யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





மூன்றாவது திருவழிபாடு ஆண்டு
2024-12-15

(இன்றைய வாசகங்கள்: இறைவாக்கினர் செப்பனியா நூலிலிருந்து வாசகம் 3: 14-17,எசா 12: 2-3. 4. 5-6,திருத்தூதர் பவுல் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 4: 4-7 ,லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 3: 10-18 )




என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '. என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '. என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '.


திருப்பலி முன்னுரை

மகிழ்ச்சிக்குரியவர்களே, திருவருகைக்காலத்தின் மூன்றாம் ஞாயிறு திருப்பலிக்கு உங்கள் அனைவரையும் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம். அண்மையில் உள்ளதை நினைத்து அகமகிழ இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. நமது மகிழ்ச்சியை மட்டுமல்ல, நம்மிடம் உள்ள அனைத்தையுமே பிறரோடு பகிர்ந்து வாழ திருமுழுக்கு யோவான் நம்மைத் தூண்டுகிறார். "இரண்டு அங்கிகளை உடையவர் இல்லாதவரோடு பகிர்ந்துகொள்ளட்டும்; உணவை உடையவரும் அவ்வாறே செய்யட்டும்.'' தூய ஆவி என்னும் நெருப்பால் நமக்கு திருமுழுக்குக் கொடுக்கும் வலிமைமிக்க ஆண்டவரின் வருகைக்காக நாம் காத்திருக் கிறோம். அணையா நெருப்பிலிட்டுச் சுட்டெரிக்கப்படும் பதராக இல்லாமல், அவருடைய களஞ்சியத்தில் சேர்க்கப்படும் கோதுமையாக வாழும் வரம் வேண்டி, இந்த திருப்பலியில் பங்கேற்போம்.



முதல் வாசகம்

உன் பொருட்டு ஆண்டவர் மகிழ்ந்து களிகூருவார்.
இறைவாக்கினர் செப்பனியா நூலிலிருந்து வாசகம் 3: 14-17

மகளே சீயோன்! மகிழ்ச்சியால் ஆர்ப்பரி; இஸ்ரயேலே! ஆரவாரம் செய்; மகளே எருசலேம்! உன் முழு உள்ளத்தோடு அகமகிழ்ந்து அக்களி. ஆண்டவர் உன் தண்டனைத் தீர்ப்பைத் தள்ளிவிட்டார்; உன் பகைவர்களை அப்புறப்படுத்தினார்; இஸ்ரயேலின் அரசராகிய ஆண்டவர் உன் நடுவில் இருக்கின்றார்; நீ இனி எந்தத் தீங்கிற்கும் அஞ்சமாட்டாய். அந்நாளில் எருசலேமை நோக்கி இவ்வாறு கூறப்படும்; “சீயோனே, அஞ்சவேண்டாம்; உன் கைகள் சோர்வடைய வேண்டாம். உன் கடவுளாகிய ஆண்டவர் உன் நடுவில் இருக்கின்றார்; அவர் மாவீரர்; மீட்பு அளிப்பவர்; உன் பொருட்டு அவர் மகிழ்ந்து களிகூருவார்; தம் அன்பினால் உனக்குப் புத்துயிர் அளிப்பார்; உன்னைக் குறித்து மகிழ்ந்து ஆடிப்பாடுவார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

பல்லவி: ஆர்ப்பரித்து அக்களியுங்கள்; ஆண்டவர் சிறந்து விளங்குகின்றார்.
எசா 12: 2-3. 4. 5-6

இறைவன் என் மீட்பர், அவர்மேல் நம்பிக்கை வைக்கிறேன், நான் அஞ்சமாட்டேன்; ஆண்டவரே என் ஆற்றல், அவரையே பாடுவேன், என் மீட்பும் அவரே. 3 மீட்பருளும் ஊற்றுகளிலிருந்து நீங்கள் அகமகிழ்வோடு தண்ணீர் முகந்துகொள்வீர்கள். பல்லவி

