பொதுக்காலம் 21 வது - ஞாயிறு

இரண்டாம் ஆண்டு 26-08-2012


'ஆண்டவரே நாங்கள் யாரிடம் போவோம்?'

நாங்கள் யாரிடம் போவோம்? நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன./>


திருப்பலி முன்னுரை


கிறிஸ்துவில் பிரியமுள்ளவர்களே சகோதர சகோதிரியரே! தொடர்ந்து நான்காவது ஞாயிறாக யோவானின் 6-ம் அதிகார நற்கருணை சிறப்பு சொற்பொழிவை சிந்தித்துகொண்டிருக்கிறோம்.

பிரியமானவர்களே! இன்று பொதுக்காலம் 21 ஆம் ஞாயிறு. வாங்கி சாப்பிட்டவாகள், போதனையை கேட்ட போது மிதமிஞ்சிப் போகின்றது என்று சொல்லி விலகிப் போகின்ற நிலையை பார்த்து, சீடர்களின் மனநிலை அறிய முற்பட்ட போது, பேதுருவின் அற்புத சாட்சியத்தை கேட்டறிகின்றார். நீங்களும் போய் விட நினைக்கின்றீர்களா? இயேசு தன் சீடர்களை நோக்கி உருக்கத்துடன் கேட்ட இந்தக் கேள்வியை இன்று இயேசு நம்மை நோக்கிக் கேட்பதாக எடுத்துக்கொள்வோம். இன்றைய நாள்களில் பல்வேறு காரணங்களுக்காக இறைவனைவிட்டு, ஆலய வழிபாடுகளைவிட்டு, இறைமதிப்பீடுகளை விட்டுப் பிரிந்துபோகும் மனிதரின் எண்ணிக்கை பெருகி வருகிறது. ஞாயிறு வழிபாட்டில் பங்கேற்கும் இளையோரின் எண்ணிக்கை குறைகிறது. இறைபக்தி இல்லாமல், செபம் இல்லாமல், உலக நாட்டங்களில் ஈடுபட்டு வாழும் மனிதர் அனைவரும் இயேசுவை விட்டுப் பிரிந்து செல்கின்றனர். அவர்களை நோக்கி இயேசு கேட்கிறார்: நீங்களும் போய்விட நினைக்கிறீர்களா?” நாமோ ஆண்டவரையே என்றும் பற்றிக்கொள்வோமாக! நானும் என் வீட்டாருமோ, ஆண்டரையே என்றும் வழிபடுவோம்” என்று யோசுவா துணிவுடன் அறிக்கையிட்டதுபோல, நாமும் ஆண்டவரையே பற்றிக்கொண்டு வாழ உறுதி பூணுவோம். நம்முடைய நம்பிக்கை எத்தகையது என்பதனை உணர்ந்தவர்களாகவும், உணர்த்துபவர்களாகவும் பலியிலே பங்கெடுத்து செபிப்போம்.

முதல் வாசகம்


யோசுவா நூலிலிருந்து வாசகம் 24: 1-2ய,15-17,18b

அந்நாள்களில் செக்கேமில் யோசுவா இஸ்ரயேலின் எல்லாக் குலங்களையும் ஒன்று கூட்டினார். இஸ்ரயேலின் முதியோர்களையும் தலைவர்களையும் நடுவர்களையும் அதிகாரிகளையும் அழைத்தார். அவர்கள் கடவுள் முன்னிலையில் ஒன்றுகூடினர். யோசுவா எல்லா மக்களுக்கும் கூறியது: ``ஆண்டவருக்கு ஊழியம் புரிவது தீயது என்று உங்கள் பார்வைக்குத் தோன்றினால், உங்கள் மூதாதையர் நதிக்கு அப்பால் பணிந்து வந்த தெய்வங்களுக்கோ, உங்கள் நாட்டில் உங்களுடன் வாழும் எமோரியரின் தெய்வங்களுக்கோ இவர்களுள் யாருக்கு ஊழியம் செய்வீர்கள் என்பதை நீங்களே இப்போது முடிவு செய்யுங்கள். ஆனால் நானும் என் வீட்டாரும் ஆண்டவருக்கே ஊழியம் செய்வோம்.'' மக்கள் மறுமொழியாக, ``ஆண்டவரைக் கைவிட்டு வேற்றுத் தெய்வங்களை வணங்குவது எங்களிடத்தே அறவே நிகழாதிருப்பதாக! ஏனெனில் எங்கள் கடவுளாகிய ஆண்டவர் எங்களையும் எங்கள் மூதாதையரையும் அடிமைத்தன வீடாகிய எகிப்து நாட்டிலிருந்து வெளியே கொண்டு வந்தார். எங்கள் கண்முன் இப்பெரிய அடையாளங்களைச் செய்தார். நாங்கள் நடந்து வந்த எல்லா வழிகளிலும் நாங்கள் கடந்து வந்த மக்களிடையிலும் எங்களைக் காத்தருளினார். நாங்களும் ஆண்டவருக்கு ஊழியம் புரிவோம். ஏனெனில் அவரே எங்கள் கடவுள்'' என்றனர்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்


