பொதுக்காலம் - 21 ஆம் வாரம்

புதன் ஆகஸ்ட் , 29.08.2012


புனித திருமுழுக்கு யோவானின் பாடுகள் நினைவு


முதல் வாசகம்இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 1: 17-19

அந்நாள்களில் ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது. ``நீயோ உன் இடையை வரிந்து கட்டிக்கொள். புறப்படு, நான் கட்டளையிடும் அனைத்தையும் அவர்களிடம் சொல். அவர்கள் முன் கலக்கமுறாதே. இல்லையேல், அவர்கள் முன் உன்னைக் கலக்கமுறச் செய்வேன். இதோ, இன்று நான் உன்னை நாடு முழுவதற்கும், அதாவது, யூதாவின் அரசர்களுக்கும் அதன் தலைவர்களுக்கும் அதன் குருக்களுக்கும் நாட்டின் மக்களுக்கும் எதிராக அரண்சூழ் நகராகவும் இரும்புத் தூணாகவும் வெண்கலச் சுவராகவும் ஆக்கியுள்ளேன். அவர்கள் உனக்கு எதிராகப் போராடுவார்கள். எனினும் உன் மேல் வெற்றி கொள்ள அவர்களால் இயலாது. ஏனெனில் உன்னை விடுவிக்க நான் உன்னோடு இருக்கிறேன்'' என்கிறார் ஆண்டவர்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி
பதிலுரைப் பாடல்


திபா 71: 1-2. 3-4ய. 5-6. 15யb,17 (பல்லவி: 15ய)

பல்லவி: என் வாய் உமது நீதியையும் மீட்பையும் எடுத்துரைக்கும்.

1 ஆண்டவரே! உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன்; ஒருபோதும் நான் வெட்கமுற விடாதேயும். 2 உமது நீதிக்கேற்ப என்னை விடுவித்தருளும்; எனக்கு நீர் செவிசாய்த்து என்னை மீட்டுக் கொள்ளும். பல்லவி

3 என் அடைக்கலப் பாறையாக நீர் இருந்தருளும்; கோட்டை அரணாயிருந்து என்னை மீட்டருளும்; ஏனெனில், நீர் எனக்குக் கற்பாறையாகவும் அரணாகவும் இருக்கின்றீர். 4ய என் கடவுளே, பொல்லார் கையினின்று என்னைக் காத்தருளும். பல்லவி

11 விண்ணுலகம் மகிழ்வதாக; மண்ணுலகம் களிகூர்வதாக; கடலும் அதில் நிறைந்துள்ளனவும் முழங்கட்டும். 12ய வயல்வெளியும் அதில் உள்ள அனைத்தும் களிகூரட்டும். பல்லவி

5 என் தலைவரே, நீரே என் நம்பிக்கை; ஆண்டவரே, இளமை முதல் நீரே என் நம்பிக்கை. 6 பிறப்பிலிருந்து நான் உம்மைச் சார்ந்துள்ளேன்; தாய் வயிற்றிலிருந்து நீர் என்னைப் பிரித்தெடுத்தீர். பல்லவி

15யb என் வாய் நாள்தோறும் உமது நீதியையும் நீர் அருளும் மீட்பையும் எடுத்துரைக்கும்; உம் அருட்செயல்களை என்னால் கணிக்க இயலாது. 17 கடவுளே, என் இளமைமுதல் எனக்குக் கற்பித்து வந்தீர்; இனி வரும் நாள்களிலும் உம் வியத்தகு செயல்களை அறிவிப்பேன். பல்லவிநற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


மத் 5: 10 - அல்லேலூயா, அல்லேலூயா! நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்குரியது. அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்


+மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 17-29

அக்காலத்தில் ஏரோது, தன் சகோதரனான பிலிப்பின் மனைவி ஏரோதியாவை மனைவியாக்கிக் கொண்டிருந்தான்; அவள் பொருட்டு ஆள் அனுப்பி யோவானைப் பிடித்துக் கட்டிச் சிறையில் அடைத்திருந்தான். ஏனெனில் யோவான் ஏரோதிடம், ``உம் சகோதரர் மனைவியை நீர் வைத்திருப்பது முறை அல்ல'' எனச் சொல்லி வந்தார். அப்போது ஏரோதியா அவர்மீது காழ்ப்புணர்வு கொண்டு, அவரைக் கொலை செய்ய விரும்பினாள்; ஆனால் அவளால் இயலவில்லை. ஏனெனில் யோவான் நேர்மையும் தூய்மையும் உள்ளவர் என்பதை ஏரோது அறிந்து அஞ்சி அவருக்குப் பாதுகாப்பு அளித்துவந்தான். அவர் சொல்லைக் கேட்டு மிகக் குழப்பமுற்ற போதிலும், அவருக்கு மனமுவந்து செவிசாய்த்தான். ஒரு நாள் ஏரோதியாவுக்கு நல்ல வாய்ப்பு ஒன்று கிடைத்தது. ஏரோது தன் பிறந்த நாளில் அரசவையினருக்கும், ஆயிரத்தவர் தலைவர்களுக்கும் கலிலேய முதன்மைக் குடிமக்களுக்கும் ஒரு விருந்து படைத்தான். அப்போது ஏரோதியாவின் மகள் உள்ளே வந்து நடனமாடி ஏரோதையும் விருந்தினரையும் அகமகிழச் செய்தாள். அரசன் அச்சிறுமியிடம், ``உனக்கு என்ன வேண்டுமானாலும் கேள், தருகிறேன்'' என்றான். ``நீ என்னிடம் எது கேட்டாலும், ஏன் என் அரசில் பாதியையே கேட்டாலும் உனக்குத் தருகிறேன்'' என்றும் ஆணையிட்டுக் கூறினான். அவள் வெளியே சென்று, ``நான் என்ன கேட்கலாம்?'' என்று தன் தாயை வினவினாள். அவள், ``திருமுழுக்கு யோவானின் தலையைக் கேள்'' என்றாள். உடனே சிறுமி அரசனிடம் விரைந்து வந்து, ``திருமுழுக்கு யோவானின் தலையை ஒரு தட்டில் வைத்து இப்போதே எனக்குக் கொடும்'' என்று கேட்டாள். இதைக் கேட்ட அரசன் மிக வருந்தினான். ஆனாலும் விருந்தினர் முன் தான் ஆணையிட்டதால் அவளுக்கு அதை மறுக்க விரும்பவில்லை. உடனே அரசன் ஒரு காவலனை அனுப்பி யோவானுடைய தலையைக் கொண்டு வருமாறு பணித்தான். அவன் சென்று சிறையில் அவருடைய தலையை வெட்டி, அதை ஒரு தட்டில் கொண்டு வந்து அச்சிறுமியிடம் கொடுக்க, அவளும் அதைத் தன் தாயிடம் கொடுத்தாள். இதைக் கேள்வியுற்ற யோவானுடைய சீடர்கள் வந்து அவருடைய உடலை எடுத்துச் சென்று ஒரு கல்லறையில் வைத்தார்கள்.


- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
இன்றைய சிந்தனை


''ஏரோது ஒரு காவலனை அனுப்பி யோவானுடைய தலையைக் கொண்டுவருமாறு பணித்தான்... யோவானுடைய சீடர்கள் வந்து அவருடைய உடலை எடுத்துச் சென்று ஒரு கல்லறையில் வைத்தனர்'' (மாற்கு 6:27,29)

