இரண்டாவது திருவழிபாடு ஆண்டு திருவருகைக்காலம் 3வது வாரம் வியாழக்கிழமை 2024-12-19
முதல் வாசகம்
சிம்சோனின் பிறப்பு முன்னறிவிக்கப்படுகிறது.
நீதித்தலைவர்கள் நூலிலிருந்து வாசகம் 13: 2-7, 24-25
அந்நாள்களில் சோராவைச் சார்ந்தவரும் தாண் குலத்தவருமான ஒருவர் இருந்தார். அவர் பெயர் மனோவாகு. அவர் மனைவி மலடியாய் இருந்ததால், குழந்தை பெறவில்லை. ஆண்டவரின் தூதர் அப்பெண்ணுக்குத் தோன்றி அவரிடம், �நீ மலடியாய் இருந்ததால் இதுவரை குழந்தை பெற்றெடுக்கவில்லை.
ஆனால், இனி நீ கருவுற்று ஒரு மகனைப் பெற்றெடுப்பாய். இப்பொழுது கவனமாயிரு! திராட்சை இரசமோ மதுபானமோ அருந்தாதே! தீட்டான எதையும் உண்ணாதே. ஏனெனில் நீ கருவுற்று ஒரு மகனைப் பெற்றெடுப்பாய். சவரக் கத்தி அவன் தலைமீது படக்கூடாது. ஏனெனில் பையன் பிறப்பிலிருந்தே கடவுளுக்கென `நாசீர்' ஆக இருப்பான். அவன் இஸ்ரயேல் மக்களைப் பெலிஸ்தியரின் கையிலிருந்து விடுவிக்கத் தொடங்குவான்'' என்றார்.
அப்பெண் தம் கணவரிடம் வந்து கூறியது: �கடவுளின் மனிதர் என்னிடம் வந்தார். அவரது தோற்றம் கடவுளின் தூதரின் தோற்றம் போல் பெரிதும் அச்சத்திற்குரியதாக இருந்தது. அவர் எங்கிருந்து வந்தவர் என்று நான் அவரைக் கேட்கவில்லை. அவரும் எனக்குத் தம் பெயரை அறிவிக்கவில்லை. அவர் என்னிடம். `இதோ! நீ கருவுற்று ஒரு மகனைப் பெற்றெடுப்பாய்.
ஆகவே நீ திராட்சை இரசமோ மதுபானமோ அருந்தாதே. தீட்டான எதையும் உண்ணாதே. ஏனெனில் பையன் பிறந்த நாள் முதல் இறக்கும் நாள் வரை, கடவுளுக்கென நாசீராக இருப்பான்' என்றார்.''
அப்பெண் ஒரு மகனைப் பெற்றெடுத்து அவனுக்குச் சிம்சோன் எனப் பெயரிட்டார். பையன் வளர்ந்து பெரியவனானான். ஆண்டவர் அவனுக்கு ஆசி வழங்கினார். சோராவுக்கும், எசுத்தாவேலுக்குமிடையே அவன் இருக்கும்போதுதான் ஆண்டவரின் ஆவி அவனைத் தூண்டத் தொடங்கியது.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி
பதிலுரைப் பாடல்
: நாளெல்லாம் நான் பேசுவது உமது பெருமையே.
