பொதுக்காலம் - 20 ஆம் வாரம்

புதன் ஆகஸ்ட் , 22.08.2012


முதல் வாசகம்இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 34: 1-11

அந்நாள்களில் ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது. மானிடா! இஸ்ரயேலின் ஆயர்களுக்கு எதிராக இறைவாக்கு உரை. அவர்களுக்கு இறைவாக்கு உரைத்துச் சொல். தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: தாங்களே மேய்ந்துகொள்ளும் இஸ்ரயேலின் ஆயர்களுக்கு ஐயோ கேடு! ஆயர்கள் மந்தையையன்றோ மேய்க்க வேண்டும்! நீங்கள் கொழுப்பானதை உண்டு, ஆட்டு மயிராடையை உடுத்தி, மந்தையில் சிறந்ததை அடிக்கிறீர்கள். மந்தையையோ மேய்ப்பதில்லை. நீங்கள் நலிந்தவற்றைத் திடப்படுத்தவில்லை; பிணியுற்றவற்றிற்குக் குணமளிக்கவில்லை. காயமுற்றவற்றிற்குக் கட்டுப்போடவில்லை; வழி தப்பியவற்றைத் திரும்பக் கூட்டி வரவில்லை. காணாமல் போனவற்றைத் தேடவில்லை. ஆனால், அவற்றைக் கொடுமையுடனும் வன்முறையுடனும் நடத்தினீர்கள். ஆயன் இல்லாமையால் அவை அலைந்து திரிந்தன. அப்போது எல்லாக் காட்டு விலங்குகளுக்கும் அவை இரையாயின. என் ஆடுகள் எல்லா மலைகளிலும் உயர்ந்த குன்றுகளிலும் அலைந்து திரிந்தன. பூவுலகில் எவ்விடத்திலும் என் மந்தை சிதறுண்டு போனது; அதைத் தேடவோ கூட்டிச் சேர்க்கவோ எவரும் இலர். எனவே ஆயர்களே, ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள்: தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: என் மேல் ஆணை! என் மந்தை கொள்ளையிடப்பட்டது; எல்லாக் காட்டு விலங்குகளுக்கும் இரையானது. ஏனெனில் அதற்கு ஆயன் இல்லை. என் ஆயர்கள் என் மந்தையைத் தேடவில்லை. என் மந்தையை அவர்கள் மேய்க்காமல் தாங்களே மேய்ந்துகொள்கிறார்கள். எனவே, ஆயர்களே! ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள்: தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: நான் ஆயர்களுக்கு எதிராக இருக்கிறேன். என் மந்தையை அவர்களிடமிருந்து திரும்பப் பெற்றுக்கொள்வேன். மந்தை மேய்ப்பினின்று அவர்களை நீக்கி விடுவேன். எனவே தாங்களே மேய்ந்துகொள்ளும் அவர்கள் இனி என் மந்தையை மேய்க்க மாட்டார்கள். அவர்கள் வாயினின்று என் மந்தையை மீட்பேன். அவை இனி அவர்களுக்கு உணவாகா. எனவே, தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: நானே என் மந்தையைத் தேடிச்சென்று பேணிக் காப்பேன்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி
பதிலுரைப் பாடல்


திபா 23: 1-3ய. 3b-4. 5. 6 (பல்லவி: 1)

பல்லவி: ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை. 1 ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை. 2 பசும் புல்வெளிமீது எனை அவர் இளைப்பாறச் செய்வார்; அமைதியான நீர்நிலைகளுக்கு எனை அழைத்துச் செல்வார். 3ய அவர் எனக்குப் புத்துயிர் அளிப்பார். பல்லவி

3b தம் பெயர்க்கேற்ப எனை நீதிவழி நடத்திடுவார்; 4 மேலும், சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும், நீர் என்னோடு இருப்பதால் எத்தீங்கிற்கும் அஞ்சிடேன்; உம் கோலும் நெடுங்கழியும் என்னைத் தேற்றும். பல்லவி

5 என்னுடைய எதிரிகளின் கண்முன்னே எனக்கொரு விருந்தினை ஏற்பாடு செய்கின்றீர்; என் தலையில் நறுமணத் தைலம் பூசுகின்றீர்; எனது பாத்திரம் நிரம்பி வழிகின்றது. பல்லவி

16 ஏனெனில், பலியினால் உம்மை மகிழ்விக்க முடியாது; நான் எரிபலி செலுத்தினாலும் நீர் அதில் நாட்டங்கொள்வதில்லை. 17 கடவுளுக்கேற்ற பலி நொறுங்கிய நெஞ்சமே; கடவுளே! நொறுங்கிய, குற்றமுணர்ந்த உளத்தை நீர் அவமதிப்பதில்லை. பல்லவி

