திருவழிபாடு ஆண்டு - C திருக்குடும்பப் பெருவிழா 1வது வாரம் ஞாயிற்றுக்கிழமை 2024-12-29
முதல் வாசகம்
அவன் தன் வாழ்நாள் அனைத்தும் ஆண்டவருக்கே அர்ப்பணிக்கப்பட்டவன்
சாமுவேல் முதல் நூலிலிருந்து வாசகம். 1:20-22.24-28
உரிய காலத்தில் அன்னா கருவுற்று ஒரு மகனைப் பெற்றெடுத்தார். “நான் அவனை ஆண்டவரிடமிருந்து கேட்டேன்'' என்று சொல்லி, அவர் அவனுக்குச் `சாமுவேல்' என்று பெயரிட்டார். எல்கானாவும் அவர் வீட்டார் அனைவரும் ஆண்டவருக்குத் தங்கள் ஆண்டுப் பலியையும் பொருத்தனையையும் செலுத்தச் சென்றார்கள். ஆனால், அன்னா செல்லவில்லை.அவர் தம் கணவரிடம், “பையன் பால்குடி மறந்ததும் அவனை எடுத்துச் செல்வேன். அவன் ஆண்டவர் திருமுன் சென்று என்றும் அங்கே தங்கியிருப்பான்'' என்று சொன்னார். அவன் பால்குடி மறந்ததும், அன்னா அவனைத் தூக்கிக்கொண்டு மூன்று காளை, இருபது படி அளவுள்ள ஒரு மரக்கால் மாவு, ஒரு தோல்பை திராட்சை இரசம் ஆகியவற்றுடன் சீலோவிலிருந்து ஆண்டவரின் இல்லத்திற்கு வந்தார். அவன் இன்னும் சிறு பையனாகவே இருந்தான். அவர்கள் காளையைப் பலியிட்ட பின், பையனை ஏலியிடம் கொண்டு வந்தார்கள். பின் அவர் கூறியது: “என் தலைவரே! உம் மீது ஆணை! என் தலைவரே! உம்முன் நின்று ஆண்டவரிடம் வேண்டிக்கொண்டிருந்த பெண் நானே. இப்பையனுக்காகவே நான் வேண்டிக்கொண்டேன். நான் ஆண்டவரிடம் விண்ணப்பித்த என் வேண்டுகோளை அவர் கேட்டருளினார்.ஆகவே நான் அவனை ஆண்டவருக்கு அர்ப்பணிக்கிறேன். அவன் தன் வாழ்நாள் அனைத்தும் ஆண்டவருக்கே அர்ப்பணிக்கப்பட்டவன்.'' அங்கே அவர்கள் ஆண்டவரைத் தொழுதார்கள்.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி
பதிலுரைப் பாடல்
பல்லவி:ஆண்டவரே உமது இல்லத்தில் தங்கியிருப்போர் நற்பேறு பெற்றோர்
பதிலுரைப்பாடல் 84: 1-2. 4-5. 8-9
படைகளின் ஆண்டவரே! உமது உறைவிடம் எத்துணை அருமையானது! என் ஆன்மா ஆண்டவரின் கோவில் முற்றங்களுக்காக ஏங்கித் தவிக்கின்றது: என் உள்ளமும் உடலும் என்றுமுள இறைவனை மகிழ்ச்சியுடன் பாடுகின்றது.பல்லவி
உமது இல்லத்தில் தங்கியிருப்போர் நற்பேறு பெற்றோர்: அவர்கள் எந்நாளும் உம்மைப் புகழ்ந்து கொண்டேயிருப்பார்கள். உம்மிடருந்து வலிமை பெற்ற மானிடர் பேறு பெற்றோர்: அவர்களது உள்ளம் சீயோனுக்குச் செல்லும் நெடுஞ்சாலைகளை நோக்கியே உள்ளது.பல்லவி
படைகளின் ஆண்டவரே, என் விண்ணப்பத்தைக் கேட்டருளும்! யாக்கோபின் கடவுளே! எனக்குச் செவிசாய்த்தருளும்! எங்கள் கேடயமாகிய கடவுளே, கண்ணோக்கும்! நீர் திருப்பொழிவு செய்தவரின் முகத்தைக் கணிவுடன் பாரும்!பல்லவி
இரண்டாம் வாசகம் நாம் கடவுளின் மக்களென அழைக்கப்படுகிறோம்: கடவுளின் மக்களாகவே இருக்கிறோம். யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 3:1-2.21-24அன்பார்ந்தவர்களே, நம் தந்தை நம்மிடம் எத்துணை அன்பு கொண்டுள்ளார் என்று பாருங்கள். நாம் கடவுளின் மக்களென அழைக்கப்படுகிறோம்; கடவுளின் மக்களாகவே இருக்கிறோம். உலகம் அவரை அறிந்துகொள்ளாததால் தான் நம்மையும் அறிந்துகொள்ளவில்லை. என் அன்பார்ந்தவர்களே, இப்போது நாம் கடவுளின் பிள்ளைகளாய் இருக்கிறோம். இனி எத்தன்மையராய் இருப்போம் என்பது