4 ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; அவர் திருப்பெயரைப் போற்றுங்கள்; மக்களினங்களிடையே அவர் செயல்களை அறிவியுங்கள்; அவர் திருப்பெயர் உயர்க எனப் பறைசாற்றுங்கள். பல்லவி

5 ஆண்டவருக்குப் புகழ்ப்பா அமைத்துப் பாடுங்கள்; ஏனெனில் அவர் மாட்சியுறும் செயல்களைப் புரிந்துள்ளார்; அனைத்துலகும் இதை அறிந்துகொள்வதாக. 6 சீயோனில் குடியிருப்போரே! ஆர்ப்பரித்து அக்களியுங்கள்; இஸ்ரயேலின் தூயவர் உங்களிடையே சிறந்து விளங்குகின்றார். பல்லவி

இரண்டாம் வாசகம்

ஆண்டவர் அண்மையில் உள்ளார்.
திருத்தூதர் பவுல் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 4: 4-7

சகோதரர் சகோதரிகளே, ஆண்டவரோடு இணைந்து என்றும் மகிழுங்கள்; மீண்டும் கூறுகிறேன், மகிழுங்கள். கனிந்த உங்கள் உள்ளம் எல்லா மனிதருக்கும் தெரிந்திருக்கட்டும். ஆண்டவர் அண்மையில் உள்ளார். எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டாம். ஆனால் நன்றியோடு கூடிய இறைவேண்டல், மன்றாட்டு ஆகிய அனைத்தின் வழியாகவும் கடவுளிடம் உங்கள் விண்ணப்பங்களைத் தெரிவியுங்கள். அப்பொழுது, அறிவெல்லாம் கடந்த இறை அமைதி, கிறிஸ்து இயேசுவோடு இணைந்துள்ள உங்கள் உள்ளத்தையும் மனத்தையும் பாதுகாக்கும்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவராகிய என் தலைவரின் ஆவி என்மேல் உளது; ஒடுக்கப்பட்டோருக்கு நற்செய்தியை அறிவிக்க என்னை அனுப்பியுள்ளார். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 3: 10-18

அக்காலத்தில் திருமுழுக்கு யோவான் போதித்துக்கொண்டிருந்தபோது, “நாங்கள் என்ன செய்யவேண்டும்?'' என்று கூட்டத்தினர் அவரிடம் கேட்டனர். அதற்கு அவர் மறுமொழியாக, “இரண்டு அங்கிகளை உடையவர் இல்லாதவரோடு பகிர்ந்துகொள்ளட்டும்; உணவை உடையவரும் அவ்வாறே செய்யட்டும்'' என்றார். வரிதண்டுவோரும் திருமுழுக்குப் பெற வந்து, “போதகரே, நாங்கள் என்ன செய்யவேண்டும்?'' என்று அவரிடம் கேட்டனர். அவர், “உங்களுக்குக் குறிக்கப்பட்ட தொகைக்கு அதிகமாக எதையும் தண்டாதீர்கள்'' என்றார். படைவீரரும் அவரை நோக்கி, “நாங்கள் என்ன செய்ய வேண்டும்?'' என்று கேட்டனர். அவர், “நீங்கள் எவரையும் அச்சுறுத்திப் பணம் பறிக்காதீர்கள்; யார்மீதும் பொய்க் குற்றம் சுமத்தாதீர்கள்; உங்கள் ஊதியமே போதும் என்றிருங்கள்'' என்றார். அக்காலத்தில் மக்கள் மீட்பரை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஒருவேளை யோவான் மெசியாவாக இருப்பாரோ என்று எல்லாரும் தங்களுக்குள் எண்ணிக் கொண்டிருந்தார்கள். யோவான் அவர்கள் அனைவரையும் பார்த்து, “நான் தண்ணீரால் உங்களுக்குத் திருமுழுக்குக் கொடுக்கிறேன்; ஆனால் என்னைவிட வலிமைமிக்க ஒருவர் வருகிறார். அவருடைய மிதியடி வாரை அவிழ்க்கக்கூட எனக்குத் தகுதியில்லை. அவர் தூய ஆவி என்னும் நெருப்பால் உங்களுக்குத் திருமுழுக்குக் கொடுப்பார். அவர் சுளகைத் தம் கையில் கொண்டு கோதுமையையும் பதரையும் பிரித்தெடுப்பார். கோதுமையைத் தம் களஞ்சியத்தில் சேர்ப்பார்; பதரையோ அணையா நெருப்பிலிட்டுச் சுட்டெரிப்பார்'' என்றார். மேலும் பல அறிவுரைகள் கூறி மக்களுக்கு நற்செய்தியை அறிவித்தார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




