மூன்றாவது திருவழிபாடு ஆண்டு தவக்காலம் 2025-04-15
புனித வார செவ்வாய்
முதல் வாசகம்
உலகம் முழுவதும் என் மீட்பை அடைவதற்கு நான் உன்னைப் பிற இனத்தாருக்கு ஒளியாக ஏற்படுத்துவேன்.
ஏசாயா நூலிலிருந்து வாசகம் 49:1-6
தீவு நாட்டினரே, எனக்குச் செவிகொடுங்கள்; தொலைவாழ் மக்களினங்களே, கவனியுங்கள்; கருப்பையில் இருக்கும்போதே ஆண்டவர் என்னை அழைத்தார்; என் தாய் வயிற்றில் உருவாகும்போதே என் பெயர் சொல்லிக் கூப்பிட்டார். என் வாயைக் கூரான வாள்போன்று ஆக்கினார்; தம் கையின் நிழலால் என்னைப் பாதுகாத்தார்; என்னைப் பளபளக்கும் அம்பு ஆக்கினார்; தம் அம்பறாத் தூணியில் என்னை மறைத்துக்கொண்டார்.
அவர் என்னிடம், ‘நீயே என் ஊழியன், இஸ்ரயேலே! உன் வழியாய் நான் மாட்சியுறுவேன்’ என்றார். நானோ, ‘வீணாக நான் உழைத்தேன்; வெறுமையாகவும் பயனின்றியும் என் ஆற்றலைச் செலவழித்தேன்; ஆயினும் எனக்குரிய நீதி ஆண்டவரிடம் உள்ளது; என் பணிக்கான பரிசு என் கடவுளிடம் இருக்கின்றது’ என்றேன். யாக்கோபைத் தம்மிடம் கொண்டுவரவும், சிதறுண்ட இஸ்ரயேலை ஒன்றுதிரட்டவும் கருப்பையிலிருந்தே ஆண்டவர் என்னைத் தம் ஊழியனாக உருவாக்கினார்; ஆண்டவர் பார்வையில் நான் மதிப்புப் பெற்றவன்; என் கடவுளே என் ஆற்றல் ; அவர் இப்பொழுது உரைக்கிறார்: அவர் கூறுவது:
யாக்கோபின் குலங்களை நிலைநிறுத்துவதற்கும் இஸ்ரயேலில் காக்கப்பட்டோரைத் திருப்பிக் கொணர்வதற்கும் நீ என் ஊழியனாக இருப்பது எளிதன்றோ? உலகம் முழுவதும் என் மீட்பை அடைவதற்கு நான் உன்னைப் பிற இனத்தாருக்கு ஒளியாகவும் ஏற்படுத்துவேன்.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி
பதிலுரைப் பாடல்
பல்லவி: என் வாய் நாள்தோறும் உமது நீதியையும் நீர் அருளும் மீட்பையும் எடுத்துரைக்கும்
திருப்பாடல்கள் 7:1-6, 15, 17
1 ஆண்டவரே! உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன்; ஒருபோதும் நான் வெட்கமுற விடாதேயும்.2 உமது நீதிக்கேற்ப என்னை விடுவித்தருளும்; எனக்கு நீர் செவிசாய்த்து என்னை மீட்டுக் கொள்ளும். - பல்லவி
3 என் அடைக்கலப் பாறையாக நீர் இருந்தருளும்; கோட்டை அரணாயிருந்து என்னை மீட்டருளும்; ஏனெனில், நீர் எனக்குக் கற்பாறையாகவும் அரணாகவும் இருக்கின்றீர்.4 என் கடவுளே, பொல்லார் கையினின்று என்னைக் காத்தருளும்; நெறிகேடும் கொடுமையும் நிறைந்தோர் பிடியினின்று என்னைக் காத்தருளும். - பல்லவி
5 என் தலைவரே, நீரே என் நம்பிக்கை; ஆண்டவரே, இளமைமுதல் நீரே என் நம்பிக்கை. 6 பிறப்பிலிருந்து நான் உம்மைச் சார்ந்துள்ளேன்; தாய் வயிற்றிலிருந்து நீர் என்னைப் பிரித்தெடுத்தீர்; உம்மையே நான் எப்போதும் புகழ்ந்து போற்றுவேன். - பல்லவி
15 என் வாய் நாள்தோறும் உமது நீதியையும் நீர் அருளும் மீட்பையும் எடுத்துரைக்கும்; உம் அருட் செயல்களை என்னால் கணிக்க இயலாது. - பல்லவி
17 கடவுளே, என் இளமைமுதல் எனக்குக் கற்பித்து வந்தீர்; இனிவரும் நாள்களிலும் உம் வியத்தகு செயல்களை அறிவிப்பேன். - பல்லவி
நற்செய்திக்கு முன் வசனம்
பரம தந்தைக்குக் கீழ்ப்படிகின்ற எங்கள் அரசரே, போற்றப் பெறுக; அடிக்கக் கொண்டுபோகப்படும் சாந்தமான செம்மறிபோல நீர் சிலுவையில் அறையப்படக் கொண்டு செல்லப்படுகிறீர்.
