முதலாவது திருவழிபாடு ஆண்டு கிறீஸ்து பிறப்புக்காலம் 1வது வாரம் வியாழக்கிழமை 2024-12-31
புனித சில்வெஸ்ரர்
முதல் வாசகம்
நீங்கள் அனைவரும் தூயவரால் அருள்பொழிவு பெற்றிருக்கிறீர்கள்.
திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 2: 18-21
குழந்தைகளே, இதுவே இறுதிக் காலம். எதிர்க் கிறிஸ்து வருவதாக நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களே! இப்போது எதிர்க் கிறிஸ்துகள் பலர் தோன்றியுள்ளனர். ஆகவே இறுதிக் காலம் இதுவே என அறிகிறோம்.
இவர்கள் நம்மிடமிருந்து பிரிந்தவர்கள்; உண்மையில் இவர்கள் நம்மைச் சேர்ந்தவர்களே அல்ல; நம்மைச் சேர்ந்தவர்களாக இருந்திருந்தால் நம்மோடு சேர்ந்தே இருந்திருப்பார்கள். ஆகையால் இவர்கள் நம்மைச் சேர்ந்தவர்கள் அல்ல என்பது வெள்ளிடைமலை.
நீங்கள் தூயவரால் அருள்பொழிவு பெற்றிருக்கிறீர்கள். ஆகையால் நீங்கள் அறிவு பெற்றுள்ளீர்கள். நீங்கள் உண்மையை அறியவில்லை என்பதால் நான் உங்களுக்கு எழுதவில்லை; மாறாக, அதை அறிந்துள்ளீர்கள் என்பதாலும் பொய் எதுவும் உண்மையிலிருந்து வராது என்பதாலுமே நான் எழுதியுள்ளேன்.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி
பதிலுரைப் பாடல்
: விண்ணுலகம் மகிழ்வதாக; மண்ணுலகம் களிகூர்வதாக.
திருப்பாடல் 96: 1-2. 11-12. 13
1 ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; உலகெங்கும் வாழ்வோரே, ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்; 2 ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்; அவர் பெயரை வாழ்த்துங்கள்; அவர் தரும் மீட்பை நாள்தோறும் அறிவியுங்கள். பல்லவி
11 விண்ணுலகம் மகிழ்வதாக; மண்ணுலகம் களிகூர்வதாக; கடலும் அதில் நிறைந்துள்ளனவும் முழங்கட்டும். 12 வயல்வெளியும் அதில் உள்ள அனைத்தும் களிகூரட்டும்; அப்பொழுது, காட்டில் உள்ள அனைத்து மரங்களும் அவர் திருமுன் களிப்புடன் பாடும். பல்லவி
13 ஏனெனில் அவர் வருகின்றார்; மண்ணுலகிற்கு நீதித் தீர்ப்பு வழங்க வருகின்றார்; நிலவுலகை நீதியுடனும் மக்களினங்களை உண்மையுடனும் அவர் தீர்ப்பிடுவார். பல்லவி
நற்செய்திக்கு முன் வசனம்
வாக்கு மனிதர் ஆனார். �
நற்செய்தி வாசகம்
யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 1-18
தொடக்கத்தில் வாக்கு இருந்தது; அவ்வாக்கு கடவுளோடு இருந்தது; அவ்வாக்கு கடவுளாயும் இருந்தது. வாக்கு என்னும் அவரே தொடக்கத்தில் கடவுளோடு இருந்தார். அனைத்தும் அவரால் உண்டாயின; உண்டானது எதுவும் அவரால் அன்றி உண்டாகவில்லை.
அவரிடம் வாழ்வு இருந்தது; அவ்வாழ்வு மனிதருக்கு ஒளியாய் இருந்தது. அந்த ஒளி இருளில் ஒளிர்ந்தது; இருள் அதன்மேல் வெற்றி கொள்ளவில்லை.
கடவுள் அனுப்பிய ஒருவர் இருந்தார்; அவர் பெயர் யோவான். அவர் சான்று பகருமாறு வந்தார். அனைவரும் தம் வழியாக நம்புமாறு அவர் ஒளியைக் குறித்துச் சான்று பகர்ந்தார். அவர் அந்த ஒளி அல்ல; மாறாக, ஒளியைக் குறித்துச் சான்று பகர வந்தவர். அனைத்து மனிதரையும் ஒளிர்விக்கும் உண்மையான ஒளி உலகிற்கு வந்துகொண்டிருந்தது. ஒளியான அவர் உலகில் இருந்தார். உலகு அவரால்தான் உண்டானது. ஆனால் உலகு அவரை அறிந்துகொள்ள வில்லை. அவர் தமக்குரியவர்களிடம் வந்தார். அவருக்கு உரியவர்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.