6 உண்மையாகவே, என் வாழ்நாள் எல்லாம் உம் அருள் நலமும் பேரன்பும் என்னைப் புடைசூழ்ந்து வரும்; நானும் ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் வாழ்ந்திருப்பேன். பல்லவி

35உன அவர்களது அழிவுநாள் அண்மையில் உள்ளது; அவர்களுக்கு வரப்போகும் கொடுமைகள் தீவிரமாகின்றன. 36யb அவர்கள் ஆற்றல் இழந்துவிட்டவர்கள் எனவும் அடிமையோ குடிமகனோ எவனுமில்லை எனவும் காணும்போது ஆண்டவரே அவர் மக்களுக்குத் தீர்ப்பிடுவார். பல்லவிநற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


எபி 4: 12 - அல்லேலூயா, அல்லேலூயா! கடவுளுடைய வார்த்தை உயிருள்ளது, ஆற்றல் வாய்ந்தது; உள்ளத்தின் சிந்தனைகளையும் நோக்கங்களையும் சீர்தூக்கிப் பார்க்கிறது. அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்


மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 20: 1-16

அக்காலத்தில் இயேசு கூறியது: ``விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம்: நிலக்கிழார் ஒருவர் தம் வேலையாள்களை வேலைக்கு அமர்த்த விடியற்காலையில் வெளியே சென்றார். அவர் நாளொன்றுக்கு ஒரு தெனாரியம் கூலி என வேலையாள்களுடன் ஒத்துக்கொண்டு அவர்களைத் தம் திராட்சைத் தோட்டத்துக்கு அனுப்பினார். ஏறக்குறைய காலை ஒன்பது மணிக்கு அவர் வெளியே சென்றபொழுது சந்தை வெளியில் வேறு சிலர் வேலையின்றி நிற்பதைக் கண்டார். அவர்களிடம், `நீங்களும் என் திராட்சைத் தோட்டத்துக்குப் போங்கள்; நேர்மையான கூலியை உங்களுக்குக் கொடுப்பேன்' என்றார். அவர்களும் சென்றார்கள். மீண்டும் ஏறக்குறைய பன்னிரண்டு மணிக்கும் பிற்பகல் மூன்று மணிக்கும் வெளியே சென்று அப்படியே செய்தார். ஏறக்குறைய ஐந்து மணிக்கும் வெளியே சென்று வேறு சிலர் நிற்பதைக் கண்டார். அவர்களிடம், `நாள் முழுவதும் வேலை செய்யாமல் ஏன் இங்கே நின்றுகொண்டிருக்கிறீர்கள்?' என்று கேட்டார். அவர்கள் அவரைப் பார்த்து, `எங்களை எவரும் வேலைக்கு அமர்த்தவில்லை' என்றார்கள். அவர் அவர்களிடம், `நீங்களும் என் திராட்சைத் தோட்டத்துக்குப் போங்கள்' என்றார். மாலையானதும் திராட்சைத் தோட்ட உரிமையாளர் தம் மேற்பார்வை யாளரிடம், `வேலையாள்களை அழைத்துக் கடைசியில் வந்தவர் தொடங்கி முதலில் வந்தவர்வரை அவர்களுக்குரிய கூலி கொடும்' என்றார். எனவே ஐந்து மணியளவில் வந்தவர்கள் ஒரு தெனாரியம் வீதம் பெற்றுக் கொண்டனர். அப்போது முதலில் வந்தவர்கள் தங்களுக்கு மிகுதியாகக் கிடைக்கும் என்று எண்ணினார்கள். ஆனால் அவர்களும் ஒரு தெனாரியம் வீதம்தான் பெற்றார்கள். அவர்கள் அதைப் பெற்றுக்கொண்டபோது அந்நிலக்கிழாருக்கு எதிராக முணுமுணுத்து, `கடைசியில் வந்த இவர்கள் ஒரு மணி நேரமே வேலை செய்தார்கள். பகல் முழுவதும் வேலைப் பளுவையும் கடும் வெயிலையும் தாங்கிய எங்களோடு இவர்களையும் இணையாக்கிவிட்டீரே' என்றார்கள். அவரோ அவர்களுள் ஒருவரைப் பார்த்து, `தோழரே, நான் உமக்கு அநியாயம் செய்யவில்லை. நீர் என்னிடம் ஒரு தெனாரியம் கூலிக்கு ஒத்துக்கொள்ளவில்லையா? உமக்குரியதைப் பெற்றுக்கொண்டு போய்விடும். உமக்குக் கொடுத்தபடியே கடைசியில் வந்த இவருக்கும் கொடுப்பது என் விருப்பம். எனக்குரியதை நான் என் விருப்பப்படி கொடுக்கக் கூடாதா? அல்லது நான் நல்லவனாய் இருப்பதால் உமக்குப் பொறாமையா?' என்றார். இவ்வாறு கடைசியானோர் முதன்மையாவர். முதன்மையானோர் கடைசியாவர்.''


- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
இன்றைய சிந்தனை


''நான் நல்லவனாய் இருப்பதால் உமக்குப் பொறாமையா?'' (மத்தேயு 20:16)

திராட்சைத் தோட்டத்தில் வேலைக்கு அமர்த்த நிலக்கிழார் வேலையாள்களைத் தேடிச்செல்கிறார். விடியற்காலையிலிருந்தே தொடங்கி, கதிரவன் மறையும் வரை வேலை செய்தவர்களும், காலை ஒன்பது மணி, நண்பகல், மாலை ஐந்து மணி என வெவ்வேறு நேரங்களில் வேலைக்குச் சேர்ந்தவர்களும் ஒரே கூலியைப் பெறுகின்றனர். நாள் முழுதும் வேலை செய்தவர்களுக்கும் ஒரு மணி நேரம் மட்டுமே வேலை செய்தவர்களுக்கும் சம கூலி வழங்குவது சரியா என்னும் கேள்வி எழுகிறது. அப்போது நிலக்கிழார் கேட்ட கேள்வி: ''நான் நல்லவனாய் இருப்பதால் உமக்குப் பொறாமையா?'' இயேசு கூறிய இந்த உவமையை வெவ்வேறு மட்டங்களில் விளக்கிப் பொருள் உரைக்கலாம். அக்காலத்தில் நிலவிய சமூக-பொருளாதார பழக்கவழக்கங்களின் பின்னணியில் இந்த உவமையைப் பார்க்கலாம். அன்றாடம் செய்கின்ற வேலைக்குக் கிடைக்கின்ற கூலியைக் கொண்டுதான் வேலையாள்கள் பிழைப்பு நடத்த வேண்டியிருந்தது. அதே நேரத்தில் பெரிய நிலங்களை உடைமையாகக் கொண்டவர்களும் இருந்தார்கள். கடவுளாட்சி பற்றி இயேசு இந்த உவமையைக் கூறியதால் அந்த ஆட்சியில் புகுவதற்கு அழைப்புப் பெற்றவர்கள் சிலர் முதலிலும் வேறு சிலர் வெகு நாள்கள் கடந்தும் நுழைந்திருக்கலாம். இஸ்ரயேலர் முதலில் வந்தனர், பிற இனத்தார் வந்துசேர நேரம் பிடித்தது. ஆனால், தம் ஆட்சியில் பங்கேற்போர் அனைவருக்கும் கடவுள் வழங்குகின்ற கொடை ஒரே தன்மையதுதான். காலையிலிருந்தே உழைத்த இஸ்ரயேலருக்கும், மாலை ஐந்து மணிக்கு வேலையில் சேர்ந்த பிற இனத்தாருக்கும் ஒரே கூலிதான். ஆனால், பின்னால் வந்தவர்களுக்கும் முன்னால் வந்தவர்களுக்கும் ஒரே சம ஊதியமே வழங்கும் கடவுள் நீதியின்றி செயல்படவில்லையா? -- கடவுளின் நீதி மனித நீதியைப் போன்றதல்ல. மனிதர் வழங்கும் நீதி வரையறைக்கு உட்பட்டது. ஆனால் கடவுள் வழங்கும் நீதி தாராள அன்பின் அடிப்படையில் அமைந்தது. கடவுளின் அன்புதான் அவருடைய நீதிக்கு அடிப்படை. எனவே, கடவுள் அநீதியாகச் செயல்படுகிறார் என்பதைவிட, தாராள உள்ளத்தோடு நடந்துகொள்கிறார் என்பதே உண்மை. கடவுளின் தாராள அன்பைக் கண்டு குறைகூறுவோர் உண்டு. அதாவது, அளவுக்கு மிஞ்சிய தாராளத்தைக் கடவுள் காண்பிப்பதால் அவர் அநீதியாக நடக்கிறார் என்று சிலர் குற்றம் சாட்டுவர். கடவுளின் நீதி மனித கணிப்புகளுக்கு அப்பாற்பட்டது என நாம் உணர வேண்டும். கடவுள் மக்களை வேறுபடுத்திப் பார்ப்பதில்லை; அதே நேரத்தில் அவருடைய கொடை எப்போதுமே தாராளமாக நமக்கு வழங்கப்படுகிறது. எனவே, கடவுளின் தாராளத்தைக் கண்டு நாம் பொறாமைப்படுதல் பொருத்தமாகாது.

மன்றாட்டு:
இறைவா, அன்பில் தோய்ந்த நீதிமுறையை நாங்கள் கடைப்பிடித்து வாழ அருள்தாரும்.