நற்செய்தி வாசகம்
யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13:21-33, 36-38
அக்காலத்தில்
தம் சீடர்களுடன் பந்தியமர்ந்த இயேசு உள்ளம் கலங்கியவராய், “உங்களுள் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்” என்று திட்டவட்டமாகக் கூறினார். யாரைப்பற்றி அவர் இப்படிக் கூறினார் என்று தெரியாமல் சீடர்கள் குழப்பமுற்று ஒருவரை ஒருவர் நோக்கினார்கள்.
இயேசுவின் சீடருள் ஒருவர் அவர் அருகில் அவர் மார்புப் பக்கமாய்ச் சாய்ந்திருந்தார். அவர்மேல் இயேசு அன்புகொண்டிருந்தார். சீமோன் பேதுரு அவருக்குச் சைகை காட்டி, “யாரைப்பற்றிக் கூறுகிறார் எனக் கேள்” என்றார். இயேசுவின் அருகில் அவர் மார்புப் பக்கமாய்ச் சாய்ந்திருந்த அவர், “ஆண்டவரே அவன் யார்?” என்று கேட்டார். இயேசு மறுமொழியாக, “நான் யாருக்கு அப்பத் துண்டைத் தோய்த்துக் கொடுக்கிறேனோ அவன்தான்” எனச் சொல்லி, அப்பத் துண்டைத் தோய்த்துச் சீமோன் இஸ்காரியோத்தின் மகனாகிய யூதாசுக்குக் கொடுத்தார். அவன் அப்பத் துண்டைப் பெற்றதும் சாத்தான் அவனுக்குள் நுழைந்தான்.
இயேசு அவனிடம், “நீ செய்ய இருப்பதை விரைவில் செய்” என்றார். இயேசு ஏன் அவனிடம் இப்படிக் கூறினார் என்பதைப் பந்தியில் அமர்ந்திருந்தோர் யாரும் புரிந்துகொள்ளவில்லை. பணப்பை யூதாசிடம் இருந்ததால், திருவிழாவுக்குத் தேவையானதை வாங்கவோ ஏழைகளுக்கு ஏதாவது கொடுக்கவோ இயேசு அவனிடம் கூறியிருக்கலாம் என்று சிலர் நினைத்துக்கொண்டனர். யூதாசு அப்பத் துண்டைப் பெற்றுக் கொண்டவுடன் வெளியே போனான். அது இரவு நேரம்.
அவன் வெளியே போனபின் இயேசு, “இப்போது மானிடமகன் மாட்சி பெற்றுள்ளார். அவர் வழியாகக் கடவுளும் மாட்சி பெற்றுள்ளார். கடவுள் அவர் வழியாக மாட்சி பெற்றாரானால் கடவுளும் தம் வழியாய் அவரை மாட்சிப்படுத்துவார்; அதையும் உடனே செய்வார். பிள்ளைகளே, இன்னும் சிறிது காலமே உங்களோடு இருப்பேன். நீங்கள் என்னைத் தேடுவீர்கள். ஆனால் நான் போகும் இடத்திற்கு உங்களால் வர இயலாது. இதையே யூதர்களுக்குச் சொன்னேன்; இப்போது உங்களுக்கும் சொல்கிறேன்” என்றார்.
சீமோன் பேதுரு இயேசுவிடம், “ஆண்டவரே, நீர் எங்கே போகிறீர்?” என்று கேட்டார். இயேசு மறுமொழியாக, “நான் போகுமிடத்திற்கு என்னைப் பின்தொடர்ந்து வர இப்போது உன்னால் இயலாது; பின்னரே என்னைப் பின்தொடர்வாய்” என்றார். பேதுரு அவரிடம், “ஆண்டவரே ஏன் இப்போது நான் உம்மைப் பின்தொடர இயலாது? உமக்காக என் உயிரையும் கொடுப்பேன்” என்றார். இயேசு அவரைப் பார்த்து, “எனக்காக உயிரையும் கொடுப்பாயோ? நீ மும்முறை என்னை மறுதலிக்குமுன் சேவல் கூவாது என உறுதியாக உனக்குச் சொல்கிறேன்” என்றார்.