திருமுழுக்கு யோவானின் வரலாறும் இயேசுவின் வரலாறும் ஒன்றோடொன்று நெருங்கிப் பிணைந்தவை. முதலில் இயேசுவின் வருகையை யோவான் முன்னறிவித்தார். இயேசுவுக்கு யோர்தான் ஆற்றில் திருமுழுக்குக் கொடுத்தார். இயேசுவைப் போல யோவானும் இறையாட்சி வருகிறது என அறிவித்து மக்கள் மனம் மாற வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். யோவானின் சாவும் இயேசுவின் சாவுக்கு ஒரு முன்னோடிபோல் அமைந்தது. ஏரோது மன்னனின் நடத்தை முறைகேடானது என யோவான் குத்திக் காட்டினார். இதனால் யோவானைப் பழிவாங்கத் துடித்தாள் ஏரோதியா. மன்னனோ தான் கொடுத்த வாக்கை மீறலாகாது என்னும் சாக்குப்போக்குக் காட்டி கோழைத்தனமாக நடந்துகொண்டான். ஏரோதியாவின் மகள் தாய்ச்சொல் தட்டாத பிள்ளையாக வந்து, திருமுழுக்கு யோவானின் தலையை ''ஒரு தட்டில் வைத்து இப்போதே எனக்குக் கொடும்'' எனக் கேட்டாள். அதே பாணியில் யோவானின் வெட்டுண்ட தலையைத் ''தன் தாயிடம் கொடுத்தாள்'' (மாற் 6:26-27). யோவானின் கொலைசெய்யப்பட்டதற்குக் காரணம் என்ன? சூழ்நிலைகள் ஓரளவு பாதகமாக இருந்தன என்பது உண்மையே. ஆயினும் ஏரோதுதான் அச்சாவுக்கு முக்கிய காரணம். ''யோவான் நேர்மையும் தூய்மையும் உள்ளவர் என்பதை ஏரோது அறிந்திருந்தான்''; அப்படியிருந்தும் அவரைப் ''பிடித்துக் கட்டிச் சிறையில் அடைத்திருந்தான்'' (மாற் 6:17). தான் மனைவியாக்கிக் கொண்ட ஏரோதியா காழ்ப்புணர்வு கொண்டு யோவான் சாக வேண்டும் என்று கேட்டதை அறிந்த அரசன் ''மிக வருந்தினான்'' (மாற் 6:26) என்பது உண்மையென்றாலும், அதே அரசன் யோவானின் தலையை வெட்ட ஆணையிட்டான் (மாற் 6:27). இங்கே இயேசுவின் சாவுக்கு யோவானின் சாவு முன்னோடியாக அமைவது தெரிகிறது. இயேசுவும் யோவானைப் போல அரசியல் மற்றும் சமய அதிகாரிகள் புரிந்த அநீதிகளைக் கடிந்துகொண்டார். அதனால் அதிகார வர்க்கம் அவரை ஒழிக்கத் தேடியது. பழிவாங்க நினைத்தவர்கள் சந்தர்ப்பவாதிகளோடு சேர்ந்துகொண்டார்கள் (மாற் 14:10-11). இறுதியாக, பிலாத்து கோழைத்தனமாக நடந்துகொண்டு, ''கூட்டத்தினரின் விருப்பத்தை நிறைவேற்றும் வண்ணம்'' செயல்பட்டதால் இயேசு சாவுக்குத் தீர்வையிடப்பட்டார் (மாற் 15:15) -- மாற்கு நற்செய்தியாளர் யோவானின் சீடர்கள் நடந்துகொண்டதையும் இயேசுவின் சீடர்கள் நடந்துகொண்டதையும் ஒப்பிட்டு, வேறுபடுத்திக் காட்டுகிறார். யோவானின் சீடர்கள் ஒரு குழுவாக வந்து, தம் குருவின் உடலை எடுத்துச் சென்று அடக்கம் செய்தார்கள் (மாற் 6:29). ஆனால் இயேசுவின் சீடர்களோ தம் குரு சாகப் போகிறார் என்றறிந்ததும் அவரை விட்டு ஓடிப் போய்விட்டார்கள். யூதர்களின் தலைமைச் சங்க உறுப்பினராக இருந்த போதிலும் இயேசுவின் போதனையால் கவரப்பட்ட அரிமத்தியா யோசேப்பு மட்டுமே துணிச்சலோடு பிலாத்துவிடம் சென்று இயேசுவின் உடலைக் கேட்டு வாங்கி அதைக் கல்லறையில் கொண்டு வைத்தார் (மாற் 15:42-47). மனித வாழ்க்கையை மேம்படுத்துகின்ற விழுமியங்களுக்காக உயிர் துறக்கவும் தயங்காத மனிதரே உலகுக்கு வாழ்வளிக்க தம் உயிரையும் பலியாக்குவார்கள். திருமுழுக்கு யோவான் இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. இயேசுவின் சீடர்களாக வாழ விரும்புவோர் தம்முயிரை ஈந்தும் பிறருக்கு வாழ்வளிக்க முன்வருவர்.

மன்றாட்டு:
இறைவா, உண்மைக்குச் சாட்சிகளாக நாங்கள் வாழ்ந்திட அருள்தாரும்.