பொதுக்காலம் 23 வது - ஞாயிறு

இரண்டாம் ஆண்டு 09-09-2012


'எப்பத்தா, திறக்கப்படு !

காது கேளாதோர் கேட்கவும் பேச்சற்றோர் பேசவும் செய்கிறாரே!/>


திருப்பலி முன்னுரை


பிரியமானவர்களே! இன்று பொதுக்காலம் 23 ஆம் ஞாயிறு.

விவிலிய மாதத்தில் வார்த்தைகள் நம் வாழ்வுக்கு உரமாகட்டும். வார்த்தையால் உறுதி பெறுவோம். வாழ்வை வளமாக்குவோம். பொதுக்காலத்தின் 23 ஆம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். பிரியமானவர்களே! எப்பத்தா” என்றார் இயேசு. காதுகள் திறக்கப்பட்டன. இதுதான் இன்றைய நற்செய்தி. கேட்காத காதுகளைக் கேட்க வைக்கிறார் இயேசு. இந்தப் புதுமையை நாள்தோறும் இயேசு ஆற்ற வேண்டும். ஏனெனில், காது கேட்காதோர் நம்மில் மிகப் பலர் இருக்கின்றோம். ஏழைகளின் அழுகுரல் கேட்காதோர் இருக்கின்றோம். “உதவி” என்று கோரும் அயலாரின் குரல் கேட்காதோர் இருக்கின்றோம். அன்பு செய்கிறோம் என்று சொல்லும் அன்பர்களின் குரலைக்கூடக் கேட்காமல் பலர் இருக்கின்றோம். நாள்தோறும் நம்முடன் பேசும் இறைவனின் குரலைக் கேட்காமல் பலர் இருக்கின்றோம். “என்னைக் காப்பாற்றுங்கள் ” எனக் கதறும் இயற்கையின் குரலைக் கேட்காமல் பலர் இருக்கின்றோம். தவறுகள் செய்யும்போதெல்லாம் தட்டிக்கேட்கும் மனச்சான்றின் குரலைக் கேட்காமல் பலர் இருக்கின்றோம். நமது காதுகள் திறக்கப்பட வேண்டும். மனச்சான்றின் குரலை, இறைவனின் குரலை, இயற்கையின் குரலை, உதவி வேண்டுவோரின் குரலை நம் காதுகள் கேட்க வேண்டும். அதற்காக இயேசு “எப்பத்தா” என்று மீண்டும் அறைகூவ வேண்டும். அதற்காக வரம் வேண்டி, இந்த திருப்பலியில் பங்கேற்போம்.

முதல் வாசகம்


இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 35: 4-7

உள்ளத்தில் உறுதியற்றவர்களை நோக்கி, ``திடன் கொள்ளுங்கள், அஞ்சாதிருங்கள்; இதோ, உங்கள் கடவுள் பழிதீர்க்க வருவார்; அநீதிக்குப் பழிவாங்கும் கடவுளாக வந்து உங்களை விடுவிப்பார்.'' அப்போது பார்வையற்றோரின் கண்கள் பார்க்கும்; காது கேளா தோரின் செவிகள் கேட்கும். அப்பொழுது, கால் ஊனமுற்றோர் மான்போல் துள்ளிக்குதிப்பர்; வாய்பேசாதோர் மகிழ்ந்து பாடுவர்; பாலைநிலத்தில் நீரூற்றுகள் பீறிட்டு எழும்; வறண்ட நிலத்தில் நீரோடைகள் பாய்ந்தோடும். கனல் கக்கும் மணல்பரப்பு நீர்த் தடாகம் ஆகும்; தாகமுற்ற தரை நீரூற்றுகளால் நிறைந்திருக்கும்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்


திருப்பாடல்: 146: 7. 8-9. 9-10 (பல்லவி: 1)

பல்லவி: என் நெஞ்சே! நீ ஆண்டவரைப் போற்றிடு. அல்லது: அல்லேலூயா.