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
|
இன்றைய சிந்தனை
ஆண்டவரின் பாடுகளின் ஞாயிறு !
இன்று குருத்து ஞாயிறு என்று நாம் சொல்லிக்கொண்டாலும், திருவழிபாட்டு முறைமைப்படி இன்றைய நாள் ஆண்டவரின் பாடுகளின் ஞாயிறு என்றுதான் அழைக்கப்படுகிறது. ஆண்டவருடைய துன்பங்களையும், இறப்பையும் பற்றி இந்த வாரம் முழுவதும் நாம் சிந்திக்க இருக்கிறோம்.
இந்த வாரம் முழுவதுமே நமது சிந்தனைக்காக இயேசுவின் தற்கையளிப்பை எடுத்துக்கொள்வோம். பொதுவாகவே, ஒரு மனிதர் எப்படி வாழ்கிறாரோ, அப்படித்தான் இறக்கிறார். இயேசுவும் அப்படியே! அவர் வாழ்ந்தபோது, தன்னை முழுமையாக இறைவனுக்குக் கையளித்தார். இறந்தபோதும் அவ்வாறே. மனித ஆளுமையை நாம் ஐந்து கூறுகள் கொண்டதாக வகைப்படுத்தலாம். அவை: 1. உடல் 2. மனம் 3. ஆன்மா 4. உணர்வுகள் 5. உயிராற்றல். இந்த ஐந்தினையும் நாம் இறைவன்பால் எழுப்புகின்றபோதுதான், நமது செபம், இறையொன்றிப்பு, அல்லது அர்ப்பணம் முழுமையாகும். இந்த வாரம் முழுவதும் இயேசு இந்த ஐந்து நிலைகளிலும் எவ்வாறு தன்னை முழுமையாகத் தந்தை இறைவனுக்கு ஒப்புக்கொடுத்தார் என்று சிந்திப்போம்.
இயேசு தன் உடலை ஒப்புக்கொடுத்தார்:
நம்மை அடையாளப்படுத்தும் மிகப்பெரும் அடையாளம் நமது உடல்தான். ஆனால், நம் உடல் நமக்குச் சொந்தமல்ல. அது #8220;ஆண்டவருக்கே உரியது. ஆண்டவரும் உடலுக்கே உரியவர்” (1 கொரி 6:13 ஆ). எனவேதான், #8220;கிறிஸ்து உலகிற்கு வந்தபோது, ‘பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பவில்லை. ஆனால், ஓர் உடலை எனக்கு அமைத்துத் தந்தீர். எரிபலிகளும் பாவம் போக்கும் பலிகளும் உமக்கு உகந்தவையல்ல. எனவே, நான் கூறியது: என் கடவுளே, உமது திருவுளத்தை நிறைவேற்ற இதோ வருகின்றேன்’ என்கிறார்” (எபி 10:5-7) என்று எபிரேயர் திருமடல் சொல்கிறது. மேலும், #8220;இந்தத் திருவுளத்தால்தான் இயேசு கிறிஸ்து ஒரே ஒருமுறை தம் உடலைப் பலியாகச் செலுத்தியதின் மூலம் நாம் துhயவராக்கப்பட்டிருக்கிறோம்” (எபி 10:10). இது இயேசுவின் அர்ப்பணத்தின் முதல் படி. இயேசு தனது உடலைத் தனதெனக் கருதாமல், தந்தை இறைவனுக்கு உரியது என்றே வாழ்ந்தார். அவரது திருவுளத்தை நிறைவேற்றுவதற்கு மட்டுமே தன் உடலைப் பயன்படுத்தினார். இறுதியாக, தனது உடலைப் பலியாக ஒப்புக்கொடுத்தார்.
மன்றாட்டு:
எங்களை உமது மாட்சியின் பங்குதாரர்களாக அழைக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறோம். நீர் உமது உடலை இறைவனின் ஆலயமாக மாற்றியதுபோல, நாங்களும் எங்கள் உடலை உம்மை மாட்சிமைப்படுத்த பயன்படுத்துவோமாக ! உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.
|