பொதுக்காலம் 25 வது - ஞாயிறு

இரண்டாம் ஆண்டு 23-09-2012


'எதைப் பற்றி வாதாடிக்கொண்டிருந்தீர்கள் ?

 ஒருவர் முதல்வராக இருக்க விரும்பினால் அவர் அனைவரிலும் கடைசியானவராக இருக்கட்டும்./>


திருப்பலி முன்னுரை


அன்புமிக்க சகோதர சகோதரிகளே!

நாம் மன்றாடும் நாளில் நமக்குச் செவி சாய்க்கும் விண்ணகத் தந்தையின் திருப்பெயரால் நல்வாழ்த்துக்கள் கூறி இத்திருப்பலிக் கொண்டாட்டத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கின்றோம். இன்று பொதுக்காலத்தின் 25 ஆம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

குடும்பங்களில், குழுக்களில், பணித்தளங்களில், ஏன் எங்கெல்லாம் மனிதர்கள் ஒன்று கூடுகிறார்களோ, அங்கெல்லாம் உரையாடல்கள் நடைபெறுகின்றன. அவற்றில் சில முறைகள் வாதாட்டமும், சொற்போரும் நிகழுகின்றன. இது இயல்புதான். ஆனால், இந்த வாதாடுதலும், சொற்போர்களும் எதை மையம் கொண்டிருக்கின்றன என்பதுதான் அந்தக் குழுமங்களின், குடும்பங்களின், கூட்டங்களின் தராதரத்தை எடுத்துக்காட்டுகின்றன. வருத்தமூட்டும் வகையில், இயேசுவின் சீடர்கள் வாதாடிக்கொண்டு வந்தது தங்களுக்குள் யார் பெரியவர்? என்பது பற்றி. அவர்களின் தாழ்வான மனநிலையை வெள்ளிடை மலையாகக் காட்டிவிடுகிறது இந்த நிகழ்வு. இயேசு அவர்களின் தவறைச் சுட்டிக்காட்டுகிறார், திருத்துகிறார். உண்மையிலே பெரியவர் யார் என்பது பற்றிய புதிய விளக்கத்தை அளிக்கின்றார். நமது உரையாடல்களைச் சற்றே ஆய்வு செய்வோமா? நாம் உணவு உண்ணும் நேரங்களில், பொழுதுபோக்காகப் பேசிக்கொண்டிருக்கும் வேளைகளில் எதைப் பற்றி வாதாடுகிறோம் என்பதைப் பற்றித் தன்னுணர்வு கொள்ளவும், வாதாட்டு மையப் பொருள்களை மாற்றி அமைக்கவும் இன்றைய நற்செய்தி வாசகம் அழைப்பு விடுக்கிறது. இனிமேலாவது, தனி நபர்களின் நிறை, குறைகள் பற்றியோ, பதவி, பெருமைகள் பற்றியோ வாதாடுவதைத் தவிர்ப்போம். வாதாடுதல் பல வேளைகளில் உறவு முறிவுக்கே இட்டுச்செல்கிறது என்பதையும் மனதில் கொள்வோம். தேவையிருந்தால், மனித மாண்பை, உரிமைகளை உயர்த்திப் பிடிக்கும் வகையில் நம் சொற்போர்கள் அமையட்டும். இல்லாவிட்டால், அமைதி காப்பதே நலம். தொடரும் திருப்பலியில் மன்றாடுவோம்.

முதல் வாசகம்


சாலமோனின் ஞான நூலிலிருந்து வாசகம் 2: 17-20

பொல்லாதவர்கள் தங்களுக்குள் சொல்லிக் கொள்வதாவது: `நீதிமான்களுடைய சொற்கள் உண்மையா எனக் கண்டறிவோம்; முடிவில் அவர்களுக்கு என்ன நிகழும் என ஆய்ந்தறிவோம். நீதிமான்கள் கடவுளின் மக்கள் என்றால், அவர் அவர்களுக்கு உதவி செய்வார்; பகைவரிடமிருந்து அவர்களை விடுவிப்பார். அவர்களது கனிவினைக் கண்டு கொள்ளவும், பொறுமையை ஆய்ந்தறியவும், வசைமொழி கூறியும் துன்புறுத்தியும் அவர்களைச் சோதித்தறிவோம். இழிவான சாவுக்கு அவர்களைத் தீர்ப்பிடுவோம்; ஏனெனில் தங்கள் வாய்மொழிப்படி அவர்கள் பாதுகாப்புப் பெறுவார்கள்.'