திருப்பாடல்71: 3-4. 5-6. 16-17
3 என் அடைக்கலப் பாறையாக நீர் இருந்தருளும்; கோட்டை அரணாயிருந்து என்னை மீட்டருளும்; ஏனெனில், நீர் எனக்குக் கற்பாறையாகவும் அரணாகவும் இருக்கின்றீர். 4ய என் கடவுளே, பொல்லார் கையினின்று என்னைக் காத்தருளும். பல்லவி
5 என் தலைவரே, நீரே என் நம்பிக்கை; ஆண்டவரே, இளமை முதல் நீரே என் நம்பிக்கை. 6யb பிறப்பிலிருந்து நான் உம்மைச் சார்ந்துள்ளேன்; தாய் வயிற்றிலிருந்து நீர் என்னைப் பிரித்தெடுத்தீர். பல்லவி
16 தலைவராகிய ஆண்டவரே! உமது வலிமைமிகு செயல்களை எடுத்துரைப்பேன்; உமக்கே உரிய நீதி முறைமையைப் புகழ்ந்துரைப்பேன். 17 கடவுளே, என் இளமைமுதல் எனக்குக் கற்பித்து வந்தீர்; இனிவரும் நாள்களிலும் உம் வியத்தகு செயல்களை அறிவிப்பேன். பல்லவி
நற்செய்திக்கு முன் வசனம்
திருமுழுக்கு யோவானின் பிறப்பு முன்னறிவிக்கப்படுகிறது. �
நற்செய்தி வாசகம்
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 5-25
யூதேய நாட்டில் ஏரோது அரசனாக இருந்த காலத்தில், அபியா வகுப்பைச் சேர்ந்த செக்கரியா என்னும் பெயர் கொண்ட குரு ஒருவர் இருந்தார். அவர் மனைவி ஆரோனின் வழி வந்தவர்; அவர் பெயர் எலிசபெத்து. அவர்கள் இருவரும் கடவுள் பார்வையில் நேர்மையானவர்களாய் விளங்கினார்கள். ஆண்டவருடைய அனைத்துக் கட்டளைகளுக்கும் ஒழுங்குகளுக்கும் ஏற்பக் குற்றமற்றவர்களாய் நடந்து வந்தார்கள்.
அவர்களுக்குப் பிள்ளை இல்லை; ஏனெனில், எலிசபெத்து கருவுற இயலாதவராய் இருந்தார்.
மேலும் அவர்கள் வயது முதிர்ந்தவர்களாயும் இருந்தார்கள்.
தம்முடைய பிரிவின்முறை வந்தபோது, செக்கரியா கடவுளின் திருமுன் குருத்துவப் பணி ஆற்றி வந்தார். குருத்துவப் பணி மரபுக்கு ஏற்ப, ஆண்டவரின் திருக்கோவிலுக்குள் சென்று தூபம் காட்டுவது யாரென்று அறியச் சீட்டுக் குலுக்கிப் போட்டபோது அது செக்கரியா பெயருக்கு விழுந்தது.
அவர் தூபம் காட்டுகிற வேளையில், மக்கள் கூட்டத்தினர் அனைவரும் வெளியே இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தனர். அப்பொழுது ஆண்டவருடைய தூதர் ஒருவர் தூப பீடத்தின் வலப்பக்கத்தில் நின்றவாறு அவருக்குத் தோன்றினார். அவரைக் கண்டு செக்கரியா அச்சமுற்றுக் கலங்கினார்.
வானதூதர் அவரை நோக்கி, �செக்கரியா, அஞ்சாதீர், உமது மன்றாட்டு கேட்கப்பட்டது. உம் மனைவி எலிசபெத்து உமக்கு ஒரு மகனைப் பெற்றெடுப்பார்; அவருக்கு யோவான் எனப் பெயரிடுவீர். நீர் மகிழ்ந்து பேருவகை கொள்வீர். அவரது பிறப்பால் பலரும் மகிழ்ச்சியடைவர். அவர் ஆண்டவர் பார்வையில் பெரியவராய் இருப்பார்; திராட்சை மதுவோ வேறு எந்த மதுவோ அருந்தமாட்டார்; தாய் வயிற்றிலிருக்கும்போதே தூய ஆவியால் முற்றிலும் ஆட்கொள்ளப் படுவார். அவர், இஸ்ரயேல் மக்களுள் பலரைத் தம் கடவுளாகிய ஆண்டவரிடம் திரும்பி வரச் செய்வார். எலியாவின் உளப்பாங்கையும் வல்லமையையும் உடையவராய் அவருக்கு முன் செல்வார்; தந்தையரும் மக்களும் உளம் ஒத்துப்போகச் செய்வார்; நேர்மையாளர்களின் மனநிலையைக் கீழ்ப்படியாதவர்கள் பெறச் செய்வார்; இவ்வாறு ஆண்டவருக்கு ஏற்புடைய ஒரு மக்களினத்தை ஆயத்தம் செய்வார்'' என்றார்.
செக்கரியா வானதூதரிடம், �இது நடைபெறும் என எனக்கு எப்படித் தெரியும்? நான் வயதானவன். அதுபோல் என் மனைவியும் வயது முதிர்ந்தவராயிற்றே'' என்றார்.
