பொதுக்காலம் - 20 ஆம் வாரம்

வெள்ளி ஆகஸ்ட் , 24.08.2012


முதல் வாசகம்இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 37: 1-14

அந்நாள்களில் ஆண்டவரின் ஆற்றல் என் மீது இறங்கியது. அவர் என்னைத் தம் ஆவியால் தூக்கிக் கொண்டு போய்ப் பள்ளத்தாக்கின் நடுவில் நிறுத்தினார். அங்கே எலும்புகள் மிகுதியாய்க் கிடந்தன. அவர் அவற்றைச் சுற்றி என்னை நடத்திச் சென்றார். அங்கே பள்ளத்தாக்கின் அடியில் மிகப் பல எலும்புகள் கிடந்தன. அவை மிகவும் உலர்ந்தவையாய் இருந்தன. அவர் என்னிடம், `மானிடா! இந்த எலும்புகள் உயிர் பெறமுடியுமா?' என்று கேட்டார். நான், `தலைவராகிய ஆண்டவரே! உமக்குத் தெரியுமே' என்று மறுமொழி அளித்தேன். அவர் என்னிடம் உரைத்தது: நீ இந்த எலும்புகளுக்கு இறைவாக்கு உரை. `உலர்ந்த எலும்புகளே! ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள்' என்று சொல். தலைவராகிய ஆண்டவர் இந்த எலும்புகளுக்கு இவ்வாறு கூறுகிறார்: நான் உங்களுக்குள் உயிர்மூச்சு புகச் செய்வேன். நீங்களும் உயிர் பெறுவீர்கள். நான் உங்களை நரம்புகளால் தொடுப்பேன்; உங்கள்மேல் சதையைப் பரப்புவேன். உங்களைத் தோலால் மூடுவேன். பின் உங்களுக்குள் உயிர்மூச்சு புகச் செய்வேன். நீங்களும் உயிர் பெறுவீர்கள். அப்போது நானே ஆண்டவர் என அறிந்துகொள்வீர்கள். எனவே, எனக்குக் கட்டளையிடப்பட்டபடி இறைவாக்கு உரைத்தேன். நான் இறைவாக்கு உரைக்கையில், உராயும் ஓசை கேட்டது. ஒவ்வொரு எலும்பும் தனக்குரிய எலும்புடன் சேர்ந்துகொண்டது. நான் பார்க்கையிலேயே அவற்றில் நரம்புகள் ஏற்பட்டு, சதை தோன்றித் தோல் அவற்றின்மேல் மூடியது. ஆனால் அவற்றில் உயிர் இன்னும் வரவில்லை. பின்னர் அவர் என்னிடம், உயிர்மூச்சுக்கு இறைவாக்கு உரை: மானிடா! இறைவாக்கு உரைத்து, உயிர்மூச்சிடம் சொல். தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: நான்கு காற்றுகளிலிருந்தும் `உயிர்மூச்சே வா, நீ வந்து கொலையுண்ட இவர்களுக்குள் புகு. அப்பொழுது இவர்கள் உயிர் பெறுவர்.' எனவே அவர் எனக்குக் கட்டளையிட்டவாறு இறைவாக்கு உரைத்தேன். உடனே அவர்களுக்குள் உயிர்மூச்சு புகுந்தது. அவர்கள் உயிர்பெற்று, காலூன்றி, மாபெரும் படைத்திரள் போல் நின்றனர். அவர் மேலும் என்னிடம் கூறியது: மானிடா! இந்த எலும்புகள் இஸ்ரயேல் வீட்டார் அனைவரையும் குறிக்கும். அவர்களோ `எங்கள் எலும்புகள் உலர்ந்து போயின. எங்கள் நம்பிக்கை அற்றுப் போய்விட்டது. நாங்கள் துண்டிக்கப்பட்டு விட்டோம்' எனச் சொல்கிறார்கள். எனவே, இறைவாக்கு உரைத்து அவர்களிடம் சொல்: தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: என் மக்களே! இதோ நான் உங்கள் கல்லறைகளைத் திறக்கப் போகிறேன். உங்களை உங்கள் கல்லறைகளினின்று மேலே கொண்டு வருவேன். உங்களுக்கு இஸ்ரயேல் நாட்டைத் திரும்பக் கொடுப்பேன். அப்போது, என் மக்களே! நான் உங்கள் கல்லறைகளைத் திறந்து உங்களை அவற்றிலிருந்து வெளிக் கொணர்கையில், நானே ஆண்டவர் என்பதை அறிந்து கொள்வீர்கள். என் ஆவியை உங்கள் மீது பொழிவேன். நீங்களும் உயிர் பெறுவீர்கள். நானும் உங்களை உங்கள் சொந்த நாட்டில் குடியமர்த்துவேன். `ஆண்டவராகிய நான் உரைத்தேன்; நானே இதைச் செய்தேன்' என அப்போது அறிந்து கொள்வீர்கள், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி
பதிலுரைப் பாடல்


திபா 107: 2-3. 4-5. 6-7. 8-9 (பல்லவி: 1)

பல்லவி: ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; ஏனெனில், அவர் நல்லவர்; என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு.