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்


திருப்பாடல்: 54: 1-2. 3. 4,6 (பல்லவி: 4b)

பல்லவி: என் தலைவர் என் வாழ்வுக்கு ஆதரவாய் உள்ளோருடன் இருக்கின்றார்.

பல்லவி

1 கடவுளே, உமது பெயரின் வல்லமையால் என்னைக் காப்பாற்றும்; உமது ஆற்றலினால் எனது நேர்மையை நிலைநாட்டும். 2 கடவுளே, என் விண்ணப்பத்தைக் கேட்டருளும்; என் வாயின் சொற்களுக்குச் செவிகொடுத்தருளும். பல்லவி

3 ஏனெனில், செருக்குற்றோர் எனக்கு எதிராய் எழுந்துள்ளனர்; கொடியவர் என் உயிரைப் பறிக்கப் பார்க்கின்றனர்; அவர்கள் கடவுளை அறவே நினைப்பதில்லை. பல்லவி

4 இதோ! கடவுள் எனக்குத் துணைவராய் இருக்கின்றார்; என் தலைவர் என் வாழ்வுக்கு ஆதரவாய் உள்ளோருடன் இருக்கின்றார்; 6 தன்னார்வத்தோடு உமக்குப் பலி செலுத்துவேன்; ஆண்டவரே உமது பெயருக்கு நன்றி செலுத்துவேன்; இதுவே நன்று. பல்லவி



இரண்டாம் வாசகம்



திருத்தூதர் யாக்கோபு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 3: 16 - 4: 3

அன்பிற்குரியவர்களே, பொறாமையும் கட்சி மனப்பான்மையும் உள்ள இடத்தில் குழப்பமும் எல்லாக் கொடுஞ்செயல்களும் நடக்கும். விண்ணிலிருந்து வரும் ஞானத்தின் தலையாய பண்பு அதன் தூய்மையாகும். மேலும் அது அமைதியை நாடும்; பொறுமை கொள்ளும்; இணங்கிப் போகும் தன்மையுடையது; இரக்கமும் நற்செயல்களும் நிறைந்தது; நடுநிலை தவறாதது; வெளிவேடமற்றது. அமைதி ஏற்படுத்துவோர் விதைத்த அமைதி என்னும் விதையிலிருந்து நீதியென்னும் கனி விளைகிறது. உங்களிடையே சண்டை சச்சரவுகள் ஏற்படக் காரணமென்ன? உங்களுக்குள்ளே போராடிக் கொண்டிருக்கும் சிற்றின்ப நாட்டங்கள் அல்லவா? நீங்கள் ஆசைப்படுவது கிடைக்காததால் கொலை செய்கிறீர்கள்; பேராசை கொள்கிறீர்கள்; அதைப் பெற முடியாததால் சண்டை சச்சரவுகள் உண்டாக்குகிறீர்கள். அதை நீங்கள் ஏன் பெறமுடிவதில்லை? நீங்கள் கடவுளிடம் கேட்பதில்லை. நீங்கள் கேட்டாலும் ஏன் அடைவதில்லை? ஏனெனில் நீங்கள் தீய எண்ணத்தோடு கேட்கிறீர்கள்; சிற்றின்ப நாட்டங்களை நிறைவேற்றவே கேட்கிறீர்கள்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


2 தெச 2: 14 - அல்லேலூயா, அல்லேலூயா! நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மாட்சியை நீங்கள் அடையும் பொருட்டே, நாங்கள் அறிவித்த நற்செய்தியின் வழியாக அவர் உங்களை அழைத்தார். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்



நற்செய்திக்கு முன் வசனம்

ஒருவர் முதல்வராக இருக்க விரும்பினால் அவர் அனைவரிலும் கடைசியானவராக இருக்கட்டும்.


மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 30-37

அக்காலத்தில் இயேசுவும் அவருடைய சீடர்களும் புறப்பட்டுக் கலிலேயா வழியாகச் சென்றார்கள். அது யாருக்கும் தெரியக்கூடாது என்று இயேசு விரும்பினார். ஏனெனில், ``மானிட மகன் மக்களின் கையில் ஒப்புவிக்கப்பட இருக்கிறார்; அவர்கள் அவரைக் கொலை செய்வார்கள். கொல்லப்பட்ட மூன்று நாள்களுக்குப் பின் அவர் உயிர்த்தெழுவார்'' என்று அவர் தம் சீடருக்குக் கற்பித்துக் கொண்டிருந்தார். அவர் சொன்னது அவர்களுக்கு விளங்கவில்லை. அவரிடம் விளக்கம் கேட்கவும் அவர்கள் அஞ்சினார்கள். அவர்கள் கப்பர்நாகுமுக்கு வந்தார்கள். அவர்கள் வீட்டில் இருந்த பொழுது இயேசு, ``வழியில் நீங்கள் எதைப் பற்றி வாதாடிக் கொண்டிருந்தீர்கள்?'' என்று அவர்களிடம் கேட்டார். அவர்கள் பேசாதிருந்தார்கள். ஏனெனில் தங்களுள் பெரியவர் யார் என்பதைப் பற்றி வழியில் ஒருவரோடு ஒருவர் வாதாடிக்கொண்டு வந்தார்கள். அப்பொழுது அவர் அமர்ந்து, பன்னிருவரையும் கூப்பிட்டு, அவர்களிடம், ``ஒருவர் முதல்வராக இருக்க விரும்பினால் அவர் அனைவரிலும் கடைசியானவராகவும் அனைவருக்கும் தொண்டராகவும் இருக்கட்டும்'' என்றார். பிறகு அவர் ஒரு சிறு பிள்ளையை எடுத்து, அவர்கள் நடுவே நிறுத்தி, அதை அரவணைத்துக் கொண்டு, ``இத்தகைய சிறுபிள்ளைகளுள் ஒன்றை என் பெயரால் ஏற்றுக்கொள்பவர் எவரும் என்னையே ஏற்றுக் கொள்கிறார். என்னை ஏற்றுக்கொள்பவர் என்னை மட்டும் அல்ல, என்னை அனுப்பினவரையே ஏற்றுக்கொள்கிறார்'' என்றார்.


- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.



இறைமக்களின் வேண்டல்கள்:


மன்னா உண்ட முன்னோர் எல்லாம் மடிந்து போயினர். இயேசு தரும் உணவை உண்பவரும் மடிந்து போவார்கள். ஆனால் இந்த உலகத்தில் அவர்கள் வாழ்வு முடியலாம், மறுவுலகத்தில் அவர்கள் வாழ்வு தொடரும். காரணம் இறையாட்சி என்கின்ற இலக்கை அவர்கள் கண்டடைவார்கள். மன்னா உண்டவர்கள் அவர்கள் அடைய வேண்டிய கானான் தேசம் என்னும் இலக்கை கண்டடையாமல் மடிந்து போனார்கள். இயேசுவை உண்பவர்கள் இறையாட்சி என்னும் இலக்கை கண்டடைவார்கள்.

பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைத் தயவாய் கேட்டருளும்.

மீட்பு அளிப்பவராம் இறைவா,

உம் திருமகனின் சிலுவைப்பாதையைப் பின்பற்றி உலகில் நீதியையும், அமைதியை யும் நிலைநாட்டுபவர்களாக வாழும் வரத்தை, எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவருக்கும் அளித்து, உமது திருச்சபையை மீட்பின் பாதையில் வழி நடத்த வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

பொல்லாரின் வழிமுறைகளைக் கவிழ்த்து விடுகின்ற தந்தையே!

உலகில் பிரச்சனைகளைத் தோற்றுவிக்கும் வன்முறையாளர்கள், மற்றும் தலைவர்கள் உண்மையினதும், நீதியினதும் வழிக்குத் திரும்பி அமைதியை ஏற்படுத்துவோராகச் செயற்பட அவர்களை மாற்றியமைத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

வாழ்வின் நிறைவே இறைவா,

வாழ்வு என்னும் கொடைக்காக உமக்கு நன்றி கூறுகிறேன். இந்த வாழ்வும், நீர் தந்த பணியும் உமக்கு உகந்ததாக இருக்கின்றனவா என்று என்னையே ஆய்வு செய்துகொள்ள நீர் தருகின்ற இந்த அழைப்புக்காக உமக்கு நன்றி கூறுகிறேன். வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் தனித்திருக்கவும், உம்மோடு உரையாடி அதன் வழியாக எனது வாழ்வையும், பணியையும் ஆய்வுக்கு உட்படுத்தவும் எனக்குத் தூய ஆவியின் ஞானத்தை நிறைவாகத் அளித்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