அதற்கு வானதூதர் அவரிடம், �நான் கபிரியேல்; கடவுளின் திருமுன் நிற்பவன்; உம்மோடு பேசவும் இந்த நற்செய்தியை உமக்கு அறிவிக்கவும் அனுப்பப்பட்டேன். இதோ பாரும், உரிய காலத்தில் நிறைவேற இருக்கும் என்னுடைய வார்த்தைகளை நீர் நம்பவில்லை. ஆதலால் அவை நிறைவேறும் வரை நீர் பேச்சற்றவராய் இருப்பீர்; உம்மால் பேசவே இயலாது'' என்றார்.
மக்கள் செக்கரியாவுக்காகக் காத்திருந்தனர். திருக்கோவிலில் அவர் காலந்தாழ்த்துவதைக் குறித்து அவர்கள் வியப்படைந்தார்கள். அவர் வெளியே வந்தபோது அவர்களிடம் பேசமுடியாமல் இருந்தார். ஆதலால் அவர் திருக்கோவிலில் ஏதோ காட்சி கண்டிருக்க வேண்டும் என அவர்கள் உணர்ந்துகொண்டார்கள்.
அவர் அவர்களிடம் சைகைகள் வாயிலாக உரையாடி வந்தார்; பேச்சற்றே இருந்தார். அவருடைய திருப்பணிக் காலம் முடிந்ததும் அவர் வீடு திரும்பினார்.
தற்குப் பின்பு அவர் மனைவி எலிசபெத்து கருவுற்று ஐந்து மாதமளவும் பிறர் கண்ணில் படாதிருந்தார். �மக்களுக்குள் எனக்கிருந்த இகழ்ச்சியை நீக்க ஆண்டவர் என்மீது அருள்கூர்ந்து இந்நாளில் இவ்வாறு செய்தருளினார்'' என்று தமக்குள் சொல்லிக்கொண்டார்.
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
|
இன்றைய சிந்தனை
மெசியாவின் காலம் !
வரவிருப்பவர் நீர்தாமா? அல்லது வேறொருவரை எதிர்பார்க்க வேண்டுமா? என்னும் யோவானின் சீடர்களின் கேள்விக்கு இயேசு அளிக்கும் மறுமொழி பளிச் என்று ஒளிர்கிறது. நீங்கள் கண்டவற்றையும், கேட்டவற்றையும் யோவானிடம் போய் அறிவியுங்கள் என்று சொல்லும் இயேசு தனது இறையாட்சிப் பணிகளை பட்டியல் இடுகிறார். அதில் நோயாளர் நலம் பெறுவதும் நற்செய்தி அறிவிக்கப்படுவதும் சேர்கின்றன. இயேசு வாய்ச்சொல் வீரர் அல்லர். செயல்வீரர். தம் செயல்களாலே நற்செய்தி அறிவித்தவர். அவருடைய செயல்கள் மெசியாவின் காலம் வந்துவிட்டது என்பதைப் பறைசாற்றின. நாமும் மெசியாவின் காலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பதை நமது செயல்களால்தான் எண்பிக்க முடியும். நற்செய்தி அறிவிப்பு என்பதைப் பலர் கூட்டங்கள் போட்டு, போதிப்பது என்று தவறாகப் பொருள்கொள்கின்றனர். நற்செய்தி அறிவிப்பு என்பது இயேசுவைப் போல செயல்களால் பறைசாற்றுவது. உங்கள் நற்செயல்களைக் கண்டு உங்கள் வானகத் தந்தையை அனைவரும் மகிமைப்படுத்த வேண்டும் என்னும் இயேசுவின் அமுத மொழிகளை நம் வாழ்வாக்குவோம்.
மன்றாட்டு:
உலகின் ஒளியான இயேசுவே, உமது செயல்களால் இறையாட்சி மலர்ந்துவிட்டது என்பதைப் பறைசாற்றினீரே. உம்மைப் போற்றுகிறோம். நாங்களும் எங்கள் சொல்லால் அல்ல, செயல்களால் உமது வருகையை, உமது உடனிருப்பை, உமது மீட்பின் காலத்தைப் பறைசாற்ற அருள்தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.
|