விசுவாசிகள் மன்றாட்டுகள்:


விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.


பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

சிறந்து விளங்கும் இறைவா!

திருவருகைக் காலத்தின் மூன்றாம் ஞாயிறாகிய இன்று திருஅவையின் அனைத்து நலன்களுக்காகவும் உமது பணியினைச் சிறப்புடன் செய்திடவும் வேண்டிய அருளினைப் பொழிந்திட வேண்டுமென்று மன்றாடுகிறோம்.

சிறந்து விளங்கும் இறைவா!

எங்கள் குடும்பங்களில் சண்டை, சச்சரவு இல்லாமல் மகிழ்ச்சியும், ஒற்றுமையும், சமாதானமும் நிலை வேண்டுமென்று மன்றாடுகிறோம்.

சிறந்து விளங்கும் இறைவா!

இன்று நாங்கள் உமது படைப்பின் மேன்மையை உணராமல் இயற்கையை அழிக்கும் சக்திகளாக வலம் வருகிறோம். உமது படைப்பின் முக்கியத்துவத்தினை அறிந்து இயற்கையைப் பாதுகாக்கும் பிள்ளைகளாக எம்மை மாற்ற வேண்டுமென்று மன்றாடுகிறோம்

சிறந்து விளங்கும் இறைவா!

நாங்கள் வீண்பெருமையினால் கடின உள்ளத்தோடு வாழ்கிறோம். இத்திருவருகைக் காலத்தில் எங்கள் கடின உள்ளத்தை மாற்றி பாலன் பிறக்கும் இடமாக எங்கள் மனதினை மாற்ற வேண்டுமென்று மன்றாடுகிறோம்.

சிறந்து விளங்கும் இறைவா!

கிறிஸ்து பிறப்பு விழாவின் ஆடம்பரத்தைத் தவிர்த்து, ஆன்மீக விசுவாசத்தில் வேரூன்றி வாழ வேண்டுமென்று மன்றாடுகிறோம்.

புனிதம் மிகுந்தவராம் இறைவா,

புனிதத்துக்கு எதிராக எம் நாட்டில் நிலவும் ஒழுக்கக் கேடுகளும், பொய்யான வழிபாடுகளும் மறையும் வகையில் மக்களிடையே மனமாற்றத்தை உருவாக்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

மேன்மை நிறைந்தவராம் இறைவா,

உம் திருமகனின் வருகைக்காக எப்பொழுதும் விழித்திருந்து மன்றாடுபவர்களாய் வாழும் வரத்தை, எங்கள் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவ ருக்கும் வழங்கி, உடல், உள்ள, ஆன்ம சுகத்தோடு பாதுகாக்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.


இன்றைய சிந்தனை

''அப்போது, 'நாங்கள் என்ன செய்ய வேண்டும்?' என்று கூட்டத்தினர் திருமுழுக்கு யோவானிடம் கேட்டனர். அதற்கு அவர் மறுமொழியாக, 'இரண்டு அங்கிகளை உடையவர் இல்லாதவரோடு பகிர்ந்து கொள்ளட்டும்; உணவை உடையவரும் அவ்வாறே செய்யட்டும்' என்றார்'' (மத்தேயு 3:10-11)