“என்னிடம் வருபவரை நான் புறம்பே தள்ளிவிடமாட்டேன்” என்று திருவாய் மொழிந்த இயேசுவே

இன்றைய நிகழ்காலப் பேரழிவுகளால் பெரும் துயருற்று எதிர் கால ஏக்கங்களை உள்ளங்களில் சுமந்துகொண்டு வீங்கிய இதயத்துடன் விரக்தியின் விழிம்பில் இருந்து கொண்டு கற்பனைகளையும் கனவுகளையும் காற்றிலே பறக்க விட்டு வாடி நிற்கும் எம் இளைஞர்களை ஒருகணம் கண்நோக்கிபாரும். ஆண்டவரே நாம் உம்மையே நாடி வருகின்றோம். எம் ஏக்கங்களை துடைத்தருளும் எம் விரக்திகளை மகிழ்வாக்கியருளும் எம் கனவுகளை கனிகளாக்கியருளும் கடவுளே என்றும் உம்; பணியில் எம் கால்கள் நடந்து வாழ்வை கண்டடைய வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

அன்புத் தந்தையே இறைவா,

நாங்கள் தாழ்ச்சியும் பணிவும் கொண்ட உள்ளத்தோடு உம்மை அணுகிவர எங்களுக்கு அருள்தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

”தாழ்ச்சியின் நாயகனே இயேசுவே,

யார் பெரியவர் என்று வாதாடிக்கொண்டு வந்த சீடர்களுக்கு உண்மையை உணர்த்தியதற்காக உம்மைப் போற்றுகிறோம். எங்கள் உரையாடல்களில் எங்கள் பெருமையை, உயர்வைத் தேடாமல், பிறருக்குத் தொண்டாற்றும் மனநிலையை எங்களுக்குத் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

“ஒடுக்கப்பட்டோர் மீண்டும் ஆண்டவரில் மகிழ்ச்சி பெறுவர்” என்று திருவாய் மொழிந்த கடவுளே.

உரிமைகள் இழந்து நாம் இன்று வேடர் கண்ணியின்று தப்பிப் பிழைத்த பறவைபோல் ஆனோம். அதிகார வாதிகளால் அலைக்களிக்கப் படுகின்றோம். ஒடுக்கப்பட்ட ஒரினமாக நாம் தவிக்கின்றோம் ஏறெடுத்துப் பார்க்க யாருமின்றி, ஏக்கங்கள் மத்தியில் ஏன் இந்த வாழ்க்கை என எம் இதயம் கேட்கிறது. எனினும் எம் வாழ்விற்கு ஒளி தரும் விடிவெள்ளியாக உம்மையே எண்ணி வருகின்றோம் எம் ஏக்கங்களை துடைத்தருளும் எம் தவிப்புக்களை மகிழ்வாக்கியருளும். இவற்றினூடாக நாம் நிரந்தர நிம்மதியான வாழ்வை கண்டடைய வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.




சிந்தனை


''பிறகு இயேசு ஒரு சிறு பிள்ளையை எடுத்து, அவர்கள் நடுவே நிறுத்தி, அதை அரவணைத்துக் கொண்டு, 'இத்தகைய சிறுபிள்ளைகளுள் ஒன்றை என் பெயரால் ஏற்றுக்கொள்பவர் எவரும் என்னையே ஏற்றுக்கொள்கிறார்...' என்றார்'' (மாற்கு 9:36-37)