திருப்பாடல்: 34: 1-2. 15-16. 17-18. 19-20. 21-22 (பல்லவி: 8ய)

பல்லவி: ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள். .

பல்லவி

1 ஆண்டவரை நான் எக்காலமும் போற்றுவேன்; அவரது புகழ் எப்பொழுதும் என் நாவில் ஒலிக்கும். 2 நான் ஆண்டவரைப் பற்றிப் பெருமையாகப் பேசுவேன்; எளியோர் இதைக் கேட்டு அக்களிப்பர். பல்லவி

15 ஆண்டவர் கண்கள் நீதிமான்களை நோக்குகின்றன; அவர் செவிகள் அவர்களது மன்றாட்டைக் கேட்கின்றன. 16 ஆண்டவரின் முகமோ தீமைசெய்வோர்க்கு எதிராக இருக்கின்றது; அவர், அவர்களின் நினைவே உலகில் அற்றுப்போகச் செய்வார். பல்லவி

17 நீதிமான்கள் மன்றாடும்போது, ஆண்டவர் செவிசாய்க்கின்றார்; அவர்களை அனைத்து இடுக்கண்ணினின்றும் விடுவிக்கின்றார். 18 உடைந்த உள்ளத்தார்க்கு அருகில் ஆண்டவர் இருக்கின்றார்; நைந்த நெஞ்சத்தாரை அவர் காப்பாற்றுகின்றார். பல்லவி

19 நேர்மையாளருக்கு நேரிடும் தீங்குகள் பல; அவை அனைத்தினின்றும் ஆண்டவர் அவர்களை விடுவிக்கின்றார். 20 அவர்களின் எலும்புகளை எல்லாம் அவர் பாதுகாக்கின்றார்; அவற்றுள் ஒன்றும் முறிபடாது. பல்லவி

21 தீயோரைத் தீவினையே சாகடிக்கும்; நேர்மையாளரை வெறுப்போர் தண்டனை பெறுவர். 22 ஆண்டவர் தம் ஊழியரின் உயிரை மீட்கின்றார்; ஆண்டவரிடம் அடைக்கலம் புகும் எவரும் தண்டனை அடையார். பல்லவி


