யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





திருவழிபாடு ஆண்டு - C
2025-04-20

(இன்றைய வாசகங்கள்: திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம். 10:34,37-43,பதிலுரைப்பாடல் 118: 1-2,16 – 17, 22-23,திருத்தூதர் பவுல் கொலோசையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 3:1-4,யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 20: 1-9)




என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '. என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '. என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '.


திருப்பலி முன்னுரை

உயிர்ப்புக்குரியவர்களே, நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து மரணத்தை வீழ்த்தி, வெற்றி வீரராக உயிர்த்தெழுந்த பெருவிழாவை நாம் இன்று கொண்டாடுகிறோம். உயிர்த்த இயேசுவுக்கு சாட்சிகளாக வாழ இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. கிறிஸ்துவின் உயிர்ப்புக்கு வானதூதர்கள் சான்று பகர்ந்தனர். வெறுமையாக இருந்த கல்லறையும் இயேசுவின் உயிர்ப்பை பறைசாற்றியது. உயிர்த்த இயேசுவை முதலில் கண்டவர் மகதலா மரியா என்று விவிலியம் கூறுகிறது. இயேசுவின் உயிர்ப்பை முதலில் நம்பத் தயங்கிய திருத் தூதர்களும் மற்ற சீடர்களும், தங்கள் உயிரையும் கையளித்து அவரது உயிர்ப்புக்கு சான்று பகர்ந்தனர். என்றென்றும் வாழ்பவராம் இறைமகன் இயேசுவுக்கு உலக முடிவு வரை சான்று பகரும் உயிர்ப்பின் மக்களாக வாழும் வரம் வேண்டி, நாம் இந்த திருப்பலியில் பங்கேற்போம்.



முதல் வாசகம்

இறந்த இயேசு உயிர்த்தெழுந்தபின்பு அவரோடு உண்டு, குடித்த நாங்களே இதற்குச் சாட்சிகள்.
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம். 10:34,37-43

அப்போது பேதரு பேசத் தொடங்கி, "கடவுள் ஆள் பார்த்துச் செயல்படுவதில்லை என்பதை நான் உண்மையாகவே உணர்கிறேன். திருமுழுக்குப் பெறுங்கள் என்று யோவான் பறைசாற்றியபின்பு கலிலேயாமுதல் யூதேயா முழுவதிலும் நடந்தது உங்களுக்குத் தெரியும். கடவுள் நாசரேத்து இயேசுவின்மேல் தூய ஆவியாரின் வல்லமையைப் பொழிந்தருளினார். கடவுள் அவரோடு இருந்தால் அலகையின் கொடுமைக்கு உட்பட்டிருந்த அனைவரையும் அவர் விடுவித்து எங்கும் நன்மை செய்து கொண்டே சென்றார். யூதரின் நாட்டுப் புறங்களிலும் எருசலேம் நகரிலும் அவர் செய்த அனைத்திற்கும் நாங்கள் சாட்சிகள். மக்கள் அவரைச் சிலுவையில் தொங்கவைத்துக் கொன்றார்கள்.ஆனால் கடவுள் அவரை மூன்றாம் நாள் உயிரோடு எழுப்பிக் காட்சி அளிக்கச் செய்தார். ஆயினும் அனைத்து மக்களுக்கு மல்ல, சாட்சிகளாகக் கடவுள் முன் தேர்ந்து கொண்டவர்களுக்கு மட்டுமே, அவர் காட்சியளித்தார். இறந்த அவர் உயிர்த்தெழுந்தபின்பு அவரோடு உண்டு, குடித்த நாங்களே இதற்குச் சாட்சிகள். மேலும் வாழ்வோருக்கும் இறந்தோருக்கும் நடுவராகக் கடவுளால் குறிக்கப்பட்டவர் இயேசுதாம் என்று மக்களுக்குப் பறைசாற்றவும் சான்று பகரவும் அவர் எங்களுக்குக் கட்டளையிட்டார். அவரிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் அவரது பெயரால் பாவமன்னிப்புப் பெறுவர் என்று இறைவாக்கினர் அனைவரும் அவரைக்குறித்துச் சான்று பகர்கின்றனர் " என்றார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

பல்லவி: ஆண்டவர் தோற்றுவித்த வெற்றியின் நாள் இதுவே; இன்று அக்களிப்போம்; அகமகிழ்வோம்.
பதிலுரைப்பாடல் 118: 1-2,16 – 17, 22-23

1 ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள், ஏனெனில் அவர் நல்லவர்: என்றென்றும் உள் ளது அவரது பேரன்பு. 2 'என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு' என் இஸ்ரயேல் மக்கள் சாற்றுவார்களாக! பல்லவி:

16 ஆண்டவரது வலக்கை உயர்ந்தோங்கி உள்ளது: ஆண்டவரது வலக்கை வலிமையாய்ச் செயலாற்றியுள்ளது. 17 நான் இறந்தொழியேன்: உயிர் வாழ்வேன்: ஆண்டவரின் செயல் களை விரித்துரைப்பேன்: பல்லவி:

22 கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று! 23 ஆண்டவரால் இது நிகழ்ந்துள்ளது! நம் கண்களுக்கு இது வியப்பாயிற்று! பல்லவி:

இரண்டாம் வாசகம்

மேலுலகு சார்ந்தவற்றை நாடுங்கள். அங்கு கிறிஸ்து அமர்ந்திருக்கிறார்.
திருத்தூதர் பவுல் கொலோசையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 3:1-4

நீங்கள் கிறிஸ்துவோடு உயிர் பெற்று எழுந்தவர்களானால் மேலுலகு சார்ந்தவற்றை நாடுங்கள். அங்குக் கிறிஸ்து கடவுளின் வலப்பக்கத்தில் அமர்ந்திருக்கிறார்.இவ்வுலகு சாhந்தவை பற்றி அல்ல, மேலுலகு சார்ந்தவை பற்றியே எண்ணுங்கள். ஏனெனில் நீங்கள் கிறிஸ்துவோடு இறந்துவிட்டீர்கள். உங்கள் வாழ்வு அவரோடு இணைந்து கடவுளிடம் மறைந்து இருக்கிறது.கிறிஸ்துவே உங்களுக்கு வாழ்வு அளிப்பவர். அவர் தோன்றும் பொழுது நீங்களும் அவரோடு மாட்சி பொருந்தியவராய்த் தோன்றுவீர்கள்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! 1 கொரி 5:7b-8b
நம் பாஸ்கா ஆடாகிய கிறிஸ்து பலியிடப்பட்டிருக்கிறார். ஆகையால் நாம் ஆண்டவரின் பாஸ்காவைக் கொண்டாடுவோமாக. அல்லேலூயா


நற்செய்தி வாசகம்

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 20: 1-9

வாரத்தின் முதல் நாளன்று விடியற் காலையில் இருள் நீங்கும் முன்பே மகதலா மரியா கல்லறைக்குச் சென்றார்: கல்லறை வாயிலில் இருந்த கல் அகற்றப்பட்டிருப்பதைக் கண்டார்.எனவே அவர் சீமோன் பேதுருவிடமும் இயேசு தனி அன்பு கொண்டிருந்த மற்றச் சீடரிடமும் வந்து,"ஆண்டவரைக் கல்லறையிலிருந்து யாரோ எடுத்துக் கொண்டு போய் விட்டனர்: அவரை எங்கே வைத்தனரோ,எங்களுக்குத் தெரியவில்லை!" என்றார்.இதைக் கேட்ட பேதுருவும் மற்றச் சீடரும் கல்லறைக்குப் புறப்பட்டனர்.இருவரும் ஒருமித்து ஓடினர். மற்றச் சீடர் பேதுருவை விட விரைவாக ஓடி முதலில் கல்லறையை அடைந்தார்.அவர் குனிந்து பார்த்தபோது துணிகள் கிடப்பதைக் கண்டார்: ஆனால் உள்ளே நுழையவில்லை.அவருக்குப் பின்னாலேயே சீமோன் பேதுருவும் வந்தார். நேரே அவர் கல்லறைக்குள் நுழைந்தார். அங்குத் துணிகளையும்,இயேசுவின் தலையை மூடியிருந்த துண்டையும் கண்டார். அத்துண்டு மற்றத் துணிகளோடு இல்லாமல் ஓரிடத்தில் தனியாகச் சுருட்டி வைக்கப்பட்டிருந்தது.பின்னர், கல்லறைக்கு முதலில் வந்து சேர்ந்த மற்றச் சீடரும் உள்ளே சென்றார், கண்டார்: நம்பினார்.இயேசு இறந்து உயிர்த்தெழ வேண்டும் என்னும் மறைநூல் வாக்கை அவர்கள் அதுவரை புரிந்துகொள்ளவில்லை.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




விசுவாசிகள் மன்றாட்டுகள்:


விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.


பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

உயிர் அளிப்பவராம் இறைவா,

உம் திருமகனின் உயிர்ப்பில் நம்பிக்கை கொண்டு தோன்றி வளர்ந்த திருச்சபை உலக மக்கள் அனைவராலும் ஏற்கப்பட்டு, புனிதமான மக்களை உமக்காக உருவாக்க வரமருள வேண்டுமென்று, உம்மை மன்றாடுகிறோம்.

உயிரே எம் இறைவா!

உமது பிள்ளைகளான எமது இயேசு நம்பிக்கையை இன்னும் ஆழப்படுத்தும், அவரால் அவருக்காக வாழ்கின்ற நாங்கள் உயிர்த்த எம்மவரை உரமுடன் அறிவித்திட வரமருள இறைவா, உம்மை வேண்டுகிறோம்.

எம் வாழ்வானவரின் தந்தையே இறைவா!

எமது வாழ்வும் வழியுமான இயேசு இறைவனை நாளும் பொழுதும் நாங்கள் அறிந்து, அவரை எம்மில் பொற்புடன் பொதிந்து கொள்ள வரம் தர இறைவா, உம்மையே வேண்டுகிறோம்.

தந்தையே இறைவா!