மக்கள் மனம் மாற வேண்டும் என்றும் திருமுழுக்குப் பெற வேண்டும் என்றும் போதித்தார் திருமுழுக்கு யோவான். அப்போதனையைக் கேட்ட மக்களில் சிலர் தங்கள் பழைய வாழ்க்கைமுறையை மாற்றிட முன்வந்தார்கள். அவர்கள் கேட்ட கேள்வி இன்று நமது கேள்வியாக மாற வேண்டும்: ''நாங்கள் என்ன செய்ய வேண்டும்?'' (மத் 3:10). கடவுளின் அருள் நம் உள்ளத்தைத் தொடும்போது நாம் அதற்குப் பதில்மொழி வழங்குவது தேவை. அப்பதில் மொழிதான் ஒரு கேள்வியாக உருவெடுக்கிறது: ''நாங்கள் என்ன செய்ய வேண்டும்?'' இக்கேள்விக்கு யோவான் அளித்த பதில் மூன்று அம்சங்களை உள்ளடக்கியது. முதலில் நாம் பகிர்வு மனப்பான்மை கொண்டவர்களாக மாற வேண்டும் (மத் 3:11). இரண்டாவது, பேராசைக்கு நாம் இடம் கொடுத்தலாகாது (மத் 3:12). மூன்றாவது, நம் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தலாகாது (மத் 3:14). யோவான் அறிவித்த புதிய வாழ்க்கை முறையைச் சுருக்கமாகக் குறிப்பிடுவதாக இருந்தால் அது ''பிறர் நலனில் அக்கறைகொண்டு வாழ்தலில் அடங்கும்'' எனலாம். நம்மை அடுத்திருப்போருக்கு நாம் அன்புகாட்டும்போது உண்மையிலேயே நம்மில் ''மன மாற்றம்'' நிகழ்ந்துவிட்டது எனலாம்.

மன மாற்றம் என்பது நம் உள்ளத்தில் நிகழ்கின்ற மாற்றம். பழைய சிந்தனைப் பாணிகளைக் கைவிட்டுவிட்டு, நலமான புதிய சிந்தனை முறைகளை நாம் உள்ளத்தில் உருவாக்க வேண்டும். ஆனால் அத்தகைய மாற்றம் உள்ளத்தோடு மட்டுமே நின்றுவிடாது. மாறாக நம் வாழ்வில் செயல்முறையில் வெளிப்படும். எனவேதான் திருமுழுக்கு யோவான், ''மனம் மாறியவர்கள் என்பதை அதற்கேற்ற செயல்களால் காட்டுங்கள்'' என்றார் (மத் 3:8). ''இரண்டு அங்கிகளை உடையவர் இல்லாதவரோடு பகிர்ந்து கொள்ளட்டும்; உணவை உடையவரும் அவ்வாறே செய்யட்டும்'' என்று திருமுழுக்கு யோவான் மக்களுக்கு அறிவுறுத்தினார். அந்த அறிவுரை நமக்கும் பொருந்தும். இரண்டாம் வத்திக்கான் சங்கம் (1962-1925) இதை வலியுறுத்துகிறது: ''மண்ணுலகின் நலன்கள் அனைத்து மனிதருக்கும் பொதுவானவை என்பதை எல்லாரும் கருத்தில் கொள்ளவேண்டும். இந்நலன்களைப் பயன்படுத்தும் மனிதர்கள் முறையான வழியில் தாம் உடைமையாகக் கொண்டிருக்கும் பொருள்களைத் தமக்கே உரியனவாக மட்டுமன்றி, எல்லாருக்கும் பொதுவானவையாகவும் கருதவேண்டும். அதாவது, தமது உடைமைகள் தமக்கு மட்டுமன்றி, பிறருக்கும் பயன்படுவதற்காகவே உள்ளன எனக் கொள்ளவேண்டும்'' (இன்றைய உலகில் திருச்சபை, எண் 69).

மன்றாட்டு:

இறைவா, நாங்கள் பகிர்வு மனப்பான்மை கொண்டு வாழ்ந்திட அருள்தாரும்.