2 ஆண்டவரால் மீட்படைந்தோர், எதிரியின் கையினின்று அவரால் மீட்கப்பட்டோர், 3 கிழக்கினின்றும், மேற்கினின்றும் வடக்கினின்றும் தெற்கினின்றும், பல நாடுகளினின்றும் ஒன்று சேர்க்கப்பட்டோர் சொல்வார்களாக. பல்லவி

4 பாலைநிலத்தில் பாழ்வெளியில் சிலர் அலைந்து திரிந்தனர்; குடியிருக்குமாறு ஒரு நகருக்குச் செல்ல அவர்கள் வழி காணவில்லை; 5 பசியுற்றனர்; தாகமுற்றனர்; மனச்சோர்வுற்றுக் களைத்துப் போயினர். பல்லவி

6 தம் நெருக்கடியில் ஆண்டவரைக் கூவியழைத்தனர்; அவர்களுக்குற்ற துன்பங்களிலிருந்து அவர்களை அவர் விடுவித்தார். 7 நேரிய பாதையில் அவர்களை வழி நடத்தினார்; குடியிருக்கும் நகரை அவர்கள் அடையச் செய்தார். பல்லவி

8 ஆண்டவரின் பேரன்பை முன்னிட்டு, மானிடர்களுக்காக அவர் செய்த வியத்தகு செயல்களை முன்னிட்டு, அவர்கள் அவருக்கு நன்றி செலுத்துவார்களாக! 9 ஏனெனில், தாகமுற்றோர்க்கு அவர் நிறைவளித்தார்; பசியுற்றோரை நன்மையால் நிரப்பினார். பல்லவி

35உன அவர்களது அழிவுநாள் அண்மையில் உள்ளது; அவர்களுக்கு வரப்போகும் கொடுமைகள் தீவிரமாகின்றன. 36யb அவர்கள் ஆற்றல் இழந்துவிட்டவர்கள் எனவும் அடிமையோ குடிமகனோ எவனுமில்லை எனவும் காணும்போது ஆண்டவரே அவர் மக்களுக்குத் தீர்ப்பிடுவார். பல்லவிநற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


திபா 25: 4உ,5ய - அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரே, உம் வழிகளை எனக்குக் கற்பித்தருளும்; உமது உண்மை நெறியில் என்னை நடத்தி எனக்குக் கற்பித்தருளும். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்


மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 22: 34-40

அக்காலத்தில் இயேசு சதுசேயரை வாயடைக்கச் செய்தார் என்பதைக் கேள்விப்பட்ட பரிசேயர் ஒன்றுகூடி அவரிடம் வந்தனர். அவர்களிடையே இருந்த திருச்சட்ட அறிஞர் ஒருவர் அவரைச் சோதிக்கும் நோக்கத்துடன், ``போதகரே, திருச்சட்ட நூலில் தலைசிறந்த கட்டளை எது?'' என்று கேட்டார். அவர், `` `உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு மனத்தோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு செலுத்து.' இதுவே தலைசிறந்த முதன்மையான கட்டளை. `உன்மீது நீ அன்பு கூர்வது போல உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்பு கூர்வாயாக' என்பது இதற்கு இணையான இரண்டாவது கட்டளை. திருச்சட்ட நூல் முழுமைக்கும் இறைவாக்கு நூல்களுக்கும் இவ்விரு கட்டளைகளே அடிப்படையாக அமைகின்றன'' என்று பதிலளித்தார்.


- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
இன்றைய சிந்தனை


''இயேசு சதுசேயரை வாயடைக்கச் செய்தார் என்பதைக் கேள்விப்பட்ட பரிசேயர் ஒன்றுகூடி அவரிடம் வந்தனர்'' (மத்தேயு 22:34)