-- கிறிஸ்தவ நம்பிக்கையைத் தம் வாழ்வில் கடைப்பிடித்து, அதைப் பிறருக்கு அறிவிக்கின்ற மனிதர்கள் துன்பங்களையும் எதிர்ப்புகளையும் சந்திக்க வேண்டியிருக்கும் என்பது வரலாறு கூறும் உண்மை. இயேசுவே துன்பங்களை எதிர்கொண்டார்; சாவுக்குத் தீர்ப்பிடப்பட்டார். ஆயினும், இயேசு தாம் துன்பங்கள் அனுபவிக்க வேண்டும் என்று கூறியது அவருடைய சீடர்களுக்குப் புரியாத புதிராகவே இருந்தது. மாற்கு நற்செய்தியில் இயேசு தாம் கொல்லப்படப் போவதை ஒருமுறையல்ல, இருமுறையல்ல, மூன்று முறை முன்னறிவித்தார் எனக் காண்கிறோம் (காண்க: மாற் 8:31-38; 9:30-32; 10:32-34). ஆனாலும் அவருடைய சீடர்கள் ''துன்புறும் மெசியா''வை ஏற்க மறுத்தார்கள். அவர்களுடைய பார்வையில் இயேசு அதிகாரத்தோடு போதித்து, இஸ்ரயேல் மக்களை அடிமைநிலையிலிருந்து விடுவித்து, அவர்களைச் சுதந்திர மக்களாக்கி ஆட்சி செய்வார்; மகிமை மிகுந்த அவரது ஆட்சியில் தங்களுக்கும் அதிகாரப் பொறுப்புகள் வழங்கப்படும் என இயேசுவின் சீடர்கள் கனவு கண்டார்கள். எனவே, இயேசு துன்புறப் போகிறாரே என்பது பற்றி எள்ளளவும் கவலைப்படாமல் சீடர்கள் மட்டும் ''தங்களுள் யார் பெரியவர்'' என்னும் வாதத்தில் ஈடுபட்டார்கள். -- அப்போது இயேசு சீடர்களுக்கு ஒரு முக்கியமான போதனையை வழங்குகிறார். ''இயேசு அமர்ந்து, பன்னிருவரையும் கூப்பிடுகிறார்''. பின் அவர்களைப் பார்த்து, அவர்கள் முதலிடங்களை நாடுவதற்குப் பதிலாக ''அனைவருக்கும் கடைசியானவராகவும் அனைவருக்கும் தொண்டராகவும்'' மாற வேண்டும் என்கிறார் (மாற் 9: 35). ''கடைசியானவர்'' எப்படி இருப்பார் என்பதை இயேசு ஒரு செயல் வழியாகக் காட்டுகிறார். அவர் ஒரு சிறு பிள்ளையை எடுத்து, சீடர் நடுவே நிறுத்துகிறார். அப்பிள்ளையை அன்போடு அரவணைக்கிறார். ''இத்தகைய சிறுபிள்ளைகளுள் ஒன்றை என் பெயரால் ஏற்றுக்கொள்பவர் எவரும் என்னையே ஏற்றுக்கொள்கிறார்'' எனக் கூறுகின்றார் (மாற் 9:37). சிறுபிள்ளைகள் அக்காலத்தில் தம் தந்தையரின் ''உடைமை'' எனக் கருதப்பட்டார்கள். சிறுபிள்ளைகளுக்கு உரிமைகள் கிடையாது; சமுதாயத்தில் மதிப்போ மரியாதையோ கிடையாது. அவர்கள் தங்கள் தேவைகளை நிறைவுசெய்ய பிறரைச் சார்ந்திருக்க வேண்டியிருந்தது. ஆக, சமுதாயத்தில் கடைநிலையில் இருந்த ''சிறு பிள்ளை'' போல யார் தம்மையே தாழ்த்தக்கொள்கிறார்களோ அவர்களே கடவுள் முன் பெரியவர்கள் ஆவர் என இயேசு போதிக்கிறார். மேலும் இயேசு தம்மையே அச்சிறு பிள்ளைக்கு ஒப்பிடுகிறார். சமுதயாத்தில் ஒதுக்கப்பட்ட மக்களை நாம் மதிப்போடும் மரியாதையோடும் நடத்தும்போது நாம் உண்மையிலேயே துன்புற்ற இயேசுவை ஏற்று மதிப்பளிக்கிறோம் என்பது ஓர் ஆழ்ந்த உண்மை. ஏழைகளின் மட்டில் தனிக் கவனம் செலுத்துவது கிறிஸ்தவ மரபு. அதைப் பின்பற்றி நாமும் பெருமையையும் செல்வத்தையும் தேடிச் செல்வதற்குப் பதிலாகக் கடவுளின் பார்வை கொண்டு செயல்பட வேண்டும். அப்போது சமுதாயத்தால் ஒதுக்கப்பட்டோரின் முகத்தைப் பார்க்கும்போது அங்கே இயேசுவையே நாம் காண்போம். ''இத்தகைய சிறுபிள்ளைகளுள் ஒன்றை என் பெயரால் ஏற்றுக்கொள்பவர் எவரும் என்னையே ஏற்றுக்கொள்கிறார்'' (மாற் 8:37) என்னும் இயேசுவின் சொற்கள் நாம் கடவுளின் பார்வையில் பெரியவர்களாக மாறுவதற்கான வழியைச் சுட்டிக்காட்டுகின்றன. மன மகிழ்வோடு பிறருக்குப் பணிசெய்வதே அந்த வழி.

மன்றாட்டு:
இறைவா, நாங்கள் தாழ்ச்சியும் பணிவும் கொண்ட உள்ளத்தோடு உம்மை அணுகிவர எங்களுக்கு அருள்தாரும்.
-->