்பு நடந்தது, நிறைய பேர் வேலையிழந்தனர். எனது நண்பர் ஒருவரிடம், எனது கணவருக்கு வேலை போகக்கூடாது என்று இறைவனிடம் எங்களுக்காக வேண்டி கொள்ளச் சொன்னேன், ஆனால், அவளோ அந்த கம்பெனி நல்ல நிலைமைக்கு வரவேண்டும், அதனால், எனது கணவர் வேலை நிரந்தரமாக இருக்கும் என வேண்டிகொண்டாள். ஆனால் எனது எதிர்பார்ப்போ, எனது கணவருக்கு நல்ல கம்பெனியில் வேலை கிடைக்க வேண்டும் என்று நினைத்தேன். அவளுடைய ஜெபம் எனக்கு பிடிக்கவில்லை. இறுதியில், அந்த நண்பர் மட்டும் தான் கடவுள் என்ன நினைத்தாரோ, அதையே வேண்டிகொண்டாள். நம் நண்பர்களோ அல்லது தெரிந்தவர்களோ நமக்கு நல்லது செய்கிறார்களோ அல்லது நமக்கு எதிரான வேலைகளில் ஈடுபடுகிறார்களா? அல்லது கடவுளின் தூதர்களா? என்று தெரிந்து கொள்வதற்கு, நம்முடைய பிரச்சினைகளை ஒதுக்கி , நமது கோப தாபங்களை தள்ளி, யேசுவோடு தனிமையில் அமர்ந்து அவரிடம் கேட்டு அறிந்து கொள்ள வேண்டும். நமது பயத்தை , கோபத்தை கடவுளிடம் கொடுத்து விட்டு, நமக்கு எதிரானவர்களை மன்னித்து, இறைபணிக்காக நம்மை தயார் படுத்தி கொள்ள வேண்டும். மேலும், உண்மையாகவே சிலர் உங்களுக்கு எதிராக இருந்தால், ஜெபத்தில், நாம் தனியாக உட்கார்ந்து, ஞானத்தையும், அறிவையும், பரிசுத்த ஆவியிடம் கேட்டு, கடவுள் நம்மோடு இருக்கிறார் என்பதை நாம் முதன்மைபடுத்த வேண்டும். அவர் நமக்கு உற்சாகத்தையும், சக்தியையும் கொடுத்து நமது பிரச்சினைகளை தாண்டி வர உதவி செய்வார்.

மன்றாட்டு:
இறைவா, உம் திருமகன் இயேசுவை ஆழமாக அறிந்திட எங்களுக்கு அருள்தாரும்.
-->