இன்னும் வெளிப்படவில்லை. ஆனால் அவர் தோன்றும்போது நாமும் அவரைப்போல் இருப்போம்; ஏனெனில் அவர் இருப்பதுபோல் அவரைக் காண்போம். அன்பார்ந்தவர்களே, நம் மனச்சான்று நாம் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்காதிருந்தால் நாம் கடவுள் திருமுன் உறுதியான நம்பிக்கை கொண்டிருக்க முடியும். அவரிடம் நாம் எதைக் கேட்டாலும் பெற்றுக் கொள்வோம்; ஏனெனில் அவர் கட்டளைகளைக் கடைப்பிடிக்கிறோம்; அவர் திருமுன் அவருக்கு உகந்தவற்றையே செய்து வருகிறோம். கடவுள் நமக்குக் கொடுத்த கட்டளைப்படி, அவருடைய மகன் இயேசு கிறிஸ்துவிடம் நம்பிக்கை கொண்டு, ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்த வேண்டும். இதுவே அவரது கட்டளை. கடவுளுடைய கட்டளைகளைக் கடைப்பிடிப்பவர் அவரோடு இணைந்திருக்கிறார்; கடவுளும் அவரோடு இணைந்திருக்கிறார். கடவுள் நம்மோடு இணைந்திருக்கிறார் என்பதை அவர் நமக்கு அருளிய தூய ஆவியால் அறிந்துகொள்கிறோம். - இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு- இறைவா உமக்கு நன்றி
நற்செய்திக்கு முன் வசனம்
உம் திருமகனின் வார்த்தைகளை மனத்தில் இருத்தும்படி ஆண்டவரே எங்கள் இதயத்தைத் திறந்தருளும்.
நற்செய்தி வாசகம்
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2:41-52
ஆண்டுதோறும் இயேசுவின் பெற்றோர் பாஸ்கா விழாவைக் கொண்டாட எருசலேமுக்குப் போவார்கள்; இயேசுவுக்குப் பன்னிரண்டு வயது ஆனபோது, வழக்கப்படி விழாவைக் கொண்டாட எருசலேம் சென்றனர். விழா நாள்கள் முடிந்து அவர்கள் திரும்பியபோது, சிறுவன் இயேசு எருசலேமில் தங்கிவிட்டார். இது அவருடைய பெற்றோருக்குத் தெரியாது; பயணிகள் கூட்டத்தில் அவர் இருப்பார் என்று எண்ணினர். ஒருநாள் பயணம் முடிந்தபின்பு உறவினரிடையேயும் அறிமுகமானவர்களிடையேயும் அவரைத் தேடினர்; அவரைக் காணாததால் அவரைத் தேடிக்கொண்டு எருசலேமுக்குத் திரும்பிச் சென்றார்கள். மூன்று நாள்களுக்குப் பின் அவரைக் கோவிலில் கண்டார்கள். அங்கே அவர் போதகர்கள் நடுவில் அமர்ந்து அவர்கள் சொல்வதைக் கேட்டுக் கொண்டும் அவர்களிடம் கேள்விகளை எழுப்பிக்கொண்டும் இருந்தார். அவற்றைக் கேட்ட அனைவரும் அவருடைய புரிந்துகொள்ளும் திறனையும் அவர் அளித்த பதில்களையும் கண்டு மலைத்துப் போயினர். அவருடைய பெற்றோரும் அவரைக் கண்டு வியப்பில் ஆழ்ந்தனர். அப்பொழுது அவருடைய தாய் அவரை நோக்கி, “மகனே, ஏன் இப்படிச் செய்தாய்? இதோ பார், உன் தந்தையும் நானும் உன்னை மிகுந்த கவலையோடு தேடிக்கொண்டிருந்தோமே'' என்றார். அவர் அவர்களிடம், “நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள்? நான் என் தந்தையின் அலுவல்களில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியாதா?'' என்றார். அவர் சொன்னதை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை. பின்பு அவர் அவர்களுடன் சென்று நாசரேத்தை அடைந்து அவர்களுக்குப் பணிந்து நடந்தார். அவருடைய தாய் இந்நிகழ்ச்சிகளையெல்லாம் தமது உள்ளத்தில் பதித்து வைத்திருந்தார். இயேசு ஞானத்திலும் உடல் வளர்ச்சியிலும் மிகுந்து கடவுளுக்கும் மனிதருக்கும் உகந்தவராய் வாழ்ந்து வந்தார்.