பல்லவி

7 ஆண்டவர் ஒடுக்கப்பட்டோர்க்கான நீதியை நிலைநாட்டுகின்றார்; பசித்திருப்போர்க்கு உணவளிக்கின்றார்; சிறைப்பட்டோர்க்கு விடுதலை அளிக்கின்றார். பல்லவி

8 ஆண்டவர் பார்வையற்றோரின் கண்களைத் திறக்கின்றார்; தாழ்த்தப்பட்டோரை உயர்த்துகின்றார்; நீதிமான்களிடம் அன்பு கொண்டுள்ளார். 9ய ஆண்டவர் அயல் நாட்டினரைப் பாதுகாக்கின்றார். பல்லவி

9bஉ அனாதைப் பிள்ளைகளையும் கைம்பெண்களையும் ஆதரிக்கின்றார்; ஆனால், பொல்லாரின் வழிமுறைகளைக் கவிழ்த்து விடுகின்றார். 10 சீயோனே! உன் கடவுள், என்றென்றும், எல்லாத் தலைமுறைகளுக்கும் ஆட்சி செய்வார். பல்லவி



இரண்டாம் வாசகம்



திருத்தூதர் யாக்கோபு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 2: 1-5

என் சகோதரர் சகோதரிகளே, மாட்சிமிக்க நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவினிடம் நம்பிக்கை கொண்டுள்ள நீங்கள் ஆள்பார்த்துச் செயல்படாதீர்கள். பொன் மோதிரமும் பளபளப்பான ஆடையும் அணிந்த ஒருவரும் அழுக்குக் கந்தை அணிந்த ஏழை ஒருவரும் உங்கள் தொழுகைக்கூடத்தினுள் வருகிறார்கள் என வைத்துக்கொள்வோம். அப்பொழுது நீங்கள் பளபளப்பான ஆடை அணிந்தவர்மீது தனிக் கவனம் செலுத்தி அவரைப் பார்த்து, ``தயவுசெய்து இங்கே அமருங்கள்'' என்று சொல்கிறீர்கள். ஏழையிடமோ, ``அங்கே போய் நில்'' என்றோ அல்லது ``என் கால்பக்கம் தரையில் உட்கார்'' என்றோ சொல்கிறீர்கள். இவ்வாறு உங்களுக்குள்ளே வேறுபாடு காட்டி, தீய எண்ணத்தோடு மதிப்பிடுகிறீர்கள் அல்லவா? என் அன்பார்ந்த சகோதரர் சகோதரிகளே, நான் சொல்வதைக் கேளுங்கள்: உலகின் பார்வையில் ஏழைகளாய் இருப்பவர்களை, நம்பிக்கையில் செல்வர்களாகவும் தம்மீது அன்பு செலுத்துபவருக்கு வாக்களிக்கப்பட்ட அரசை உரிமைப்பேறாகப் பெறுபவர்களாகவும் கடவுள் தேர்ந்துகொள்ளவில்லையா?

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


மத் 4: 23 - அல்லேலூயா, அல்லேலூயா! இயேசு விண்ணரசு பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றினார்; மக்களிடையே இருந்த நோய் நொடிகள் அனைத்தையும் குணமாக்கினார். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்



நற்செய்திக்கு முன் வசனம்

காது கேளாதோர் கேட்கவும் பேச்சற்றோர் பேசவும் செய்கிறாரே!


மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 31-37

அக்காலத்தில் இயேசு தீர் பகுதியை விட்டு, சீதோன் வழியாகச் சென்று தெக்கப்பொலி பகுதி நடுவே வந்து, கலிலேயக் கடலை அடைந்தார். காது கேளாதவரும் திக்கிப் பேசுபவருமான ஒருவரைச் சிலர் அவரிடம் கொண்டு வந்து, அவர்மீது கை வைத்துக் குணமாக்குமாறு அவரை வேண்டிக் கொண்டனர். இயேசு அவரைக் கூட்டத்திலிருந்து தனியே அழைத்துச் சென்று, தம் விரல்களை அவர் காதுகளில் இட்டு, உமிழ்நீரால் அவர் நாவைத் தொட்டார்; பிறகு வானத்தை அண்ணாந்து பார்த்து, பெருமூச்சு விட்டு, அவரை நோக்கி `எப்பத்தா' அதாவது `திறக்கப்படு' என்றார். உடனே அவருடைய காதுகள் திறக்கப்பட்டன; நாவும் கட்டவிழ்ந்தது. அவர் தெளிவாகப் பேசினார். இதை எவருக்கும் சொல்ல வேண்டாமென்று அவர்களுக்கு அவர் கட்டளையிட்டார். அவரது கட்டளைக்கு நேர்மாறாக இன்னும் மிகுதியாய் அவர்கள் அதை அறிவித்து வந்தார்கள். அவர்கள் அளவு கடந்த வியப்பில் ஆழ்ந்தவர்களாய், ``இவர் எத்துணை நன்றாக யாவற்றையும் செய்து வருகிறார்! காது கேளாதோர் கேட்கவும் பேச்சற்றோர் பேசவும் செய்கிறாரே!'' என்று பேசிக்கொண்டார்கள்.


- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.



இறைமக்களின் வேண்டல்கள்:


அதிகம் கேட்க குறைவாய் பேச, இரண்டு காதுகளும், ஒரு நாவும் தரப்பட்டிருக்கிறது. கேட்க வேண்டியவற்றை கேட்காமல் போவதும், பேச வேண்டியவற்றை பேசாமல் இருப்பதும், செவிடான, மற்றும் ஊமையான வாழ்வுக்கு சமமாகும். இயேசுவின் கரம் சரியானவற்றைக் கேட்கவும், நேரியவற்றைப் பேசவும் நமக்கு தூண்டுதல் தருகின்றது.

பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைத் தயவாய் கேட்டருளும்.

“இனிமையான தந்தையே இறைவா!

எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவி கள், பொதுநிலைப் பணியாளர்கள் அனைவரும்; இறைவாக்கினர் எலியாவைப்போல் இறைவார்த்தை, நற்கருணை ஆகியவற்றால் வலிமையடைந்து, அனைத்து மக்களுக்கும், ஆறுதலாகவும், ஆசீர்வாதமாகவும் இருந்து, மக்களை வழிநடாத்துவதற்கு வேண்டிய அருளை அளித்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

“வீரத்தின் விளைநிலமே இறைவா,

கேட்பதில் அதிக நேரத்தையும், பேசுவதற்கு குறைவான நேரத்தையும் செலவழித்து வாழ அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

“வரங்களின் வள்ளலாம் இறைவா,

கொலை, விபசாரம், களவு, பேராசை, வஞ்சகம், செருக்கு, காமவெறி போன்ற தீச்செயல்களின் பிடியில் சிக்கித் தவிப்போர் அனைவரும், உமது அருளால் நன்மைத்தனத்திற்குரிய தூய எண்ணங்களைப் பெற்றுக்கொள்ள உதவ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

அன்புத் தந்தையே இறைவா,

உம்மைப் போற்றுகிறோம். உமது திருமகனின் மாதிரியைப் பின்பற்றி, நாங்களும் நம்பிக்கையுடனும், தூய ஆவியாரின் துணையுடனும் உம்மை நோக்கி மன்றாடும் அருளை எங்களுக்கு அருள்தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

”தூய்மையின் நிறைவாம் இறைவா,

குறைகளை களைந்து நிறைவான வாழ்வு வாழ்வதுவே வாழ்வின் லட்சியம் என்பதனை உணர்ந்து, அதனை மெசியாவாலேயே தந்திட முடியும் என்று உணர்ந்து வாழ அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

“ஒடுக்கப்பட்டோர் மீண்டும் ஆண்டவரில் மகிழ்ச்சி பெறுவர்” என்று திருவாய் மொழிந்த கடவுளே.

உரிமைகள் இழந்து நாம் இன்று வேடர் கண்ணியின்று தப்பிப் பிழைத்த பறவைபோல் ஆனோம். அதிகார வாதிகளால் அலைக்களிக்கப் படுகின்றோம். ஒடுக்கப்பட்ட ஒரினமாக நாம் தவிக்கின்றோம் ஏறெடுத்துப் பார்க்க யாருமின்றி, ஏக்கங்கள் மத்தியில் ஏன் இந்த வாழ்க்கை என எம் இதயம் கேட்கிறது. எனினும் எம் வாழ்விற்கு ஒளி தரும் விடிவெள்ளியாக உம்மையே எண்ணி வருகின்றோம் எம் ஏக்கங்களை துடைத்தருளும் எம் தவிப்புக்களை மகிழ்வாக்கியருளும். இவற்றினூடாக நாம் நிரந்தர நிம்மதியான வாழ்வை கண்டடைய வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.



-->