இரண்டாம் வாசகம்



திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 5: 21-32

சகோதரர் சகோதரிகளே, கிறிஸ்துவுக்கு அஞ்சி ஒருவருக்கொருவர் பணிந்திருங்கள். திருமணமான பெண்களே, ஆண்டவருக்குப் பணிந்திருப்பதுபோல உங்கள் கணவருக்கு நீங்கள் பணிந்திருங்கள். ஏனெனில் கிறிஸ்து திருச்சபைக்குத் தலையாய் இருப்பதுபோலக் கணவர் மனைவிக்குத் தலையாய் இருக்கிறார். கிறிஸ்துவே திருச்சபையாகிய உடலின் மீட்பர். திருச்சபை கிறிஸ்துவுக்குப் பணிந்திருப்பதுபோல, மனைவியரும் தங்கள் கணவருக்கு அனைத்திலும் பணிந்திருக்க வேண்டும். திருமணமான ஆண்களே, கிறிஸ்து திருச்சபை மீது அன்பு செலுத்தியது போல நீங்களும் உங்கள் மனைவியரிடம் அன்பு செலுத்துங்கள். ஏனெனில் கிறிஸ்து திருச்சபை மீது அன்பு செலுத்தி, அதற்காகத் தம்மையே ஒப்புவித்தார். வார்த்தையாலும் நீரினாலும் அதனைக் கழுவித் தூயதாக்குமாறு இவ்வாறு செய்தார். அத்திருச்சபை, கறை திரையோ, வேறு எக்குறையோ இல்லாமல் தூய்மையும் மாசற்றதுமாய் மாட்சியுடன் தம்முன் விளங்குமாறு இப்படிச் செய்தார். அவ்வாறே கணவர்களும் மனைவியரைத் தம் சொந்த உடல் எனக் கருதி அன்பு செலுத்தக் கடமைப் பட்டிருக்கிறார்கள். தம் மனைவியின் மீது அன்பு கொள்கிறவர், தம்மீதே அன்பு கொள்கிறவர் ஆவார். தம்முடைய உடலை எவரும் வெறுப்பதில்லை. அதைப் பேணி வளர்க்கிறார். அவ்வாறே, கிறிஸ்துவும் திருச்சபையைப் பேணி வளர்த்து வருகிறார். ஏனெனில் நாம் அவரது உடலின் உறுப்புகள். ``இதனால் கணவர் தம் தாய் தந்தையை விட்டுவிட்டு தம் மனைவியுடன் ஒன்றித்திருப்பார்; இருவரும் ஒரே உடலாய் இருப்பர்'' என மறைநூல் கூறுகிறது. இதில் அடங்கியுள்ள மறைபொருள் பெரிது. இது திருச்சபைக்கும் கிறிஸ்துவுக்கும் பொருந்துவதாகக் கொள்கிறேன்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


யோவா 6: 63b,68b - அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரே, உமது வார்த்தைகள் வாழ்வு தரும் ஆவியைக் கொடுக்கின்றன. நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன. அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்



நற்செய்திக்கு முன் வசனம்

நாங்கள் யாரிடம் போவோம்? நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன.


யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 60-69

அக்காலத்தில் இயேசு சொல்வதைக் கேட்டு அவருடைய சீடர் பலர், ``இதை ஏற்றுக்கொள்வது மிகக் கடினம்; இப்பேச்சை இன்னும் கேட்டுக்கொண்டிருக்க முடியுமா?'' என்று பேசிக் கொண்டனர். இதுபற்றித் தம் சீடர் முணுமுணுப்பதை இயேசு உணர்ந்து அவர்களிடம், ``நீங்கள் நம்புவதற்கு இது தடையாய் இருக்கிறதா? அப்படியானால் மானிட மகன் தாம் முன்பு இருந்த இடத்திற்கு ஏறிச் செல்வதை நீங்கள் கண்டால் அது உங்களுக்கு எப்படி இருக்கும்? வாழ்வு தருவது தூய ஆவியே; ஊனியல்பு ஒன்றுக்கும் உதவாது. நான் கூறிய வார்த்தைகள் வாழ்வு தரும் ஆவியைக் கொடுக்கின்றன. அப்படியிருந்தும் உங்களுள் சிலர் என்னை நம்பவில்லை'' என்றார். நம்பாதோர் யார் யார் என்பதும், தம்மைக் காட்டிக் கொடுக்க இருப்பவன் யார் என்பதும் இயேசுவுக்குத் தொடக்கத்திலிருந்தே தெரிந்திருந்தது. மேலும் அவர், ``இதன் காரணமாகத்தான் `என் தந்தை அருள் கூர்ந்தால் அன்றி யாரும் என்னிடம் வர இயலாது' என்று உங்களுக்குக் கூறினேன்'' என்றார். அன்றே இயேசுவின் சீடருள் பலர் அவரை விட்டு விலகினர். அன்று முதல் அவர்கள் அவரோடு சேர்ந்து செல்லவில்லை. இயேசு பன்னிரு சீடரிடம், ``நீங்களும் போய்விட நினைக்கிறீர்களா?'' என்று கேட்டார். சீமோன் பேதுரு மறுமொழியாக, ``ஆண்டவரே நாங்கள் யாரிடம் போவோம்? நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன. நீரே கடவுளுக்கு அர்ப்பணமானவர் என்பதை நாங்கள் அறிந்துகொண்டோம். அதை நம்புகிறோம்'' என்றார்.


- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.



இறைமக்களின் வேண்டல்கள்:


அடுத்தவர்மேல் அக்கறை கொண்ட வாழ்வு இறைநம்பிக்கையின் உரைக்கல். உயிரோடு இருப்பது பெரிதல்ல, பிறர் உயிரையும் நினைத்து பார்த்து, உயிரோடு இருப்பதுவே சாலச் சிறந்தது. களிமண்ணாய் இருந்த உருவத்திற்கு, கடவுளின் ஆவி உயிர் கொடுத்தார். அச்சத்தினால் அடைபட்டு இருந்த சீடர்களுக்கு, இயேசுவின் ஆவி உயிர் கொடுத்தது. பயணம் செய்யும், பலவீனமான திருச்சபைக்கு தூய ஆவியானவர் தொடந்து உயிர் கொடுக்கின்றார். நமக்குத் தேவையான அருள் வரங்களை இறைவனிடம் மன்றாடிக்கேட்போம்.

பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைத் தயவாய் கேட்டருளும்.

“இனிமையான தந்தையே இறைவா!

எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவி கள், பொதுநிலைப் பணியாளர்கள் அனைவரும்; இறைவாக்கினர் எலியாவைப்போல் இறைவார்த்தை, நற்கருணை ஆகியவற்றால் வலிமையடைந்து, அனைத்து மக்களுக்கும், ஆறுதலாகவும், ஆசீர்வாதமாகவும் இருந்து, மக்களை வழிநடாத்துவதற்கு வேண்டிய அருளை அளித்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

“வீரத்தின் விளைநிலமே இறைவா,

எந்த நிலையிலும் உம்மை விட்டு பிரியாத நல்வாழ்வு எமதாகிட இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

“நிறைவின் ஊற்றான இயேசுவே,

உம்மைப் போற்றுகிறேன். உலக இன்பங்கள், செல்வம், பல்வேறு விதமான சோதனைகள் இவற்றின் மத்தியிலும், நான் உம்மை விட்டுப் பிரிந்துவிடாது உம்மிலே நிலைத்து, திடம் பெற்று வாழ்ந்திட இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

“என்னிடம் வருபவரை நான் புறம்பே தள்ளிவிடமாட்டேன்” என்று திருவாய் மொழிந்த இயேசுவே

உமது போதனை ஏற்க மறுத்து உம்மைவிட்டு விலகிச் சென்ற சீடர்கள் போல, திருச்சபையைவிட்டுப் பிரிந்து செல்வோருக்காகவும் மன்றாடுகிறோம். நாங்களும் எங்கள் விசுவாசத்தில் நிலைத்திருக்கும் வரம் எங்களுக்கு எப்போதும் தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

”உணவின் வழி உறவினை உறுதி செய்தவரே,

நாங்கள் திருவிருந்தின் வழி உம்மோடு கொண்டுள்ள உறவினை உறுதி செய்து உண்மையாய் வாழ்ந்திட வரமருள உம்மை மன்றாடுகின்றோம்.

“ஒடுக்கப்பட்டோர் மீண்டும் ஆண்டவரில் மகிழ்ச்சி பெறுவர்” என்று திருவாய் மொழிந்த கடவுளே.

உரிமைகள் இழந்து நாம் இன்று வேடர் கண்ணியின்று தப்பிப் பிழைத்த பறவைபோல் ஆனோம். அதிகார வாதிகளால் அலைக்களிக்கப் படுகின்றோம். ஒடுக்கப்பட்ட ஒரினமாக நாம் தவிக்கின்றோம் ஏறெடுத்துப் பார்க்க யாருமின்றி, ஏக்கங்கள் மத்தியில் ஏன் இந்த வாழ்க்கை என எம் இதயம் கேட்கிறது. எனினும் எம் வாழ்விற்கு ஒளி தரும் விடிவெள்ளியாக உம்மையே எண்ணி வருகின்றோம் எம் ஏக்கங்களை துடைத்தருளும் எம் தவிப்புக்களை மகிழ்வாக்கியருளும். இவற்றினூடாக நாம் நிரந்தர நிம்மதியான வாழ்வை கண்டடைய வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.



-->