உம் திருமகனையும் அவரது உன்னத உயிர்ப்பையும் அறியாதவர்களுக்காக உம்மை வேண்டுகிறோம். உலகம் அனைத்தும் அவரையே தம் மீட்பராக ஏற்றிடவும், படைப்பனைத்தும் அவரில் பற்றாயிருக்கவும் உம்மை வேண்டுகிறோம்.

பேரின்பமே இறைவா!

அகில உலக இளையோருக்காக உம்மை மன்றாடுகிறோம். இவர்களில் எத்தனையோ பேர் இறைமகனை ஏற்காது, அழிந்து போகும் மாந்தரைத் தம் மீட்பர்களாகக் கண்டிடும் அவலம் நீங்கி, இறைமகனில் இனிமையைக் கண்டுணர வரம் தர இறைவா, உம்மையே வேண்டுகிறோம்.

இரக்கம் காட்டுபவராம் இறைவா,

எம்மை குணப்படுத்துவதற்காக காயப்பட்ட இயேசுவின் பாடுகள் வழியாக, எங்கள் உடல், உள்ள, ஆன்ம நோய்களை குணப்படுத்தி புது வாழ்வு அளிக்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

உயிர்த்த இயேசுவின் உயிரே எம் தந்தையே!

உமது உடனிருத்தலால் திடம் பெற்ற எம்மவர் எங்கும் நன்மைத்தனமே நடமாடச் செய்தார். உமது திருஅவையும் அதன் உழைப்பாளர்களும் இயேசுவின் நீட்சிகளாகத் துலங்கிட வரம் தர இறைவா, உம்மை வேண்டுகிறோம்.


இன்றைய சிந்தனை

அன்புக்கு என்றும் முடிவிராது!

இன்று புனித மகதலா மரியாவின் விழாவைக் கொண்டாடுகிறோம். அன்புக்கோர் இலக்கணமாய், எடுத்துக்காட்டாய்த் திகழ்கிறார் மகதலா மரியா. அவருக்காக இன்று இறைவனைப் போற்றுவோம். வரலாற்று இயேசுவைப் பலரும் அன்பு செய்தனர். அந்த அன்பைப் பல வழிகளில் வெளிப்படுத்தினர். புதிய ஏற்பாட்டில் இயேசுவை வெகுவாக அன்பு செய்த பலரையும் காண்கிறோம். இருப்பினும், அவர்கள் அனைவரிலும் தனித்துவம் மிக்கவராய் மிளிர்கிறார் மகதலா மரியா. அவருடைய அன்பை இன்று தியானிப்போம். மரியாவின் அன்பை நற்செய்தியாளர் யோவான் வெளிப்படுத்தும் பாணி உணர்வுமிக்கதாய் அமைந்துள்ளது. வாரத்தின் முதல் நாளன்று விடியற்காலையில், அதுவும் இருள் நீங்கும் முன்பே மரியா கல்லறைக்குச் சென்றார் என்னும் வரிகள் அவரது அன்பின் ஆழத்தை அருமையாக எடுத்துரைக்கின்றன. முந்தின நாள் ஓய்வுநாள் ஆனதால், இயேசுவின் உடலுக்கு நறுமணப் பொருள்கள் வைக்கும் பணியைச் செய்யமுடியவில்லை. எனவே, எப்போது ஓய்வுநாள் முடியும், எப்போது கல்லறைக்குச் செல்லலாம் என இரவு முழுவதும் ஆவலோடு காத்திருந்தார் போலும் மகதலா மரியா. ஆதலால்தான், அதிகாலையில், இருள் நீங்கும் முன்பே கல்லறைக்கு விரைந்து சென்றார்.

அவரது அன்பு உண்மையானது. அவரது அன்பு செயலில் வெளிப்பட்டது. அவரது அன்பு துணிவு மிக்கது. சிலுவை அடியிலும் அவர் அஞ்சவில்லை. கல்லறைக்குச் செல்லும்;போதும் பயப்படவில்லை. அவரது அன்பு சாவையும் வென்றது. வாழ்ந்தாலும், இறந்தாலும் நாம் ஆண்டவருக்கு உரியவர்கள் என்னும் இறைவாக்கைப் போன்று, வாழ்ந்த காலத்திலும் இயேசுவை அன்பு செய்தார். இறப்புக்குப் பின்னும் அந்த அன்பு தொடர்ந்தது. ஆம், அன்புக்கு என்றும் முடிவிராது. சாவு அன்பைப் பிரிக்க முடியாது என்று எண்பிக்கிறார் மகதலா மரியா.

மன்றாட்டு:

சாவை வென்றவரே இயேசுவே, இன்றைய நாளில் அன்பு சாவையும் வெல்லும் என்று எண்பித்த புனித மகதலா மரியாவுக்காக உம்மைப் போற்றுகிறேன். அவரைப் போலவே நானும் என் அன்பைத் துணிவுடன், உண்மையுடன், செயலாற்றலோடு வெளிப்படுத்த அருள் தாரும். யாரையெல்லாம் நான் அன்பு செய்கிறேனோ, அவர்களுக்கு என் அன்பை செயல் வடிவில் வெளிப்படுத்த எனக்கு அருள் தாரும்.