மத்தேயு நற்செய்தியில் இயேசுவின் எதிரிகளாகக் காட்டப்படுவோர் ''பரிசேயர்'', ''சதுசேயர்'' என்னும் இரு குழுக்களைச் சார்ந்தவர்கள். இவர்களுள் சதுசேயர் என்போர் பெரும்பாலும் எருசலேம் நகரில் வாழ்ந்தனர். அவர்கள் ஆளும் வர்க்கத்தினர். விவிலியத்தின் முதல் ஐந்து நூற்களை மட்டுமே அதிகாரப்பூர்வமான ஏடுகளாக இவர்கள் ஏற்றார்கள். அந்நூல்களில் கூறப்பட்டவற்றை அப்படியே கடைப்பிடிக்க வேண்டும் என்றும், வாய்மொழி மரபாகவோ எழுத்து மரபாகவோ வழங்கப்பட்ட சட்ட விளக்கங்கள் விவிலியத்தின்; முதல் ஐந்து நூல் போதனையிலிருந்து மாறுபட்டால், அவற்றைப் புறக்கணிக்க வேண்டும் என்றும் இவர்கள் கருதினார்கள்.எனவே, இறந்தோர் உயிர்த்தெழுவர் என்னும் கருத்து விவிலியத்தின் முதல் ஐந்து நூல்களில் காணப்படவில்லை என்பதால் அதை ஏற்க முடியாது என்பது இவர்களுடைய கருத்து. ஆனால் இயேசு விவிலியத்தின் முதல் நூலாகிய ''தொடக்கநூல்'' என்பதில் ''கடவுள் இறந்தோரின் கடவுளல்ல, மாறாக, ''உயிர்வாழ்வோரின் கடவுள்'' எனக் காணப்படும் உண்மையைச் சுட்டிக்காட்டி, ''சதுசேயரின் வாயை அடைத்துவிட்டார்'' (மத் 22:23). தங்களோடு கருத்து வேறுபட்ட சதுசேயரை இயேசு முறியடித்தார் என்பதைப் பரிசேயர்கள் கேள்விப்படுகின்றனர். அவர்களுக்கு ஒருவிதத்தில் மகிழ்ச்சிதான். ஆனால் பரிசேயரும் இயேசுவைச் சோதிக்கும் நோக்கத்துடன் அவரை அணுகி வருகின்றனர். ''பரிசேயர் ஒன்றுகூடினர்'' (மத் 22:34) என மத்தேயு குறிப்பிடுவது கருதத்தக்கது. இயேசுவுக்கு எதிராகத் திட்டம் வகுத்து அவரை ஒழிக்கத் தேடிய பரிசேயரோ பிறரோ ''ஒன்றுகூடி'' சதித்திட்டம் போடுவதை மத்தேயு பல இடங்களில் குறிப்பிடுகிறார் (காண்க: மத் 22:41; 26:3; 27:17,27; 28:12). -- இயேசுவைச் சோதிக்க வந்த பரிசேயருள் ஒருவர் திருச்சட்ட அறிஞர். அவர் இயேசுவிடம் ''திருச்சட்ட நூலில் தலைசிறந்த கட்டளை எது?'' என்னும் கேள்வியைக் கேட்கிறார் (மத் 22:36). பல நூற்றுக்கணக்கான கட்டளைகளை உள்ளடக்கிய திருநூலில் காணப்படுகின்ற முதன்மையான கட்டளை எது என்னும் கேள்விக்கு யூத அறிஞர் அக்காலத்தில் பதில் தேடியது உண்டு. எடுத்தக்காட்டாக, ஹில்லல் என்னும் அறிஞரைக் குறிப்பிடலாம். அவரைத் தேடி ஒரு பிற இனத்தவர் வருகிறார். ''நான் ஒற்றைக் காலில் நிற்கும் நேரத்தில் எனக்குத் திருச்சட்டம் முழுவதையும் கற்றுத் தர முடியும் என்றால் நான் யூத சமயத்தைத் தழுவுகிறேன்'' என்கிறார் அவர். இதைக் கேட்ட ஹில்லல் அப்பிற இன மனிதரைப் பார்த்து, ''உனக்குத் தீங்கு இழைக்க நீ விரும்பாததுபோல பிறருக்கும் தீங்கு இழைக்க விரும்பாதே. இதில் திருச்சட்டம் முழுவதும் அடங்கும். எஞ்சியது விளக்கவுரையே'' எனப் பதிலளித்தார். இயேவிடம் சென்று ''திருச்சட்ட நூலில் தலைசிறந்த கட்டளை எது'' என்று கேட்டவருக்கு இயேசு அளித்த பதில் ''கடவுளை அன்புசெய்க; பிறரை அன்புசெய்க'' என்பதே. ''திருச்சட்ட நூல் முழுமைக்கும் இறைவாக்குகளுக்கும் இவ்விரு கட்டளைகளே அடிப்படையாக அமைகின்றன'' (மத் 22:40) என்று இயேசு அளித்த பதிலுக்கு ஆதாரம் பழைய ஏற்பாட்டில் உள்ளது (காண்க: இச 6:5; லேவி 19:18). அன்புக் கட்டளையை இயேசு தம் வாழ்வில் முழுமையாகக் கடைப்பிடித்தார். கடவுளை முழுமையாக அன்புசெய்த அவர் நமக்காகச் சிலுவையில் உயிர் துறந்து நம்மை இறுதிவரை அன்புசெய்ததைச் செயல்முறையில் காட்டினார். அதே அன்பு நம்மில் துலங்கிட வேண்டும்.

மன்றாட்டு:
இறைவா, எங்கள் சிந்தனை சொல் செயல் அனைத்தும் அன்பிலிருந்து பிறந்திட அருள்தாரும்.