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
|
இன்றைய சிந்தனை
''இம்மீட்பே பிற இனத்தாருக்கு வெளிப்பாடு அருளும் ஒளி'' (லூக்கா 2:32)
இயேசுவைக் கோவிலில் அர்ப்பணிக்க அவருடைய பெற்றோர் கொண்டு செல்கின்றனர். அவ்வேளையில் சிமியோன் என்னும் இறையடியார் கடவுளைப் போற்றிப் புகழ்ந்து பாடிய பாடலை லூக்கா தருகிறார் (லூக் 2:28-32). இப்பாடல் கடவுளின் வல்லமை மிக்க செயல்களைப் போற்றுவதோடு அவரிடமிருந்து வருகின்ற ''ஒளி'' பற்றியும் பறைசாற்றுகிறது. கடவுளை ஒளியாகப் பாhக்கின்ற முறை விவிலியத்தில் ஆங்காங்கே காணப்படுகிறது. இயேசு இவ்வுலகில் ஒளியாக வந்தார் என யோவான் விவரிக்கிறார் (யோவா 1:9-10). ஒளி இருளை அகற்றுகிறது; நமக்கு வெளிச்சம் தருகிறது. வெறும் பொருண்மையளவிலான ஒளிக்கு இந்த சக்தி உண்டு என்றால் கடவுள் உள்ளொளியாக வரும்போது நம் அக இருள் அகல்வதை நாம் உள்ளத்தில் உணரலாம்.
இருள் நம்மைவிட்டு அகலும்போது நம் பார்வை தெளிவுபெறும். நம் வாழ்விலும் நம்மைச் சூழ்ந்திருப்போர் வாழ்விலும் கடவுளின் செயல் துலங்குவதை நாம் காண்போம். அப்போது நம் குறுகிய பார்வை விரிவுபெறும். கடவுளின் பார்வை நமதாக மாறும். அனைத்துமே ஒரு புதிய ஒளியில் தோன்றும்போது நமது பழைய கண்ணோட்டங்களும் மதிப்பீடுகளும் மறைந்துபோய் புதியதொரு நிலைக்கு நாம் ஏறிச் செல்ல முடியும். பிற இனத்தைச் சார்ந்த நாம் இனி கடவுளின் குடும்ப உறுப்பினராக மாறிவிட்டதால் நம்மில் அவருடைய ஒளி பளிச்சிட்டு விளங்கிட நம்மையே அவரிடம் கையளிப்பது தேவை. அங்கே கடவுள் என்னும் வெளிப்பாடு தோன்றும். அது நம்மை உள்ளத்தையும் வாழ்வையும் ஒளிர்விக்கும். இவ்வாறு ஒளிபெற்ற நாம் ஒருவர் ஒருவருக்கு ஒளியாகிட அழைக்கப்படுகிறோம். கிறிஸ்து என்னும் ஒளியில் ஒளிர்கின்ற மனிதர் இருளை அகற்றும் கருவிகளாக மாறுவர். மெழுகுதிரி ஏற்றப்பட்டு, பிற திரிகளையும் ஏற்றுகின்ற திறம் பெறுவதுபோல நம் வாழ்வு அமைய வேண்டும். அப்போது கிறிஸ்துவின் ஒளி எங்கும் பரவும்; மனிதரும் கடவுளின் வெளிப்பாட்டினைத் தம் உள்ளத்திலும் இல்லத்திலும் சமூக வாழ்விலும் அனுபவித்து அறிவர்.
மன்றாட்டு:
இறைவா, உம் ஒளியில் நாங்கள் வழிநடக்க அருள்தாரும்.
|