அவரிடம் நம்பிக்கை கொண்டு அவரை ஏற்றுக்கொண்ட ஒவ்வொருவருக்கும் அவர் கடவுளின் பிள்ளைகள் ஆகும் உரிமையை அளித்தார். அவர்கள் இரத்தத்தினாலோ உடல் இச்சையினாலோ ஆண்மகன் விருப்பத்தினாலோ பிறந்தவர்கள் அல்ல; மாறாகக் கடவுளால் பிறந்தவர்கள்.
வாக்கு மனிதர் ஆனார்; நம்மிடையே குடிகொண்டார். அவரது மாட்சியை நாங்கள் கண்டோம். அருளும் உண்மையும் நிறைந்து விளங்கிய அவர் தந்தையின் ஒரே மகன் என்னும் நிலையில் இம்மாட்சியைப் பெற்றிருந்தார்.
யோவான் அவரைக் குறித்து, �எனக்குப்பின் வரும் இவர் என்னைவிட முன்னிடம் பெற்றவர்; ஏனெனில், எனக்கு முன்பே இருந்தார் என்று நான் இவரைப்பற்றியே சொன்னேன்'' என உரத்த குரலில் சான்று பகர்ந்தார்.
இவரது நிறைவிலிருந்து நாம் யாவரும் நிறைவாக அருள் பெற்றுள்ளோம். திருச்சட்டம் மோசே வழியாகக் கொடுக்கப்பட்டது; அருளும் உண்மையும் இயேசு கிறிஸ்து வழியாய் வெளிப்பட்டன. கடவுளை யாரும் என்றுமே கண்டதில்லை; தந்தையின் நெஞ்சத்திற்கு நெருக்கமானவரும் கடவுள்தன்மை கொண்டவருமான ஒரே மகனே அவரை வெளிப்படுத்தியுள்ளார்.
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
|
இன்றைய சிந்தனை
நன்றி கூறுவோம் !
இன்று ஆண்டின் இறுதி நாள்! இறைவனுக்கு நன்றி கூறும் நாள். இந்த ஆண்டைக் கொஞ்சம் திரும்பிப் பார்த்து அதன் நன்மைகளுக்காக, ஆசிர்வாதங்களுக்காக, வெற்றிகளுக்காக நன்றி கூறும் நாள். இந்த நாளில் ஆண்டு முழுவதும் நம்மை அரவணைத்த அன்பு இறைவனைப் போற்றுவோம். இந்த ஆண்டில் நாம் அடைந்த வளர்ச்சிகளுக்காக நன்றி கூறுவோம்.
இந்த ஆண்டின் தவறுகள், தோல்விகள், நோய்கள், இன்னல்களையும் நினைத்துப் பார்ப்போம். அவற்றிலிருந்து சில பாடங்களைக் கற்றுக்கொள்வது நல்லது. எந்தத் தோல்வியிலிருந்தும், தவறிலிருந்தும் நாம் நன்மைகளை அடையலாம். முதலில், தவறுகளை, தோல்விகளை ஏற்றுக்கொள்வோம். தோல்வி என்பது யாருக்கும் நேர்வதுதான். அதில் தவறில்லை. தோல்வியிலேயே துவண்டுவிடுவதுதான் தவறு. அடுத்து, அந்தத் தோல்விகள், தவறுகள் ஏன் நிகழ்ந்தன என எண்ணிப்பார்ப்பதும், ஆய்வு செய்வதும் நன்று. இவையும் நமக்கு உதவும். மூன்றாவதாக, இனி இத்தகைய தோல்விகள், தவறுகள் நேராதபடி கவனமாயிருக்க உறுதி பூணுவோம். இந்த ஆண்டின் இறுதி நாளை மகிழ்ச்சியுடன் கழிப்போம்.
மன்றாட்டு:
தொடக்கமும், முடிவுமான இறைவா, இந்த ஆண்டின் இறுதி நாளில் நன்றியோடு உம்மைப் போற்றுகிறேன். இந்த ஆண்டு முழுவதும் காத்துக்கொண்டீரெ, உடலுக்கும், உள்ளத்துக்கும் நலம் தந்தீரே. வெற்றிகளும், பெருமைகளும், ஆசிகளும் தந்தீரே, உமக்கு நன்றி. இந்த ஆண்டில் நான் செய்த தவறுகள், செய்யத் தவறிய நன்மைகளுக்காக வருந்துகிறேன். மன்னியும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.
|